Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?

அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?

அதிகாரம் 15

அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?

சிருஷ்டிப்பை ஆதரிக்க ஏராளமான ஆதாரங்கள் உண்டு என பார்த்துவிட்டோம் அல்லவா? அப்படியிருந்தும் ஏன் அநேகர் சிருஷ்டிப்பை நிராகரித்து அதற்கு பதிலாக பரிணாமத்தை ஏற்கின்றனர்? ஒரு காரணம் அது அவர்களுக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படுவதே. அறிவியல் பாட புத்தகங்கள் அநேகமாக எப்பொழுதும் பரிணாமத்தையே முன்வைக்கின்றன. மாணவர்கள் எதிரிடையான வாதங்களை அநேகமாக கேள்விப்படுவதே இல்லை. உண்மையைச் சொன்னால், பரிணாமத்திற்கு எதிரான வாதங்கள் பள்ளி பாட புத்தகங்களில் வெளிவருவதேயில்லை.

2உயிர்வேதியியல் நிபுணர் ஒருவர் தன் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அமெரிக்கன் லெபாரெட்டரி என்ற பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பரிணாமம் வெறும் ஒரு கொள்கை என பிள்ளைகளுக்கு போதிக்கப்படுவதில்லை. இரண்டாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகங்களிலேயே மறைமுகமான வாக்கியங்கள் தோன்றுகின்றன (என் பிள்ளைகளின் பாட புத்தகங்களில் வாசித்ததை வைத்து சொல்கிறேன்). பரிணாமம் சந்தேகத்திற்குரிய ஒரு கொள்கைதான் என்றல்ல, மாறாக அதுவே உண்மை என்பது போல் சொல்லப்படுகிறது. அப்படியானால், இதை நம்பியே ஆகவேண்டும் என கல்வித்துறையின் செல்வாக்கு வற்புறுத்துகிறது.” மேல்நிலைப் பள்ளிகளில் பரிணாமம் போதிக்கப்படுவதைப் பற்றி அவர் கூறியதாவது: “ஒரு மாணாக்கர் தனக்கென்று சொந்த நம்பிக்கையுடன் இருக்கவோ அதை அறிவிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அறிவித்தாலும், ஆசிரியர் அவரை தவறாக விமர்சித்து இகழ்ந்து பேசுகிறார். பள்ளியில் அவர் அநேகமாக இழப்பை எதிர்ப்பட நேரிடுகிறது, அவருடைய கருத்துகள் ‘சரி’ அல்ல என்ற காரணத்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படுகின்றன.”1

3பரிணாம எண்ணங்கள் பள்ளிகளில் மட்டுமல்ல அறிவியலின் எல்லா துறைகளிலும் சரித்திரம், தத்துவம் போன்ற மற்ற துறைகளிலும் பரவிக்கிடக்கின்றன. புத்தகங்கள், பத்திரிகையில் வரும் கட்டுரைகள், சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவை அதை ஓர் உண்மை என்றே காட்டுகின்றன. ‘மிருகங்களிலிருந்து மனிதன் பரிணமித்தபோது’ அல்லது ‘கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு உயிர் சமுத்திரங்களில் பரிணமித்தபோது’ போன்ற வாக்கியங்களை எத்தனை முறை கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருக்கிறோம்! இவ்வாறாக, பரிணாமமே உண்மை என ஏற்றுக்கொள்ளும்படி மக்கள்மீது திணிக்கப்படுகிறது, இதற்கு எதிரிடையான அத்தாட்சியோ கண்டுகொள்ளாமலே விடப்படுகிறது.

அதிகாரத்திலுள்ளோரின் செல்வாக்கு

4பரிணாமம் உண்மையே, முட்டாள்கள் மட்டுமே அதை நம்ப மறுக்கின்றனர் என புகழ்பெற்ற கல்விமான்களும் விஞ்ஞானிகளும் அடித்துக்கூறும்போது பொதுமக்களில் எத்தனை பேர் அவர்களுக்கு எதிராக குரல்கொடுக்க துணிவர்? ஆகவே, அதிகாரத்திலுள்ளோர் பரிணாமத்தை ஆதரிப்பதே பெரும்பாலான மக்கள் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய காரணம் ஆகும்.

