Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நேர்மை—பலனளிக்கிறதா?

நேர்மை—பலனளிக்கிறதா?

அதிகாரம் 22

நேர்மை—பலனளிக்கிறதா?

எப்பொழுதும் உண்மையைப் பேசுவது அறிவுள்ள காரியமாய் இருப்பதாக இன்று பெரும்பான்மையர் எண்ணுகிறதில்லை. இதை நீ கவனித்திருக்கிறாயா? வியாபாரிகள் பலர் ஏதோ சிறிது நேர்மையற்று நடவாமல் வெற்றிகரமாய்ப் போட்டியிட முடியாதென்று விவாதிக்கின்றனர். மிகப்படுத்திக் கூறும் அல்லது பொய் விவரம் அளிக்கும் விளம்பரங்கள் தினந்தோறும் நம்முடைய காட்சிக்குள் வருகின்றன. அரசியல் தலைவர்கள் பொது மக்களின் சுகநலத்தைக் கவனித்துக் காப்பவர்களாகச் சொல்லப்படுகிறபோதிலும், பல ஆட்கள் அவர்களை நம்பத்தகாதவர்களாகக் கருகின்றனர்.

2முதியோருக்குள் அவ்வளவு அதிக நேர்மையில்லாமையைக் காண்கிறவர்களாய் இளைஞர் பெரும்பாலும் அதே போக்கை ஏற்கின்றனர். பலர் பள்ளி பரீட்சைகளில் மோசடி செய்கிறார்கள் அல்லது பொய்ப் பாசாங்குகள் செய்து கொண்டு வகுப்புகளுக்குச் செல்லாமல் ஏமாற்றுகின்றனர். தங்கள் நண்பர்களிடம் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்னென்ன காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்பதாகப் பொய் வருணனைகளைச் செய்து தற்பெருமை பேசிக்கொள்ளக்கூடும். வீட்டில்—தங்கள் நடத்தையைப் பற்றிய கேள்விகளுக்குப் பாதி உண்மைகளைக் கொண்டே பதிலளித்து, முற்றிலும் பொய்யான கருத்துப் பதிவுகளைக் கொடுக்கக்கூடிய வண்ணமாய்த் தங்கள் பதில்களில் சொற்றொடர்களைப் பயன்படுத்தி உண்மைகளை மறைத்து தங்கள் பெற்றோரையுங்கூட வஞ்சிக்கலாம். ஒழுக்கக்கேடு, போதை மருந்துகள் அல்லது இவற்றைப்போன்ற மற்றக் காரியங்களைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுடைய பெற்றோர் அல்லது மற்றவர்கள் கண்டுபிடிக்க முயன்றால், அவர்கள் தாங்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பதையல்ல, ஆனால் தங்களைக் கேள்வி கேட்பவர்கள் எந்தப் பதிலைக் கேட்க விரும்புவார்கள் என்று தாங்கள் எண்ணுவதையே சொல்லி, உண்மைகளை மழுப்பி மறைத்துப்போடக்கூடும். பணத்தை அல்லது எதையோ செய்வதற்கு அனுமதியைப் பெறுவதற்கு, அவர்கள் பெற்றோருக்கு, மனப்பூர்வமல்லாத போலி பாசத்தை அல்லது இச்சகம் பேசி பசப்புவதை மிகுதியாகக் காட்டுவார்கள்.

3இது உண்மையில் விசித்திரமாய் இருக்கிறதா? உண்மையில், இளைஞர் பலர் இதைச் செய்வது நியாயம் என்பதாக உணருகின்றனர். ஏன்? பொய்ச் சொல்வது தவறு என்று தங்கள் பெற்றோர் ஒருவேளை அவர்களுக்குக் கற்பிக்கலாமென்பது உண்மையே. என்றாலும் தங்கள் பெற்றோர் ஏதோ விரும்பத்தகாத நிலைமையிலிருந்து வெளியேற அல்லது ஏதோ கடன் சீட்டையோ, வரியையோ செலுத்துவதைத் தவிர்க்க உண்மைகளைத் திரித்துக் காட்டுவதை அவர்கள் காணக்கூடும். சாக்குப்போக்குகளைச் சொல்வதில் தங்களுக்காகப் பொய்ப் பாசாங்கு செய்ய தங்கள் பிள்ளைகளையுங்கூட சில பெற்றோர் பயன்படுத்துவதை நீ கவனித்திருக்கிறாயா?

