கேள்வி 5
பைபிளை நம்புவது நியாயமானதா?
ஒருவரைப் பற்றி உங்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவர்மீது தவறான அபிப்பிராயத்தை யாராவது ஏற்படுத்தியிருக்கிறார்களா? ஒருவேளை அவரைப் பற்றி மற்றவர்கள் மோசமாகப் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதனால், அவரை உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். ஆனால், அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது மற்றவர்கள் அவரைப் பற்றி உங்களிடம் சொன்னதெல்லாம் பொய் என்பது தெரிய வருகிறது. பைபிளைப் பற்றிய பலருடைய அனுபவமும் இதுதான்.
படித்தவர்கள் பலருக்கு பைபிளைப் பற்றி தவறான கண்ணோட்டமே இருக்கிறது. ஏன் தெரியுமா? அதில் சொல்லப்பட்டவையெல்லாம் தவறு, நியாயமானதாய் இல்லை, விஞ்ஞானப்பூர்வமானதாய் இல்லை என்றே அது பெரும்பாலும் முத்திரை குத்தப்படுகிறது. ஒருவேளை பைபிளைப் பற்றி மக்களிடம் பரவியுள்ள தவறான கருத்துகளே இதற்கெல்லாம் காரணமாய் இருக்குமா?
இந்தச் சிற்றேட்டை நீங்கள் வாசிக்கும்போது, பைபிள் சொல்வது விஞ்ஞானத்தோடு துல்லியமாக ஒத்துப்போவதைப் பார்த்து ஆச்சரியமாய் இருந்ததா? அநேகருக்கு அப்படித்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பைபிள் கற்பிப்பதாக அநேக மதங்கள் சொல்கிற சில விஷயங்களை உண்மையில் பைபிள் கற்பிப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டபோதும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். உதாரணமாக, இந்த அண்டத்தையும் அதிலுள்ள அனைத்தையும் கடவுள் ஆறு நாட்களில் (6 x 24 மணிநேரத்தில்) உண்டாக்கினார் என பைபிள் சொல்வதாகச் சிலர் கூறுகிறார்கள். சொல்லப்போனால், இந்த அண்டத்தின் வயதையோ பூமியின் வயதையோ பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் கருத்திற்கு முரணாக பைபிள் எதுவும் சொல்வதில்லை. a
அதோடு, கடவுள் எப்படி இந்தக் கிரகத்தில் உயிர்களை உண்டாக்கினார் என்பதைப் பற்றி பைபிள் சுருக்கமான தகவல்களே அளிப்பதால் விஞ்ஞான ரீதியில் பல கேள்விகளும் கோட்பாடுகளும் எழலாம். எல்லா உயிரினங்களையும் கடவுள் படைத்தார் என்றும், அவற்றை “அந்த அந்த இனத்தின்படி” உண்டாக்கினார் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:11, 21, 24, பொது மொழிபெயர்ப்பு) சில விஞ்ஞான கோட்பாடுகளுடன் இந்தக் கூற்றுகள் முரண்படலாம், ஆனால் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் இந்தக் கூற்றுகளை ஒப்புக்கொள்கின்றன. எத்தனையோ கோட்பாடுகள் வரலாம், போகலாம், என்றாலும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மாறுவதே இல்லை என்பதை அறிவியலின் வரலாறு காட்டுகிறது.
இருந்தாலும், மதத்தின் மீது பலர் தங்களுடைய நம்பிக்கையை இழந்திருப்பதால் பைபிளை ஆராய்ந்து பார்க்கத் தயங்குகிறார்கள். பிரபல மதங்களில் மாய்மாலமும் ஊழலும் போர் வெறியும் புரையோடிக் கிடப்பதைப் பார்க்கிறார்கள். ஆனால், பைபிளின்படி வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிற சிலருடைய நடத்தையை வைத்து பைபிளை எடைபோடுவது சரியா? வன்முறையாளர்கள் சிலர் தங்களுடைய இனவெறிக் கொள்கைகளுக்கு ஆதரவாக பரிணாம கோட்பாட்டை பயன்படுத்தியதைக் கண்டு மனிதநேயமும் நேர்மையுமுள்ள விஞ்ஞானிகள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து பரிணாம கோட்பாட்டை எடைபோடுவது சரியா? ஆகையால், அந்தக் கோட்பாட்டை ஆராய்ந்து, தற்போதைய அத்தாட்சிகளுடன் அதை ஒப்பிட்டுப் பார்ப்பதே ஞானமானது.
பைபிளைப் பொறுத்ததிலும் இதையே செய்யும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலான பிரபல மதங்களின் போதனைகளிலிருந்து பைபிளின் போதனைகள் மிகவும் வேறுபட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். போர்களையோ இனவெறி தாக்குதல்களையோ பைபிள் ஊக்குவிப்பதில்லை; மாறாக, போர்களையும் அதற்கு வழிநடத்தும் பகைமையையும் கடவுளுடைய ஊழியர்கள் வெறுக்க வேண்டும் என்றே அது கற்பிக்கிறது. (ஏசாயா 2:2-4; மத்தேயு 5:43, 44; 26:52) மத வெறியையும் அத்தாட்சியின்றி எதையும் நம்புவதையும் பைபிள் ஆதரிப்பதில்லை; மாறாக, உண்மையான விசுவாசத்திற்கு அத்தாட்சி அவசியம், கடவுளை சேவிப்பதற்கு சிந்திக்கும் திறன் அவசியம் என்றே அது கற்பிக்கிறது. (ரோமர் 12:1; எபிரெயர் 11:1) அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, மனிதர்களுக்குள் எழுந்திருக்கிற சிந்தனைக்குரிய கேள்விகளைப் பற்றி . . . சவாலான கேள்விகளைப் பற்றி . . . ஆராய்ச்சி செய்யும்படியே பைபிள் உந்துவிக்கிறது.
உதாரணமாக, ‘கடவுள் ஒருவர் இருந்தால், அவர் ஏன் கெட்ட காரியங்களை அனுமதிக்கிறார்?’ என என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் பைபிள் திருப்தியான பதில்களை அளிக்கிறது. b எனவே, தொடர்ந்து சத்தியத்தைத் தேடும்படி உங்களைத் தூண்டுகிறோம். அற்புதமான பதில்களை, மெய்சிலிர்க்க வைக்கும் பதில்களை, நியாயமான பதில்களை நீங்கள் காண்பீர்கள், அதுவும் நம்பகமான அத்தாட்சிகளின் அடிப்படையில் காண்பீர்கள். இதுபோன்ற முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் பதிலளிப்பது தற்செயல் நிகழ்வு அல்ல!
a கூடுதலான தகவலுக்கு, உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டைக் காண்க; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.