Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீ ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கக்கூடும்

நீ ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கக்கூடும்

அதிகாரம் 2

நீ ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கக்கூடும்

உயர குதித்துத் தாண்டுவதற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்ட கட்டையை, அல்லது ஒரு வேலியை அல்லது ஒரு சுவரைத் தாண்டி குதிக்க நீ எப்பொழுதாவது முயன்றிருக்கிறாயா? அது மிக உயரமாய் இல்லாமல், உன்னால் குதிக்க முடியுமென்ற நம்பிக்கை உனக்கு இருந்திருக்குமானால் நீ ஒருவேளை அதை வெற்றிகரமாய்த் தாண்டி குதித்திருக்கலாம். ஆனால் உன்னால் முடியாதென்று நீ பயந்திருப்பாயானால் நீ குதிக்கத் தவறி விரும்பத்தகாத விளைவுகள் உனக்கு ஏற்பட்டிருக்கலாம்.

2மிகப் பல காரியங்களைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. உதாரணமாக, தண்ணீருக்குள் செல்ல பயப்படுவாயானால், நீ ஒருபோதும் நீந்தக் கற்றுக்கொள்ளமாட்டாய்.

3உன்னுடைய இளமையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொள்வதைக் குறித்ததிலும் இப்படியே இருக்கிறது. நம்பிக்கை மிக அதிகத்தைச் சாதிக்கக்கூடியதாய் இருக்கிறது. முன்னால் இருப்பதில் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கைப் பாதையில் நீ உண்மையில் மகிழ்ச்சியாய் இருக்கவோ நன்றாய் முன்னேறவோ முடியாது. ஆனால் இன்று நாம் நம்பிக்கை வைப்பதற்கு எது தகுதியாய் இருக்கிறது?

4நம்பிக்கை இல்லாதிருப்பதற்குரிய காரணங்களைப் பற்றி நாம் அதிக நேரம் பேசிக்கொண்டு போகலாம். நம்முடைய கிரகமாகிய பூமி மேலும் மேலும் அதிகமாய்த் தூய்மைக்கேடு அடைந்து வருகிறது, அதன் காட்டு மிருகங்கள் கொன்று அழிக்கப்படுகின்றன, உணவு பற்றாக்குறைகளும், மற்றக் கவலைக்கிடமான பிரச்னைகளும் அங்கே இருக்கின்றன. இந்தக் காரியங்கள், ஆவலோடு எதிர்காலத்தை நோக்குவதில் பயன் என்னவென்று சந்தேகித்து மனம் கலங்கும்படி உன்னைச் செய்விக்கலாம். பூமியிலுள்ளவைகள் பாழ்ப்படுத்தப்படும் விதத்தைக் கவனிக்கையில், தங்களுக்கு எதிர்கால நம்பிக்கை எதுவும் அதிகம் இல்லை என்பதாக இளைஞர்களில் சிலர் உணருகிறார்கள். அது நிச்சயமாகவே அப்படித் தோன்றலாம். என்றபோதிலும், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை ஆவலோடு நோக்குவதற்கு நமக்குக் காரணத்தை அளிக்கிற மிகப் பல காரியங்கள் இருக்கின்றன, அவற்றைப் பற்றி மக்கள் அதிகம் பேசுகிறதில்லை. இவற்றில் சிலவற்றைக் கவனி.

