Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆதியாகமம் கூறுவதென்ன?

ஆதியாகமம் கூறுவதென்ன?

அதிகாரம் 3

ஆதியாகமம் கூறுவதென்ன?

தவறாக எடுத்துரைக்கப்பட்ட அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விஷயத்தைத் திறந்த மனதோடு கேட்க வேண்டும். அதைப் போலவே பைபிளின் முதல் அதிகாரத்தையும் திறந்த மனதோடு ஆராய்வது அவசியம். இதன் நோக்கம், ஏதாவதொரு கோட்பாட்டை ஆதரிப்பதற்காக விஷயங்களை திரித்துக் கூறுவதற்கு அல்ல. மாறாக பிரபலமான சான்றுகளோடு அது ஒத்துப்போகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கே. படைப்பு “எப்படி” நிகழ்ந்தது என்பதை விளக்குவதற்காக ஆதியாகமம் எழுதப்படவில்லை என்பதையும் நினைவில் வையுங்கள். மாறாக, முக்கியமான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கூறி, என்னென்ன உருவாக்கப்பட்டன, எந்த வரிசையில் உருவாக்கப்பட்டன, முதன்முறையாக ஒவ்வொன்றும் தோன்றியதற்கு முன்பு எவ்வளவு காலம் அல்லது “நாள்” எடுத்தது என்பதையே அப்பதிவு விவரிக்கிறது.

2ஆதியாகம விவரப்பதிவை ஆராய்கையில், பூமியிலுள்ள மக்களின் நோக்குநிலையிலிருந்து அது விஷயங்களை எடுத்துரைக்கிறது என்பதை மனதில் வைத்திருப்பது நல்லது. ஆகவே, அந்தச் சமயத்தில் பூமியில் மக்கள் இருந்திருந்தால் அவர்கள் அந்நிகழ்ச்சிகளை எப்படி பார்த்திருப்பார்களோ அப்படியே விவரிக்கிறது. படைப்பின் நான்காம் ‘நாளில்’ நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் விதத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, நட்சத்திரங்களோடு ஒப்பிடுகையில் சூரியனும் சந்திரனும் பெரியவை என விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நம்முடைய சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள் அநேகம் உள்ளன, அப்படியிருக்க அவற்றோடு ஒப்பிடுகையில் சந்திரன் எந்த மூலைக்கு? பூமியிலிருக்கும் ஒருவருக்கோ அவ்வாறு தோன்றுவதில்லை. ஆகவே பூமியிலிருந்து பார்த்தால், சூரியனே ‘பகலை ஆளும் பெரிய சுடர்’ போலவும், சந்திரனே ‘இரவை ஆளும் சிறிய சுடர்’ போலவும் தோன்றுகின்றன.​—ஆதியாகமம் 1:14-18.

3ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்ட முதல் ‘நாளுக்கு’ முன்பே கோடானுகோடி வருடங்களாக பூமி இருந்திருக்கலாம் என ஆதியாகமத்தின் முதல் பகுதி சுட்டிக்காட்டுகிறது, என்றாலும் எவ்வளவு காலம் என அது சொல்வதில்லை. ஆனால் அந்த முதல் ‘நாளுக்கு’ முன்பு பூமியின் நிலை எப்படி இருந்ததென பின்வருமாறு விவரிக்கிறது: “பூமி உருவமற்று வெறுமையாயிருந்தது, ஆழத்தின்மேலே இருள் இருந்தது; கடவுளின் ஆவியோ தண்ணீர்மீது அசைவாடிக்கொண்டிருந்தது.”​—ஆதியாகமம் 1:2, திருத்திய மொழிபெயர்ப்பு.

ஆதியாகமத்தில் ஒரு “நாள்” எவ்வளவு நீண்ட காலம்?

4ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் உள்ள “நாள்” என்ற வார்த்தை 24 மணிநேரத்தையே குறிக்கிறதென அநேகர் நினைக்கின்றனர். ஆனால், ஆதியாகமம் 1:5-⁠ல் கடவுள் தாமே ஒரு நாளை சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளிச்சம் உள்ள காலப்பகுதியை மாத்திரம் “பகல்” என்று அழைக்கிறார். ஆதியாகமம் 2:4-⁠ல் படைப்பின் காலப்பகுதிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரு “நாள்” என்று அழைக்கப்படுகின்றன: ‘தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே [ஆறு படைப்பின் காலப்பகுதிகளும் ஒட்டுமொத்தமாக], வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.’

5“நாள்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை யோம் (yohm). இது வெவ்வேறு கால அளவுகளை குறிக்கும். இவ்வார்த்தையில் புதைந்துள்ள அநேக அர்த்தங்களில் சிலவற்றை வில்லியம் வில்சனின் பழைய ஏற்பாட்டு வார்த்தை ஆராய்ச்சிகள் (Old Testament Word Studies) பின்வருமாறு பட்டியலிடுகிறது: “ஒரு நாள்; பொதுவாக காலத்தை அல்லது நீண்ட காலப்பகுதியைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது; சிந்திக்கப்படும் முழு காலப்பகுதியையும் குறிக்கும் . . . நாள் என்பது ஏதாவது அசாதாரண நிகழ்ச்சி நடந்த ஒரு பருவத்தை அல்லது ஒரு காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.”1 இந்தக் கடைசி வாக்கியமே படைப்பின் ‘நாட்களுக்கு’ பொருந்துவதாக தோன்றுகிறது. ஏனென்றால் அந்தக் காலப்பகுதியில்தானே அசாதாரண நிகழ்ச்சிகள் நடந்ததாக விவரிக்கப்படுகின்றன! இது, 24 மணிநேரத்தைவிட அதிக நீண்ட காலப்பகுதிகளையும் குறிக்கலாம்.

