Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையிலிருந்து உனக்கு வேண்டியதென்ன?

வாழ்க்கையிலிருந்து உனக்கு வேண்டியதென்ன?

அதிகாரம் 23

வாழ்க்கையிலிருந்து உனக்கு வேண்டியதென்ன?

இளமையில் உன் வாழ்க்கை பெரும்பாலும் உனக்கு முன்னால் இருக்கிறது. அது ஒருவேளை தொலை தூரம் நீடித்ததாக, அதன் முடிவு அடிவானத்திற்கு அப்பால் எங்கேயோ இருக்கிற ஒரு பாதையைப்போல் தோன்றுகிறது. அது உன்னை எங்கே வழிநடத்தும்?

2இந்த வாழ்க்கைப் பாதை உனக்குச் சில எதிர்பாரா நிகழ்ச்சிகளை வைத்திருக்கும், அவற்றோடுகூட மனமுறிவுண்டாக்கும் ஏமாற்றங்களையும் கொண்டிருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தில் நாம் பார்த்தபடி, வாழ்க்கையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொள்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீ இப்பொழுது செய்யக்கூடிய அதிகம் இருக்கிறது. கேள்வி என்னவென்றால், தேவைப்படுகிற முயற்சியைச் செய்ய நீ மனமுள்ளவனாய்[ளாய்] இருக்கிறாயா?

3தங்கள் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு என்ன வேலை செய்வது என்பதைப் பற்றி இளைஞர் பலர் சிந்தனை செய்கிறார்கள். ஒருவேளை நீயுங்கூட அதைப்பற்றிச் சிந்தித்திருக்கக்கூடும். ஆனால் நீ என்ன வகையான வேலையைச் செய்யப்போகிறாயென்றாலும், அதை நீ சரியாய்ச் செய்யாவிடில் அது உனக்கு அதிக திருப்தியைக் கொண்டுவராது. என்றபோதிலும், இதைப் பார்க்கிலும் மிக அதிக முக்கியமான ஒன்று இருக்கிறது.

4நீ ஒருவேளை மிகச் சிறந்த கட்டடக் கலைஞனாக அல்லது ஓவியக் கலைஞனாக, பொறித்துறை வினைஞனாக, இசைக்கலை அறிஞனாக, பயிரிடுவோனாக, பள்ளி உபாத்தியாயனாக அல்லது வேறு எந்த ஒருவனாகவோ ஆகிறாயென்று வைத்துக்கொள்வோம். இது உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென்பதற்கு நிச்சயம் உறுதியளிப்பதாக இருக்கிறதா? உண்மையில் அல்ல. இதைப் பாக்கிலும் மிக அதிக முக்கியமாய் இருப்பதானது: நீ எவ்வகையான ஆளாக இருக்கப்போகிறாய் என்பதே. பல ஆட்கள் ஏதோ ஒரு வேலையில் சிறப்பு வாய்ந்த வாழ்க்கைப்பணி முன்னேற்றமடைந்திருக்கின்றனர். என்றாலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் துயர் மிகுந்த தோல்வியாக்கியிருக்கின்றனர்; அவர்கள் மிகவும் துயரமுள்ள ஆட்கள்.

5இதன் காரணமாகவே பைபிள் அவ்வளவு முக்கியமானது. உண்மையில் முழுபைபிளும் நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து வந்த கடிதங்களின் ஒரு தொகுப்பைப் போல் இருக்கிறது. நம்முடைய பரம தகப்பனாக அவர் நம்முடைய சந்தோஷத்தில் அக்கறையுள்ளவராக இருக்கிறார், நாம், அவர் நமக்கு என்ன சொல்ல இருக்கிறார் என்பதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய அத்தனை பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக அவர் நமக்குக் கொடுக்கிற வழி நடத்துதல்களை நாம் கண்டறிந்தோம். அவையாவும் நியாயமானவையாக இருக்கின்றனவென்பது உண்மையல்லவா? மெய்யாகவே, அவர் கொடுக்கும் இந்த வழி நடத்துதல்கள் இல்லாமல், என்ன செய்வது என்பதைப் பற்றி நாம் எப்படி நிச்சயமாய் இருக்கக்கூடும், அல்லது எது மிகச் சிறந்த நன்மைக்கேதுவாகக் கிரியை செய்யும் என்பதை நாம் எப்படி அறியக்கூடும்?