4இவற்றைப்போன்ற நிலைமைகள் நடப்பிலிருக்கையில், எல்லாக் காரியங்களிலும் நேர்மையுள்ளவர்களாக இருக்கப் பிரயாசப்படுவதற்கு, இளைஞருக்கு—அல்லது நம்மில் எவருக்காயினும்—என்ன ஊக்கமூட்டுதல் இருக்கிறது? பொய்ச் சொல்வது, ஏமாற்றுவது, திருடுவது ஆகியவை அவ்வளவு சாதாரண பழக்கமாக இருக்கும் ஓர் உலகத்தில் உண்மையைக் கடைப்பிடிப்பது உனக்கு எவ்வளவு நடைமுறையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்? நேர்மையில்லாமையைப் பார்க்கிலும் அதிக பயனை இது உண்மையில் உனக்குக் கொண்டு வருமா, அப்படியானால், எவ்வகையான பயனை?

குறுகிய காலத்திற்கு எதிராக நீடித்தக்கால பயன்கள்

5உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: எனக்கு என்ன வேண்டும், விரைவான லாபமா, மேலீடாகத் தோன்றுகிற பயனா, அல்லது நிலைவரமான பயன்களைக் கொண்டு வருவதா? இதைப்பற்றி நீ யோசித்துப் பார்க்கையில், பொய்ச் சொல்லுவதிலிருந்தும் ஏமாற்றுவதிலிருந்தும் வரும் எந்த மேலீடான பயன்கள் எவ்வளவு மேம்பட்டவையாயிருந்தாலும் குறுகிய காலத்திற்கே என்பது உண்மையல்லவா? ஆம், கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகையில் மெய்யாகவே உண்மையாயிருக்கிறது: “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும் பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.”—நீதிமொழிகள் 12:19.

6உதாரணமாக, ஏதோ உற்பத்திப் பொருளைப் பற்றிப் பொய் விவரமளிக்கிற ஒரு வியாபாரியை எடுத்துக்கொள். அவன் அதை விற்றுவிடலாம், என்றாலும் இந்த வழிமுறையில், அவன் ஒரு வாடிக்கையாளரை இழக்கக்கூடும், தான் ஏமாற்றப்பட்டானென்று அந்த ஆள் கண்டறிகையில் திரும்ப அங்கு வாங்கமாட்டான். அல்லது, பள்ளியில் நீ ஏமாற்றினாய் என்று வைத்துக்கொள்வோம். நீ கண்டுபிடிக்கப்படாவிட்டால், உனக்கு உயர்ந்த மார்க்குகள் கிடைக்கக்கூடும். எல்லாவற்றிலும் முதல்தர (“A”) மார்க்குகள் கிடைத்திருந்தாலுங்கூட, பள்ளிப்படிப்பு முடிந்து வெளியேறுகையில் மிகச் சொற்பமான அறிவே நீ பெற்றிருந்து, நன்றாக வாசிக்க அல்லது எண்களைக் கூட்டவுங்கூட தெரியாதவனாய் ஒருவேளை இருப்பாயானால் என்ன பயன்?