6ஆதியாகமம் முதல் அதிகாரம், படைப்பின் காலப்பகுதியை ‘சாயங்காலம்,’ ‘விடியற்காலை’ என்று பிரித்து கூறுகிறது. அப்படியென்றால், இது 24 மணிநேரத்தை மட்டுமே சுட்டிக்காட்டுகிறதா? அவசியம் இல்லை. சில இடங்களிலுள்ள மக்கள் ஒரு மனிதனின் வாழ்நாளை அவனுடைய “நாள்” என்பதாக அடிக்கடி சொல்கிறார்கள். “என்னுடைய அப்பாவின் வாழ்நாளில்” அல்லது “ஷேக்ஸ்பியரின் நாளில்” என்றெல்லாம் பேசுகிறார்கள். “அவருடைய வாழ்வின் விடியலில்” அல்லது “அவருடைய அந்திம காலம்” என்றும்கூட அந்த ஆயுட்கால ‘நாளை’ பிரிக்கிறார்கள். ஆகவே ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் ‘சாயங்காலம்,’ ‘விடியற்காலை’ என்று சொல்லப்பட்டிருப்பதால் அது வெறும் 24 மணிநேரத்தை குறிக்க வேண்டியதில்லை.

7பைபிளில் “நாள்” என்பது கோடைக்காலத்தையும், பனிக்காலத்தையும், மாறிவரும் பருவங்களையும்கூட குறிக்கிறது. (சகரியா 14:8) ‘அறுப்பின் நாள்’ என்பது பல நாட்கள் அடங்கியது. (நீதிமொழிகள் 25:13, NW-ஐயும் ஆதியாகமம் 30:14-ஐயும் ஒப்பிடுக.) ஆயிரம் வருடங்கள் ஒரு நாளுக்கு ஒப்பிடப்படுகின்றன. (சங்கீதம் 90:4; 2 பேதுரு 3:8, 10) “நியாயத்தீர்ப்புநாளில்” அநேக வருடங்கள் அடங்கியுள்ளன. (மத்தேயு 10:15; 11:22-24) அதேபோல, ஆதியாகமம் குறிப்பிடும் ‘நாட்களில்’ நீண்ட காலப்பகுதிகள், ஒருவேளை ஆயிரக்கணக்கான வருடங்கள் அடங்கியிருக்கலாம் என்பதும் பொருத்தமானதே. அப்படியென்றால், அந்தப் படைப்பு சகாப்தங்களின்போது என்னவெல்லாம் நடந்தன? அவற்றைப் பற்றி பைபிள் தரும் விவரப்பதிவு அறிவியல்பூர்வமானதா? ஆதியாகமத்தில் உள்ளபடி அந்த “நாட்கள்” பற்றிய மறு ஆய்வு பின்தொடர்கிறது.

முதல் “நாள்”

8“வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.”​—ஆதியாகமம் 1:3, 5.

9முதலாம் ‘நாளுக்கு’ வெகு முன்னரே சூரியனும், சந்திரனும் விண்வெளியில் இருந்தது உண்மையே. ஆனால் பூமியிலிருக்கும் ஒருவருக்கு தென்படும் அளவுக்கு அவற்றின் வெளிச்சம் பூமியை எட்டவில்லை. இப்போது முதலாம் ‘நாளில்’ வெளிச்சம் பூமியில் தெரிய ஆரம்பித்திருக்கும்; பூமி சுழன்றதால் இரவும் பகலும் மாறி மாறி வந்திருக்கும்.

10இந்த வெளிச்சம் சுவிட்சை போட்டதும் விளக்கு எரிவதைப்போல உடனே வந்திருக்காது; கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கும், இதற்கு நீண்ட காலப்பகுதி எடுத்திருக்கும். மொழிபெயர்ப்பாளர் ஜே. டபிள்யூ. உவாட்ஸ் மொழிபெயர்த்த ஆதியாகம பகுதிகூட இவ்வாறே சொல்கிறது: “கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்தது.” (எ டிஸ்டிங்க்டிவ் டிரான்ஸ்லேஷன் ஆஃப் ஜெனிஸிஸ்) இந்த வெளிச்சம் சூரியனிடமிருந்தே வந்தாலும் மேகமூட்டம் இருந்ததால் சூரியன் தென்படவில்லை. ஆகவே பூமியை வந்தடைந்த வெளிச்சம், “மங்கலான வெளிச்சமே,” இது ராதர்ஹாமின் எம்ஃபசைஸ்ட் பைபிளில் 3-⁠ம் வசனத்திற்கான குறிப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.​—⁠14-⁠ம் வசனத்தின் அடிக்குறிப்பு b-ஐக் காண்க.