6இது, அப்போஸ்தலனாகிய பவுல், இளைஞனாயிருந்த தன் உடன் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதினதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தீமோத்தேயு சிறு வயது முதல் பைபிளின் போதகங்களைப் பற்றிக் கற்றறிந்திருந்த காரியங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கும்படி பவுல் அவனை ஊக்கப்படுத்தி பின்வருமாறு எழுதினான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:14-17) வாழ்க்கையில் உண்மையில் பயனுள்ள எதுவானாலும்—அது என்ன வகையான வேலையை உட்படுத்தலாமென்றாலும்—நீ கடவுளுடைய வார்த்தையால் வழிநடத்தப்பட உன்னை அனுமதிப்பாயானால், அதைச் செய்வதற்கும் மேலும் அதை நன்றாய்ச் செய்வதற்கும் நீ மேம்பட்ட வண்ணமாய்த் தகுதியுள்ளவனாக்கப்பட்டிருப்பாய். அது உன்னை மேம்பட்ட மகன் அல்லது மகளாக்கக்கூடும், மேம்பட்ட கணவன் அல்லது மனைவியாக்கக்கூடும், மேம்பட்ட தகப்பன் அல்லது தாயாக்கக்கூடும், மேம்பட்ட வேலையாளனாக, மேம்பட்ட நண்பனாக, எல்லாவற்றிற்கும் மேலாக, உன் சிருஷ்டிகரின் மேம்பட்ட ஊழியனாக ஆக்கக்கூடும்.

பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்

7சீக்கிரத்திலோ பிந்தியோ நீ பாரமான ஏதோ தீர்மானங்கள் செய்ய வேண்டியதாயிருக்கும். உன்னுடைய சொந்த பொறுப்பின் சுமையை நீயே ஏற்க வேண்டிய காலம் வரும். இப்பொழுதுதானே நீ ஒரு கழுகுக் குஞ்சுவைப்போல் இருக்கிறாய். கழுகுகள் பெரும்பாலும் மிக உயரத்தில் செங்குத்தான மலைச்சிகர உச்சியில் தங்கள் கூட்டைக் கட்டுகின்றனவென்பது உனக்குத் தெரிந்திருக்கலாம். இளங் குஞ்சுகள் தங்கள் சிறகுகளையடிக்கத் தொடங்கி பறப்பதற்குத் தயாராகையில் தாய்த் தகப்பன் கழுகுகள் அவற்றை அந்தக் கூட்டின் ஓரத்துக்குச் சிறிது சிறிதாக மெல்ல நகர்த்தி, பின்பு—வெளியே ஆகாயத்திற்குள் தள்ளிவிடும்! கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், ஒரு தாய்ப்பறவை அதன் குஞ்சுவை ஏறக்குறைய தொண்ணூறு அடிகள் விழவிட்டு, அதன்பின் கீழே பாய்ந்துவந்து அதற்கடியில் திறந்த விரிந்த சிறகுகளுடன் பறந்து, அந்த இளங் குஞ்சுவைத் தன் முதுகின்மேல் உட்காரவிட்டதென்றும், பின்பு திரும்ப உயர அந்தக் கூட்டுக்குப் பறந்து சென்று அந்த இளம் கழுகுக் குஞ்சு பறக்கக் கற்றுக்கொள்ளும் வரையில் இம்முறையைத் திரும்பத் திரும்பக் கையாண்டதென்றும் சொல்லுகிறது.—Bulletin of the Smithsonian Institution, Vol. CLXVII, பக்கம் 302.

8உன்னுடைய காரியத்தில், உன் பெற்றோர் மிகுந்த முயற்சியுடனும் திட்டத்துடனும் ஒரு குடும்பத்தை கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்றும் உனக்குக் காரியங்களைச் செய்யும்படி அல்லது உனக்காகப் பெரும் தீர்மானங்களைச் செய்யும்படி நீ அவர்களை நோக்கியிருக்க முடியாது. முக்கியமாய், நீ தக்க வயதுக்கு வருகையில், வீட்டைவிட்டுச் செல்ல தீர்மானிப்பாயானால் இது உண்மையாயிருக்கும். பருவமடைந்த ஆணாக அல்லது பெண்ணாகப் பொறுப்பை ஏற்பதற்கு உன்னை ஆயத்தம் செய்ய உன் பெற்றோர் உதவி செய்யக்கூடும், இவ்வாறு அந்தத் தாய்க் கழுகு அதன் இளங் குஞ்சுக்குச் செய்கிறதைப் போலவே உன் சொந்தமாக நீ இருக்கக்கூடிய வரையில் செய்து உனக்கு அதை எளிதாக்கக்கூடும். ஆனால் நீயுங்கூட உன் பங்கைச் செய்ய வேண்டும்.