உன் வீடாகிய இந்தக் கிரகம்

5பூமிக்கு அதிக கவனம் செலுத்தாமல், வெறுமென அதை அனுபவித்துக் கொண்டு போவது நமக்குச் சாதாரணமாய் இருக்கிறது. என்றபோதிலும் நாம் பிறந்து வாழ்ந்து வருகிற இந்தக் கிரகம் மெய்யாகவே மிகவும் வியக்கத்தக்க ஒரு வேலைப்பாடாக இருக்கிறது. சுழலும் ஒரு பந்தைப் போல் இந்தப் பூமியானது, சூரியனிலிருந்து 9 கோடி 30 இலட்சம் மைல்கள் (ஏறக்குறைய 15,00,00,000 கிலோ மீட்டர்கள்) தூரத்தில் இருந்துகொண்டு சூரியனைச் சுற்றி வருகையில், வானவெளியில் இலட்சக்கணக்கான மைல்கள் பயணப்படுகிறது. பூமி வேறொரு இடத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சூரியனிலிருந்து இன்னும் வெகுதொலைவில், உதாரணமாக, புளூட்டோ, நெப்ட்யூன் என்ற இக்கிரகங்கள் இருக்கிற இடத்தில் பூமி இருந்திருந்தால், அது பொருட்களை உறைய வைக்கும் கடுங்குளிர்சாதனப் பெட்டியைப் போல் இருந்திருக்கும். அக்கடுங்குளிரில் வாழ்வது கூடாத காரியமாய் இருக்கும். மேலும் வீனஸ் என்ற கிரகம் இருப்பதைப் போல், பூமி தான் இருக்கும் தூரத்தில் மூன்றில் ஒரு பாக அளவான தூரம் சூரியனுக்கு அருகில் இருந்திருக்குமானால், இந்தப் பூமி ஒரு சூட்டடுப்பைப்போல் ஆகிவிட்டிருக்கும், ஏனெனில் ஏரிகளும் நதிகளுங்கூட கொதித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு வெப்பநிலை அவ்வளவு கடுமையாகிவிட்டிருக்கும்.

6அல்லது, சூரியனிலிருந்து பூமி சரியான தூரத்தில் இருந்தாலுங்கூட பூமி, இருபத்திநான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை தன் அச்சில் இப்பொழுது சுழன்று கொண்டிருப்பதைப் போல் சுழலாமல் இருந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும்? கிரகமாகிய மெர்க்குரி செய்வதுபோல், பூமி வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே அவ்வாறு சுழன்றதென்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது என்னவாயிருக்கும்? அப்பொழுது பூமியின் ஒரு பாதி பனி உறை நிலைக்கும் கீழாக உறைந்த பாழ்நிலமாயிருக்கும். மறுபாதி மக்கள் வாழமுடியாத சூளைபோன்ற பாழ்நிலமாய் இருக்கும்.

7இது மட்டுமல்லாமல், பூமியின் பெரும்பாகத்திலாவது இளவேனிற் காலத்தின் பசுமையான புதுக் கிளர்ச்சியையும் பூக்களையும், வேனிற் காலத்தின் அனலான பிரகாசமுள்ள நாட்களையும், இலையுதிர்காலத்தின் மொறுமொறுப்பையும் நிறங்களையும், குளிர்காலப் பனியின் அழகையும் நாம் ஏன் அனுபவித்து மகிழக்கூடியதாய் இருக்கிறது? இந்தப் பருவங்களானவை, பூமி சூரியனைச் சுற்றிவரும் அதன் பாதைக்குச் சம்பந்தப்பட்ட ஒரு கோணத்தில் சாய்ந்திருப்பதன் பலனாகவே உண்டாகின்றன. இந்தப் பருவகாலங்கள் இந்தக் கிரகத்தின் மேற்பரப்பின் பெரும்பாகத்தை வாழ்வதற்கு உகந்த இன்பகரமான இடமாக்குகின்றன. மேலும் இவை பூமியின் பெரும்பாகம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உணவை விளைவிக்கக்கூடியதாகவும் செய்கின்றன.

8இந்தக் கிரகம் வாழக்கூடிய இடமாய் இருப்பதற்கு ஒன்று சேர்ந்து செயல்படுகிற நூற்றுக்கணக்கான மற்ற காரியங்களும் இருக்கின்றன. என்றாலும் இதெல்லாம் நமக்கு என்ன சொல்லுகிறது? உன்னை நீயே கேட்டுக்கொள்: காரியங்கள் இப்படி வியக்கத்தக்கவண்ணமாய் ஒன்று சேர்ந்து செயல்படுவது எப்படி ஏற்படலாயின? நம்முடைய கிரகமாகிய பூமியைத் திட்டமிட்டவர் ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் நிச்சயமாகவே மதித்துணரவேண்டும். ஆம், பூமி வாழக்கூடிய இடமாய் இருப்பதற்குச் செயல்படும் இந்தப் பல அமைப்பு முறைகள் மனித விஞ்ஞானிகள் திட்டமிட்டு கட்டியிருக்கிற எந்த விண்வெளிக் கப்பலையும் விட மிக மிக அதிக சிக்கலான அமைப்பு முறைகள் குறித்துக் காட்டுகின்றன. எல்லா யோசனையும் வேலையும் பூமியின் சிக்கலான அமைப்பு முறைகளும் வேறு ஒன்றையுங்கூட நமக்குச் சொல்லுகின்றன. பூமியைத் திட்டமிட்டவர் பூமியில் வாழ்கிறவர்களுக்கு—ஆம், உனக்குங்கூட—வாழ்க்கையை இன்பகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் ஆக்குவதில் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்றும் அவை தெளிவாக நமக்குச் சொல்லுகின்றன.