7அப்படியானால், ஏமாற்றுகிறவன், முடிவில், எல்லாவற்றிற்கும் மேலாக மிக அதிகமாய்த் தன்னைத்தானே உண்மையில் ஏமாற்றிக்கொள்ளுகிறான். நேர்மையுள்ள ஒருவனையும் நேர்மையற்ற ஒருவனையும் சற்று ஒப்பிட்டுப்பார். நேர்மையற்ற ஒருவன் இகழ்கிற காரியங்கள் சிலவற்றைக் கவனித்து, நேர்மையில்லாமை மேம்பட்ட அல்லது சந்தோஷ வாழ்க்கைக்கு உதவி செய்கிறது என்று நினைக்கிற எவனும் உண்மையில் வெகு குறுகிய நோக்குடையவனாக இருக்கிறானென்று நீ ஒப்புக்கொள்ளுகிறாயா இல்லையாவென்று பார்.

8கபடமில்லாமல் நேராகவும் நேர்மையாகவும் காரியங்களைக் கையாளுகிறவனென்று நீ அறியப்பட்டிருக்கிறாயென்றால் மற்றவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொள்ளுகிறாய். நீ அடைகிற நண்பர்கள் உன்னை மெய்யான நண்பனாகக் கண்டு அதை மதிப்பதனால் பெரும்பாலும் அவர்களும் மெய்யான நண்பர்களாக இருப்பார்கள். தற்கால வியாபார உலகம் அடிக்கடி நேர்மையற்றதாய் இருக்கிறதென்பது உண்மையாக இருக்கையில், வேலையில் அமர்த்துகிறவர்கள், நேர்மையுள்ளவர்களாயிருக்கும் வேலையாளரை மதிப்பதற்குப் பொதுவாய்ப் போதிய உணர்வுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படியிருக்க, நேர்மையுள்ளவனென்று நற்பெயர் பெற்றிருப்பதானது, வேலை கிடைப்பது அரிதாயிருக்கையில் வேலை கிடைக்கப்பெறும்படி செய்யக்கூடும் அல்லது மற்றவர்கள் தங்கள் வேலையை இழந்து கொண்டிருக்கையில் வேலையில் நிலைத்திருக்க உதவி செய்யக்கூடும்.

9வீட்டில் நேர்மையானது, மணத்துணைவர்களுக்கிடையேயும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையேயும் சந்தேகங்களை அல்லது அவநம்பிக்கைகளை அகற்றி அமைதியும் இன்பமுமான சூழ்நிலைக்கு உதவி செய்யும். தங்கள் நேர்மையால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் முழு நம்பிக்கையையும் சம்பாதிக்கையில், பொதுவாய்ப் பெற்றோர் இளைஞருக்குப் படிப்படியாய் மேலும் மேலுமதிக சுயாதீனத்தைக் கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏதோவொரு பிழையை அல்லது தவறான நடத்தையைப் பற்றி உண்மையைச் சொல்வது சிட்சையைக் கொண்டுவருமென்பது மெய்யே. என்றாலும் நீ நேர்மையுள்ளவனாக இருந்ததன் காரணமாக அந்தச் சிட்சை இலேசானதாக இருக்கலாம். பின்னும், எதிர்காலத்தில், ஏதோ தவறைச் செய்யவில்லை என்று நீ உண்மையாய் மறுக்கையில், உன்னுடைய விளக்கம் அநேகமாய் நம்பப்படும்.