இரண்டாம் “நாள்”

11“ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்.”​—ஆதியாகமம் 1:6-8.

12“ஆகாயவிரிவு” என்ற வார்த்தைக்குப் பதிலாக “விண்வளைவு” (“firmament”) என்ற வார்த்தையை சில மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ஆதியாகம விவரப்பதிவு, படைப்பு பற்றிய கட்டுக்கதைகளிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்ற விவாதம் எழுந்துள்ளது; ஏனென்றால், இந்த “விண்வளைவு” உலோகத்தால் செய்யப்பட்டதாக அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் “விண்வளைவு” என்ற வார்த்தையை உபயோகிக்கும் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிள்கூட அதன் ஓரக்குறிப்பில் “ஆகாயவிரிவு” என்று குறிப்பிடுகிறது. ஏனென்றால், “ஆகாயவிரிவு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை ராகுய்யா (raqi’a‛) என்பதன் அர்த்தம் நீட்டுதல் அல்லது பரப்புதல் அல்லது விரித்தல் என்பதாகும்.

13தண்ணீரைப் பிரிக்கும் இந்தச் செயலை கடவுள்தான் செய்தார் என்று ஆதியாகமம் சொல்கிறது, ஆனால் இதை எப்படி செய்தார் என்று சொல்லவில்லை. இது எப்படி நடந்திருந்தாலும், ‘மேலே இருக்கிற ஜலத்தை’ பூமியிலிருந்து மேல் நோக்கி தள்ளிவிட்டதைப்போல காட்சியளித்திருக்கும். அதன்பிறகு, ஆதியாகமம் 1:20 சொல்வது போல “வானம் என்கிற ஆகாயவிரிவிலே” பறவைகள் பறக்க முடிந்திருக்கும்.

மூன்றாம் “நாள்”

14“வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்.” (ஆதியாகமம் 1:9, 10) வழக்கம்போல இதுவும் எப்படி நடந்தது என்று விவரப்பதிவு சொல்வதில்லை. நிலப்பகுதிகள் தோன்றினபோது பூமியில் பயங்கரமான அசைவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வாறு பிரமாண்டமான அளவில் நில எழுச்சி ஏற்படுவதை புவி சீற்றம் (catastrophism) என புவியியல் வல்லுநர்கள் விவரிப்பர். ஆனால், இது படைப்பாளரின் வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டில் நிகழ்ந்ததென ஆதியாகமம் சுட்டிக்காட்டுகிறது.

15யோபுவுக்கு பூமியைப் பற்றி என்ன தெரியும் என்பதை அறிய நிறைய கேள்விகளை கடவுள் அவரிடம் கேட்டதாக பைபிளில் ஒரு விவரப்பதிவு உள்ளது. அது பூமி உருவான சரித்திரத்தின் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக படைப்பு பற்றிய பொதுவான பல விஷயங்களை விவரிக்கிறது: அதன் அளவுகள், மேகக்கூட்டங்கள், கடல்கள், கடல்களுக்கு எல்லை விதிக்கும் கரை முதலியன. இவற்றைப் படைக்க நீண்டகாலம் எடுத்தது. இந்த விவரிப்பில், பூமியை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டு பின்வரும் கேள்வியை கடவுள் யோபுவிடத்தில் கேட்டதாக பைபிள் சொல்கிறது: அதன் “தூண் பாதங்கள் நிலைபெற்றது எதின் மேலோ? அதன் கோடிக்கல்லை வைத்தவர் யார்?”​—யோபு 38:6, திருத்திய மொழிபெயர்ப்பு.

16“தூண் பாதங்கள்” போன்ற புவி ஓடு (earth’s crust) கண்டங்களுக்கு அடியில் அதிக பருமனாகவும், மலைத்தொடர்களுக்கு அடியிலோ அதைவிட இன்னும் பருமனாகவும் இருப்பது அக்கறைக்குரியது. மண்ணுக்குள் மரத்தின் வேர் ஆழமாக செல்வதைப்போல் இந்தப் புவி ஓடு அதற்கு கீழேயிருக்கும் இடையடுக்கிற்குள் (mantle) ஆழமாக செல்கிறது. “மலைகளுக்கும், கண்டங்களுக்கும் வேர்கள் உள்ளன என்ற கருத்து அடிக்கடி ஆராயப்பட்டு, உண்மையே என கண்டறியப்பட்டுள்ளது” என்கிறது புட்னம்ஸ் ஜியாலஜி.2பெருங்கடலின் கீழுள்ள புவி ஓடு சுமார் 8 கிலோ மீட்டர் பருமனே உள்ளது. ஆனால் கண்டங்களின் வேர்களோ சுமார் 32 கிலோ மீட்டர் ஆழம் வரை செல்கின்றன, இவற்றைவிட மலைகளின் வேர்கள் இருமடங்கு ஆழத்திற்கு செல்கின்றன. பூமியின் எல்லா அடுக்குகளும் எல்லா பக்கங்களிலிருந்தும் பூமியின் மையத்தை நோக்கி அழுத்துவதால் அது ஒரு பெரிய ‘கோடிக்கல்’ ஆதாரம்போல் ஆகின்றது.