5ரிச்சர்ட் டாக்கின்ஸ் பின்வருமாறு அடித்துக் கூறியது, குரலெழுப்ப முடியாதபடி பொதுமக்களை அடக்கிவிடும் கருத்துகளுக்கான ஒரு சிறந்த உதாரணமாகும்: “இன்றுள்ள பொருத்தமான அத்தாட்சிகள் அனைத்தும் டார்வினுடைய கொள்கையையே ஆதரிக்கின்றன. கருத்தார்ந்த, நவீனகால உயிரியல் வல்லுனர் எவரும் இதன் உண்மையை சந்தேகிப்பதில்லை.”2 ஆனால் அதுதான் உண்மையா? இல்லவே இல்லை. கொஞ்சம் ஆராய்ச்சி செய்தாலே போதும், ‘கருத்தார்ந்த, நவீனகால உயிரியல் வல்லுனர்கள்’ உட்பட அநேக விஞ்ஞானிகள் அதை சந்தேகிப்பது மட்டுமல்ல, நம்புவதும் கிடையாது என்ற குட்டு வெளிப்பட்டுவிடும்.3 மாறாக, சிருஷ்டிப்பிற்கான அத்தாட்சியே அதிக வலுவானது என அவர்கள் நம்புகின்றனர். ஆகவே, டாக்கின்ஸ் சொன்னது போல கவனமாய் ஆராயப்படாத கூற்றுகள் தவறானவையே. ஆனால் இப்படிப்பட்ட மொழிநடையை உபயோகித்து எதிர்ப்புகளைக் குழிதோண்டி புதைக்க எடுக்கும் முயற்சிகளுக்கு இவை நல்ல உதாரணங்களாகும். இதை கவனித்தவராய் நியூ சயன்டிஸ்ட்-⁠ல் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய நம்பிக்கைகளை எதிர்ப்பவர்களை நிராகரிக்க, அனைவரையும் உட்படுத்தும் இப்படிப்பட்ட பொதுவான கூற்றுகளை உபயோகிக்கிறார் என்றால் பரிணாமத்திற்கான அத்தாட்சிகளில் அவருக்கே அவ்வளவுதான் நம்பிக்கையா?”4

6அதைப்போலவே, பரிணாமவாதிகளான லூரியா, கௌல்ட், சிங்கர் ஆகியோர் எழுதிய உயிர் பற்றி ஓர் கண்ணோட்டம் என்ற புத்தகம், “பரிணாமம் ஓர் உண்மை” என கூறுகிறது. மேலுமாக இதை சந்தேகித்தால், “பூமி, சூரியனைச் சுற்றிவருவதைப் பற்றியோ ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து தண்ணீர் உருவாவதைப் பற்றியோகூட நாம் சந்தேகிக்க வேண்டியதுதான்”5 என்றும் அடித்துச்சொல்கிறது. புவியீர்ப்பு எந்தளவு உண்மையோ அந்தளவு பரிணாமமும் உண்மை என்றும் அது கூறுகிறது! ஆனால், பூமி சூரியனைச் சுற்றிவருவதையும், ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து தண்ணீர் உருவாவதையும், புவியீர்ப்பு இருப்பதையும் பரிசோதனைகளால் நிரூபிக்க முடியும். பரிணாமத்தையோ பரிசோதனைகளால் நிரூபிக்க முடியாதே! அதுமட்டுமா, “பரிணாம கொள்கைகள் பற்றி விவாதங்கள் தொடர்கின்றன”6 என்று இந்தப் பரிணாமவாதிகளே ஒப்புக்கொள்கின்றனர் அல்லவா? மறுபட்சத்தில், பூமி சூரியனைச் சுற்றிவருவதைப் பற்றியோ, ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து தண்ணீர் உருவாவதைப் பற்றியோ, புவியீர்ப்பு இருப்பதைப் பற்றியோ விவாதங்கள் இன்னமும் நிகழ்கின்றனவா என்ன? இல்லையே! அப்படியென்றால், இவற்றைப் போலவே பரிணாமமும் ஓர் உண்மை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