9அந்தக் கழுகின் வல்லமை வாய்ந்த சிறகுகளின் அமைப்புத் திட்டமும், பறப்பதற்கான அதன் இயல்பான பண்புத் திறமையுமாகிய இவை சர்வ ஞானமுள்ள சிருஷ்டிகராகிய யெகோவாவிடமிருந்தே வந்தன. ஆகவே வாழ்க்கையை மிக நன்றாப் பயன்படுத்திக் கொள்வதற்கான உயிர் நாடியானது அவர் பேரில் நம்முடைய முழு நம்பிக்கையை வைப்பதிலேயே காணப்படுகிறதென்பதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக உணர வேண்டியது அவசியம். உன் பெற்றோர் எவ்வளவு சிறந்த (அல்லது எவ்வளவு தாழ்வான) தொடக்கத்தை உனக்குக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்ல மனதும் உடலும் உனக்கு இருந்தாலும் சரி, யெகோவா தேவனிடமிருந்து உனக்கு வழி நடத்துதல் தேவைப்படுவதை நீ நன்றியோடு மதித்துணர்ந்து, அவருடைய வழி நடத்துதல்களைப் பின்பற்ற பலத்தைத் தரும்படி அவரையே நோக்கியிருக்க நீ எப்பொழுதும் விரும்புவாய். உன்னைப் போன்ற இளைஞருக்காகப் பின்வரும் இவ்வார்த்தைகள் எழுதப்படும்படி அவர் ஏவினார்:

10“என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் . . . உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. உன் கால் நடையைச் சீர்தூக்கிப் பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.”—நீதிமொழிகள் 4:20-26.

11வழிநடத்துதலுக்காக நீ எவ்வளவு அதிகமாய் யெகோவா தேவனையும் அவருடைய வார்த்தையையும் நோக்கியிருக்கிறாயோ அவ்வளவுக்கதிகமாய் வாழ்க்கையின் பாதை உனக்குத் தொல்லைகளற்றதாகும்.

கடவுளை உன் நண்பராகக் கொண்டிருத்தல்

12இதை நீ எப்படிச் செய்யக்கூடும்? தவறு என்று கடவுளுடைய வார்த்தைக் காட்டுகிற காரியங்களை வெறுமென தவிர்த்திருப்பதனால் மாத்திரமே அல்ல. உன்னுடைய பரலோகத் தகப்பனாக யெகோவாவுடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் போக்கில் செல்வதற்கு உன் பெற்றோர் உனக்குச் சுட்டிக்காட்டி வழிநடத்தக் கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் அந்த உறவை உனக்காக அவர்கள் நிலைநாட்ட முடியாது. யெகோவாவின் உறவை நாடித் தேடுகிறவனாய் நீயே அதைச் செய்ய வேண்டும். இந்த மிகப் பரந்த பிரபஞ்சத்தை உண்டாக்கினவர் உன்னுடைய நண்பராக இருக்க நீ விரும்புகிறாயென்றால், அவர் உன்னிடம் கேட்பதென்ன?

13இதற்கான வழியைத் திறக்க, யெகோவா தேவன் தம்முடைய முதற்பேறான குமாரனை இந்தக் கிரகமாகிய பூமிக்கு ஒரு வேலை நியமிப்போடு அனுப்பினார், இவ்வாறு அவர் ஒரு மனிதனாகப் பிறக்கும்படி செய்வித்தார். தாம் முழு வளர்ச்சியடைந்த மனிதனானபோது, கடவுளுடைய குமாரன் நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார். பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “என்றாலும் தேவனுடைய கிருபையினால் [தகுதியற்றத் தயவினால், NW] ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”—எபிரெயர் 2:9.

