Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் தெரிவு என்ன?

உங்கள் தெரிவு என்ன?

அதிகாரம் 20

உங்கள் தெரிவு என்ன?

கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரவிருக்கும் பரதீஸைப் பற்றிய செய்தியே மனிதவர்க்கத்திற்கு தேவை. ‘முடிவு வருவதற்கு’ சற்று முந்தைய காலத்தின் அடையாளமாக “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” பூமி முழுவதிலும் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்படும் என இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:14) இன்று லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அதைத்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த நற்செய்தியை மற்ற லட்சக்கணக்கானோரோடு பகிர்ந்துகொள்கின்றனர்; அவர்களும் பைபிளைப் படித்து இவர்களோடு கூட்டுறவு கொள்வதன் மூலம் நல்லவிதத்தில் பிரதிபலிக்கிறார்கள்.

2எல்லா தேசங்களிலிருந்தும் மக்களை கூட்டிச் சேர்க்கும் உலகளாவிய இந்த மாபெரும் கல்வி புகட்டும் வேலை பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைசி நாட்களைப் பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முன்னுரைத்ததாவது: ‘யெகோவாவுடைய வணக்கம் உறுதியாக ஸ்தாபிக்கப்படும், எல்லா தேசத்தின் ஜனங்களும் அதற்கு ஓடி வருவார்கள். யெகோவா தம்முடைய வழிகளை அவர்களுக்கு போதிப்பார், அவர்கள் அவருடைய பாதைகளில் நடப்பார்கள்.’​—ஏசாயா 2:2-4, NW; இதையும் காண்க: ஏசாயா 60:22; சகரியா 8:20-23.

3இந்த ராஜ்யம் உலகமுழுவதிலும் பிரசங்கிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு பிளவு ஏற்படுகிறது. நம் நாட்களில் உச்சக்கட்டத்தை அடையும் ஒன்றைப் பற்றி பின்வரும் உதாரணத்தோடு இயேசு முன்னறிவித்தார்: “அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள் மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரி”ப்பார். சிருஷ்டிகரின் நோக்கத்தோடு ஒத்துழைக்கிறவர்கள் செம்மறியாடுகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். சுதந்திர பிரியர்கள் வெள்ளாடுகள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களின் முடிவைப் பற்றி சொல்கையில், ‘செம்மறியாடுகள்’ “நித்தியஜீவனை” பெறுவார்கள், ‘வெள்ளாடுகளோ’ “நித்திய ஆக்கினையை” அடைவார்கள் என்றார் இயேசு.​—மத்தேயு 25:32-46.

‘சத்தியத்தைப் பொய்க்காக மாற்றீடு’ செய்வதில்லை

4கடவுளிடமே “ஜீவஊற்று” இருப்பதால் நம் வாழ்க்கையை அவருடைய நோக்கங்களுக்கு இசைவாக கொண்டுவருவது நம் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது. (சங்கீதம் 36:9) ஆகவே உண்மைக்கு எதிரான கோட்பாடுகளில் சிக்கிக்கொள்ளாதபடி இருக்க நமக்கு கவனம் தேவை. “தேவனுடைய சத்தியத்தைப் பொய்க்காக மாற்றீடு செய்து, சிருஷ்டிகருக்கு பரிசுத்த சேவைசெய்து சேவியாமல் சிருஷ்டியைத் சேவித்த” ஆட்களைப் பற்றி ரோமர் 1:25 (NW) கூறுகிறது. நாம் இதுவரை பார்த்தபடி பரிணாமக் கொள்கை உண்மைக்கு புறம்பானதே, அது ஒரு ‘பொய்யே.’ இப்படிப்பட்ட ஒரு “பொய்க்காக,” சிருஷ்டிப்புக்கு காரணரான கடவுளைப் பற்றிய உண்மைகளை மாற்றீடு செய்வது அத்தாட்சிகள் அடிப்படையிலும் ரோமர் 1:20 கூறுகிறபடியும் பார்த்தால் அவர்கள் “போக்குச்சொல்ல இடமில்லை.”