7ஜான் ரீடரின் காணாமற்போன இணைப்புகள் (Missing Links) என்ற புத்தகத்திற்கு டேவிட் பில்பீம் முன்னுரை எழுதுகையில், விஞ்ஞானிகள் எப்போதுமே உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை என்று எழுதினார். அதற்கு ஒரு காரணம், விஞ்ஞானிகளும் “மனிதர்கள்தானே, அதுமட்டுமா பெயரும் புகழும் கண்கவர் பரிசுகளாக அவர்களுக்கு கிடைக்க உள்ளதே” என பில்பீம் கூறினார். பரிணாமம், “தனிப்பட்ட விருப்பங்களால் உந்துவிக்கப்படும் ஓர் அறிவியல் துறையாதலால், முன் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கைகளால் அது எளிதில் பாதிக்கப்படுகிறது” என அந்தப் புத்தகம் ஒப்புக்கொள்கிறது. அதற்கு ஓர் உதாரணமாக அந்தப் புத்தகம் கூறுகிறது: “பிள்ட்டௌன் மனிதனுடைய விஷயத்தில் உண்மையாய் இருந்ததுபோல . . . முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகள் . . . ஆர்வமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டும் நீண்ட காலம் நம்பப்பட்டும் வருவதால் ஆராய்ச்சிக்கு முன்பு நம்பிக்கை வைக்கும் முந்திரிக் கொட்டைத்தனத்தை அறிவியலில் காண முடிகிறது.” அந்த ஆசிரியர் மேலும் கூறியதாவது: “ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் . . . தாங்கள் நம்ப விரும்பிய கருத்துகளை ஆதரிப்பதற்காக உண்மையான மதிப்பீடுகளை ஒதுக்கித்தள்ளினர். . . . தங்களுடைய முன் தீர்மானங்களை ஆதரிக்கும் தவறான தகவலை விடாப்பிடியாக பற்றிக்கொண்டிருப்பதில் நவீனகால [பரிணாமவாதிகள்] அவர்களைவிட எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.”7 ஆகவே, சில விஞ்ஞானிகள் பரிணாமம் உண்மை என கூறிவிட்டதாலும் தங்களுடைய வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றுவிக்கும் விருப்பத்தாலும் தவறு இருப்பதையே ஏற்க மறுக்கிறார்கள். கேடு விளைவிக்கும் என தாங்கள் கருதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக தங்களுடைய முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகளை நியாயப்படுத்தவே முயலுகின்றனர்.

8அறிவியல்பூர்வமற்ற இந்த மனநிலையைக் கண்டு டபிள்யூ. ஆர். தாம்ஸன் மிகவும் வருத்தப்பட்டார். டார்வினுடைய உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட பதிப்பிற்கு முன்னுரை எழுதுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆராய்ச்சியின்போது வாக்குவாதங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவற்றை அங்கீகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்; ஆதாரமற்ற வாக்குவாதங்களை மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரிப்பது வருந்தத்தக்கதே” என கூறினார். அவர் தொடர்ந்து, “எந்த உண்மைகளிலும் விளக்கங்களிலும் டார்வின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தாரோ அவை இப்போது நம்பிக்கையளிக்க தவறுகின்றன. மரபியல் மற்றும் மாறுபாடு பற்றி நீண்டகாலம் தொடரும் ஆராய்ச்சிகள் டார்வினுடைய நிலைநிற்கையை தவறென நிரூபிக்கின்றன”8 என்று கூறினார்.

9தாம்ஸன் தொடர்ந்து கூறினார்: “ஆரம்பம் வெற்றி பெற்றதால் விளைந்த நிலையான, வருந்தத்தக்க விளைவுகளில் ஒன்று, சரிபார்க்க முடியாத ஊகங்களுக்கு உயிரியல் வல்லுனர்கள் அடிமைப்பட்டு போனதே. . . . ஒருபுறம் டார்வினிஸம் வெற்றி பெற மறுபுறம் அறிவியல்பூர்வ நேர்மை தோல்வி கண்டது.” அவர் முடிவாக கூறினார்: “அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாத, அறிவியல்பூர்வ துல்லியத்துடன் செய்துகாட்டவும் முடியாத ஒரு கொள்கையை ஆதரிக்க விஞ்ஞானிகள் திரண்டு வருகின்றனர்; விமர்சனத்திற்கு இடமளிக்காமல், பிரச்சினைகளை நீக்குவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அதன் மதிப்பைக் காப்பாற்ற முயல்கின்றனர்; அறிவியலில் நிலவும் இந்த மனநிலை இயற்கைக்கு அப்பாற்பட்டதும் விரும்பப்படாததும் ஆகும்.”9