10“தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள” அல்லது ஏதோ அனுகூலத்தையடைய நேர்மையில்லாமைக்கு இடங்கொடுக்கிற ஒருவனுடன் இதை ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்பாயாக. அவன் இந்த எல்லாச் சிறந்த பயன்களையும் இழந்து போவதற்கு ஆளாகிறான். ஏனென்றால் நேர்மையற்ற ஒருவனுடன் தொடர்பு கொள்வதானது, இயக்கும் கருவி சரியாய் வேலை செய்யாத மோட்டார்காரை ஓட்டிக்கொண்டு போவதைப்போல் இருக்கிறது—அவன் என்னதான் செய்வானென்று உனக்கு ஒருபோதும் தெரியாது. ஆகையால் நீ எவரிடமாவது பொய் சொல்லுகையில் அல்லது அவனை ஏமாற்றுகையில், உன்பேரில் அவனுக்கு உண்டுபண்ணுகிற அந்த அவநம்பிக்கையைப் போக்குவதற்குப் பல ஆண்டுகள் எடுக்கக்கூடுமென்பதை உணருவாயாக. பெற்றோர் ஒருவருக்கோ ஒரு நண்பனுக்கோ இவ்வாறு செய்வாயாகில், நீ உண்டுபண்ணின காயம் ஆறிப்போகலாம், என்றாலும், அது, நீடித்து நிலைத்திருக்கும் ஒரு தழும்பைப்போல் ஒரு கெட்ட நினைப்பூட்டுதலை விட்டு வைக்கக்கூடும். நேர்மையில்லாமையை ஒரு பழக்கமாக்குவாயானால், ஒரு காலம் வரக்கூடும், அப்பொழுது மற்றவர்கள் உன்னை நம்பி பொறுப்பு ஒப்படைக்கத் தகுந்தவனாக எண்ணவேண்டுமென்று உன் பங்கில் நீ அதிகமாய் விரும்புவாய். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள். நேர்மையில்லாமை கொண்டுவருகிற தற்காலிக பயன் எதுவும் இதற்குத் தகுந்ததாக இருக்கிறதா?

11உண்மையில், பொய்ச் சொல்லுவதானது உதிர்மணலில் நடப்பதைப்போல் இருக்கிறது. அடிக்கடி ஒவ்வொரு பொய்யும், அதை ஆதரிக்க மற்றப் பொய்களைச் சொல்லும்படி கேட்கிறது, இவ்வாறு ஒருவன் விரைவில் நேர்மைக்கேடான நச்சுச் சூழலுக்குள் சிக்கிக்கொள்கிறான். நிச்சயமாகவே, பைபிளின் பின்வரும் நேர்முகமான அறிவுரையின் ஞானத்தை நாம் காணமுடிகிறதல்லவா: “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்”?—கொலோசெயர் 3:9.

12பொய் சொல்லுகிறவர்கள் அநேகமாய்ப் பாதி உண்மைகளுடனும் “சிறு பொய்களுடனும்” தொடங்குகிறார்கள். பின்பு படிப்படியாய் மிக மோசமான பொய்களுக்குச் செல்லுகின்றனர். இவ்வாறு பொய் பெரும்பாலும் சூதாட்டம் தொடங்குவது போல் தொடங்குகிறது. சூதாடுகிறவன் முதன் முதல் சிறிய தொகைகளை வைத்துப் பந்தயம் கட்டுகிறான், ஆனால்—சாதாரணமாய் ஏதோ இழப்புகளைச் சரிசெய்ய— அவன் மேலும் மேலும் பெரிய தொகைகளின் பேரில் பந்தயம் கட்டும்படி படிப்படியாய் இழுக்கப்படுகிறான்.