17ஆகவே, உலர்ந்த தரையை மேலே கொண்டுவர எத்தகைய உத்தி கையாளப்பட்டிருந்தாலும் சரி கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால்: பூமி உருவாவதில் உட்பட்டிருக்கும் படிகளில் இதுவும் ஒன்று என அறிவியலும் பைபிளும் ஒத்துக்கொள்கின்றன.

மூன்றாம் ‘நாளில்’ நிலத்தாவரங்கள்

18“‘புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்’ என்றார். அது அவ்வாறே ஆயிற்று.”​—⁠தொடக்க நூல் [ஆதியாகமம்] 1:11, பொது மொழிபெயர்ப்பு.

19இவ்வாறு, படைப்பின் மூன்றாம் காலகட்டத்தின் இறுதியில் நிலத்தாவரங்களில் மூன்று பெரும் பிரிவுகள் படைக்கப்பட்டன. இதற்குள் மங்கலாக இருந்த அந்த வெளிச்சம், பசும் தாவரங்களின் முக்கிய செயலான ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் அளவுக்கு பிரகாசமாக ஆகியிருக்கும். இந்த விவரப்பதிவு, அந்தச் சமயம் தோன்றிய ஒவ்வொரு செடியின் ‘இனத்தைப்’ பற்றியும் குறிப்பிடவில்லை. நுண்ணுயிரிகள், நீர்த் தாவரங்கள், இன்னும் பல தாவரங்கள் பற்றியும் குறிப்பாக சொல்லப்படவில்லை என்றாலும் அவை இந்த மூன்றாம் ‘நாளில்தான்’ படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நான்காம் “நாள்”

20“பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.”​—ஆதியாகமம் 1:14-16; சங்கீதம் 136:7-9.

21“வெளிச்சம் உண்டாகக்கடவது” என்ற சொற்றொடர் முதல் ‘நாளில்’ பயன்படுத்தப்பட்டது அல்லவா? அங்கு “வெளிச்சம்” என்ற வார்த்தைக்கு ஹோர் (’ohr) என்ற எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது பொதுவான கருத்தில் ஒளியைக் குறிக்கிறது. ஆனால் நான்காம் ‘நாளிலோ’ மாஹோர் (ma·’ohrʹ) என்ற வேறொரு எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது வெளிச்சத்தின் ஊற்றுமூலத்தைக் குறிக்கிறது. ராதர்ஹாமின் எம்ஃபசைஸ்ட் பைபிளில் “சுடர்கள்” என்பதற்கான அடிக்குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்: “வசனம் 3-⁠ல் ஹோர் என்பது மங்கலான வெளிச்சம்.” பிறகு வசனம் 14-⁠ல் மாஹோர் என்ற எபிரெய வார்த்தையைச் சுட்டிக்காட்டி, இதன் அர்த்தம் “ஒளியைத் தரும்” ஒன்று என கூறுகிறார். ஆகவே, முதல் ‘நாளில்’ பூமியைச் சுற்றியிருந்த மேகக் கூட்டங்களை எல்லாம் ஊடுருவி வந்த வெளிச்சம் மங்கலாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வெளிச்சத்தை கொடுத்த ஊற்றுமூலத்தை அப்போது பூமியில் இருந்த ஒருவரால் பார்த்திருக்க முடியாது; ஏனென்றால் பூமியைச் சுற்றி அடுக்கடுக்காக மேகக்கூட்டங்கள் இருந்தன. இந்த நான்காம் ‘நாளிலோ’ நிலைமைகள் மாறிவிட்டதென தோன்றுகிறது.

22ஆரம்பத்தில், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்திருந்ததால் பூமியின் வெப்பநிலை மிகவும் சூடாக இருந்திருக்கும். சூட்டைத் தக்க வைத்துக்கொள்ளும் போர்வையான கார்பன்-டை-ஆக்ஸைடில் கொஞ்சத்தை மூன்றாம், நான்காம் படைப்பு காலப்பகுதிகளில் செழித்து வளர்ந்த தாவரங்கள் உள்ளிழுத்துக்கொண்டன. இதற்கு பதிலாக மிருகங்கள் உயிர்வாழ தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் வெளிவிட்டன.

23இந்தச் சமயம் பூமியில் ஒருவர் இருந்திருந்தால், ‘அடையாளங்களையும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்க’ உதவிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை அவரால் பார்த்திருக்க முடியும். (ஆதியாகமம் 1:14) சந்திர மாதங்கள் கடந்துசெல்வதை சந்திரனும், சூரிய வருடங்கள் உருண்டோடுவதை சூரியனும் சுட்டிக்காட்டும். நான்காம் ‘நாளின்’ பருவகாலங்கள், பிற்காலத்தில் வந்த பருவகாலங்களைக் காட்டிலும் மிதமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.​—ஆதியாகமம் 1:15; 8:20-22.