10அதைப் போலவே மனிதவியல் பேராசிரியர் ஆன்தனி ஆஸ்டிரிக், குரங்குபோன்ற மிருகங்களிலிருந்தே மனிதன் தோன்றினான் என்பதை “ஓர் உண்மை” என அறிவித்த தன்னுடைய அறிவியல் சகாக்களை குறைகூறினார். அது “வெறும் ஒரு கொள்கையே, அதிலும் உறுதியான ஆதாரங்கள் இல்லாத ஒன்றே” என அவர் கூறினார். “மனிதனின் ஆரம்பம் பற்றிய முதல் அத்தாட்சியிலிருந்தே அவன் தொடர்ந்து படிப்படியாக மாறினான் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இல்லை” என அவர் குறிப்பிட்டார். வல்லுனர்களில் பெரும்பாலானோர், “உண்மையான வல்லுனர்கள் என அழைக்கப்படாமல் போய்விடுவோமோ அல்லது கருத்தார்ந்த கல்விமான்களின் வட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தினால்தான்”10 பரிணாமத்தை ஆதரிப்பவர்களின் வழியைப் பின்பற்றினர் என அந்த மனிதவியல் நிபுணர் கூறினார். இதைப் பற்றி ஹாய்ல் மற்றும் விக்ரமசிங்கே இவ்வாறு குறிப்பிட்டனர்: “அந்தக் கொள்கைகளை நீங்கள் நம்ப வேண்டும் அல்லது விசுவாச துரோகி என்ற பட்டத்தை நிச்சயம் கட்டிக்கொள்ள வேண்டும்.”11 இதன் விளைவாகவே, தப்பெண்ணம் இல்லாமல் சிருஷ்டிப்பு பற்றி ஆராய அநேக விஞ்ஞானிகளுக்கு மனதில்லை. ஹாஸ்பிட்டல் பிராக்டிஸ் என்பதன் பதிப்பாசிரியருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் குறிப்பிட்ட விதமாகவே: “உண்மைகளைப் பாரபட்சம் இல்லாமல் எடுத்துரைப்பதாக அறிவியல் எப்போதுமே பெருமையடித்துக் கொண்டது. ஆனால் விஞ்ஞானிகளாகிய நாம் இத்தனை காலமாக வெறுத்து வந்த ஒருதலைபட்சமான, குறுகலான மனப்பான்மைக்கு இப்போது படுவேகமாக அடிமையாகி வருகிறோமோ என்றே பயப்படுகிறேன்.”12

மதத்தின் தோல்வி

11பரிணாமம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மற்றொரு காரணம் பாரம்பரிய மதத்தின் தோல்வியே. அதன் போதனைகளிலும் செயல்களிலும் சிருஷ்டிப்பு பற்றிய பைபிளின் விவரப்பதிவை சரியாக பிரதிநிதித்துவம் செய்வதிலும் அது தவறியிருப்பதால் வந்த விளைவே இது. விவரமறிந்தவர்கள், மதத்தின் மாய்மாலம், அடக்குமுறை, ஒடுக்குமுறை விசாரணை போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர். கொலைகார சர்வாதிகாரிகளை பாதிரிமார் ஆதரிப்பதையும் அவர்கள் கண்டிருக்கின்றனர். ஒரே மதத்தை சேர்ந்த ‘சகோதரர்கள்’ ஒருவரையொருவர் கோடிக்கணக்கில் கொன்று குவிப்பதையும் அவர்கள் பார்த்திருக்கின்றனர். இந்த யுத்தங்களில் பாதிரிமார் இரண்டு பக்கங்களையும் ஆதரிப்பதை நேராக கண்டிருக்கின்றனர். ஆகவே, அந்த மதங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் கடவுளைப் பற்றி சிந்திக்க அவர்கள் விரும்புவதே கிடையாது. பைபிளுக்கு புறம்பான, அர்த்தமற்ற போதனைகள் இந்தப் பிளவை இன்னும் அதிகமாக்குகின்றன. நித்திய நரக வேதனை, அதாவது எரியும் நரக அக்கினியில் கடவுள் மனிதர்களை நித்திய காலத்திற்கும் வதைப்பார் போன்ற கருத்துகள் நியாயமாய் சிந்திப்பவர்களுக்கு வெறுக்கத்தக்கவையாய் தோன்றுகின்றன.