5பரிணாமக் கொள்கைக்கு எதிராக அத்தாட்சிகள் குவிந்தாலும் அது நவீன காலங்களில் இவ்வளவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதைக் கண்டு ஆச்சரியமடையாதீர்கள். கடவுள் இல்லை, அவர் தேவையில்லை என்பதே அந்தக் கோட்பாட்டின் தாரக மந்திரம். இப்பேர்ப்பட்ட அப்பட்டமான பொய் எங்கே ஆரம்பித்திருக்கும்? ‘பிசாசு . . . பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்’ என்று கூறியபோது அதன் பிறப்பிற்குக் காரணமானவனை இயேசு அடையாளம் காட்டினார்.​—யோவான் 8:⁠44.

6பரிணாமக் கொள்கை சாத்தானுடைய நோக்கங்களையே ஆதரிக்கிறது என்ற உண்மையை நாம் ஏற்க வேண்டும். அவனும், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்ததைப் போலவே மற்றவர்களும் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. இது இப்போது அதிக உண்மை, ஏனென்றால் தனக்கு “கொஞ்சக்கால மாத்திரம்” மீதமுள்ளது என்பதைப் பிசாசு அறிந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9-12) ஆகவே, நாம் பரிணாமத்தை நம்பினால் சாத்தானுடைய விருப்பத்தையே திருப்தி செய்வோம்; அது சிருஷ்டிகரின் அற்புதகரமான நோக்கங்களுக்கு கண்களை மூடிக்கொள்வது போலாகும். ஆகவே இதைப் பற்றி நாம் எவ்வாறு உணர வேண்டும்? பண விஷயத்திலோ கொஞ்சம் பொருள் விஷயத்திலோ யாராவது நம்மை ஏமாற்றினால் நாம் அவர்களை எட்டிக் காய் போல வெறுக்கிறோம் அல்லவா? அப்படியிருக்க, பரிணாமக் கொள்கையையும் அதன் காரணகர்த்தாவையும் நாம் எவ்வளவு அதிகமாய் வெறுக்க வேண்டும்? நமக்கு நித்திய ஜீவன் கிடைக்காமல் ஏமாற்றுவதே அதன் முக்கிய நோக்கமாயிற்றே!​—1 பேதுரு 5:8.

‘எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’

7உண்மையில் சிருஷ்டிகர் இருப்பதை சீக்கிரத்தில் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வார்கள். ‘புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கின . . . என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது . . . நான் கர்த்தர் [“யெகோவா,” NW] என்பதை அறிந்துகொள்வார்கள்’ என அவர் கூறுகிறார். (எசேக்கியேல் 36:23) ஆம், “கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவன் . . . நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்” என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.​—சங்கீதம் 100:⁠3.

8தேசங்களுக்கு எதிராக யெகோவா வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கையில் அவரே சிருஷ்டிப்பின் தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். கடவுளிடமிருந்து விலகி சுதந்திரமாய் இருக்க மனிதன் செய்த அபாயகரமான சோதனைக்கு முடிவு கட்டுகையில் இது நடக்கும். அப்போது இதுதான் நடைபெறும்: “அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்து போகும்.”​—எரேமியா 10:10, 11; வெளிப்படுத்துதல் 19:11-21-ஐயும் காண்க.

9ஆகவே வரவிருக்கும் பரதீஸில், தேசங்களோ அவற்றின் கல்வி அமைப்புகளோ செய்தித்துறையோ இருக்காது. அதனால் பரிணாமத்தை சொல்லிக்கொடுக்க அங்கே யாரும் இருக்கமாட்டார்கள். ஏசாயா 11:9 கூறுகிறபடியே, ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ சிருஷ்டிகரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஒவ்வொரு நபருக்கும் போதிக்கப்படும். முற்காலத்தில் அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றியதைக் கேட்டு அவர்கள் வாயடைத்து நிற்பார்கள். பரதீஸில் அவருடைய எதிர்கால செயல்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போவார்கள். இந்த விசேஷித்த செயல்களில் உயிர்த்தெழுதலும் அடங்கும். கடவுள்தான் மனிதர்களை சிருஷ்டித்தார் என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி அது நிரூபிக்கும். எப்படி? மரித்த கோடிக்கணக்கானோரை மறுபடியும் சிருஷ்டிக்க அவருக்கு இருக்கும் திறமை, முதல் மானிட ஜோடியையும் அவர்தான் படைத்தார் என்பதை நிரூபிக்கும்.