9இன்று மக்கள் பலர் பூமியைத் தூய்மைக்கேடு செய்வதன் மூலமும் தவறான முறையில் பயன்படுத்துவதன் மூலமும் அதைப் படுமோசமாய்ச் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மெய்யே. என்றாலும் அது மாற்றப்படக்கூடும். அந்தச் சேதமும் திரும்ப சரிப்படுத்தப்படக்கூடும்.

10உதாரணமாக, பசிபிக் தீவாகிய கிரகட்டோவாவில் நடந்ததைக் கவனி. ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பால் அத்தீவு அழிந்துபோயிற்று. இதையடுத்து உடனடியாக நீ அங்கே சென்றிருந்தால் அந்த முழு தீவும் வெறும் சாம்பலாகத்தானே இருந்ததை நீ பார்த்திருப்பாய். ஒன்றும் அங்கே உயிரோடு மீந்திருக்கவில்லை—மக்களோ, மிருகங்களோ, தாவரங்களோ எதுவும் இல்லை. ஆனால் பின்பு என்ன நடந்தது?

11எவருடைய உதவியும் இல்லாமல் அந்தத் தீவு திரும்ப முன்னிலையை அடையத் தொடங்கிற்று. மூன்று ஆண்டுகளுக்குள் ஏறக்குறைய இருபத்தாறு வகைகளான தாவரங்கள் அங்கே மறுபடியும் வளர்ந்து செழிக்கத் தொடங்கின. சீக்கிரத்தில் தென்னைமரங்கள், காட்டுக் கரும்பு, பழ மரங்கள் ஆகியவை வளர்ந்துகொண்டிருந்தன. இந்த வெடி ஏற்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் கிரகட்டோவாவில் 263 வகைகளான மிருகங்கள் இருந்தன. அந்த எரிமலையினால் உண்டான சேதம் மறைந்துவிட்டது. அத்தீவின் தோட்டத்தைப் போன்ற முன்னிருந்த நிலைமைகள் திரும்ப வந்துவிட்டன.

12இந்தக் கிரகட்டோவா தீவு முன்னிலைமையை அடையச் செய்த இதே ஆச்சரியமான முறை பூமி முழுவதையுங்கூட திரும்ப மாற்றக்கூடும். இந்தப் புத்தகத்தில் நாம் பின்னால் பார்க்கப்போகிற பிரகாரம், இவ்வாறு நடக்கும் என்பதை நம்ப நல்ல காரணம் இருக்கிறது.

ஆச்சரியமான ஓர் உணவு உற்பத்திசாலை

13அடுத்தமுறை நீ உணவு சாப்பிட உட்கார்ந்திருக்கையில் சற்று நிறுத்தி பின்வருவதைப்பற்றி சிந்தனை செய்: நீ வெண்மையான சாதத்தையோ அல்லது வெண்ணிற உருளைக் கிழங்குகளையோ, பழுப்பு நிற கோதுமையையோ அல்லது பழுப்பு நிற அவரை விதைகளையோ, மஞ்சள் நிற மக்காச் சோளத்தையோ அல்லது மஞ்சள் நிற பழச் சாற்றையோ, கருப்பு நிற அல்லது சிவப்பு நிற பழங்களையோ எவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அவை யாவும் பச்சை நிற இலைகளையுடைய தாவரங்களிலிருந்தே வருகின்றன. ஏன்? ஒளிச்சேர்க்கை a என்று அழைக்கப்படுகிற ஆச்சரியமான ஒரு செயல் முறையின் காரணமாகவே.