12மதங்களின் இப்படிப்பட்ட போதனைகளாலும் செயல்களாலும் நியாயமாய் சிந்திப்பவர்கள் மட்டுமல்ல கடவுள்தாமே வெறுப்படைகிறார் என பைபிளின் அத்தாட்சி காட்டுகிறது. சில மதத் தலைவர்களின் மாய்மாலத்தைப் பைபிள் வெளிப்படையாகவே கண்டிக்கிறது. உதாரணமாக அவர்களைப் பற்றி, “நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்” என அது கூறுகிறது. (மத்தேயு 23:28) அவர்களுடைய மதத் தலைவர்கள் ‘குருட்டு வழிகாட்டிகள்,’ கடவுளிடமிருந்து வருவதை அல்ல மாறாக, “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதி”க்கிறார்கள் என இயேசு பொதுமக்களிடம் கூறினார். (மத்தேயு 15:9, 14) அதைப்போலவே, ‘தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணி, கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிற’ மதவாதிகளை பைபிள் கண்டனம் செய்கிறது. (தீத்து 1:16) ஆகவே, மாய்மாலத்தையும் இரத்தம் சிந்துதலையும் ஊக்குவிக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடும் மதங்கள் உரிமைபாராட்டுவது போல் அவை கடவுளிடமிருந்து தோன்றியவையும் அல்ல, அவரைப் பிரதிநிதித்துவம் செய்பவையும் அல்ல. மாறாக, அவற்றை சேர்ந்தவர்கள் ‘கள்ளத் தீர்க்கதரிசிகள்’ என்று அழைக்கப்பட்டு, “கெட்ட கனிகளைக்” கொடுக்கும் மரங்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்.​—மத்தேயு 7:15-20; யோவான் 8:44; 13:35; 1 யோவான் 3:10-12.

13அதுமட்டுமா, அநேக மதங்கள் பரிணாமத்திற்கு முழுமையாய் இணங்கிவிட்டதால், அவற்றைச் சேர்ந்தவர்களுக்கு வேறு எந்தத் தெரிவையும் விட்டுவைப்பதில்லை. உதாரணமாக, “மனித சரீரத்தின் பரிணாமம் உட்பட பரிணாமமே, ஆரம்பம் பற்றிய மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவியல்பூர்வ விளக்கமாக தோன்றுகிறது”13 என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. வத்திகனில் கூடிய கத்தோலிக்க சர்ச்சின் மிகவும் உயர்ந்த அறிவியல் அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்த 12 வல்லுனர்கள் பின்வரும் முடிவையே ஏற்றுக்கொண்டனர்: “மனிதனும் மற்ற குரங்குகளும் பரிணாமத்தின் விளைவாகவே தோன்றின என்ற கருத்தைப் பேரளவான அத்தாட்சிகள் ஆதரிப்பதைப் பற்றி எந்தச் சர்ச்சையும் இல்லை என்றே நாங்கள் நம்புகிறோம்.”14 மதங்களே பரிணாமத்தை இவ்விதமாக ஆதரிக்கையில் ஒன்றுமறியாத சர்ச் அங்கத்தினர்கள் அதை எதிர்ப்பார்களா? “பேரளவான அத்தாட்சிகள்” பரிணாமத்தை அல்ல உண்மையில் படைப்பையே ஆதரித்தாலும்கூட அவர்கள் அதை எதிர்க்க துணிவார்களா என்ன?