ஐந்தாம் “நாள்”

24“‘திரள்திரளான ஜீவ ஆத்துமாக்கள் தண்ணீரிலே பலுகியிருக்க, பறவைகள் பூமியின் மேல் ஆகாயமண்டலமாகிய வானத்தின்கீழ் பறந்து திரிவதாக’ என்று கடவுள் சொன்னார். இராட்சத கடல் உயிரிகளையும் தண்ணீரிலே திரளாய்ப் பலுகித் திரியும் சகலவித ஜீவ ஆத்துமாக்களையும் இறகுள்ள பறவைகள் யாவற்றையும் அதனதன் இனத்தின்படியே கடவுள் படைத்தார்.”​—ஆதியாகமம் 1:20, 21, NW.

25மனிதன் மட்டுமல்ல நீர்வாழ் உயிரினங்களும் “ஜீவ ஆத்துமாக்கள்” என்று அழைக்கப்படுவது ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாகும். இந்தச் சொல், ‘பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளுக்கும்’ பொருந்தும். இவ்வார்த்தை இராட்சத கடல் உயிரினங்களையும்​—⁠இவற்றின் புதைப்படிவங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்​—⁠ஆகாயத்திலுள்ள உயிரினங்களையும் உள்ளடக்கும்.

ஆறாம் “நாள்”

26“‘பூமியானது ஜீவ ஆத்துமாக்களாகிய வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், காட்டு மிருகங்கள் என்று அதனதன் இனத்தின்படியே பிறப்பிப்பதாக’ என்றார். அது அப்படியே உண்டானது.”​—⁠ஆதியாகமம் 1:24, NW.

27இவ்வாறாக, ஆறாம் ‘நாளில்’ நிலத்தில் வாழும் மிருகங்களாகிய காட்டு மிருகங்களும் வீட்டு விலங்குகளும் தோன்றின. ஆனால், இந்த “நாள்” இன்னும் முடியவில்லை. மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் “இனம்” கடைசியாக வரவிருந்தது:

28“பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”​—ஆதியாகமம் 1:26, 27.

29ஆதியாகமத்தின் 2-⁠ம் அதிகாரம் கூடுதலான விவரங்களைக் கொடுக்கிறது. ஆனால் சிலர் நினைப்பதுபோல் இது, முதல் அதிகாரத்தில் உள்ள படைப்பு பற்றிய விவரங்களோடு முரண்படும் மற்றொரு விவரப்பதிவு அல்ல. மாறாக, அது நம்மை நேரடியாக மூன்றாம் ‘நாளுக்கு,’ அதாவது உலர்ந்த தரை தோன்றிவிட்ட பிறகு ஆனால் நிலத்தாவரங்கள் தோன்றுவதற்கு முன்னான காலப்பகுதிக்கு அழைத்துச்செல்கிறது. மனித இனத்தின் வரவிற்கு தேவைப்பட்ட விவரங்களை, அதாவது ஜீவ ஆத்துமாவாகிய ஆதாம், அவனது தோட்ட வீடாகிய ஏதேன், அவனுடைய மனைவி ஏவாள் போன்ற கூடுதலான விவரங்களை அது அளிக்கிறது.​—ஆதியாகமம் 2:5-9, 15-18, 21, 22.

30ஆதியாகமம் சொல்வதைப் புரிந்துகொள்வதற்காகவே மேற்கண்ட விவரங்களைக் கொடுத்தோம். இத்தகைய யதார்த்தமான விவரப்பதிவிலிருந்தே, படைப்பு செயல் வெறும் 144 மணிநேரம் (6 ×24) அல்ல, ஆனால் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்தது என்பது தெளிவாக இல்லையா?

ஆதியாகம எழுத்தாளருக்கு எப்படி தெரியும்?

31படைப்பின் இந்த விவரப்பதிவை பலரால் ஏற்றக்கொள்ள முடிவதில்லை. இது படைப்பு பற்றிய அந்தக் கால மக்களின், அதிலும் பண்டைய பாபிலோனிய மக்களின் புராணக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதே அவர்களின் விவாதம். ஆனால், சமீபத்தில் வெளிவந்த பைபிள் அகராதி ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “பிரபஞ்சத்தின் படைப்பு பற்றி விலாவாரியாக விவரிக்கும் எந்தவொரு புராணக்கதையும் இதுவரை கிடைக்கவில்லை.” புராணக்கதைகள் “பல தெய்வ வழிபாட்டு முறையையும், அந்தத் தெய்வங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஓயாமல் சண்டைப்போடுவதையும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக [ஆதியாகமம்] 1, 2-⁠ல் எபிரெயர்களின் ஒரே-தெய்வ வழிபாட்டு முறையே குறிப்பிடப்பட்டுள்ளது.”3 படைப்பு பற்றிய பாபிலோனியர்களின் புராணக்கதைகளைக் குறித்து பிரிட்டிஷ் மியூஸியத்தின் அறக்கட்டளை குழுவினர் இவ்வாறு கூறினர்: “அடிப்படையில் பாபிலோனியர்களின் விவரப்பதிவும் எபிரெயர்களின் விவரப்பதிவும் முற்றிலும் வேறுபடுகின்றன.”4

