Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போட்டி விளையாட்டுகளும் பொழுதுபோக்கும்

போட்டி விளையாட்டுகளும் பொழுதுபோக்கும்

அதிகாரம் 16

போட்டி விளையாட்டுகளும் பொழுதுபோக்கும்

பற்பல போட்டி விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு வகைகளிலும் உலகமெங்கும் அக்கறை காட்டப்படுகிறது. இவற்றை அனுபவித்து மகிழுவதற்குப் பல கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. உன் பங்காக நீயுங்கூட இவற்றில் அக்கறை கொண்டிருக்கிறாயா? உதாரணமாக, படகு ஓட்டிச் செல்ல உனக்குப் பிரியமா? நீச்சலடித்தல், பந்து விளையாடுதல் அல்லது மற்றப் போட்டி விளையாட்டுகளில் பங்கெடுத்தல் ஆகியவற்றை நீ விரும்பி மகிழுகிறாயா? அல்லது ஒருவேளை இயங்கு திரைப்படங்களுக்குப் போவதில் அல்லது டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்களைப் பார்ப்பதில் நீ இன்பம் கண்டடைகிறாயா?

2இப்படிப்பட்ட இன்பங்கள் தவறானவை என்று சில ஆட்கள் சொல்வர். நீ என்ன நினைக்கிறாய்? இந்தக் காரியங்களைப் பைபிள் கண்டனம் செய்கிறதென்றுங்கூட சிலர் வாதாடுகின்றனர். ஆனால், ஒளிவு மறைவில்லாமல் சொல்ல வேண்டுமானால், இப்படிப்பட்ட ஆட்கள் பைபிளையும் அதன் ஆசிரியராகிய யெகோவா தேவனையும் தவறாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர். பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலிருந்து இளைஞர் இன்பத்தைப் பெறுவதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை ஆதரவாகவே பேசுகிறது. உதாரணமாக, கடவுளுடைய ஆசீர்வதிக்கப்பட்ட ஜனத்தை விவரிப்பதாய், பைபிள்: “நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அதன் வீதிகளில் நிறைந்திருக்கும்,” என்று சொல்லுகிறது. மேலும், “நடனம் பண்ண ஒரு காலமுண்டு,” என்றும் சொல்லுகிறது. (சகரியா 8:5; பிரசங்கி 3:4) ஆரோக்கியகரமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலிருந்து நாம் இன்பம் பெற வேண்டுமென்றே கடவுள் நோக்கங்கொண்டாரென்பது தெளிவாயிருக்கிறது. கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒன்று “சந்தோஷம்” ஆகும். (கலாத்தியர் 5:22) ஆரோக்கியமளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நாம் அனுபவித்து மகிழ்வது இயல்பானதும் இயற்கையானதுமாய் இருக்கிறது.

இன்பத்தைப் பெருக்குவதற்கு வழிநடத்துதல்

3இப்படிப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து இன்பத்தைப் பெற நமக்கு உதவி செய்ய, கடவுள் அன்புடன் நமக்கு வழிநடத்துதலை அளித்திருக்கிறார். உதாரணமாக, மிதமீறி உண்பதனால் உண்டாகும் உடல்நலக் கேடான விளைவுகளை நாம் தவிர்க்கும்படி கடவுளுடைய வார்த்தை “மாம்சப் பெருந்தீனிக்காரரைச் சேராதே” என்று அறிவுரை கொடுக்கிறது. (நீதிமொழிகள் 23:20) அதைப்போலவே பொழுதுபோக்கு நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அவர், பின்வரும் இந்த ஞானமான அறிவுரையை நமக்குக் கொடுக்கிறார்: “தேவ பக்தியை உன் குறிக்கோளாகக் கொண்டு உன்னைப் பயிற்றுவித்துக் கொண்டிரு, ஏனெனில் உடல் பயிற்சி கொஞ்சத்திற்கே பயனுள்ளதாய் இருக்கிறது; தேவ பக்தியோ எல்லாவற்றிற்கும் பயனுள்ளது, ஏனெனில் அது இப்போதைய வாழ்க்கைக்கும் வரப்போகிறதற்கும் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கிறது.”—1 தீமோத்தேயு 4:7, 8, NW.