14இதனால் ஏற்படும் சூனியத்தை நாத்திகமும் கடவுளை அறிய முடியாது என்ற கொள்கையுமே அடிக்கடி நிரப்புகின்றன. கடவுளில் நம்பிக்கையை இழந்த மக்கள் அதற்கு மாற்றீடாக பரிணாமத்தை ஏற்கின்றனர். இன்று, பரிணாமத்தை ஆதாரமாக கொண்ட நாத்திகம் அநேக நாடுகளில் அதிகாரப்பூர்வ அரசாங்க கொள்கையாகவும் உள்ளதே! இன்று அவநம்பிக்கை பேரளவில் நிலவுவதற்கு இந்த உலக மதங்களே பொறுப்பாளிகள்.

15அதுமட்டுமல்ல, சில மதக் கோட்பாடுகள் காரணமாக, அறிவியல் உண்மைகளுக்கு எதிரானவற்றை பைபிள் போதிக்கிறதென மக்கள் நம்புகின்றனர்; அதனால் பைபிளின் கடவுளை நிராகரித்துவிடுகின்றனர். இதற்கு ஓர் உதாரணத்தை முந்தைய அதிகாரத்திலேயே படித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதாவது, இந்தப் பூமி 24 மணிநேரத்தைக் கொண்ட சொல்லர்த்தமான 6 நாட்களில் படைக்கப்பட்டு இப்போது 6,000 வருடங்கள்தான் ஆகின்றன என்று பைபிள் கூறுவதாக நம்பப்படும் தவறான கருத்தே அது. ஆனால் இப்படிப்பட்ட காரியங்களைப் பைபிள் போதிப்பதில்லை என்பதே உண்மை.

‘பார்த்தால்தான் நம்புவோம்’

16‘பார்த்தால்தான் நம்ப முடியும்’ என்பதே சில ஆட்களின் தத்துவமாக இருப்பதால், சிருஷ்டிகர் இருப்பதை நம்ப மறுப்பதற்கு நல்ல காரணங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏதோ ஒன்றைப் பார்க்க முடியவில்லை அல்லது ஏதாவது விதத்தில் அதை அளவிட முடியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்றே முடிவுகட்டிவிடுகின்றனர். ஆனால், அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியாத அநேக காரியங்கள் உண்மையில் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கின்றனர் அல்லவா? உதாரணமாக, மின்சாரம், காந்தவிசை, ரேடியோ அல்லது டிவி அலைகள், புவியீர்ப்பு போன்றவை. ஆனாலும் இவற்றை எல்லாம் ஏதாவதொரு இயற்பியல் முறையில் அளவிட அல்லது உணர முடியும் என்பதால் இது அவர்களுடைய எண்ணத்தை மாற்றிவிடுவதில்லை. ஆனால் கடவுளை அல்லது சிருஷ்டிகரை பார்க்கவோ அளவிடவோ எந்தவிதமான இயற்பியல் வழியும் கிடையாதே!

17காணக்கூடாத சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதை முந்தைய அதிகாரங்களில் பார்த்துவிட்டோம். ஏனென்றால் அவருடைய கைவேலையின் விளைவுகளை அல்லது அத்தாட்சிகளை நம் கண்களால் பார்க்க முடிகிறது. அணு அமைப்பின் துல்லியமான தொழில்நுட்பம் மற்றும் கடுஞ்சிக்கல், அபாரமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இப்பிரபஞ்சம், தனிச்சிறப்பு வாய்ந்த கிரகமாகிய இப்பூமி, உயிரினங்களின் வியக்கத்தக்க வடிவமைப்புகள், மனிதனின் அற்புதமான மூளை போன்றவற்றில் இதைத் தெளிவாக பார்க்கிறோம். இவை விளைவு என்பதால் இவற்றிற்கு அடிப்படைக் காரணமும் நிச்சயம் இருக்க வேண்டும். பொருளாதார சிந்தையுள்ளவர்கள்கூட மற்ற எல்லா விஷயங்களிலும் காரணமும் விளைவும் பற்றிய இந்த நியமத்தை ஏற்கின்றனர். அப்படியென்றால் சடப்பொருளான பிரபஞ்சத்தைப் பற்றியதிலும் இதே நியமத்தை ஏன் பொருத்தக்கூடாது?