14இப்படிப்பட்ட தாவரங்கள் யாவும் தங்கள் இலைகளில் குளோரோபில் என்றழைக்கப்படுகிற பச்சை பொருளைக் கொண்டிருக்கின்றன. சூரியனின் ஒளி இந்த இலைகளில் படுகையில் இந்தக் குளோரோபில் செயல்பட்டு சிக்கலான இரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. தாவரத்தின் உயிரணுக்களில் தண்ணீரும் (காற்றிலிருந்து தாவரம் உட்கொள்ளுகிற) கரியமிலவாயுவும் ஒன்று சேர்க்கப்பட்டு சாதாரண சர்க்கரை உண்டுபண்ணப்படுகிறது. இந்தச் சர்க்கரையே எல்லா உணவுக்கும் மூல அடிப்படையாய் இருக்கிறது. இந்தச் சர்க்கரையைப் பயன்படுத்தி, மேலுமதிகச் சிக்கலான, மாவுப் பொருள்கள், கொழுப்புப் பொருள்கள், புரதப் பொருள்கள், வைட்டமின்கள் ஆகியவற்றையும் பச்சைத் தாவரங்கள் உண்டுபண்ணுகின்றன. ஒளிச்சேர்க்கையின் பலனாக உண்டாகிற திகைக்க வைக்கும் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறவராய் தாவர இயல் வல்லுநர் பிரிட்ஸ் W. உவென்ட் பின்வருமாறு சொல்லுகிறார்:

“டன்களில் குறிப்பிடும்போது அதன் உற்பத்தியானது மனிதனின் தொழிற்சாலைகளை மிக அற்பமாகத் தோன்றச் செய்கிறது. ஒவ்வொரு வருடமும், உலகத்தின் எஃகு ஆலைகள் 35 கோடி டன்கள் எஃகு உற்பத்தி செய்கின்றன, உலகத்தின் சிமெண்ட் தொழிற்சாலைகள் 32 கோடியே 50 இலட்சம் டன்கள் சிமெண்ட் உற்பத்தி செய்கின்றன. உலகத்தின் பச்சைத் தாவரங்களோவென்றால், ஒவ்வொரு வருடமும் 15,000 கோடி டன்கள் சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன.”

15என்ன நடக்கிறதென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும், என்றாலும் ஒளிச்சேர்க்கை எப்படிச் செயல்படுகிறதென்பதை அவர்கள் இன்னும் சரியாக விளங்கிக்கொள்ள முடிகிறதில்லை. ஒரு விஞ்ஞான எழுத்தாளர் சொல்லுகிற பிரகாரம், ஆராய்ச்சியாளர் இந்தச் செயல் முறையைக் “கருப்புப் பெட்டி” என்பதாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர். ஏன்? ஏனென்றால் “உள்ளே என்ன செல்லுகிறது என்பதும், வெளியே என்ன வருகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும், ஆனால் உள்ளே நடந்துகொண்டிருக்கிற எல்லாவற்றையும் பற்றி அவர்கள் நிச்சயமாயில்லை.” மனிதர், தங்கள் எல்லா இரசாயன ஆராய்ச்சி செய்முறைச் சாலைகளைக் கொண்டும் இந்த அதிசயிக்கத்தக்க செய்முறைக்குச் சமமான ஒன்றை ஒருபோதும் செய்யமுடியாது.

16இந்தப் பூமி உற்பத்தி செய்கிற மிக மிகப் பேரளவான பல்வேறு வகை உணவும் அதைப்போல் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. ஒருவேளை குறிப்பிட்ட ஏதோ உணவு உனக்குத் தனிப்பட்ட விருப்பமுள்ளதாக இருக்கலாம்—அது மாம்பழம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் கிழங்குகள், சாதம், ரொட்டி, ஆப்பிள் பழங்கள், ஆரஞ்சு பழங்கள் ஆகிய எல்லாமே மாம்பழத்தின் சுவையை உடையனவாய் இருந்தால் எப்படியிருக்கும்? சீக்கிரத்தில் அந்தச் சுவையில் உனக்குச் சலிப்புண்டாகிவிடும் அல்லவா? அதற்குப் பதிலாக, பூமியின் உணவு உற்பத்திசாலை விளைவிக்கிற பற்பல வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிறு கனிகள் ஆகியவற்றில் உன் நாவின் சுவையுணர்வு நுகர்ந்து இன்பமனுபவிப்பதற்கு ஆயிரக்கணக்கான வெவ்வேறுபட்ட நறுஞ் சுவைகள் இருக்கின்றன.