13முதன் முதல், பொய்களை நேடியாகப் பார்த்துப்பேசுவது அடக்கமற்றத் துணிச்சலாகத் தோன்றலாம். பொய்ப் பேசுகையில் மற்றொருவர் கண்ணை நேராகப் பார்த்துப் பேசுவதற்குத் தங்களைப் பயிற்றுவிக்கிற ஆட்களைப் பற்றி உனக்குத் தெரிந்துமிருக்கலாம். இது தைரியமா? இல்லை, பொய்ச் சொல்வது தைரியமல்ல, அதற்கு மாறாக அது உண்மையில் கோழைத்தனமே. மெய்யைப் பேசுவற்கும் அது கொண்டு வரும் விளைவுகள் என்னவாக இருந்தாலும் அவற்றை எதிர்ப்படுவதற்குமே தைரியம் வேண்டியதாயிருக்கிறது. ஒரு பொய்யானது பலத்தை உணர்த்துவதற்கு மாறாக பலவீனமானதாயிருக்கிறது, தானாகத் தனியே நிற்கக் கூடாததாயிருக்கிறது, தன்னைத் தாங்க வேறு பொய்கள் தேவைப்படுவதாயிருக்கிறது, மெய்யை நேருக்குநேர் சந்திக்க ஒருபோதும் மனமுள்ளதாக இருப்பதில்லை. அப்படியானால், ஒரு பொய் முகத்தைத் தரித்துக்கொண்டும், மறைத்துக்கொண்டும், தலையை தாழ்த்திக்கொண்டும், சாக்குப்போக்குகள் சொல்லிக்கொண்டும் தன் வாழ்க்கையைச் செலவிடுகிற ஓர் ஆளைப்போல் ஏன் இருக்கவேண்டும்? மோசடி செய்து இரண்டகமான வாழ்க்கை நடத்த முயன்று, தோல்வியிலும் தற்கொலையிலும் முடிவடைந்த யூதாஸ்காரியோத்தைப்போல் ஏன் இருக்கவேண்டும்? நேர்மையுள்ளவனாக[ளாக] இருப்பதற்குப் போதிய ஆண்மை அல்லது பெண்மை உடையவனாக[ளாக] ஏன் இருக்கக்கூடாது? சுயமரியாதையையும் ஒரு நல்ல மனச்சாட்சியையும் காத்து வருவதற்கு ஒரே வழி இதுவே.

உன் வார்த்தையைக் காத்துக்கொள்ளுதல்

14நேர்மையைப் பற்றிய இந்தக் காரியத்தில் உன் வார்த்தையைக் காத்துக்கொள்ளுதலுங்கூட உட்பட்டிருக்கிறது. உன் பெற்றோர் உனக்கு ஏதோ வாக்குக்கொடுத்து, பின்பு தங்கள் வார்த்தையை நிறைவேற்றத் தவறினார்களென்றால் நீ ஒருவேளை உள்ளத்தில் ஆழ்ந்த வருத்த உணர்ச்சியடைவாய். ஆனால் உன் பெற்றோருக்கு நீ கொடுத்திருக்கிற வார்த்தையைக் காத்துக் கொள்வதைப் பற்றியதில் நீ அவ்வளவு ஆழ்ந்த உறுதியுணர்ச்சி உடையவனாக[ளாக] இருக்கிறாயா? இதைக் குறித்ததில் நீ எப்படிப்பட்டவனாய்[ளாய்] இருக்கிறாய்? எதையோ செய்வதற்கு உதவி செய்வதாக எவரிடமாவது சொல்லுகிறாயென்றால் அல்லது ஏதோ வேலை செய்ய முன்வருவாயானால் அந்த உன் வார்த்தையை நிறைவேற்ற நீ எப்பொழுதும் முயற்சி செய்கிறாயா? குறிப்பிட்ட ஒரு நேரத்தில் எவரையோ சந்திக்க நீ உறுதி செய்கிறாயென்றால் அந்தச் சரியான நேரத்தில் நீ அங்கு இருக்கிறாயா? உன்னுடைய வார்த்தை எவ்வளவு மதிப்புள்ளதாயிருக்கிறது?

15உன் வார்த்தையை உறுதியாய்க் காத்துக்கொள்ளும் ஓர் ஆளாக இருக்கும் இந்தப் பழக்கத்தை உன்னில் வளர்த்து வரத் தொடங்குவதற்கு இளமை சரியான காலமாயிருக்கிறது. உன் வார்த்தையைக் காத்துக் கொள்ளுதல் அல்லது காத்துக்கொள்ளாமற்போதல் ஆனது, இப்பொழுது நீ உள்ளத்தில் எவ்வகையானவனாக இருக்கிறாய் என்பதைப் பற்றிப் பேரளவாகச் சொல்லுகிறது; மேலும் இது, உன் மனதிலும் இருதயத்திலும் உருப்படுத்தியமைக்கும் ஒரு பாதிப்பையும், உடையதாய் இருக்கிறது. இது நீடித்து நிலைத்திருக்கும் தனிப்பண்பியல்புகளை உண்டுபண்ணக்கூடிய ஒரு மனப்பான்மையை, காரியங்களை நோக்கும் ஒரு முறையைக் கட்டியெழுப்புகிறது.