32நாம் இதுவரை சிந்தித்தவற்றிலிருந்து, ஆதியாகம விவரப்பதிவு அறிவியல் ரீதியில் நம்பகமான ஒன்று என்பது தெளிவாக உள்ளது. அது, பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பெரும் பிரிவுகள் ‘அதனதன் இனத்தின்படி’ மாத்திரமே இனப்பெருக்கம் செய்யும் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த உண்மையைப் புதைப்படிவ சான்றும் ஊர்ஜிதம் செய்கிறது. உண்மையில், ஒவ்வொரு ‘இனமும்’ திடீரென்று தோன்றியதையே அது நிரூபிக்கிறது. முன்பிருந்த ஓர் ‘இனத்தோடு’ தொடர்புபடுத்தும் இடைப்பட்ட வகைகள் (transitional forms) பரிணாமத்திற்கு தேவை. ஆனால் அப்படிப்பட்ட எதுவுமில்லை என்பதையே புதைப்படிவம் சுட்டிக்காட்டுகிறது.

33எகிப்திலுள்ள அனைத்து ஞானிகள் ஒன்று சேர்ந்தாலும்கூட ஆதியாகமத்தை எழுதிய மோசேக்கு படைப்பின் செயல்கள் பற்றி ஒரு சிறிய துப்புகூட கொடுத்திருக்க முடியாது. ஏனென்றால், ஆதியாகமத்தில் மோசே எழுதிய விஷயங்களுக்கும் பண்டைய மக்கள் மத்தியில் நிலவிய படைப்பின் புராணக்கதைகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை. அப்படியென்றால் படைப்பின் விவரங்களை மோசே எங்கிருந்து கற்றுக்கொண்டார்? அப்போது அங்கிருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.

34ஆதியாகமத்தின் படைப்பு விவரங்கள் அனைத்தையும் நன்றாக அறிந்திருந்த ஒருவரே அதை கொடுத்திருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வண்ணமாக, நிகழ்தகவு (mathematical probability) என்ற கணித அறிவியல் முறை ஒரு முக்கிய சான்றளிக்கிறது. ஆதியாகம விவரப்பதிவு 10 முக்கிய படிகளைப் பின்வரும் வரிசையில் பட்டியலிடுகிறது: (1ஒரு தொடக்கம்; (2அடர்ந்த வாயுக்களாலும் தண்ணீராலும் சூழப்பட்ட, இருள் கவ்விய கரடுமுரடான பூமி; (3வெளிச்சம்; (4ஆகாயவிரிவு அல்லது வளிமண்டலம்; (5பெரும் பரப்பளவுகளில் வெட்டாந்தரை; (6நிலத்தாவரங்கள்; (7ஆகாயவிரிவில் சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் கண்ணுக்குத் தென்படுதல், பருவகாலங்களின் தொடக்கம்; (8இராட்சத கடல் உயிரினங்களும், பறவைகளும்; (9வீட்டு விலங்குகளும் காட்டு மிருகங்களும், பாலூட்டிகளும்; (10மனிதன். இந்த நிகழ்ச்சிகள் பொதுவாக இதே வரிசையில்தான் நிகழ்ந்தன என்று அறிவியல் ஒத்துக்கொள்கிறது. ஆனால் ஆதியாகமத்தை எழுதியவர் இந்த வரிசையை தானே ஊகித்து எழுத எத்தனை வாய்ப்புகள் உள்ளன தெரியுமா? ஒரு பெட்டியில் 1 முதல் 10 எண்களை போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு ஆனால் சரியான வரிசையில் அந்த எண்களை எடுத்துவைக்க முயற்சிப்பதைப் போலத்தான் உள்ளது. முதல் முயற்சியிலேயே இதை வெற்றிகரமாக செய்துமுடிக்க இருக்கும் வாய்ப்புகள் 36,28,800-⁠க்கு ஒன்று! ஆகவே, உண்மைகளை யாரும் தெரிவிக்காமல் எழுத்தாளரே தன் கற்பனைக்கு எட்டியபடி மேற்கண்ட சம்பவங்களை சரியாக வரிசைப்படுத்திவிட்டார் என்று சொல்வது கொஞ்சம்கூட யதார்த்தமாக இல்லை.

35உண்மைகளை அறிந்து, அவற்றை மனிதர்களுக்கு தெரிவித்த படைப்பாளர் ஒருவர் அப்போது இருந்தார் என்பதை பரிணாமக் கொள்கை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, உயிரற்ற இரசாயனங்களிலிருந்து தானாகவே உயிர் தோன்றியதால்தான் பூமியில் உயிரினம் வந்தது என அது கூறுகிறது. ஆனால், வழிநடத்துதல் எதுவுமின்றி தற்செயலாக நிகழும் இரசாயன மாற்றங்களால் உயிரை உருவாக்க முடியுமா? இவ்வாறு நிகழக்கூடும் என்பதில் விஞ்ஞானிகளுக்கு பூரண நம்பிக்கை உள்ளதா? தயவுசெய்து அடுத்த அதிகாரத்தை வாசியுங்கள்.

[கேள்விகள்]

1. (அ) ஆதியாகமத்தை ஆராய்வதன் நோக்கம் என்ன, எதை மறந்துவிடக்கூடாது? (ஆ) ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் நிகழ்ச்சிகள் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன?