17மறுபடியுமாக, இதெல்லாம் நமக்கு என்ன சொல்லுகிறது? இந்த ஆச்சரியமான உணவு உற்பத்தி சாலையை உண்டாக்கினவர், இந்தப் பூமியில் வாழ்க்கை மிகவும் இன்பமுள்ளதாக இருக்கவேண்டுமென்றே விரும்புகிறார் என்று வெகு தெளிவாகத் தெரிவிக்கிறது. எதிர்காலம் நமக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருப்பதைப்பற்றி அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார். இந்தக் கிரகமாகிய பூமியை இப்பேர்ப்பட்ட ஒரு மிக நல்ல வீடாக உண்டாக்கினவராகிய அதே திட்ட அமைப்பாளர், இந்த வீடானது, வாழ்பவர் எல்லாருக்கும் மிகச் சிறந்த விருந்தளிப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் நிலையாகச் சேமிப்பில் வைத்திருக்கும்படியும் பார்த்துக்கொண்டார். இந்தச் சிறந்த விருந்து அதில் பங்கு கொள்ளக்கூடியதாகச் செய்வதற்கு அவர் என்னவிதமான திட்டத்தைக் கொண்டுவருகிறார் என்பதையுங்கூட பின்னால் இந்தப் புத்தகத்தில் நாம் காண்போம்.

உன்னையே பார்!

18கடைசியாக, உன்னைப் பற்றிச் சிறிது சிந்தனை செய். சிந்திப்பதற்கு, நிச்சயமாகவே, நீ உன் மூளையைப் பயன்படுத்தவேண்டும்—ஆகையால் அங்கிருந்தே தொடங்கலாமே. இயல்பாகவே நீ உன் மூளையைப் பார்க்கமுடியாது என்றாலும் அது எதைப்போல் இருக்கிறதென்று நீ நினைக்கிறாய்? முழு வளர்ச்சியடைந்த மனித மூளை, பார்ப்பதற்கு அளவுக்கு மீறி பெரியதாயிருக்கும் சிவந்த-சாம்பல் நிறமுள்ள ஒரு வாதுமைக் கொட்டை போல் தோன்றுகிறது. மூன்று பவுண்டுகளுக்கும் (1.3 கிலோ) குறைவான எடையுள்ளதாய் இருக்கிறது. என்றாலும் அந்தச் சிறிய பகுதிக்குள் ஆ, எப்பேர்ப்பட்ட மலைத்துப்போகவைக்கும் வண்ணமாய் திறமை நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது! நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விஞ்ஞானப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு சொல்லுகிறது:

“மூளையின் அமைப்பு . . . அவ்வளவு மிகச் சிக்கலாக இருப்பதால், இராட்சத எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர்களை இதோடு ஒப்பிடுகையில், இது அவற்றை வெறும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களைப்போல தோன்றச் செய்கிறது.”

19ஆம், உனக்கு இருக்கிறதும், நீ பயன்படுத்தக்கூடியதுமான இந்த மூளை, “இப்பிரபஞ்சத்திலேயே மிக அதிக சிக்கலான பொருளுள்ள பகுதி”யாக விவரிக்கப்பட்டிருக்கிறது. யாராவது உனக்கு ஒரு சிறந்த கைக்கடிகாரத்தையோ, விலையுயர்ந்த படம்பிடிக்கும் சாதனத்தையோ அல்லது விலைமதிப்புள்ள மின்னியக்கக் கணிப்புப் பொறியையோ கொடுத்தார்களென்றால் நீ நிச்சயமாகவே அதைக் கவனமாய் வைத்துக் காத்து அதை மிகச் சிறந்த வண்ணமாய்ப் பயன்படுத்திக்கொள்ள முயலுவாய் அல்லவா? உன் மூளைக்காக நீ அதைப் பார்க்கிலும் மிக அதிகப்படியான நன்றிமதித்துணர்வை உணர வேண்டும்.