14இது தேவைப்பட்டதற்குக் காரணமானது நாமெல்லாரும் அபூரணரும் பாவமுள்ளவர்களுமாய் இருப்பதே என்று பைபிள் காட்டுகிறது. இது உண்மையென்று தெளிவாக உணருவது உனக்குக் கடினமாக இருக்கவேண்டியதில்லை, ஏனென்றால், தவறென்று நீ அறிந்திருக்கிற காரியங்களைச் செய்வதிலிருந்து விலகியிருப்பது சில சமயங்களில் உண்மையான போராட்டமாக இருப்பதாய் நீ அநேகமாய்க் கண்டிருப்பாய். சில சமயங்களில் நீயுங்கூட பலவீனப்பட்டு ஏதோ தவறான ஆசைக்கு இடங்கொடுத்திருக்கலாம். தவறு செய்வதை நோக்கிச் சாயும் இந்த இயல்பான போக்கு, தம்முடைய முதல் பெற்றோரிலிருந்து நாமெல்லாரும் சுதந்தரித்த ஒன்றாகும், இதன் காரணமாகவே மனித குலம் முழுவதும் சாகும் நிலையில் இருக்கிறது.

15ஆனால் நம்முடைய எல்லாத் தவறையும் நீக்கிப்போடுவதற்கான வழிவகையை அளிக்கும்படியாகக் கடவுளுடைய குமாரன் தம்முடைய பரிபூரண மனித உயிரைக் கொடுத்தார். பாவங்களைக் “கடன்களுக்கு” ஒப்பிடுவதன் மூலம் இது எப்படிச் செயல்படுகிறதென்பதை விளங்கிக்கொள்ள பைபிள் நமக்கு உதவி செய்கிறது. (மத்தேயு 6:12) உதாரணமாக, எவரோ ஒருவரைப்பற்றி ஏதோ பொய் வதந்தியை நீ பரவச் செய்தாயென்றால் அவரிடம் மன்னிப்புக் கேட்க நீ “கடன்பட்டிருப்பதாகச்” சொல்லுவாயல்லவா? இது நீ செய்தத் தவறினிமித்தமாக நீ அவருக்குக் “கடன்பட்டிருக்கிறாய்” என்று அர்த்தங்கொள்ளுகிறது. ஆனால் கடவுளிடமாக நாம் கொண்டிருக்கிற இந்தக் கடன் அவ்வளவு மிகப் பெரியதாக இருப்பதனால் நம்மால் அதை ஒருபோதும் செலுத்த முடியாது. என்றபோதிலும் கிறிஸ்து இயேசுவின் பரிபூரண மனித உயிர் அப்பேர்ப்பட்ட பெரும் விலை மதிப்பை உடையதாக இருப்பதால், நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட பாவத்தன்மையின் காரணமாகக் கடவுளுக்கு விரோதமாய் நாம் வருவித்துக்கொண்ட எல்லாக் கடன்களையும் அது எதிரீடுசெய்து நீக்கிப்போடக்கூடும், இதன் காரணமாகவே கடவுளுடைய குமாரன் நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார்.

16ஆகவே கடவுளுடன் நட்பு கொள்வதற்கான வழி நமக்குத் திறந்திருக்கிறது. ஆனால் கடவுள் தம்முடைய சொந்தக் குமாரனைப் பலி செலுத்தினதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் அவருடைய குமாரன் நமக்காக மரிப்பதில் தாம் என்ன செய்திருக்கிறார் என்பதையும் நாம் நன்றியோடு மதித்துணருகிறோமென்பதைக் காட்டவேண்டும். கடவுளுடைய இந்த ஏற்பாட்டில் நமக்கு விசுவாசம் இருக்கிறதென்று நாம் காட்டவேண்டும். இயேசு பின்வருமாறு கூறினார்: “பிதாவானவர் குமாரனில் அன்புகூர்ந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனையுடையவன்; குமாரனுக்கு அடங்காதவனோ ஜீவனைக் காண்பதில்லை, கடவுளின் கோபம் அவன்மேல் நிலைக்கும்.”—யோவான் 3:35, 36, தி.மொ.