2. (அ) ஆதியாகமம், யாருடைய நோக்குநிலையிலிருந்து நிகழ்ச்சிகளை விவரிக்கிறது? (ஆ) சுடர்களைப் பற்றிய விவரிப்பிலிருந்து இதை எவ்வாறு அறிகிறோம்?

3. முதல் ‘நாளுக்கு’ முன்பு பூமி எவ்வாறு இருந்ததென விவரிக்கப்பட்டுள்ளது?

4. “நாள்” என்பது வெறும் 24 மணிநேரம் அல்ல என்பது படைப்பின் விவரப்பதிவிலேயே எவ்வாறு சுட்டிக்காட்டப்படுகிறது?

5. “நாள்” என்பதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தங்களில் ஒன்று என்ன, அது நீண்ட காலப்பகுதிகளையும் குறிக்கலாம் என எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?

6. ‘சாயங்காலம்,’ ‘விடியற்காலை’ என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் 24 மணிநேரம் கொண்ட ஒரு ‘நாளை’ குறிக்க வேண்டியதில்லை, ஏன்?

7. “நாள்” என்பது 24 மணிநேரத்தைவிட அதிகத்தை குறிக்கலாம் என்பதை வேறு எவையும் சுட்டிக்காட்டுகின்றன?

8, 9. முதல் ‘நாளில்’ தோன்றியது என்ன, அந்தச் சமயத்தில்தான் சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டதாக ஆதியாகமம் சொல்கிறதா?

10. இந்த வெளிச்சம் எவ்வாறு வந்திருக்கலாம், எத்தகைய வெளிச்சத்தைப் பற்றி சொல்லப்படுகிறது?

11, 12. (அ) இரண்டாம் ‘நாளில்’ எதைப் பற்றி விவரிக்கப்படுகிறது? (ஆ) இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் எபிரெய வார்த்தை சில சமயங்களில் எவ்வாறு தவறுதலாக மொழிபெயர்க்கப்படுகிறது, இதன் உண்மையான அர்த்தம் என்ன?

13. ஆகாயவிரிவுக்கு என்ன நடந்ததைப்போல் காட்சியளித்திருக்கும்?

14. மூன்றாம் “நாள்” எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

15, 16. (அ) பூமியைப் பற்றி யோபுவிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? (ஆ) கண்டங்கள், மலைகள் ஆகியவற்றின் வேர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்கின்றன, எது பூமியின் ‘கோடிக்கல்லுக்கு’ ஒப்பிடப்படுகிறது?

17. உலர்ந்த தரை தோன்றியதோடு சம்பந்தப்பட்ட முக்கிய குறிப்பு என்ன?

18, 19. (அ) மூன்றாம் ‘நாளில்’ உலர்ந்த தரை தவிர, வேறு எதுவும் தோன்றியது? (ஆ) ஆதியாகம விவரப்பதிவு எதைப் பற்றி சொல்லவில்லை?

20. ஆகாயவிரிவிலே சுடர்கள் தோன்றியதால் காலத்தை எப்படி பிரிக்க முடிந்தது?

21. முதல் ‘நாளில்’ தோன்றிய வெளிச்சத்திற்கும் நான்காம் ‘நாளில்’ தோன்றிய வெளிச்சத்திற்கும் என்ன வித்தியாசம்?

22. மிருகங்கள் உயிர்வாழ உதவும் வகையில் நான்காம் ‘நாளில்’ என்ன ஏற்பட்டது?

23. இந்தக் காலகட்டத்தில் என்ன பெரும் மாற்றங்கள் நிகழ்ந்ததாக விவரிக்கப்படுகின்றன?

24. ஐந்தாம் ‘நாளில்’ என்ன வகையான உயிரினங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது, அவை எந்த வரம்பிற்குள் இனப்பெருக்கம் செய்யும்?

25. ஐந்தாம் ‘நாளில்’ தோன்றிய உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

26-28. ஆறாம் ‘நாளில்’ என்ன நடந்தது, கடைசி சிருஷ்டிப்பின் தனிச்சிறப்பு என்ன?

29, 30. ஆதியாகமம் அதிகாரம் 2-⁠க்கும் அதிகாரம் 1-⁠க்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?

31. (அ) ஆதியாகம விவரப்பதிவைப் பற்றி சிலர் எப்படியெல்லாம் தவறாக சொல்கிறார்கள்? (ஆ) அவர்களுடைய விவாதங்கள் எல்லாம் தவறானவை என எது சுட்டிக்காட்டுகிறது?

32. படைப்பு பற்றிய ஆதியாகம விவரப்பதிவு அறிவியல் ரீதியில் நம்பகமானது என்று எவ்வாறு காட்டப்பட்டுள்ளது?

33. படைப்பு பற்றிய ஆதியாகம விவரப்பதிவு எங்கிருந்து மாத்திரமே வந்திருக்க முடியும்?

34. ஆதியாகமம் குறிப்பிடுகிற சம்பவங்களின் வரிசை நம்பகமானதே என்பதை வேறு எந்தச் சான்றும் ஆதரிக்கிறது?

35. என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன, அவற்றின் விடையை எங்கே காணமுடியும்?