20உன் உடலைப் பற்றியும் சிந்தித்துப் பார். ஒரு சிங்கம் உன்னைப் பார்க்கிலும் பலமுள்ளது, ஒரு யானை நிச்சயமாகவே உன்னைவிட பெரியது, ஒரு கடற்பன்றி உன்னைவிட விரைவாய் நீந்தக்கூடும், ஒரு குரங்கு உன்னைப் பார்க்கிலும் நன்றாய்த் தாவி ஏறக்கூடும், ஒரு கழுகு தன்னுடைய சொந்த செட்டைகளைக் கொண்டு உயரப் பறந்து வட்டமிடக்கூடும், உன்னால் முடியாது. என்றாலும் இந்தச் சிருஷ்டிகளில் எதுவும், மனிதனுக்கு இருக்கிற திறமைகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர தன்னில் கொண்டில்லை. சிங்கங்களும் யானைகளும் பறக்க முடியாது, கடற்பன்றிகள் மரங்கள் மீதோ மலைகளின்மீதோ ஏறமுடியாது, கழுகுகளும் நீந்த முடியாது. ஆனால் மனிதரோ தாங்களாக அல்லது தங்களுடைய கண்டுபிடிப்புகளைக் கொண்டு இந்த எல்லாவற்றையும் செய்யக்கூடும். ஆம், எல்லாவற்றிற்கும் மேலாக, காரியங்களை உண்டாக்குவதிலும் அவற்றை முடிவற்ற பல்வேறு வகையில் செய்வதிலும் தங்களுக்கு இருக்கும் திறமையில் மனிதர் தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

21இதற்கு ஒரு காரணம் உன்னுடைய கைகளே. கண்டுபிடிக்கப்பட்ட எந்தக் கருவியும், நீ உன் கைகளைக் கொண்டு செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்யமுடியாது—இயந்திர அமைப்பு வேலை அல்லது மரவேலை போன்ற கடினமான வேலைகள் முதற்கொண்டு, மென்மையாக கையாளுதலை உட்படுத்தும் ஓர் இசைக் கருவியை இயக்குதல், ஓவியக்கலை அல்லது ஒரு வீட்டைக் கட்ட திட்ட உருவரைப் படம் வரைதல் ஆகியவற்றைப் போன்ற வேலைகள் வரையாக உன் கைகள் செய்யக்கூடும்.

22மெய்யாகவே, உன் கைகள் உன் உடலை அவ்வளவு அதிக அதிசயமானதாக்குகிற காரியங்களில் ஒன்று தானே. அறுவை மருத்துவருடன் வேலை செய்யும் ஒரு பொறியாளராகிய டாக்டர் W. W. ஆக்கர்ஸ், மனித உடலைக் குறித்து பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமொன்றுமில்லை:

“உடலானது தொழில்நுட்பத் துறை பூரணத்தில் எல்லாம் கடந்த முடிவாய் இருக்கிறது. ஏறக்குறைய நீ கற்பனை செய்யக்கூடிய எந்தப் பொறியும்—அது எவ்வளவு உயர்ந்த செயற்கைப் பண்பாடுள்ளதாக இருந்தாலும் சரி—நீ உடலுக்குள் உற்று நோக்கி அதைப் பார்க்கிலும் மேம்பட்ட ஒன்றைக் காணக்கூடும்.”

23ஈடற்ற உயர் திட்டமிடுபவர், மனிதர், மிருகங்களைப் பார்க்கிலும் வெகுவாய் உயர்ந்தவர்களாகவும் இப்பூமியை மிகச் சிறந்த முறையில் அனுபவித்து மகிழக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினார் என்பது தெளிவாய் இருக்கிறது. இது, நாம் நல்ல பயனுள்ள எதிர்காலத்தை அனுபவித்து மகிழ வேண்டுமென்பதில் அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று நாம் திட நம்பிக்கையுடன் இருப்பதற்கு நமக்குக் காரணத்தை அளிக்கிறது.