18இந்த விஷயத்தில் பைபிளின் எளிமையான குறிப்பு மிகவும் அருமையாக உள்ளது: ‘[சிருஷ்டிகருடைய] காணப்படாதவைகளாகிய நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படும்.’ (ரோமர் 1:20, தி.மொ.) வேறு வார்த்தைகளில் சொன்னால், விளைவு உண்டெனில் காரணமும் உண்டென பைபிள் நியாயப்படுத்திப் பேசுகிறது. காணக்கூடிய சிருஷ்டிப்பாகிய பிரமிப்பூட்டும் ‘படைப்பு’ புத்திக்கூர்மையுள்ள காரணத்திற்கான தெளிவான விளைவாகும். காணக்கூடாத அந்தக் காரணம் கடவுளே. மேலுமாக, இப்பிரபஞ்சம் முழுவதையும் படைத்த சிருஷ்டிகர் எல்லையற்ற சக்தி படைத்தவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க மாம்சமும் இரத்தமும் உள்ள மனிதர்கள் கடவுளைக் கண்டு உயிரோடிருக்க முடியும் என கற்பனை செய்யக்கூடுமா? “ஒரு மனுஷனும் [கடவுளைக்] கண்டு உயிரோடிருக்க முடியாது” என பைபிள் கூறுவது எவ்வளவு உண்மை!​—யாத்திராகமம் 33:20, NW.

அவநம்பிக்கைக்கான மற்றொரு முக்கிய காரணம்

19அநேக மக்கள் கடவுளில் நம்பிக்கையை கைவிட்டு பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. துன்பம் பரவலாக காணப்படுவதே அந்தக் காரணம். பல நூற்றாண்டுகளாக அநீதி, ஒடுக்குதல், குற்றச்செயல், யுத்தம், வியாதி, மரணம் போன்றவை மனிதனைப் பீடித்துள்ளன. இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஏன் மனிதனுக்கு வந்தன என்று அநேகரால் புரிந்துகொள்ள முடியவில்லை. சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருந்தால் இவற்றை எல்லாம் அனுமதித்திருக்க மாட்டார் என அவர்கள் கருதுகின்றனர்; இந்தக் கஷ்டங்கள் நிலவுவதால் கடவுள் இல்லை என அவர்கள் முடிவுகட்டிவிடுகின்றனர். ஆகவே, வேறுவழியின்றி பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அதுவும் அதிகமான ஆராய்ச்சி செய்யாமலேயே ஏற்கின்றனர்.

20அப்படியென்றால், சர்வ சக்திபடைத்த சிருஷ்டிகர் ஏன் இவ்வளவு அதிக துன்பத்தை அனுமதிக்கிறார்? இது எப்பொழுதும் இப்படியேதான் இருக்குமா? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனென்றால், பரிணாமம் நம் நாட்களில் மிக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதற்கு ஆழமான, அடிப்படையான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவும்.

[கேள்விகள்]

1, 2. அநேகர் பரிணாமத்தை நம்புவதற்கு ஒரு காரணம் என்ன?

3. பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளும்படி சிலர் மீது அது எவ்வாறு திணிக்கப்படுகிறது?

4. அதிகாரத்திலுள்ளோரின் செல்வாக்கு எவ்வாறு பரிணாமத்திற்கு ஆதரவாக உள்ளது?

5. (அ) விஞ்ஞானிகள் தங்கள் அதிகாரத்தின் செல்வாக்கை எவ்வாறு உபயோகிக்கின்றனர் என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது? (ஆ) இப்படிப்பட்ட கூற்றுகள் ஏன் தவறானவை?

6. பரிணாமவாதிகளின் பிடிவாதக் கருத்து, அங்கீகரிக்கப்பட்ட அறிவியல்பூர்வ முறைக்கு எவ்வாறு முரணாக உள்ளது?

7. விஞ்ஞானிகள் எப்போதுமே உண்மைகள் அடிப்படையில் முடிவு எடுக்காததற்கு காரணம் என்ன?

8. ஒட்டுமொத்தமாக பரிணாம நம்பிக்கையை ஆதரிப்பதைப் பற்றி டபிள்யூ. ஆர். தாம்ஸன் ஏன் வருத்தப்பட்டார்?

9. பரிணாமம் பற்றிய விமர்சனத்திற்கு விஞ்ஞானிகள் இடமளிக்காததைப் பற்றி தாம்ஸன் என்ன கூறினார்?