16இப்பொழுது நீ நம்பத்தக்கவனாய்[ளாய்] இருக்கிறாயென்றால் பிற்காலத்திலுங்கூட நீ அநேகமாய் அவ்வாறு இருப்பாய். இதற்கு எதிரிடையானதும் அவ்வாறே உண்மையாய் இருக்கிறது. உதாரணமாக, இப்பொழுது நீ உன் வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறவனாய்[ளாய்] வாழ்கிறதில்லையென்றால், பிற்பட்ட ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட வேலையை அல்லது வேலை நியமிப்பை ஏற்க ஒருவேளை உறுதியான ஓர் ஒப்பந்தம் நீ செய்து—பின்பு சீக்கிரத்தில் அதிலிருந்து பின்வாங்க விரும்புவாய். பல ஆட்கள் அவ்வாறு செய்கின்றனர், ஆனால் இவர்கள் மற்றவர்களால் மதிப்புடன் கருதப்படுகிறதில்லை.

17ஆட்கள் தங்கள் வார்த்தையை ஏன் மீறுகிறார்கள்? ஒரு காரியம், ஒருவன் தன் வார்த்தையைக் காத்துக் கொள்வதானது அவன் பேரில் கட்டுப்பாடுகளை வைக்கிறது, அது அவனைக் கடமைப்படுத்துகிறது. சந்திப்புக்குரிய ஏற்பாட்டை அல்லது வேறு ஏதாவது வாக்கை நிறைவேற்றுவதற்கான சமயம் வருகையில், வேறு ஏதாவது அதிக கவர்ச்சியாய்த் தோன்றக்கூடும். பின்னும், தன்னுடைய வார்த்தையைக் காத்துக்கொள்வதானது, பல தடவைகளில் தான் நினைத்ததைப் பார்க்கிலும் மிக அதிக பிரயாசத்தைக் குறிப்பதாக ஒருவேளை அவன் காணக்கூடும்.

18இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நீ என்ன செய்வாய்? கஷ்டத்தையோ அல்லது ஏதோ இழப்பையோ அது குறித்தாலுங்கூட நீ உன் வார்த்தையின்படி நிலைத்திருப்பாயா? “ஆனால் நான் எதற்குள் நுழைகிறேன் என்பதை நான் அறியாதிருந்தேன்!” என்பதாக எவராவது சொல்லலாம். இங்கே மெய்யான கேள்வியானது: அது யாருடைய தவறு? அந்த மற்ற ஆளின் பங்கில் மோசடியோ வஞ்சனையோ இருந்ததா? இல்லையென்றால், உன் வார்த்தையை நிறைவேற்றுவது தேவைப்படுத்துகிற எவ்வகை கடினத்தையும் நீ சகிக்கையில் ஒரு விலைமதியா பாடத்தைக் கற்றுக்கெள்ளுகிறாய். அதாவது: பேசுவதற்கு முன்பாக, உன் வாக்குறுதியைக் கொடுப்பதற்கு முன்பாக யோசி. பின்பு, நீ பேசுகையில் நீ சொல்வதை நிறைவேற்று.