திட நம்பிக்கையுடன் நீ முன்னேறலாம்

24நாம் பார்த்திருக்கிற எந்த வீட்டிலோ கட்டடத்திலோ காணப்படுகிறதைப் பார்க்கிலும் வெகு அதிகம் உயர்ந்த அறிவுக் கூர்மையும் திட்டமும், இந்தக் கிரகத்திலும் அதிலுள்ள யாவற்றிலும் காணப்படுகின்றனவென்று நாம் கண்டோம். நிச்சயமாகவே, “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் கட்டப்படுகிறது,” என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த எளிய கூற்றை உண்மையென்று சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்வாய். (எபிரெயர் 3:4, NW) மிகப் பரந்த ஒரு வனாந்தரத்திற்கு நீ சென்று, அங்கே ஒரு வீட்டைக் கண்டாய் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் அங்கே ஆட்கள் ஒருவரையும் எங்கும் காணவில்லை. ஆகவே அந்த வீடு தானாகத் தன்னை உண்டாக்கிக் கொண்டது என்று நீ நினைப்பாயா? இல்லை அல்லவா? அவ்வாறே நம்முடைய கண்களுக்குத் தென்படாவிட்டாலும், இந்தப் பூமிக்கும், அதைத் திட்டமிட்டவரும் உண்டாக்கினவருமாகிய ஒருவர் இருக்கிறார். நோபல் பரிசு பெற்றவராகிய மாக்ஸ் பிளான்க் என்பவர் பின்வருமாறு கூறினார்:

“ஈடற்ற அறிவுக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்று ஊகித்துக் கொள்வதைத் தவிர இந்தப் பிரபஞ்சத்திற்கு வேறு விளக்கம் இல்லை.”

25நம்முடைய வீடாகிய இந்தப் பூமியைக் கட்டின இந்த “ஈடற்ற அறிவுக் கூர்மையுள்ள சிருஷ்டிகர்” யார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அவரே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவராகிய யெகோவா தேவன் என்று அது நமக்குச் சொல்லுகிறது.

26இந்த மகா திட்டமிடுபவர், மிகுந்த வல்லமையும் ஞானமுமுள்ளவர் என்பது தெளிவாய் இருக்கிறது. அவ்விதமே அவர்—உன்னையும் உட்பட—நம்மெல்லாருடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கானவற்றைத் தம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாய் இருக்கிறது. மற்ற மனிதர் அறிந்திருக்கிறவற்றை நீ கற்கக் கூடுமானால், அப்பொழுது நீ அதிகம் கற்றுக் கொள்ளுகிறாய். என்றாலும், உன் இளமையை மிக நன்றாய்ப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் குறித்து இவரிடமிருந்தே நீ மிக மிக அதிகம் கற்றுக் கொள்ளக்கூடும்.

27இங்கேதான் பைபிள் நம்முடைய உதவிக்கு வருகிறது. இந்தப் பூமியையும் மனிதவர்க்கம் முழுவதையும் குறித்த சிருஷ்டிகரின் நோக்கங்களை இது சொல்லுகிறது. மனிதருக்கு இருக்கும் பல கேள்விகளுக்குச் சிருஷ்டிகருடைய பதிலை அது கொடுக்கிறது. அவர்களுடைய பிரச்னைகள் எங்கிருந்து வருகின்றன, அவை எப்படித் தீர்க்கப்படும் என்பவற்றை அது காட்டுகிறது. இந்தப் பூமியை இவ்வளவு அதிக தொந்தரவாலும் அபாயத்தாலும் நிரப்பியிருக்கிற தோல்வியடைந்து கொண்டிருக்கும் இந்தத் தற்போதைய ஒழுங்கு முறைகளில் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் உன்னை வழிநடத்துகிறதில்லை. மிக அதிகம் மேம்பட்ட ஒன்றை அளிக்க முன்வருகிற புதிய ஒழுங்குமுறைகளையே நோக்கும்படி உன் கவனத்தை வழிநடத்துகிறது.