17ஒருவேளை நீரில் மூழ்கிப் போவதிலிருந்தோ அல்லது பற்றி எரிகிற ஒரு வீட்டில் சாவதிலிருந்தோ—ஓர் ஆளின் உயிரை நீ காப்பாற்றுகிறாய் என்று வைத்துக் கொள்வோம், இதைச் செய்வதன் விளைவாக நீ தானேயும் பின்பு சாகிறாய். காப்பற்றப்பட்ட அந்த ஆள் எவ்வித நன்றியுணர்வையும் சற்றும் காட்டவில்லையென்றால், உன் பெற்றோரிடம் சென்று உன்னுடைய தன்னலமற்றச் செயலுக்கு நன்றியாக எதுவும் சொல்வதற்குங்கூட எந்தப் பிரயாசையும் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் எப்படியிருக்கும்? உன் சொந்தத் தகப்பன் தானேயும் எப்படி உணருவாரென்று நீ நினைக்கிறாய்? அப்படியானால், தம்முடைய குமாரன் மனிதவர்க்கத்திற்காகச் செய்ததைப் பற்றி அறிந்தும் அதற்காக யாதொரு நன்றியறிதலையும் காட்டாதவர்களிடமாக யெகோவா ஏன் சரியாகவே வருத்தமடைந்து தம்முடைய நட்பைத் தடுத்து வைத்துக் கொள்ளுகிறார் என்பதை நீ விளங்கிக் கொள்ளக்கூடும்.

18நீ வாழும் வாழ்க்கையின் மூலமாய் நீ நன்றியுணர்வை காட்டலாம். நீ செய்திருக்கிற தவறுகளுக்காக உண்மையாய் வருந்துகிறாயென்று காட்டி, அவருடைய குமாரனின் பலியின் மூலமாய் உன் ‘கடன்களை மூடும்படி’ கடவுளைக் கேட்கலாம். உன் வாழ்க்கையின் மீதி காலமெல்லாம் கடவுளைச் சேவிக்கும்படி உன்னை அவருக்கு ஒப்புக்கொடுத்து அவருக்குப் பிரியமானதையே செய்து வரலாம். இந்த ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டினால் நாம் அடையாளப்படுத்திக் காட்டலாமென்று பைபிள் காட்டுகிறது. நிச்சயமாகவே, இது அவசரப்பட்டு செய்கிற ஒரு காரியமல்ல. நீ ஒன்றைச் செய்யப்போகிறாயென்று கடவுளிடம் சொல்லிவிட்டு, பின்பு உன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. சிறு பிள்ளைகள் அவ்வாறு இருக்கின்றனர்; தாங்கள் செய்ய விரும்புகிறதைப் பற்றி அவர்கள் உண்மையில் நிச்சயமாக இல்லை. ஆனால் நீ ஓர் ஆணாக அல்லது பெண்ணாக முழு வளர்ச்சிப் பருவத்தை அணுகுகையில், நீயே தீர்மானிக்கக் கூடிய வாழ்க்கை நிலையை எட்டுகிறாய். ஆகையால் இது நீ கவலையோடு சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு காரியமாய் இருக்கிறது.

சவாலை எதிர்ப்படுதல்

19நீ கடவுளுடைய நண்பன் என்று தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பது எப்பொழுதும் எளிதாக இராது. உண்மையில், முழுமையாக நோக்குகையில் இந்த உலகம் கடவுளுடைய நண்பனாக இராமல் அவருடைய பகைஞனாகவே இருப்பதால் உனக்கு அது ஒரு பெரிய சவாலாக இருக்குமென்று பைபிள் காட்டுகிறது. ஆனால் இருதயத்தில் சோர்ந்து போகாதே. கடவுளுடைய ஊழியனாகிய தாவீது தான் இளைஞனாக இருந்தபோது காட்டின அதே ஆவியை நீயும் காட்டலாம். பொய்க் கடவுட்களை வணங்கினவர்களாகிய பெலிஸ்தரின் சேனைகளை இஸ்ரவேலர் எதிர்ப்பட்டிருந்த ஒரு சமயத்தில் அவன் இஸ்ரவேலரின் சேனை பாளயமிறங்கியிருந்த இடத்திற்கு வந்திருந்தான். அந்தப் பெலிஸ்தரின் வீரனாகிய—இராட்சத மனிதனாகிய கோலியாத் என்பவன்—தன்னோடு வந்து போர் செய்ய துணிகிறவன் யார் என வீரம் பேசியழைத்து இஸ்ரவேலரை நிந்தித்துக் கொண்டிருந்தான். தாவீது இதைக் கேட்டான். அவன் இளைஞனாகத்தானே இருந்தபோதிலும், யெகோவாவில் அவனுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது. அவன் அந்தச் சவாலை ஏற்று, அந்த மிகப் பருமனான உடலையுடையவனாய்க் கனத்தப் போர்க் கவசங்கள் அணிந்திருந்த பகைஞனைத் தன்னுடைய மேய்ப்பக் கவணில் வைத்து எறிந்த ஒரே தனிக் கல்லினால் வீழ்த்தினான்.

20இன்று நீயும் ஒரு சத்துரு உலகத்தை எதிர்ப்படுகிறாய். ஆனால் பயப்படாதே. யெகோவா, தாவீதின் நாளில் இருந்த அதே சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்கிறார், நீ தைரியத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார், உன்னை ஆதரித்துத் தாங்கி உனக்குத் தேவைப்படும் பலத்தைக் கொடுப்பார் என்ற விசுவாசத்தையும் காட்டுவாயானால், நீயும் வெற்றியடையக்கூடும்.

21பூமியிலுள்ள ஏதோ அரசாங்கங்களின் அக்கறைகளைச் சேவிப்பதில் சில ஆண்களும் பெண்களும், பல இளைஞரும் உட்பட கடினமான இக்கட்டுகளைச் சகித்திருக்கின்றனர், துணிந்து தங்கள் உயிரை அபாயத்துக்குட்படுத்தியிருக்கின்றனர், அல்லது மரித்துமிருக்கின்றனர். என்றபோதிலும் இந்த முழு பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருடைய அக்கறைகளைச் சேவிப்பது, அதைப் பார்க்கிலும் ஆ, எப்பேர்ப்பட்ட மிக மிக உயர்வான மதிப்புள்ளதாயிருக்கிறது! இன்று எவராயினும் அனுபவித்து மகிழக் கூடிய எவ்வித வாழ்க்கையைப் பார்க்கிலும் மிக மிக அதிகம் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை இது உனக்கு எப்படிக் கொடுக்கக் கூடுமென்பதை இப்பொழுது சிந்தித்துப்பார்.

[கேள்விகள்]

1-6. (எ) வாழ்க்கையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்ள நீ என்ன செய்ய மனமுள்ளவனாய்[வளாய்] இருக்க வேண்டும்? (பி) நீ சந்தோஷமுள்ள வாழ்க்கையை உடையவனாயிருக்க ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தொழிலில் மிகச் சிறப்பு வாய்ந்தவனாக இருப்பதைப் பார்க்கிலுங்கூட மிக அதிக முக்கியமானது எது? (சி) இதில் பைபிள் உனக்கு ஏன் உதவி செய்யக்கூடும்?

7-11. பைபிளில் காட்டியிருக்கிறபடி வாழ்க்கையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொள்வதற்கு உயிர்நாடியாய் இருப்பது எது?

12, 13. (எ) கடவுள் நம்முடைய நண்பராக இருக்க வேண்டுமென்றால் தவறு என்று பைபிள் சொல்வதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் வேறு எதுவும் நமக்கு வேண்டும்? (பி) இப்படிப்பட்ட ஓர் உறவைக் கொண்டிருக்க நமக்கு எப்படி வழி திறக்கப்பட்டது? (யோவான் 14:6)

14, 15. (எ) நாம் அபூரணர் என்று காட்டுகிற எதை நாம் எல்லாரும் நம்முடைய வாழ்க்கையில் காணலாம்? (ரோமர் 5:12; 7:21-23) (பி) மத்தேயு 6:12-ல் பாவங்கள் எதற்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன? இந்தக் “கடன்” எப்படிச் செலுத்தப்படக்கூடும்?

16-18. (எ) தம்முடைய குமாரன் மூலமாய்க் கடவுள் செய்திருக்கிற எல்லாவற்றிற்கும் அவர் நிச்சயமாகவே நன்றியுணர்வுக்கு உகந்தவரென்று நீ ஏன் உணருகிறாய்? (ரோமர் 5:6-10) (பி) இந்த நன்றி மதித்துணர்வைக் காட்டுவதற்கு நாம் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?

19-21. (எ) நீ எதிர்ப்படுகிற சவால் எப்படித் தாவீது கோலியாத்தோடு போர் செய்ய புறப்பட்டபோது எதிர்ப்பட்ட சவாலுக்கு ஒப்பாக இருக்கிறது? (1 சாமுவேல் 17:4-11, 26-51; யோவான் 15:17-20; யாக்கோபு 4:4) (பி) இந்தச் சவாலை வெற்றிகரமாய் எதிர்ப்படக்கூடுமென்று நாம் ஏன் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கலாம்? (யோவான் 16:33; பிலிப்பியர் 4:13; நீதிமொழிகள் 3:5, 6)