தெரிவு செய்தல்

10நம் எதிர்காலம், ஏதோவொரு குருட்டுத்தனமான பரிணாம நிகழ்ச்சியால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, எதிர்காலத்தை சிருஷ்டிகர் ஏற்கெனவே நிர்ணயித்துவிட்டார். அவருடைய நோக்கமே நிறைவேறும், எந்த மனிதன் அல்லது பிசாசின் நோக்கம் அல்ல. (ஏசாயா 46:9-11) அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன: நான் யார் பக்கத்தில் இருக்கிறேன்? நீதியுள்ள ஒரு பரதீஸில் என்றென்றுமாக வாழ விரும்புகிறேனா? அப்படி விரும்புகிறேன் என்றால், தப்பிப்பிழைப்பதற்கான கடவுளுடைய தேவைகளுக்கு இசைய வாழ்கிறேனா?

11நாம் பரதீஸில் என்றென்றுமாக வாழ விரும்பினால் சிருஷ்டிகரின் நோக்கங்களையும் சட்டங்களையும் மதித்து வாழ்ந்தவர்களைப் பின்பற்ற வேண்டும் என பைபிள் கூறுகிறது. அது அறிவுறுத்துவதாவது: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.”​—சங்கீதம் 37:37, 38.

12நாம் கடவுளை சேவிப்போமா இல்லையா என்பதை நாமே தெரிவுசெய்யும் சுயாதீனத்தை அவர் நமக்கு கொடுத்துள்ளார். மனிதர்கள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என அவர் வற்புறுத்தமாட்டார் என்றாலும் துன்மார்க்கம், துன்பம், அநீதி ஆகியவை தொடர்கதையாக இருக்கவும் அவர் அனுமதிக்கமாட்டார். அவருடைய வரவிருக்கும் பரதீஸின் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் குலைப்பவர்களுக்கும் அங்கு இடமே இல்லை. ஆகவேதான், மக்கள் சுயமாக தெரிவுசெய்து தம்மை சேவிக்கும்படி இப்பொழுதே அழைக்கிறார். அவ்வாறு அந்த அழைப்பை ஏற்பவர்கள் திருப்தியளிக்காத இந்த உலகம் அழிந்துபோவதைக் காண்பார்கள். பிறகு, இந்தப் பூமியை பரதீஸாக மாற்ற உதவும் பேரானந்தம் மிக்க வேலையிலும் பங்குகொள்வார்கள்.​—சங்கீதம் 37:⁠34.

13அநேகர் யெகோவாவின் தேவைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவதில்லை என்பது உண்மையே. அது அவரவர் விருப்பம், அது அவர்களுக்கே பேரிழப்பும்கூட. (எசேக்கியேல் 33:9) ஆனால் வரவிருக்கும் “மெய்யான ஜீவனை உறுதியாக பற்றிக்கொள்[]” நீங்கள் விரும்புகிறீர்களா? (1 தீமோத்தேயு 6:19, NW) அப்படியென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுளிடம் ஜெபிக்கையில் இயேசு பின்வருமாறு கூறினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”​—யோவான் 17:⁠3.

14ஆகவே காலம் கடத்தாமல் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான, அவசரமான நடவடிக்கை ஒன்றுள்ளது. அதுவே, சிருஷ்டிகரின் சித்தத்தைக் கற்றுக்கொண்டு, அதைச் செய்ய உண்மையுடன் முயற்சிப்பதாகும். ஏவப்பட்ட அவருடைய வார்த்தை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”​—செப்பனியா 2:2, 3.