4ஆகவே போட்டி விளையாட்டுகளில் நாம் அடைகிறதைப் போன்ற இப்படிப்பட்ட “உடல் பயிற்சி”க்கு அதற்குரிய இடம் இருக்கிறதென்று பைபிள் காட்டுகிறது. அது நமக்கு நல்லதே; அது உடல் சம்பந்த ஒத்திசைவையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும், தசை திட்பத்தையும், பலத்தையும் மேம்பட செய்ய நமக்கு உதவி செய்யக்கூடும். மேலும், மனதின் பிரகாரமாயும் அது நமக்குப் புத்துயிரளிக்கக்கூடும், முக்கியமாய், படிப்பதில் மிகுதியான நேரம் நாம் செலவிடுகிறோமென்றால் இது உதவியாயிருக்கும். என்றாலும் “உடற்பயிற்சி கொஞ்சத்திற்கே பிரயோஜனமுள்ளது” என்று பைபிள் எச்சரிக்கைக் கொடுப்பதைக் கவனி. இப்படிப்பட்ட அறிவுரையைப் புறக்கணித்து, போட்டி விளையாட்டுகளில் நீ முற்றிலுமாய் ஆழ்ந்தவனாவாயென்றால் என்ன நடக்கக்கூடும்?

5ஒரு காரியம் அது போட்டி விளையாட்டை விரும்பி வரவேற்கும் இன்பப் பொழுதுபோக்காக ஏற்பதற்கு மாறாக, “வினைமையான அலுவலாக்கி,” அதன் மகிழ்ச்சியைக் கெடுத்துப் போடக்கூடும். போட்டிக்குரிய விளையாட்டுகளை மட்டுக்கு மீறி வலியுறுத்துவதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறவராய் உளநூல் வல்லுநராகிய புரூஸ் ஓகில்வி பின்வருமாறு கூறினார்: “நான் ஒருமுறை, 10 கூட்டுக்கழக தளக்கட்டுப் பந்தாட்ட காட்சிகளிலுள்ள புதியவர்களைச் சந்தித்துப் பேசினேன், இவர்களில் 87 சதவீதமானவர்கள், சிறு கூட்டுக் கழக தளக்கட்டுப் பந்தாட்டத்தைத் தாங்கள் ஒருபோதும் விளையாடாதிருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும், ஏனெனில் மகிழ்ச்சிக்குரிய ஒரு விளையாட்டாக இருந்ததிலிருந்து அது மகிழ்ச்சியை எடுத்துப் போட்டு விட்டதென்று சொன்னார்கள்.”

6மேலும், கால்பந்தாட்டம் போன்ற சில விளையாட்டுகள் அபாயகரமானவையாக இருக்கக்கூடும், முக்கியமாய் உன்னுடைய உடல் இயல்பான வளர்ச்சி நிலையில் இருக்கையில் அவ்வாறு இருக்கும். ஏறக்குறைய 1,20,00,000 அமெரிக்க பிள்ளைகள், போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுவதிலிருந்து ஏதாவது நிலையான உடல் சேதத்தைத் தாங்கள் 18 வயதை அடைவதற்கு முன்பாகவே அனுபவித்து அவதியுறுகிறார்கள் என்று சையன்ஸ் டைஜெஸ்ட் அறிவிக்கிறது! கால்பந்தாட்டத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மிக அதிக பிரபல ஆட்டக்காரரில் ஒருவர், தன்னுடைய குமாரர் இருவரையும், பிள்ளைகளின் கால் பந்தாட்ட கூட்டுக் கழகங்களில் விளையாடுவதற்கு அனுமதிக்கிறதில்லை. “பெற்றோர் சற்று நின்று, ஓர் இளைஞனுக்குத் தவறாகப் போகக்கூடிய எல்லாக் காரியங்களையும் சிந்தித்துப் பார்க்கிறதில்லை, உதாரணமாக, அவன் ஒரு சில பற்கள் உடைந்தவனாய் வீட்டுக்கு வந்து சேரக்கூடும்,” என்று அவர் சொன்னார். போட்டி விளையாட்டுகளை இவ்வளவு அபாயகரமாக்கினது அடிக்கடி ஊக்கமூட்டப்படுகிற மட்டுக்கு மீறிய போட்டி ஆவியே—என்ன ஆனாலும் சரிதான் கட்டாயமாக வெற்றி பெறவேண்டும்—என்ற மனப்பான்மையே ஆகும்.