28நீ பைபிளை ஓரளவு வாசித்திருந்தாலும் வாசித்திராவிட்டாலும், அது சொல்வது உண்மையில் உன் பிரச்னைகளைத் தீர்த்து உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடுமா என்று நீ அறிய விரும்பக்கூடும். நீ பைபிளைக் கவனமாய்ப் படித்துப் பார்த்தால் தவிர இதை ஒருபோதும் அறிந்து கொள்ளமாட்டாய். இப்பொழுது நீ வாசித்துக் கொண்டிருக்கிற இந்தப் புத்தகத்தில், பைபிள் என்ன சொல்லுகிறது என்ன பதில்களையும் வழிநடத்துதலையும் கொடுக்கிறது என்பதை நாம் காண்போம். பைபிள் எவ்வளவு நியாயமானது உள்ளபடி நடைமுறையானதுமாய் இருக்கிறதென்பதை நீயே பார். ஆம், யெகோவா தேவனின் வார்த்தையாகிய பைபிள் உனக்கு முன்னிருக்கிற சவாலை எதிர்ப்பட உனக்கு எப்படி உதவி செய்யக்கூடும் என்பதை நீயே கண்டு, பின்பு மகிழ்ச்சியும் பயனுமுள்ள ஓர் எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறு.

[அடிக்குறிப்புகள்]

a ஒளிச்சேர்க்கை, ஆங்கிலத்தில் போட்டோ சின்தெஸிஸ்—போட்டோ என்பதன் அர்த்தம் “ஒளி” என்பதாகும், சின்தெஸிஸ் என்பது “சாதாரண மூல பொருட்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஒரு சேர்மானத்தை (கூட்டுப்பொருளை) உண்டாக்குவதாகும்.”

[கேள்விகள்]

1-4. நம்பிக்கையானது, ஒருவன் வெற்றியடைவானா இல்லையா என்பதில் என்ன பாகத்தை வகிக்கிறது? மக்களில் பெரும்பான்மையர் ஏன் எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவு நம்பிக்கையுள்ளவர்களாய் உணருகிறதில்லை?

5-8. பூமியில் வாழ்க்கையைக் கூடிய காரியமாக்குகிற சில அம்சங்களைக் குறிப்பிடு. ஆச்சரிய விதமாய்க் காரியங்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்படுவது எப்படி உண்டாயிற்று?

9-12. பூமிக்கு மிகுதியான சேதம் உண்டாக்கப்பட்டிருக்கிறபோதிலும், அந்தத் தீங்கைச் சரிப்படுத்தி திரும்பவும் முன்னிலையை அடையக்கூடிய அதன் திறமையை எது உதாரணமாக விளக்கிக் காட்டுகிறது?

13-17. பூமியிலிருந்து உணவு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? (சங்கீதம் 104:14) பூமி உற்பத்தி செய்கிற பல்வேறு வகை உணவானது ஒருவன் தன் வாழ்க்கையில் இன்பமனுபவிப்பதற்கு எப்படி உதவி செய்கிறது? ஆகவே இவற்றையெல்லாம் திட்டமிட்டவர், நமக்கு என்ன வகையான வாழ்க்கை இருக்கவேண்டுமென்று தம் மனதில் கொண்டிருந்தார்? (ஏசாயா 25:6; சங்கீதம் 67:6)

18-23. நாம் மிருகங்களைப் பார்க்கிலும் மிக மேம்பட்டவர்களாக இருக்கும்படி கருதப்பட்டோம் என்று நம்முடைய உடலைப் பற்றிய எது காட்டுகிறது?

24-28. இந்தப் பூமியைத் திட்டமிட்டவரும் உண்டாக்கினவருமாகிய ஒருவர் இருக்கிறார் என்று நம்புவது ஏன் நியாயமானதாய் இருக்கிறது? (ரோமர் 1:20) வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய கேள்விகளுக்குப் பதில்களை அவர் எங்கே அளித்திருக்கிறார்? (2 தீமோத்தேயு 3:16) பைபிள் சொல்வதைச் செய்வது, நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்ப்படுவதற்கு நமக்கு உண்மையில் உதவி செய்யுமா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4)

[பக்கம் 11-ன் படம்]

பூமியின் சிருஷ்டிகரைப் பற்றிய அறிவு எதிர்கால நம்பிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறது