கேள்வி 3
கட்டளைகள் எங்கிருந்து வந்தன?
உங்களுடைய தோற்றம் எப்படி இருக்கும் என்பதை எது தீர்மானிக்கிறது? உங்கள் விழிகளின் நிறம்... தலைமுடியின் நிறம்... தோலின் நிறம்... ஆகியவற்றை எது நிர்ணயிக்கிறது? உங்களுடைய உயரம், உடல்வாகு இப்படித்தான் இருக்க வேண்டுமென எது ஆணையிடுகிறது? நீங்கள் அப்பா/அம்மா ஜாடையில் அல்லது இருவருடைய ஜாடையிலும் இருக்கிறீர்களே, அதெப்படி? உங்கள் விரல் நுனியின் ஒருபுறத்தில் மென்மையான சதையும் மறுபுறத்தில் பாதுகாப்பிற்குக் கடினமான நகங்களும் வளர வேண்டுமென எது கட்டளையிடுகிறது?
சார்லஸ் டார்வினின் நாளில், இந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாப் புதிராகவே இருந்தது. ஒருவருடைய சிறப்பியல்புகள் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் விதத்தைக் கண்டு டார்வின்கூட ஆச்சரியப்பட்டார்! ஆனால் மரபியல் (genetics) விதிகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, செல்லுக்குள் பரம்பரைப் பண்புகளை (heredity) கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி அவர் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. இப்போதோ, உயிரியல் வல்லுநர்கள் மனிதனின் மரபியலைப் பற்றியும், DNA (டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்) என்ற வியத்தகு மூலக்கூறுக்குள் எழுதப்பட்டுள்ள விலாவாரியான கட்டளைகளைப் பற்றியும் ஆராய்வதற்குப் பல பத்தாண்டுகள் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்தக் கட்டளைகளெல்லாம் எங்கிருந்து வந்தன?
விஞ்ஞானிகள் பலர் என்ன சொல்கிறார்கள்? DNA-வும் அதன் சங்கேத மொழி கட்டளைகளும் கோடானுகோடி ஆண்டுகளாக நடைபெற்ற தற்செயல் நிகழ்வுகளால் வந்தன என்று அநேக உயிரியலாளர்களும் அறிவியலாளர்களும் நினைக்கிறார்கள். இந்த மூலக்கூறின் அமைப்பிலோ அது கடத்தும் தகவல்களிலோ அதன் செயல்பாடுகளிலோ, எந்தவொரு வடிவமைப்புக்கும் அத்தாட்சி இல்லை என அவர்கள் கூறுகிறார்கள்.17
பைபிள் என்ன சொல்கிறது? நம் உடலின் ஒவ்வொரு பாகம் உருவாவதையும் அது உருவாக வேண்டிய சமயத்தையும் பற்றிய நுட்ப விவரங்கள் கடவுள் உருவாக்கிய ஒரு “புத்தகத்தில்” இருப்பதாக பைபிள் சொல்கிறது. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவரைப் பற்றி தாவீது ராஜா சொன்னதைக் கவனியுங்கள்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:16.
அத்தாட்சி என்ன காட்டுகிறது? பரிணாமம் உண்மையென்றால், தொடர்ச்சியாய் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வுகளின் விளைவாக DNA உண்டாகியிருக்கலாம் என்பதற்கு ஓரளவு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அதேபோல் பைபிள் உண்மையென்றால், புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் DNA ஒழுங்கமைப்புடன் உண்டாக்கப்பட்டது என்பதற்குப் பலமான அத்தாட்சி இருக்க வேண்டும்.
DNA -வைப் பற்றி மிக எளிமையான முறையில் விவரிக்கும்போது அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்; அதைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆகவே, நாம் இப்போது மறுபடியும் ஒரு செல்லுக்குள் சென்று அதைச் சுற்றிப்பார்க்கலாம். இந்த முறை நாம் ஒரு மனித செல்லைப் பார்வையிடலாம். அந்த செல் எப்படி இயங்குகிறது என்பதைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு மியூசியத்திற்குள் நீங்கள் செல்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த மியூசியம் சுமார் 1,30,00,000 மடங்கு பெரிதாக்கப்பட்ட ஒரு மனித செல்லின் மாடல். கிட்டத்தட்ட 70,000 பேர் அமரக்கூடிய ஒரு பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கத்தைப் போல் அது இருக்கிறது.
அந்த மியூசியத்திற்குள் சென்றதும் அங்குள்ள வினோதமான வடிவமைப்புகளைப் பிரமிப்புடன் பார்க்கிறீர்கள்! அந்த செல்லின் நடுவில் நியூக்ளியஸ் இருக்கிறது, அது சுமார் 20 மாடி உயரத்திற்கு உருண்டையாக இருக்கிறது. இப்போது நீங்கள் அதற்கு அருகில் செல்கிறீர்கள்.
நியூக்ளியஸின் வெளி சவ்விலுள்ள கதவு வழியாக நீங்கள் உள்ளே நுழைந்ததும் சுற்றிப் பார்க்கிறீர்கள். இந்த அறையை 46 குரோமோசோம்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவை ஜோடி ஜோடியாகவும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவும் இருக்கின்றன, என்றாலும் அவை வெவ்வேறு உயரத்தில் காணப்படுகின்றன. உங்களுக்கு அருகில் உள்ள ஜோடியோ சுமார் 12 மாடி உயரத்திற்கு நிற்கிறது (1). ஒவ்வொரு குரோமோசோமிலும் கிட்டத்தட்ட அதன் நடுப்பாகத்தில் பள்ளம் விழுந்ததுபோல் இருக்கிறது; அதன் தடிமனோ மிகப் பெரிய மரத்தின் அடிப்பாகம் அளவு இருக்கிறது. இந்த மாடல் குரோமோசோம்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் இன்னும் உன்னிப்பாகப் பார்க்கும்போது, அந்தக் கயிற்றில் செங்குத்தான கோடுகள் இருப்பதைப் பார்க்கிறீர்கள். இவற்றுக்கு இடையே குறுக்கு வாட்டில் குறுகிய கோடுகள் தெரிகின்றன (2). இவையெல்லாம் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களா? இல்லை. இவை அந்தக் கயிறுகளின் வெளிப்புற முனைகள்; இவை இறுக்கமாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்குத் தூண்கள் போல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பிடித்து நீங்கள் இழுக்கையில் அது அப்படியே லாவகமாகப் பிரிந்து வருகிறது. அந்தக் கயிறு சிறுசிறு சுருள்களாக (3) இருப்பதைக் கண்டு வியப்படைகிறீர்கள், இவை நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சுருள்களுக்குள்தான் முக்கியமான அம்சமே அடங்கியுள்ளது. அது மிகவும் நீளமான கயிறு போல் இருக்கிறது. அது என்ன?
அற்புதமான மூலக்கூறின் அமைப்பு
குரோமோசோமின் இந்தப் பாகத்தை ஒரு கயிறு என்று நாம் அழைக்கலாம். இதன் தடிமன் ஓர் அங்குலம். இது நூல்-உருளைகளில் (4). இறுக்கமாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. அதனால் சுருள்களுக்குள் சுருள்கள் உருவாக வசதியாக இருக்கிறது. இந்தச் சுருள்கள் அவற்றைத் தாங்கும் ஒருவகை ஆதாரத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கயிறு எந்தளவுக்கு நேர்த்தியாகச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி மியூசியத்திலுள்ள அறிவிப்பு பலகையில் விளக்கப்பட்டுள்ளது. அந்த மாடல் குரோமோசோம்கள் ஒவ்வொன்றிலும் இருக்கும் கயிற்றை முழுவதுமாகப் பிரித்தால் அதன் நீளம் பூமியின் சுற்றளவில் சுமார் பாதி தூரம் இருக்கும்! a
இப்படி நேர்த்தியாக சுற்றிவைக்கப்பட்டிருப்பதை “ஒரு பொறியியல் சாதனை”18 என்று ஓர் அறிவியல் புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், இந்தச் சாதனைக்குப் பின்னால் ஒரு பொறியியல் வல்லுநர் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? ஒருவேளை இந்த மியூசியத்தில் ஒரு பெரிய கடை இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் கோடிக்கணக்கான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன; அதுவும் எந்தவொரு பொருளையும் சுலபமாக எடுக்குமளவுக்கு அவை மிக மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யாருமே அடுக்கி வைக்காமல் அவை தானாகவே வந்திருக்குமா? நிச்சயம் அப்படி வந்திருக்காது, இல்லையா? இருந்தாலும், குரோமோசோமின் ஒழுங்கமைப்புடன் ஒப்பிடும்போது இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை!
அந்தக் கயிற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பதற்கு அதைக் கையில் எடுத்து பார்க்கலாம் என்று மியூசியத்தில் உள்ள அறிவிப்பு பலகை சொல்கிறது (5).
நீங்கள் அதைக் கையில் எடுத்து பார்க்கும்போது இது ஒரு சாதாரண கயிறு இல்லை என்பது உங்களுக்குப் புலப்படுகிறது. அது ஒன்றோடொன்று பின்னப்பட்ட இரண்டு இழைகளால் ஆனது. இந்த இழைகள் மிகச் சிறிய சட்டங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டங்கள் ஒவ்வொன்றும் சம இடைவெளியில் இருக்கின்றன. அந்த இழைகள் பார்ப்பதற்கு முறுக்கி வைக்கப்பட்ட ஏணி போல், அதாவது சுழல் படிக்கட்டு போல், இருக்கின்றன (6). இப்போதுதான் உங்களுக்குப் பொறி தட்டுகிறது: நீங்கள் கையில் பிடித்துக்கொண்டிருப்பது ஒரு DNA மூலக்கூறின் மாடல். உயிரைப் பற்றிய புரியாப் புதிர்களில் இதுவும் ஒன்று!நூல்-உருளைகளையும் அவற்றைத் தாங்கும் ஆதாரத்தையும் கொண்டு மிக நேர்த்தியாகச் சுற்றிவைக்கப்பட்ட ஒரேவொரு DNA மூலக்கூறுதான் ஒரு குரோமோசோம். அந்த ஏணியின் படிக்கட்டுகள் ஆதார ஜோடிகள் (base pairs) என்று அழைக்கப்படுகின்றன (7). அவை என்ன செய்கின்றன? இவையெல்லாம் எதற்கு? ஓர் அறிவிப்பு பலகை நமக்கு எளிமையாக விளக்குகிறது.
மிகச் சிறந்த தகவல் களஞ்சியம்
அந்த ஏணியின் படிக்கட்டுகளைப் பற்றி புரிந்துகொண்டால்தான் DNA-வைப் பற்றி புரிந்துகொள்ள முடியும் என்று அந்த அறிவிப்பு பலகை சொல்கிறது. இப்போது அந்த ஏணி பிளவுபடுவது போல் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஏணியின் படிக்கட்டுகள் இரண்டாகப் பிளந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. அவை நான்கு வகைகளில் மட்டுமே இருக்கும். அவற்றுக்கு விஞ்ஞானிகள் A, T, G, C என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த எழுத்துகளின் வரிசை ஒருவித சங்கேத மொழியில் தகவலைத் தெரிவிக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
19-ஆம் நூற்றாண்டில் மோர்ஸ் சங்கேத மொழி கண்டுபிடிக்கப்பட்டபோது தந்தி முறையில் மக்களால் தொடர்புகொள்ள முடிந்தது. அந்தச் சங்கேத b
மொழியில் இரண்டே “எழுத்துகள்” இருந்தன—ஒன்று புள்ளி, மற்றொன்று சிறிய கோடு. என்றாலும் அதைக் கொண்டு எண்ணற்ற வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை வடிக்க முடியும். அதுபோல் DNA-விலும் நான்கெழுத்து சங்கேத மொழி உண்டு. எந்த வரிசை கிரமத்தில் A, T, G, C எழுத்துகள் இருக்கின்றனவோ அதை வைத்து “வார்த்தைகள்” வடிக்கப்படுகின்றன. அவை கோடான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோடான்கள் “கதைகளாக” வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவையே ஜீன்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஜீனிலும் சராசரியாக 27,000 எழுத்துகள் உள்ளன. இந்த ஜீன்களும் அவற்றுக்கு இடையே உள்ள நீளமான பாகங்களும் ஒருவிதத்தில் அத்தியாயங்களாகத் தொகுக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி குரோமோசோம்கள். இதுபோன்ற 23 குரோமோசோம்கள் சேரும்போது ஒரு முழு “புத்தகம்” அல்லது ஜீனோம் (மரபணுத் தொகுதி) உருவாகிறது. அதாவது, ஓர் உயிரினத்தைப் பற்றிய எல்லா மரபியல் தகவல்களும் அடங்கிய ஒரு தொகுப்பு உருவாகிறது.அந்த ஜீனோமை ஒரு பெரிய புத்தகத்திற்கு ஒப்பிடலாம். அதில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்? சுமார் 300 கோடி ஆதார ஜோடிகளாலான, அதாவது படிக்கட்டுகளாலான, DNA ஏணிதான் ஒட்டுமொத்த மனித ஜீனோம்.19 இப்போது ஒரு ‘செட்’ என்ஸைக்ளோப்பீடியாவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; ஒவ்வொன்றும் 1,000-க்கும் அதிகமான பக்கங்கள் உடையவை. இந்த ஜீனோமில் இதுபோல் 428 என்ஸைக்ளோப்பீடியாக்களை அடக்க முடியும். ஒவ்வொரு செல்லிலும் ஜீனோமின் இரண்டு நகல்கள் இருப்பதால், அதில் 856 என்ஸைக்ளோப்பீடியாக்களை அடக்க முடியும்! ஜீனோமில் இருக்கும் தகவல்களையெல்லாம் நீங்களே டைப் அடிக்க வேண்டுமானால், விடுமுறையே எடுக்காமல் சுமார் 80 வருடங்கள் முழு நேரமாக வேலை செய்ய வேண்டும்!
ஆனால், நீங்கள் அப்படியே வாழ்நாள் முழுவதும் டைப் அடித்தாலும் அதனால் உங்கள் உடலுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால், நூற்றுக்கணக்கான என்ஸைக்ளோப்பீடியாக்களை, அதுவும் பெரிய பெரிய என்ஸைக்ளோப்பீடியாக்களை, 100 லட்சம் கோடி மிக நுண்ணிய செல்களுக்குள் உங்களால் புகுத்த முடியாதே! இந்தளவு எக்கச்சக்கமான தகவல்களை மிக மிக நுண்ணிய செல்களுக்குள் திணிப்பது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.
மூலக்கூறு உயிரியலிலும் கணினி அறிவியலிலும் பேராசிரியராக விளங்கும் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு கிராம் DNA-வை உலர்த்தினால் அது சுமார் ஒரு கன சென்டிமீட்டர் அளவே இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சி.டி-களில் எவ்வளவு தகவல்களைப் பதிய வைக்க முடியுமோ அவ்வளவு தகவல்களை இந்த ஒரு கிராம் DNA-வுக்குள் பதிய வைத்துவிடலாம்.”20 அப்படியானால் இது எதைக் குறிக்கிறது? தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு மனித உடலையும் வடிவமைப்பதற்குத் தேவையான எல்லா கட்டளைகளும் DNA-வில் உள்ள ஜீன்களில்தான் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் எல்லா கட்டளைகளும் அடங்கியிருக்கின்றன. DNA-வை ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்; ஏனென்றால், ஒரே டீஸ்பூன் அளவு DNA-வில் இன்று வாழும் மனிதர்களைவிட சுமார் 350 மடங்கு அதிகமானவர்களை உருவாக்க தேவையான எல்லா தகவல்களையும் அடக்கிவிடலாம்! இன்று பூமியில் வாழும் 700 கோடி மக்களை உருவாக்க அந்த டீஸ்பூனில் தூசி படிந்தளவு DNA இருந்தாலே போதும்.21
நூலாசிரியர் இல்லாத புத்தகமா?
மிகச் சிறிய பொருள்களில் ஏராளமான தகவல்களைப் பதிவு செய்து வைப்பதில் மனிதன் இமாலய சாதனை படைத்திருந்தாலும் அவன் உருவாக்கிய எந்தவொரு கருவியும் DNA-வுக்கு ஈடாகாது. இருந்தாலும், DNA-வை சி.டி-யுடன் ஒப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: சமச்சீரான வடிவில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பளபளப்பான ஒரு சி.டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள்தான் அதை உருவாக்கியிருக்க
வேண்டும் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்கிறோம். ஒருவேளை அதில் தகவல்கள் பொதிந்திருந்தால்—அதுவும் அநாவசியமான தகவல்கள் அல்ல, ஆனால் ஒரு சிக்கலான இயந்திரத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும் தேவையான எல்லா தகவல்களும் கிரமமாகப் பொதிந்திருந்தால்—என்ன சொல்வீர்கள்? இந்தளவு தகவல்கள் அதில் நிறைந்திருந்தாலும் அதன் எடையோ வடிவமோ மாறிவிடுவதில்லை! இதுதான் அந்த சி.டி-யின் சிறப்பம்சம். சி.டி-யில் எழுதப்பட்டுள்ள இந்தத் தகவல்களுக்குப் பின் புத்திக்கூர்மையுள்ள ஒருவர் இருக்க வேண்டுமென நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தானே? எதையாவது எழுத வேண்டுமென்றால் அதற்கு ஓர் எழுத்தாளர் வேண்டும்தானே?DNA-வை ஒரு சி.டி-யோடு அல்லது ஒரு புத்தகத்தோடு ஒப்பிடுவது கனகச்சிதமாக இருக்கும். பார்க்கப்போனால், ஜீனோமைப் பற்றி ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஜீனோமை ஒரு புத்தகம் என சொல்வது ஏதோ ஒப்புமைக்காக அல்ல, அது நிஜம். டிஜிட்டல் வடிவில் [சங்கேத மொழியில்] பல தகவல்களைக் கொண்ட ஒரு புத்தகம் போல்தான் . . . ஜீனோமும்.” அதன் ஆசிரியர் மேலும் சொல்கிறார்: “ஜீனோம் மிக சாமர்த்தியமான ஒரு புத்தகம், ஏனென்றால் சரியான சூழலில் தன்னையே அதனால் நகலெடுக்கவும் முடியும், வாசிக்கவும் முடியும்.”22 இது, DNA-வின் மற்றொரு சிறப்பு அம்சத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறது.
இயங்கும் இயந்திரங்கள்
நீங்கள் அப்படியே அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது, செல்லுக்குள் இருக்கும் நியூக்ளியஸ் ஒரு மியூசியத்தைப் போல் உண்மையில் அசையாமல் இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். இப்போது நீங்கள் மற்றொரு அறிவிப்பு பலகையைப் பார்க்கிறீர்கள். கயிறு வடிவிலான DNA மாடலை உடைய ஒரு கண்ணாடி பெட்டிக்கு மேல், “செயல்முறைக்கு பட்டனை அழுத்தவும்” என்று எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் பட்டனை அழுத்துகிறீர்கள், விவரிப்பாளர் ஒருவர் விளக்க ஆரம்பிக்கிறார்: “DNA குறைந்தபட்சம் இரண்டு முக்கியமான வேலைகளைச் செய்கிறது. முதல் வேலை, இரட்டித்தல் (replication), புதிதாக உருவாகும் ஒவ்வொரு செல்லும் முழு மரபியல் தகவல்களையும் பெறுவதற்காக DNA நகலெடுக்கப்பட வேண்டும். இப்போது இந்தச் செயல்முறையைக் கவனியுங்கள்.”
அந்த அறிவிப்பு பலகையின் ஒரு முனையில் இருக்கும் கதவு வழியாக சிக்கலான ஓர் இயந்திரம் வெளிவருகிறது. ஒன்றோடொன்று இணைந்த பல ரோபோட்டுகள்தான் அந்த இயந்திரம். இப்போது அந்த இயந்திரம் DNA-வுடன் போய் இணைந்துகொள்கிறது. தண்டவாளத்தில் ரயில்வண்டி போவதுபோல் DNA-மீது அந்த இயந்திரம்
போகிறது. அது என்ன செய்கிறதென்று பார்க்க முடியாதளவுக்கு சற்று வேகமாகவே செல்கிறது. ஆனால் அதன் பின்புறத்தில் இரண்டு முழு DNA கயிறுகள் வருவதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.அந்த விவரிப்பாளர் இவ்வாறு விளக்குகிறார்: “DNA இரட்டித்தல் நடைபெறும்போது என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கான மிக எளிய விளக்கம்தான் இது. என்ஸைம்கள் எனப்படுகிற மூலக்கூறு இயந்திரங்களின் ஒரு தொகுதி DNA-மீது செல்கிறது. அது, முதலில் DNA-வை இரண்டாகப் பிரிக்கிறது. பின்பு, ஒவ்வொரு இழையையும் மாதிரியாகப் பயன்படுத்தி புதிய இழையை உருவாக்குகிறது. இந்த இயந்திரத்தின் எல்லா பாகங்களையும் எங்களால் உங்களுக்குக் காண்பிக்க முடியாது. உதாரணமாக, நகலெடுக்கும் இயந்திரத்திற்கு முன்சென்று DNA-வை இரண்டாகப் பிரிக்கும் சிறிய கருவியை உங்களுக்குக் காண்பிக்க முடியாது. DNA அதிக இறுக்கமாகிவிடாமல் சுலபமாகப் பிரிந்துசெல்ல அது உதவுகிறது. DNA எப்படிப் பலமுறை ‘பிழைதிருத்தம்’ செய்யப்படுகிறது என்பதையும் எங்களால் உங்களுக்குக் காண்பிக்க முடியாது. தவறுகள் எல்லாம் வியத்தகு விதத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்படுகின்றன.”— பக்கங்கள் 16, 17-ல் உள்ள வரைபடத்தைக் காண்க.
அந்த விவரிப்பாளர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் அதன் வேகத்தை மட்டும் உங்களுக்குத் தெளிவாகக் காட்ட முடியும். அந்த ரோபோட் பயங்கர வேகமாகப் போவதை நீங்கள் கவனித்தீர்கள், அல்லவா? அந்த என்ஸைம் இயந்திரம் DNA-வின் ‘பாதையில்’ வினாடிக்கு சுமார் 100 படிக்கட்டுகளை (அதாவது, ஆதார ஜோடிகளை) கடந்து செல்கிறது.23 அந்தப் ‘பாதை’ ரயில் தண்டவாளத்தின் அளவுள்ளதாக இருந்தால் அந்த ‘என்ஜின்’ மணிக்கு 80 கிலோமீட்டருக்கும் மேல் வேகமாய் செல்லும். பாக்டீரியாவில், இரட்டித்தல் வேலையைச் செய்யும் சிறிய இயந்திரங்களால் இதைவிட பத்து மடங்கு வேகமாகச் செல்ல முடியும்! ஒரு மனித செல்லுக்குள் உள்ள இந்த இயந்திரங்கள், ஆம் நூற்றுக்கணக்கான இயந்திரங்களின் படைகள், DNA ‘பாதையில்’ வெவ்வேறு இடங்களில் வேலை செய்யப் போகின்றன. எட்டே மணி நேரத்தில் முழு ஜீனோமையும் அவை நகலெடுத்துவிடுகின்றன.”24 (பக்கம் 20-ல் “ வாசிக்கப்பட்டு நகலெடுக்கப்படும் மூலக்கூறு” என்ற பெட்டியைக் காண்க.)
DNA-வை “வாசித்தல்”
DNA-வை இரட்டிப்பாக்கும் ரோபோட்டுகள் அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்து சென்றுவிடுகின்றன. இப்போது இன்னொரு இயந்திரம் தோன்றுகிறது. DNA-வின் ஒரு பகுதியில் இதுவும் நகர்ந்து செல்கிறது, ஆனால் மெதுவாக. DNA கயிறு இந்த இயந்திரத்தின் ஒரு முனையில் நுழைந்து மறு முனை வழியாக எந்த மாற்றமும் இல்லாமல் வெளிவருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், ஒரு தனி இழை, ஆம் புதிய இழை, அந்த இயந்திரத்தின் வேறொரு திறப்பு வழியாக ஒரு பெரிய வால் மாதிரி வெளியே வருகிறது. இங்கே என்ன நடக்கிறது?
மறுபடியும் அந்த விவரிப்பாளர் விளக்கம் அளிக்கிறார்: “DNA-வின் இரண்டாவது வேலை, படியெடுத்தல் (transcription). DNA ஒருபோதும் நியூக்ளியஸ் என்ற பாதுகாப்பு அறையைவிட்டு வெளியே வராது. அப்படியானால், அதன் ஜீன்கள்—அதாவது உங்கள் உடலிலுள்ள எல்லா புரோட்டீன்களையும் தயாரிப்பதற்கான தகவல்கள்—எப்படி வாசிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன? DNA-வில் உள்ள ஒரு ஜீனுக்கு நியூக்ளியஸின் வெளியிலிருந்து ரசாயன சிக்னல் கிடைக்கிறது; DNA-வில் நகரும் என்ஸைம் இயந்திரம் அந்த ஜீன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறது. பின்பு இந்த இயந்திரம் RNA (ரைபோ நியூக்ளிக் அமிலம்) என்ற மூலக்கூறைப் பயன்படுத்தி அந்த ஜீனை நகலெடுக்கிறது. RNA பார்ப்பதற்கு கிட்டத்தட்ட DNA-வின் ஒற்றை இழைபோல்தான் இருக்கும்; ஆனால், அது வித்தியாசமானது. ஜீன்களில் சங்கேத மொழியில் பதிவாகியுள்ள தகவல்களை எடுத்துக்கொள்வதுதான் RNA-வின்
வேலை. என்ஸைம் இயந்திரத்திற்குள் இருக்கும்போதே RNA இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு, பின்பு நியூக்ளியஸைவிட்டு வெளியேறி ரைபோசோம் ஒன்றிடம் செல்கிறது. RNA கொண்டுவரும் தகவல்களை வைத்து அங்கு புரோட்டீன் உற்பத்தியாகிறது.”இந்தச் செயல்முறையை நீங்கள் கவனிக்கையில், ஸ்தம்பித்துப் போகிறீர்கள். இந்த மியூசியத்தையும், அதிலுள்ள இயந்திரங்களை வடிவமைத்து உருவாக்கிய நிபுணர்களின் செயல்திறனையும் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்கள். இப்போது அந்த முழு மியூசியமும் இயங்குகிறது என்றால் எப்படி இருக்கும், அதாவது ஒரே சமயத்தில் மனித செல்லுக்குள் நிகழும் ஆயிரக்கணக்கான வேலைகளையும் சித்தரித்துக் காட்டும் விதத்தில் அது இயங்குகிறது என்றால் எப்படி இருக்கும்? பிரமிப்பூட்டுவதாக இருக்குமல்லவா!
சிக்கலான, சின்னஞ்சிறிய இயந்திரங்கள் செய்யும் இந்த எல்லா வேலைகளும் இப்போதே உங்கள் உடலிலுள்ள 100 லட்சம் கோடி செல்லுக்குள் நடைபெறுவதை உணருகிறீர்கள்! இப்போது உங்கள் DNA வாசிக்கப்படுகிறது; என்ஸைம்கள், திசுக்கள், உறுப்புகள் போன்றவற்றாலான உங்கள் உடலுக்குத் தேவைப்படும் லட்சோபலட்ச புரோட்டீன்களை உற்பத்தி செய்வதற்கான கட்டளைகளை அது பிறப்பிக்கிறது. இந்தக் கணம் உங்கள் DNA நகலெடுக்கப்பட்டு, பிழை திருத்தப்படுகிறது. இப்போது புதிய செல்கள் உருவாவதற்கும் அவை மறுபடியும் வாசிக்கப்பட்டு நகலெடுக்கப்படுவதற்கும் தேவையான கட்டளைகள் தயாராய் இருக்கின்றன.
இந்த உண்மைகள் ஏன் முக்கியம்?
ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இப்போது மறுபடியும் நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்:
‘இந்தக் கட்டளைகளெல்லாம் எங்கிருந்து வந்தன?’ இந்த “புத்தகமும்” அதிலுள்ள விவரங்களும் அதீத சக்தி படைத்த ஒரு நூலாசிரியரிடமிருந்து வந்தன என்று பைபிள் சொல்கிறது. பைபிள் சொல்லும் பதில் காலத்துக்கு ஒத்துவராததா, விஞ்ஞானப்பூர்வமற்றதா?இதை சிந்தித்துப் பாருங்கள்: இங்கே விவரிக்கப்பட்டுள்ள மியூசியத்தை மனிதர்களால் உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்க முயல்வது பெரும் சிக்கலைத்தான் உண்டாக்கும். மனித ஜீனோமையும் அதன் செயல்பாட்டையும் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கிறது. இந்த ஜீன்களெல்லாம் எங்கே இருக்கின்றன, என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் விஞ்ஞானிகள் இன்னும் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனைக்கும் DNA இழையில் ஒரு சிறு பாகம்தான் ஜீன்கள். DNA-வில் ஜீன்கள் இல்லாத நீண்ட பாகங்களைப் பற்றியென்ன? விஞ்ஞானிகள் இந்தப் பாகங்களைப் பயனற்ற DNA என அழைத்தார்கள், ஆனால் சமீப காலத்தில் தங்களுடைய கருத்தை மாற்றிக்கொண்டார்கள். ஜீன்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தளவு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பாகங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த DNA-வின் முழு மாதிரியையும் அதை நகலெடுத்து திருத்தும் இயந்திரங்களையும் விஞ்ஞானிகளால் ஒருவேளை உருவாக்க முடிந்தாலும்கூட உண்மையான ஒரு DNA-வைப் போல் அதை செயல்பட வைக்க முடியுமா?
25 இப்படி அவர் பணிவுடன் வெளிப்படையாகச் சொன்னது பெரிய விஷயம்; DNA-வைப் பொறுத்தவரை அவர் சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. DNA-வை அதன் இரட்டிப்பாக்கும் இயந்திரங்களோடும் படியெடுக்கும் இயந்திரங்களோடும் (replication and transcription machinery) விஞ்ஞானிகளால் உருவாக்கவும் முடியாது, அதை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது. இருந்தாலும், இவையெல்லாம் தற்செயலாய்த் திடீரென தோன்றின என்பது தங்களுக்குத் தெரியும் என்று சிலர் அடித்துக்கூறுகிறார்கள். நீங்கள் இதுவரை பார்த்த அத்தாட்சிகள் உண்மையிலேயே இவர்கள் சொல்வதை ஆதரிக்கின்றனவா?
ரிச்சர்டு ஃபின்மேன் என்ற பிரபல விஞ்ஞானி தனது மரணத்திற்குச் சற்று முன்பு இந்தக் குறிப்பை ஒரு கரும்பலகையில் எழுதிவிட்டுச் சென்றார்: “எதை என்னால் உருவாக்க முடியாதோ அதை என்னால் புரிந்துகொள்ள முடியாது.”அத்தாட்சிகள் இதற்கு நேர்மாறான ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன என்ற முடிவுக்கு வேறுசில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். உதாரணமாக, DNA-வின் இரட்டை முறுக்கிழை அமைப்பைக் கண்டுபிடிக்க உதவிய பிரான்ஸிஸ் கிரிக் என்ற விஞ்ஞானியும் இதே முடிவுக்குத்தான் வந்தார். DNA மூலக்கூறு மிக நன்றாய் ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பதால் அது தற்செயலாய்த் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று சொன்னார். அதோடு, பூமியில் உயிர் தோன்றுவதற்கு விண்வெளியிலிருக்கும் புத்திக்கூர்மையுள்ள ஜீவிகள் DNA-வை அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினார்.26
நாத்திக கொள்கையை 50 வருடங்களாகப் பரப்பிவந்த புகழ்மிக்க தத்துவஞானி ஆன்டனி ஃபுளூ சமீபத்தில் தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டார். புத்திக்கூர்மையுள்ள ஒருவர்தான் உயிரைப் படைத்திருக்க வேண்டுமென்று தனது 81-ஆம் வயதில் நம்ப ஆரம்பித்தார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? DNA-வைப் பற்றிய ஆராய்ச்சிதான். இந்தப் புதிய கருத்தை விஞ்ஞானிகள் வரவேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஃபுளூ இவ்வாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது: “அது மிகவும் வருந்தத்தக்கது. . . . அத்தாட்சி எதைச் சுட்டிக்காட்டினாலும் சரி, அதையே ஏற்றுக்கொள்ள வேண்டும் . . . என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதுவே என் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது.”27
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அத்தாட்சி எதைச் சுட்டிக்காட்டுகிறது? ஒரு தொழிற்சாலையின் நடுவில் கம்ப்யூட்டர் அறை ஒன்றை நீங்கள் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த கம்ப்யூட்டரில் சிக்கலான மாஸ்டர் புரோகிராம் இருக்கிறது, அது அந்தத் தொழிற்சாலையில் உள்ள எல்லா வேலைகளையும் இயக்குகிறது. அதைவிட முக்கியமாக, அங்குள்ள ஒவ்வொரு இயந்திரத்தையும் எப்படி உருவாக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற கட்டளைகளைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது; அதோடு, அந்த புரோகிராம் தன்னைத்தானே நகலெடுக்கிறது, பிழை திருத்துகிறது. இதையெல்லாம் பார்த்து நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? அந்த கம்ப்யூட்டரும் அதிலுள்ள புரோகிராமும் தானாகவே வந்திருக்கும் என்ற முடிவுக்கு வருவீர்களா, அல்லது புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்களா? அத்தாட்சி தெள்ளத்தெளிவாக இருக்கிறது.
a செல்லின் மூலக்கூறு உயிரியல் (ஆங்கிலம்) என்ற பாடநூல் இதை வேறு விதத்தில் விவரிக்கிறது. இந்த நீளமான நூலிழைகளை செல்லின் நியூக்ளியஸுக்குள் சுற்றிவைப்பது எப்படி இருக்குமென்றால், சுமார் 40 கிலோமீட்டர் நீளமுடைய மெல்லிய நூலை ஒரு டென்னிஸ் பந்திற்குள் சுற்றி வைக்க முயற்சி செய்வதைப் போல் இருக்கும்—அந்த நூலின் ஒவ்வொரு பாகத்தையும் எளிதாக எடுக்கும் அளவிற்கு அது அந்தளவு நேர்த்தியாகவும் கிரமமாகவும் சுற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
b செல்களில் ஜீனோமின் இரண்டு முழு நகல்கள் இருக்கும், அதாவது மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கும்.