7கவனிக்க வேண்டிய மற்றொரு காரியமானது, ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி விளையாட்டுகளில் ஆடுவது உன்னைப் பாதுகாப்பில்லாமல் விடக்கூடிய சகவாசங்களாகும். ஆடை மாற்றும் அறையில் பேசும் பேச்சு, பொதுவாய் பாலின ஒழுக்கக்கேட்டுக்குரியதாய் இருப்பதாகப் பெயர் பெற்றிருக்கிறது. மேலுமாக, மற்றொரு பள்ளியில் விளையாடும்படி ஓர் ஆட்டக்குழு பயணப்படுகையில், கடவுளுக்கு உண்மையுள்ளவனாக இருப்பதில் அதிகம் அக்கறையில்லாத ஆட்களின் தோழமையில் ஒருவன் ஓரளவு நீடித்த காலம் இருக்க நேரிடும். இது யோசித்துப் பார்ப்பதற்குரிய ஒரு காரியமாயிருக்கிறது. ஏனெனில் “தேவ பக்தியை உன் குறிக்கோளாகக் கொண்டு உன்னைப் பயிற்றுவித்துக் கொண்டிரு,” என்று கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. உன் நல்லொழுக்க நியமங்களையும் உன் சிருஷ்டிகருடன் உன் உறவையும் எளிதில் கெடுத்துப்போடக்கூடிய ஒன்றில் சிக்கிக்கொள்வது எப்படி நடைமுறையாயிருக்கும்?

8ஆகவே சமநிலையில் வைத்தால் நல்லவையாக இருக்கக்கூடிய மற்ற காரியங்களைப்போலவே போட்டி விளையாட்டுகளும் இருக்கின்றன—அதாவது அதிக முக்கியமான காரியங்களை மறைத்துப் போடுவதற்கு, அல்லது கெடுதலான சூழ்நிலைமைகளுக்குள் உன்னைப் பாதுகாப்பில்லாமல் விடுவதற்கு ஏதுவாக இராதபடி, அவை உன் வாழ்க்கையை அடக்கியாளாமல் இருக்கையில் அவ்வாறு இருக்கின்றன. விரைவாக இயங்கும் விளையாட்டில் ஆடி, தன் உடல் ஆதரவாக இசைந்து கொடுத்து குறிப்பிடத்தக்கத் திறமையுடன் செயல்படுவதன் கிளர்ச்சியை அனுபவிப்பது ஆ, எவ்வளவு இன்ப உயிர்ப்பூட்டுவதாயிருக்கக்கூடும்! அது நீண்ட காலம் நினைவிலிருக்கக்கூடிய மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கக்கூடும். மேலும் இது, இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதற்கேதுவான திறமைகளுடன் நம்மை உண்டாக்கினவராகிய நம்முடைய மிக உன்னத சிருஷ்டிகரை நன்றியோடு மதித்துணர உனக்கு உதவி செய்யக்கூடும்.

திரைப்படங்களும் டெலிவிஷனும்

9நாம் தெரிந்துகொள்ளும் திரைப்படம் மற்றும் டெலிவிஷன் பொழுதுபோக்கு வகை கடவுளுடன் கொண்டுள்ள நம் உறவையுங்கூட பாதிக்கக்கூடும். சில திரைப்படம் மற்றும் டெலிவிஷன் காட்சிகள் நல்ல இன்பம் தரும் பொழுதுபோக்காக இருக்கின்றன; சில நம்முடைய சிருஷ்டிகரின் அதிசயமான கைவேலையை நாம் நன்றியோடு மதித்துணருவதைப் பெருகச் செய்யக்கூடும். என்றாலும் சந்தேகமில்லாமல் பல காட்சிகள் விபசாரம், வேசித்தனம், பெண்புணர்ச்சி, ஆண்புணர்ச்சி, வன்முறை, படுகொலை ஆகியவற்றை முக்கியப்படுத்திக் காட்டும் கதைகளாக இருப்பதை நீ கவனித்திருப்பாய். இவை ஒருவேளை பொழுதுபோக்காகக் கருதப்படக்கூடும். ஆனால் இவை ஒருவனை எப்படிப் பாதிக்கின்றன?