[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]

பூமியிலுள்ள ஒரு மனிதனின் நோக்குநிலையிலிருந்து ஆதியாகமம் விஷயங்களை அளிக்கிறது

[பக்கம் 36-ன் சிறு குறிப்பு]

இனப்பெருக்கம் ‘அதனதன் இனத்தின்படி’ மட்டுமே நடைபெறுவதை புதைப்படிவ சான்று ஊர்ஜிதம் செய்கிறது

[பக்கம் 35-ன் சிறு குறிப்பு]

படைப்பு பற்றிய பாபிலோனிய புராணக்கதையின் அடிப்படையில்தான் ஆதியாகமத்தி​லுள்ள படைப்பு விவரப்பதிவு உள்ளது என்பதே சிலரின் கூற்று. இதோ அந்தக் கதை:

அப்ஸு என்ற தெய்வமும் டையாமட் என்ற தேவதையும் சேர்ந்து மற்ற தெய்வங்களை உண்டாக்கினர்.

பிறகு, அந்தத் தெய்வங்களின் தொல்லைத் தாங்க முடியாமல் அப்ஸு அவர்களைக் கொல்ல முயல்கிறான்; ஆனால் ஈயா என்ற தெய்வம் முந்திக்கொண்டு அப்ஸுவை கொன்றுவிடுகிறான்.

பழிவாங்க நினைத்த தேவதையான டையாமட், ஈயாவைக் கொல்ல முயல்கிறாள்; ஆனால் ஈயாவின் மகன் மார்டுக் முந்திக்கொண்டு டையாமட்டைக் கொன்றுவிடுகிறான்.

மார்டுக் அவளுடைய உடலை இரண்டாக கூறுபோட்டு, ஒரு பாதியிலிருந்து வானத்தையும் மற்றொரு பாதியிலிருந்து பூமியையும் உண்டாக்குகிறான்.

பின்னர் மார்டுக் ஈயாவின் உதவியோடு, கிங்கு என்ற மற்றொரு தெய்வத்தின் இரத்தத்திலிருந்து மனிதர்களை உண்டாக்குகிறான்.a

இந்த மாதிரியான கதைக்கும் படைப்பு பற்றிய ஆதியாகம விவரப் பதிவிற்கும் கொஞ்சமாவது ஒற்றுமை இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா?

[பக்கம் 36-ன் பெட்டி]

படைப்பு பற்றிய ஆதியாகம விவரப்பதிவை குறித்து புகழ்பெற்ற புவியியல் வல்லுநர் ஒருவர் கூறியதாவது:

“பூமி எப்படி தோன்றியது, அதில் உயிரினங்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்தன போன்ற நவீன கருத்துகளை பாமர மக்களுக்கு, அதாவது ஆதியாகம புத்தகம் கொடுக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். இதையே புவியியல் வல்லுநர் என்ற முறையில் சுலபமாக புரியும்படி என்னை விளக்க சொன்னால், ஆதியாகமம் முதல் அதிகாரம் எப்படி விளக்குகிறதோ அதேபோல்தான் நானும் விளக்கியிருப்பேன். என்னால் அதைவிட நன்றாக விளக்கியிருக்கவே முடியாது.”b இவ்வாறு கூறியவர் வாலஸ் பிரேட். பெருங்கடல்கள் தோன்றுதல், நிலம் தோன்றுதல், கடல்வாழ் உயிரினங்கள் தோன்றுதல், பிறகு பறவைகளும் பாலூட்டிகளும் தோன்றுதல் என்ற வரிசையில் படைப்பைப் பற்றி ஆதியாகமம் விவரிக்கிறது. புவி வளரிய காலகட்டத்தின் (geologic time) பெரும் பிரிவுகளின் வரிசையும் இதுவே என்றும் அவர் கூறினார்.

[பக்கம் 27-ன் படம்]

நாள் 1: “வெளிச்சம் உண்டாகக்கடவது”

[பக்கம் 28-ன் படம்]

நாள் 2: “ஆகாயவிரிவு உண்டாகக்கடவது”

[பக்கம் 29 -ன் படம்]

நாள் 3: ‘வெட்டாந்தரை காணப்படக்கடவது’

[பக்கம் 30-ன் படம்]

நாள் 3: ‘பூமி . . . புல்லை முளைப்பிக்கக்கடவது’

[பக்கம் 31-ன் படம்]

நாள் 4: ‘ஆகாயவிரிவிலே சுடர்களும், . . . பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் . . . உண்டாகக்கடவது’

[பக்கம் 32-ன் படம்]

நாள் 5: “திரள்திரளான ஜீவ ஆத்துமாக்கள் தண்ணீரிலே பலுகியிருக்க, பறவைகள் பூமியின் மேல் . . . பறந்து திரிவதாக”

[பக்கம் 33-ன் படம்]

நாள் 6: ‘வீட்டு விலங்குகளும் காட்டு மிருகங்களும் . . . அதனதன் இனத்தின்படியே தோன்றின’

[பக்கம் 34-ன் படம்]

நாள் 6: “ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்”

[பக்கம் 37-ன் படம்]

முதல் முயற்சியிலேயே இதைச் செய்வதற்கான வாய்ப்புகள், 36,28,800-⁠க்கு ஒன்று