15கடவுளுடைய சித்தத்திற்கு கீழ்ப்படியும் மனத்தாழ்மையுள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களாக. அப்படியிருந்தால் என்ன பலன்? “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என பைபிள் கூறுகிறது. (1 யோவான் 2:17) என்னே மகிழ்ச்சி பொங்கும் எதிர்பார்ப்பு! நீங்கள் சரியான தெரிவை செய்தீர்கள் என்றால் பூந்தோட்டமான பூமியில் என்றென்றுமாக வாழும் வாய்ப்பு உங்களுடையதே!

[கேள்விகள்]

1, 2. (அ) “நற்செய்தி” எவ்வாறு இன்று லட்சக்கணக்கானோரை செயல்பட தூண்டுகிறது? (ஆ) உலகளாவிய இந்தக் கூட்டிச் சேர்த்தல் எவ்வாறு முன்னுரைக்கப்பட்டது?

3. ராஜ்ய செய்தி எதில் விளைவடைகிறது?

4. (அ) நாம் தொடர்ந்து வாழவேண்டும் என்றால் எது இன்றியமையாதது? (ஆ) பைபிளின்படி பரிணாமக் கொள்கையை என்னவென்று அழைக்கலாம்?

5, 6. (அ) பரிணாமத்தில் நம்பிக்கை உண்மையில் எங்கே ஆரம்பமானது? (ஆ) அது நம் காலத்தில் ஏன் இவ்வளவு பரவலாக உள்ளது? (இ) இந்த விஷயத்தைப் பற்றி நாம் எவ்வாறு உணர வேண்டும்?

7. சிருஷ்டிகர் தாம் இருப்பதைக் குறித்தும் தம்முடைய பெயரைக் குறித்தும் என்ன செய்யப் போவதாக கூறுகிறார்?

8. யெகோவா சீக்கிரத்தில் தேசங்களை எவ்வாறு எதிர்ப்பார்?

9. (அ) பரதீஸில் பரிணாமம் ஏன் போதிக்கப்படாது? (ஆ) யெகோவாவே மனிதர்களைப் படைத்தார் என்பதை அவருடைய எந்த விசேஷித்த திறமை நிரூபிக்கும்?

10. யெகோவா எதிர்காலத்தை ஏற்கெனவே நிர்ணயித்துவிட்டதால் என்ன கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்?

11. நாம் பரதீஸில் வாழ விரும்பினால் யாரைப் பின்பற்றி வாழ வேண்டும்?

12. (அ) சுயமாக தெரிவுசெய்யும் திறமை மனிதர்களுக்கு இருந்தபோதிலும் எதற்கு கடவுள் இடமளிக்கமாட்டார்? (ஆ) கடவுளை சேவிக்க சுயமாக தெரிவுசெய்பவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?

13. ‘மெய்யான ஜீவன்’ நமக்கு தேவை என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

14. என்ன புத்திசாலித்தனமான, அவசரமான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும்?

15. மனத்தாழ்மையுள்ள மக்களுக்கு என்ன மகிழ்ச்சி பொங்கும் எதிர்பார்ப்பு உள்ளது?

[பக்கம் 247-ன் சிறு குறிப்பு]

யெகோவாவின் உண்மை வணக்கத்தினிடமாக லட்சக்கணக்கானோர் ஓடிவருகின்றனர்

[பக்கம் 248-ன் சிறு குறிப்பு]

பரிணாமம் பற்றிய கருத்து உண்மையில் எங்கே ஆரம்பித்தது?

[பக்கம் 249-ன் சிறு குறிப்பு]

சிருஷ்டிகர் இருப்பதை சீக்கிரத்தில் அனைவரும் அறிந்துகொள்வார்கள்

[பக்கம் 249-ன் சிறு குறிப்பு]

கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்பதை உயிர்த்தெழுதல் நிரூபிக்கும்

[பக்கம் 250-ன் சிறு குறிப்பு]

எதிர்காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது

[பக்கம் 250-ன் சிறு குறிப்பு]

சுயமாக தெரிவுசெய்யும் நம் சுதந்திரத்தை எவ்வாறு உபயோகிப்போம்?

[பக்கம் 251-ன் படம்]

சரியான தெரிவை செய்பவர்களுக்கு ஒரு மகத்தான எதிர்பார்ப்பு உள்ளது