10உன்னை நீயே கேட்டுக்கொள்: இன்று நீ இருக்கிறபடியான ஆளாக நீ எப்படி ஆனாய்? உன் சூழ்நிலையாலும் கல்வியாலும், உன் மனதில் உட்கொண்டு வந்திருக்கிறவற்றாலும், முக்கியமாய் உன் கண்கள் மூலமாகவும் காதுகள் மூலமாகவும் நீ உட்கொண்டிருக்கிறவற்றாலும் அல்லவா? ஆம், பேரளவில், உன் மனதில் நீ என்ன ஊட்டுகிறாயோ அதுவாகவே நீ இருக்கிறாய். ஒரு காரியம் எவ்வளவு அதிகமாய் உன்பேரில் செல்வாக்குச் செலுத்த விடப்படுகிறாயோ அவ்வளவு அதிகமாய் அது உன்னில் ஒரு பாகமாகிவிடக்கூடும்.

11அழுக்கு குப்பையை ஒரு சாப்பாடாகச் சாப்பிடும்படி தெரிந்துகொள்ள நீ நினைக்கமாட்டாய் அல்லவா? அப்படியானால் மன குப்பை உன் பேரில் செல்வாக்குச் செலுத்த நீ தொடர்ந்து விடப்படுகிறாயானால் எப்படி? அது கட்டாயமாகவே உன் சிந்தனையின் பாகமாகிவிடும். திரைப்படங்களில் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தத் திரையில் காட்டப்படுகிற பல வகையான ஆட்களுடன், நீ செயல்முறையளவில் சகவாசம் கொள்ளுகிறாய். திரைப்படங்களானது அந்த நடிகர்களுடன் உன்னை உணர்ச்சி வசமாய் உட்படுத்த வைக்கவும், இவ்வாறு தவறு செய்பவன் சார்பாக—அதாவது வேசித்தனம், ஒத்தபாலினத்தவர்புணர்ச்சி, கொலையுங்கூட செய்கிறவன் சார்பாக—உணர்ச்சியைத் தூண்டிவிடும்படியும் வேண்டுமென்றே ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கின்றன. இவ்வகையில் ஆண்புணர்ச்சிக்காரர், பெண்புணர்ச்சிக்காரர், வேசித்தனத்தார், விபசாரக்காரர், பெருங்குற்றவாளிகள் ஆகியோருடன் ஆழ்ந்த வண்ணமாய் உட்பட நீ விரும்புகிறாயா?

12என்றபோதிலும், பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டை அல்லது வன்முறை சம்பந்தப்பட்ட ஏதோ செயலை நீ திரையில் கவனிக்கையில், “இதைப்போன்ற காரியத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்!” என்று நீ நினைக்கலாம். உண்மையே, இப்பொழுதுதானே யாராவது உன்னிடம், உன் அயலானிடமிருந்து திருட, நண்பர்களிடம் பொய் சொல்ல அல்லது வேசித்தனத்தில் ஈடுபட ஆலோசனை கூறுவார்களானால் அது உனக்கு வெறுப்புணர்ச்சி கொள்ள செய்யலாம். ஆனால் திருடர்களுடனோ, வேசித்தனத்தாருடனோ, ஒத்தபாலினபுணர்ச்சிக்காரருடனோ போதிய காலம் நீ சகவாசம் வைத்து, அவர்களுடைய தவறான சிந்தனைக்குச் செவிகொடுத்து வந்தாயானால் எப்படி? காலப்போக்கில், நீ அவர்களுடன் ஒத்துப்போகும் உணர்ச்சியுள்ளவனாகிவிடக்கூடும். முதன் முதலில் வெறுப்பாகத் தோன்றினது காலப்போக்கில் அவ்வாறு இராமல் போகக்கூடும். இதைச் சற்றுக் கவனி: ஓரினப்புணர்ச்சிக்காரரில் பெரும்பான்மையர் எவ்வாறு அப்படிப்பட்டவர்களானார்கள்? அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரத்தைச் செலவிட்டதன் மூலமும் அம்முறை நடத்தைக்காரருடன் சகவாசம் கொண்டதன் மூலமுமேயாகும்.

13பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டில் நீ ஈடுபடமாட்டாய் என்று நீ உணரக்கூடும். ஆனால் எதிர்பாலாரான ஆட்களுடன் திரைப்படங்களைப் பார்க்கச் சென்று திரும்பத் திரும்ப காட்டப்படும், கட்டித்தழுவும், கொஞ்சும், ஒழுக்கக்கேடாக நடக்கும் செயல்களைக் கவனித்து வருவாயானால் எப்படி? இப்படிப்பட்ட திரைப்படங்களுக்குப் பின்பு, முக்கியமாய், தடைக்கட்டு ஆற்றலைக் குறைக்கும் மதுபானங்கள் அருந்தும் வாய்ப்பு உனக்குங்கூட கிடைத்திருக்கையில், நீ அநேகமாய் என்ன செய்யக்கூடும்? இதற்குப் பதில் உனக்குத் தெரியும். செயல்முறையளவில், இன்றைய திரைப்படங்களில் பல பின்வருமாறு ஒலிப்பவையாக இருக்கின்றன: “நாங்கள் கெட்ட காரியங்களில் ஈடுபடப் போகிறோம்! நாங்கள் எல்லாச் சட்டங்களையும் கடவுளுடைய சட்டங்களையும்கூட மீறப் போகிறோம்!” இவ்வகையான செல்வாக்கே உன்பேரில் செயல்பட நீ விரும்புகிறாயா?

14கெட்ட செல்வாக்குகள் உன்னைக் கெடுக்க முடியாது, நீ அவற்றை அடக்கியாளக்கூடுமென்று நீ உண்மையில் நினைக்கிறாயா? ஒரு காலத்தில் மதிப்புள்ள, கடினமாய் உழைத்துவந்த இலட்சக்கணக்கான ஐரோப்பியர், நாஜி பிரச்சாரத்தின் “எதிர்ப்போதனையால் கருத்து மாற்றப்பட்டு” மனிதவர்க்கத்துக்கு எதிராகப் பயங்கர குற்றங்களை நடப்பிக்கும்படி அல்லது ஆதரிக்கும்படி செய்யப்பட்டார்கள் என்பதை நினைவில் வை. ஆகையால், பால் அல்லது வன்முறையின் பேரில் காட்டப்படும் திரைப்படங்களின் மூலமாய்ப் பரவச் செய்யப்படுகிற கெடுதலான பிரச்சாரமானது உன்பேரில் கொள்ளக்கூடிய இந்தப் பாதிப்பைக் குறைவாக மதிப்பிட்டு விடாதே.

பொழுதுபோக்குக்கான தேவையை பூர்த்தி செய்தல்

15பொழுதுபோக்குக்கான தேவையுடன் நம்முடைய சிருஷ்டிகர் நம்மை உண்டாக்கினார். ஆனால் அது இழிவான ஒழுக்கக்கேட்டை அல்லது வன்முறையை, அவருடைய சட்டங்களை மீறுவதைச் சுற்றி ஒருமுகப்படுத்தும்படி அவர் ஒருபோதும் நோக்கங்கொள்ளவில்லை. உண்மைதான், இந்தக் காரியங்களை முதன்மைப்படுத்திக் காட்டும் திரைப்படங்களையும் டி.வி. காட்சிகளையும் வேண்டாமென்று தள்ளிவிடுகிறாயென்றால் நீ மிகப் பல திரைப்படங்களையும் டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்களையும் தள்ளிவிடுவதாகக் காண்பாய். என்றாலும் நீ அனுபவித்து மகிழக்கூடிய ஆரோக்கியமான பொழுதுபோக்கு வகைகள் இன்னும் பல இருக்கின்றன.