10. பரிணாமம் ஓர் “உண்மை” என விஞ்ஞானிகளில் அநேகர் ஏற்றுக்கொள்ள காரணம் என்ன?

11. மதத்தின் தோல்வி, பரிணாமம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எவ்வாறு வழிநடத்தியிருக்கிறது?

12. இந்த உலகத்தின் மதங்கள் தோல்வியடைந்திருப்பது உண்மையில் எதைக் காட்டுகிறது?

13. மதத்தில் வழிகாட்டுதல் இல்லை என்பது எவ்வாறு தெளிவாக உள்ளது?

14. பொய் மதத்தால் ஏற்படும் சூனியம் அடிக்கடி எவ்வாறு நிரப்பப்படுகிறது?

15. மற்ற என்ன தவறான மதக் கருத்துகள் கடவுளிலும் பைபிளிலும் நம்பிக்கை வைப்பதைக் கடினமாக்குகின்றன?

16. சில ஆட்கள் ஏன் சிருஷ்டிகரை நம்ப மறுக்கின்றனர்?

17, 18. (அ) நாம் காணக்கூடிய என்ன அத்தாட்சி காணக்கூடாத சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை நிரூபிக்கிறது? (ஆ) கடவுளைப் பார்க்க வேண்டும் என நாம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?

19. அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதற்கான மற்றொரு முக்கிய காரணம் என்ன?

20. எந்தக் கேள்விகளுக்கு விடை தேவை?

[பக்கம் 179-ன் சிறு குறிப்பு]

எதிரிடையான வாதங்களை மாணவர்கள் கேள்விப்படுவதே இல்லை

[பக்கம் 180-ன் சிறு குறிப்பு]

பரிணாம போதகம் அறிவியலிலும் மற்ற துறைகளிலும் ஊடுருவியுள்ளது

[பக்கம் 180-ன் சிறு குறிப்பு]

படிப்பறிவு இல்லாதவர்களே பரிணாமத்தை நம்ப மறுப்பர் என அநேக போதனையாளர்களும் விஞ்ஞானிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறுகின்றனர்

[பக்கம் 182-ன் சிறு குறிப்பு]

“ஆராய்ச்சிக்கு முன்பு நம்பிக்கை வைக்கும் முந்திரிக் கொட்டைத்தனத்தை [பரிணாம] அறிவியலில் காண முடிகிறது”

[பக்கம் 182-ன் சிறு குறிப்பு]

“எந்த உண்மைகளிலும் விளக்கங்களிலும் டார்வின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தாரோ அவை இப்போது நம்பிக்கையளிக்க தவறுகின்றன”

[பக்கம் 183-ன் சிறு குறிப்பு]

“விமர்சனத்திற்கு இடமளிக்கா[தது] . . . அறிவியலில் . . . இயற்கைக்கு அப்பாற்பட்டதும் விரும்பப்படாததும் ஆகும்”

[பக்கம் 185-ன் சிறு குறிப்பு]

மத தவறுகளால் ஏற்படும் சூனியம், பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில் விளைவடைகிறது

[பக்கம் 187-ன் சிறு குறிப்பு]

இன்று துன்பம் நிலவுவதால் அநேகர் கடவுள் நம்பிக்கை இழந்து பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றனர்

[பக்கம் 181-ன் படங்கள்]

பூமி சூரியனைச் சுற்றிவருவதைப் பற்றியோ, ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து தண்ணீர் உருவாவதைப் பற்றியோ, புவியீர்ப்பு இருப்பதைப் பற்றியோ விவாதங்கள் இன்னமும் நிகழ்கின்றனவா என்ன?

கோளப்பாதை

தண்ணீர்

புவியீர்ப்பு

[பக்கம் 184-ன் படம்]

பாதிரிமார்கள் யுத்தத்தில் இரண்டு பக்கங்களையும் ஆதரிப்பது, சகிப்புத்தன்மை இல்லாதது, நரக அக்கினி போன்ற பொய் போதகங்கள் ஆகியவை அநேகரை விரட்டியடித்துள்ளன

[பக்கம் 186-ன் படங்கள்]

‘உண்டாக்கப்பட்டவைகளே’ சிருஷ்டிகர் இருப்பதை நிரூபிக்கின்றன