19ஒருவரைப் பிரியப்படுத்தும் என்று நீ வெறுமென நினைப்பதன் காரணமாகத்தானே ஏதோவொன்றிற்கு “ஆம்,” என்று சொல்லி—அதன் விளைவுகளை முன்னதாகவே யோசியாமல் இருப்பதானது—உன்னைத் தொந்தரவுக்குள் உட்படுத்தக்கூடும். ஆனால் அதற்கு மாறாகக் காரியங்களை முற்றிலும் யோசித்துப் பார்த்து, அவை உன் எதிர்கால வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்பதை எண்ணிப்பார்த்து வாக்குகள் செய்வதைப் பற்றியதில் நீ கவனமாயிருப்பாயானால், அப்பொழுது ஒருமுறை நீ வாக்குறுதி செய்த பிறகு உன் வார்த்தையைக் காத்துக் கொள்வதை எளிதாகக் காண்பாய். உன் வார்த்தைக்கு உண்மையாயிருக்க உன் இருதயத்தையும் மனதையும் நீ ஆயத்தம் செய்திருப்பாய். “உங்கள் பேச்சில் ஆம் என்பதை ஆம் எனவும் . . . சொல்லுங்கள்,” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 5:37.

நேர்மை நன்மை பயக்குவதன் முக்கிய காரணம்

20நேர்மையாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருப்பது ஏன் நன்மை பயக்குகிறது என்பதற்கு முக்கிய காரணமானது, அப்படிப்பட்ட ஆட்களை மாத்திரமே யெகோவா தேவன் தம்முடைய நண்பர்களாகக் கருதுவதேயாகும். ஏன் அப்படி? ஏனென்றால் அவர் தாமேயும் தம்முடைய வார்த்தைக்கு உண்மைத்தவறாதவராக இருக்கிறார். அதன் காரணமாகவே யோசுவா இஸ்ரவேல் ஜனத்திடம் பின்வருமாறு சொல்லக்கூடியவனாக இருந்தான்: “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைப்பற்றிச் சொன்ன நல்வார்த்தைகளிளெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை; இதைப் பற்றி உங்கள் இருதயத்திலும் மனதிலும் யாதொரு சந்தேகமுமில்லை; அவைகளிளெல்லாம் உங்கள் விஷயத்தில் நிறைவேறின; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போனதில்லை.” (யோசுவா 23:14, தி.மொ.) பைபிள் பெரும்பாலும் யெகோவா தம்முடைய வாக்குகளைத் தவறாமல் காத்திருக்கிறதைப் பற்றிய பதிவாக இருக்கிறது. கடந்த காலத்தில் அவர் காட்டின உண்மையே, அவருடைய வாக்குகளின் நிறைவேற்றமாக வரப்போகும் எதிர்கால ஆசீர்வாதங்களில் அப்பேர்ப்பட்ட திடநம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது.

21கடவுளுடைய அங்கீகாரம் உனக்கு வேண்டுமா? அப்படியானால், தம்மை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குகிறவர்களுக்கு மாத்திரமே அதை அவர் தருகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள். (யோவான் 4:23) பொய்ச் சொல்லுதலை, ஆம்—மோசடி, தற்புகழ்ச்சி, பொய்யாய்ப்பழித்தல், ஏமாற்றுதல் ஆகிய—அதன் எல்லா வகைகளையும் அவர் வெறுக்கிறார் என்பதை மனதில் வை; ஏனென்றால் அது தன்னலம், பேராசை, மற்றவர்களின் அக்கறைகளுக்கு எவ்வித கவலையுமில்லாமல் உணர்ச்சியற்றிருப்பது ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது. முழு மனிதவர்க்கத்தின் இக்கட்டுகளும் துன்பங்களும் பொய்ச் சொன்னதிலிருந்தே—அதாவது கடவுளுடைய பிரதான சத்துருவான, “பொய்க்குப் பிதா”வாகிய சாத்தான் பொய்ச் சொன்னதிலிருந்தே—முதன் முதல் தொடங்கினவென்று அவர் அறிந்திருக்கிறார்.—யோவான் 8:44.