16பொழுதுபோக்கு அல்லது பொழுதுபோக்குக் காட்சி முடிந்தபின்பு, நீ புத்துயிரளிக்கப்பட்டவனாக உணரவில்லையென்றால், அல்லது—உன் ‘வாயில் கெட்ட சுவையை விட்டுச் சென்றது’ என்ற பழமொழியைப் போல—அது உன்னைக் கொந்தளிப்படைந்த அல்லது மன அமைதி குலைந்த உணர்ச்சியுடன் விடுகிறதென்றால், அதனால் நன்மை என்ன? சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றை ஒருவர் உனக்குக் கொடுத்தார் அது பார்ப்பதற்கு நன்றாகவும் நல்ல சுவையுள்ளதாகவும் இருந்தது. ஆனால் அதைச் சாப்பிட்ட பின்போ நீ குமட்டல் உணர்ச்சியடைந்தாய் என்று வைத்துக்கொள்வோம், அப்பொழுது மறுபடியுமாக ‘இன்னொன்றைப்’ பெற நீ திரும்பிப் போவாயா? அப்படியானால் பொழுதுபோக்கிலும் அயர்வகற்றும் இன்பத்திலும் உன் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுவதென்பதில் ஞானமாய்த் தேர்ந்தெடுப்பவனாயிரு. முன்னாலிருக்க நேரிடும் ஏதோ வகையான இன்பப் பொழுதுபோக்கை அனுபவிக்கும்படி உட்கார்ந்து வெறுமென “நேரத்தை வீணாக்காதே.” அதற்குப் பதிலாக உனக்கு மெய்யான சந்தோஷத்தையும் புத்துயிரையும் கொண்டுவரக்கூடிய ஒன்றை, நீ திரும்பிப் பார்த்து இன்ப உணர்ச்சியுடன் நினைவுகூரக்கூடிய ஒன்றைச் செய்வதன் மூலம் உன் ஓய்வு நேரம் உயிர்ப்புள்ளதாய் இருக்கச் செய்.

17வெளியில் நீ விளையாடக்கூடிய பற்பல வகையான விளையாட்டுகள் இருக்கின்றன. காடுகளில் உலாவச் செல்லுதல், பூப்பந்தாட்டம், குழிப்பந்தாட்டம் முதலிய பற்பல வகைப் பந்தாட்டங்களில் பங்குகொள்வது ஆகியவற்றில் பலர் பல மணிநேரங்கள் சந்தோஷமனுபவித்திருக்கின்றனர். சிலர் மேசைவரிப் பந்தாட்டத்தை அல்லது மேடைக்கோற் பந்தாட்டத்தைத் தங்கள் வீட்டில் விளையாடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து அமைத்து, தங்கள் நண்பர்கள் அங்கு வந்து விளையாடும்படி வரவழைத்திருக்கின்றனர். உன் பெற்றோரிடம் கேட்டுப் பார்ப்பாயானால் ஒருவேளை நீ இதைச் செய்யும்படி அவர்கள் அனுமதி கொடுக்கக்கூடும்.

18ஒருவேளை நீ பொருட்காட்சி சாலைகளை அல்லது இவ்வகையான அக்கறைக்குரிய மற்ற இடங்களைப் போய்ப் பார்க்கக் கூடியவனாய் இருக்கலாம். இவை இன்பமளிப்பவையாக மட்டுமல்லாமல் அறிவூட்டுபவையாகவும் இருக்கின்றன. கோழிப்பண்ணை, பால் பண்ணை, ஏல விற்பனை நிலையம், அச்சகம் ஆகியவற்றை நீ போய்ப் பார்த்திருக்கிறாயா? நீ ஒரு நகரத்தில் வாழ்கிறாயென்றால் அந்த நகரத்தில் பார்ப்பதற்குரிய தனிப்பட்ட இடங்களைப் பற்றிய தகவல்கள் உனக்குக் கொடுக்கக்கூடிய அரசாங்க இலாக்காக்கள் அங்கிருக்கக்கூடும். உன்னுடைய சுற்றுப் புறத்தில் வந்து பார்க்கும்படி அனுமதிக்கும் தொழில் துறைகளைப் பற்றி அவர்கள் உனக்குச் சொல்வார்கள். கூடுதலாக, ஏரிகள், மலைகள், கடற்கரைகள் போன்ற அழகிய காட்சியளிக்கும் இடங்களுக்குச் சிறு பயணம் செல்லுதலும் மிக இன்பந்தரும் பொழுதுபோக்காக இருக்கக்கூடும். முக்கியமாய்க் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சென்று இவற்றை அனுபவித்து மகிழுவது மிகுந்த இன்பமளிக்கக்கூடும்.

19இந்த இன்பப் பொழுதுபோக்கு ஈடுபாடுகள், நம்முடைய வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாகிவிடாதபடியும், இவ்வாறு அவை அளிக்கக்கூடிய நன்மைகளைப் பெற நாம் தவறிவிடாதபடியும் நாம் நிச்சயமாகவே, எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இவ்வாறு மிகுதியான பற்பல வகை பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கும் அனுபவித்து மகிழ்வதற்கும் ஏதுவான திறமையுடன் நம்முடைய சிருஷ்டிகர் நம்மை உண்டாக்கியிருப்பதற்காக ஆ, நாம் எவ்வளவாய் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! இது நிச்சயமாகவே வாழ்க்கையை அதிக பயனுள்ளதாக்கக்கூடும்.

[கேள்விகள்]

1, 2. (எ) எந்தப் போட்டி விளையாட்டுகளை அல்லது மற்றப் பொழுதுபோக்குகளை நீ தனிப்பட்டவண்ணமாய் விரும்பி மகிழுகிறாய்? (பி) யெகோவாவின் கைவேலையைப் பற்றிய எது நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது? (சங்கீதம் 104:14-24)

3-8. (எ) பொழுதுபோக்கின்பேரில் என்ன சமநிலையான அறிவுரை 1 தீமோத்தேயு 4:7, 8-ல் காணப்படுகிறது? (பி) “உடற்பயிற்சி” எப்படி பயனுள்ளதாய் இருக்கிறது? ஆனால் போட்டி விளையாட்டுகளைப் பற்றியதில் ஒருவன் மட்டுக்குமீறிய அக்கறையுள்ளவனாகையில் என்ன நடக்கக்கூடும்? (சி) பள்ளி ஆட்டக்குழுவில் விளையாடுவதில் ஒருவன் உட்பட்டால் என்ன பிரச்னைகளை அவன் எதிர்ப்படக்கூடும்? தான் என்ன செய்யப்போகிறான் என்பதை ஞானமாய்த் தீர்மானிக்க எது அவனுக்கு உதவி செய்ய வேண்டும்?

9-14. (எ) ஒரு திரைப்படம் அல்லது டி.வி. காட்சியைப் பார்க்க ஒருவன் தெரிவு செய்கையில் என்ன வகையான காரியத்தைக் குறித்து அவன் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்? (பி) ஒழுக்கக்கேடான காரியங்களை இன்பப் பொழுதுபோக்காக ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தால் அது அவனை எப்படிப் பாதிக்கும்? ஏன்? இப்படிப்பட்ட செயல்கள் தவறு என்று நாம் அறிந்திருக்கிற போதிலும், அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பது நம்மீது கொள்ளக்கூடிய செல்வாக்கை நாம் ஏன் அற்பமாக மதிப்பிட்டுவிடக்கூடாது?

15-19. பொழுதுபோக்குக்கான நம்முடைய தேவையைத் திருப்தி செய்வதற்கு நாம் ஈடுபடக்கூடிய ஆரோக்கியமான காரியங்கள் சில யாவை?

[பக்கம் 121-ன் படம்]

நீ பார்ப்பது எதுவோ அது உன்னைப் பாதிக்கிறதா?