22நேர்மையின் போக்கை உண்மையுடன் பற்றியிருக்க நீ மனப்பூர்வமாய் விரும்புகிறாயா? அப்படியானால் உன் சிருஷ்டிகரின் பேரிலும் உன் அயலானின் பேரிலுமுள்ள மெய்யான அன்பு மாத்திரமே உனக்குத் தேவையான அந்த உள்நோக்கத் தூண்டுதலைக் கொடுக்கக் கூடுமென்பதை நீ தெளிவாக உணரவேண்டும். சத்தியம் செய்யும் நன்மையினிமித்தமாக அதன் பேரில் இருதயப்பூர்வமான அன்பு இருக்கவேண்டும், மேலும் பொய்ச் சொல்லுதல் செய்கிற தீங்கினிமித்தமாக அதை முற்றிலும் வெறுத்து ஒதுக்க வேண்டும். மேலும் வேறு எந்த ஆளின் அங்கீகாரத்தைப் பார்க்கிலும் கடவுளுடைய அங்கீகாரம் உனக்கு மிக அதிகத்தைக் குறிக்க வேண்டும். அவர் தாமேயும் சத்தியத்தை நேசித்து பொய்ச் சொல்லுதலை வெறுப்பதன் காரணமாகத் தானே நாம் உறுதியான எதிர்கால நம்பிக்கை உடையவர்களாக இருக்கலாம், இந்த நம்பிக்கை அவருடைய தவறாத வாக்குகளின் பேரிலும் அவருடைய வார்த்தையின் நிரூபிக்கப்பட்ட நம்பத்தக்கத் தன்மையின் பேரிலும் ஆதாரங்கொண்டதாய் இருக்கிறதென்பதை நினைவில் வை. ஆகவே அவரைப் போல் இருக்க பிரயாசப்படு. “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்,” என்பதை மனதில் வைப்பாயாக.—நீதிமொழிகள் 12:19.

[கேள்விகள்]

1-4. இளைஞருக்குள் நேர்மையில்லாமைக்குரிய என்ன அறிகுறிகளை நீ கவனித்திருக்கிறாய்? இளைஞர் பலர் இக்காரியங்களைச் செய்வது ஏன் உண்மையில் ஆச்சரியமுண்டாக்குவதாயில்லை? (ஏசாயா 9:16)

5-7. நேர்மையில்லாமையினால் வரும் எந்தப் பயன்களும் ஏன் தற்காலிகமானவை?

8-10. பின்வருபவற்றில் நேர்மை எப்படி நன்மை பயக்குவதாயிருக்கிறது (எ) ஒருவனுடைய உலகப் பிரகாரமான வேலையில்? (பி) குடும்ப உறவுகளில்? (சி) நண்பர்கள் சம்பந்தப்பட்டதில்?

11-13. (எ) பொய்ச் சொல்லும் பழக்கம் அநேகமாய் எப்படித் தொடங்குகிறது? (பி) பொய்ச் சொல்வது ஏன் தைரியத்துக்கு மாறாக கோழைத்தனமாய் இருக்கிறது?

14-16. உன் வார்த்தையைக் காத்துக்கொள்வது ஏன் முக்கியமாய் இருக்கிறது?

17-19. (எ) ஏன் மக்கள் தங்கள் வார்த்தையை மீறுகிறார்கள்? (பி) உன் வார்த்தையை மீறும்படி மனம் சாய்பவனாய் உணரக்கூடிய சூழ்நிலைமைகளைத் தவிர்க்க எது உனக்கு உதவி செய்யும்?

20-22. (எ) எல்லாச் சமயங்களிலும் நேர்மையாயிருப்பது ஏன் முக்கியமானதென்பதற்கு முக்கிய காரணம் என்ன? (சங்கீதம் 15:1-4) (பி) தம்முடைய வார்த்தையைக் காப்பதில் கடவுள் என்ன மிக நல்ல முன்மாதிரியை வைக்கிறார்? அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற எது நமக்கு உதவி செய்யக்கூடும்?

[பக்கம் 174-ன் படம்]

நீ திருடுவது உனக்கு உண்மையிலேயே நன்மை செய்கிறதா?