Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்—அது எப்படி ஆரம்பமானது?

உயிர்—அது எப்படி ஆரம்பமானது?

அதிகாரம் 1

உயிர்​—⁠அது எப்படி ஆரம்பமானது?

உயிரினங்கள் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளன. பூச்சிகளின் ரீங்கார ஓசை, பட்சிகளின் அழகிய பாடல், சிறிய விலங்குகள் புதர்களில் ஏற்படுத்தும் சலசலப்பு என இவை அனைத்துமே உயிர் இருப்பதை பறைசாற்றுகின்றன. உறை பனி நிறைந்த துருவப் பிரதேசங்களிலும் உயிர் உள்ளது, வறண்ட பாலைவனத்திலும் உள்ளது. சூரியன் முத்தமிடும் கடலின் மேற்பரப்பு முதல் கும்மிருட்டாக உள்ள கடலின் ஆழம் வரை உள்ளது. உயரே காற்று மண்டலத்திலும் சின்னஞ்சிறிய உயிரினங்கள் மிதக்கின்றன. நம் காலுக்கு கீழே மண்ணில் கோடானுகோடிக் கணக்கான நுண்ணுயிரிகள் மும்முரமாக வேலைசெய்து, பசுமையான தாவரங்கள் நன்கு வளர மண்ணை வளப்படுத்துகின்றன. மற்ற உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழ அவை தாவரங்கள் மீதே சார்ந்துள்ளன.

2நம் கற்பனையை திணறடிக்கும் அளவிற்கு பூமியில் பல்வேறு உயிரினங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. இவை எல்லாம் எப்படி தோன்றின? நாம் வாழும் இந்தப் பூமியும், இதிலுள்ள எல்லா உயிரினங்களும் இங்கே எப்படி வந்தன? குறிப்பாக, மனித இனம் பிறந்த கதை என்ன? மனிதக் குரங்கு போன்ற மிருகங்களிலிருந்து நாம் பரிணமித்தோமா அல்லது படைக்கப்பட்டோமா? நாம் எப்படித்தான் இங்கு வந்தோம்? இதற்கான விடை எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எவ்வாறு உதவும்? இத்தகைய கேள்விகள் காலங்காலமாக கேட்கப்பட்டு வந்தும், நிறையப் பேருக்கு நம்பகமான விடை கிடைத்தபாடில்லை.

3உங்களுக்கும் இந்தக் கேள்விகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ‘நான் இங்கு எப்படி வந்தேன் என்று கவலையில்லை, எப்படியோ வந்துவிட்டேன் அவ்வளவுதான். யாருக்கு தெரியும்? 60, 70 அல்லது 80 வயதுவரை நான் உயிரோடு இருக்கலாம். நாம் படைக்கப்பட்டோமா அல்லது பரிணமித்தோமா என இப்போது தெரிந்துகொள்வதால் பெரிதாக என்ன மாறிவிடப்போகிறது?’ என்றும்கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் பதிலைத் தெரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள், எப்படி வாழ்கிறீர்கள், எப்படிப்பட்ட நிலைமைகளின்கீழ் வாழ்கிறீர்கள் போன்ற அனைத்தையுமே அதிகம் பாதிக்கலாம். எப்படி? எப்படியென்றால், உயிரின் ஆரம்பத்தைப் பற்றிய நம் மனப்பான்மை, வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாம் நோக்கும் விதம் முழுவதையுமே பாதிக்கும். உயிர் இங்கு வந்தது எவ்வாறு என்பது கண்டிப்பாக எதிர்கால வரலாற்றையே மாற்றியமைக்கப் போகிறது, அதில் நமது எதிர்காலமும் உட்பட்டுள்ளது.

வேறுபடும் கருத்துகள்

4பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பலரின் நோக்குநிலையில் வாழ்க்கை எப்போதுமே பயங்கர போட்டி, சண்டை, பகைமை, போர், மரணம் போன்றவை நிறைந்த ஒன்றாகவே இருக்கும். இன்னும் சிறிது காலத்தில் மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான் என்றும்கூட சிலர் நினைக்கிறார்கள். புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அழிவுநாள் (Doomsday) வருவதற்கு இன்னும் சில பத்தாண்டுகளே இருக்கலாம். . . . அணு ஆயுதங்களும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் கிடுகிடுவென வளர்ந்து வருவதால் இன்றோ நாளையோ உலக மகா அழிவிற்கு வழிநடத்தும்.”1 இந்த அழிவு சீக்கிரத்தில் ஏற்படவில்லை என்றாலும்கூட, ஒருவருடைய ஆயுட்காலத்தின் முடிவோடு அவருடைய கதையும் நிரந்தரமாக முடிந்துவிடுகிறது என பலர் நம்புகிறார்கள். இந்தப் பூமியிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் எதிர்காலத்தில் பூண்டோடு அழிந்துவிடும் என நினைப்பவர்களும் உண்டு. இவர்கள் ஊகத்தின்படி, சூரியன் பிரமாண்டமான சிகப்பு நட்சத்திரமாக விரிவடையும்; அப்போது “பெருங்கடல்கள் கொதிக்கும், காற்று மண்டலம் ஆவியாகி விண்வெளியில் எங்கேயோ மறைந்துவிடும், கற்பனைக்கு எட்டாது மகா பயங்கரமான அழிவு இந்தப் பூமிக்கு நேரிடும்.”2

5“விஞ்ஞான படைப்புவாதிகள்” (“scientific creationists”) இத்தகைய முடிவுகளை ஏளனம் செய்கிறார்கள். ஆனால், படைப்பு பற்றி ஆதியாகமத்தில் உள்ள பதிவுக்கு இவர்களாகவே விளக்கம் தந்து, பூமிக்கு 6,000 வயதுதான் என்றும், ஆதியாகமத்தில் படைப்பு நிகழ்ந்த ஆறு ‘நாட்களும்’ 24 மணிநேரம் கொண்ட நாட்களே என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இத்தகைய கருத்து, பைபிள் சொல்வதைத் துல்லியமாக படம்பிடித்துக் காட்டுகிறதா? பூமியும் அதிலுள்ள எல்லா உயிரினங்களும் வெறுமனே ஆறே நாட்களில் படைக்கப்பட்டனவா? அல்லது நியாயமான வேறு ஏதாவது விளக்கம் உள்ளதா?

6உயிரின் ஆரம்பம் பற்றிய கேள்விகளை ஆராய்கையில், பரவலாக நிலவும் கருத்துகளோ எண்ணங்களோ பலரை திசை திருப்பிவிடுகின்றன. இதைத் தவிர்த்து சரியான விடைகளை நாம் கண்டடைய வேண்டுமானால் திறந்தமனதோடு ஆதாரத்தை ஆராயவேண்டும். ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு விஷயமும் உள்ளது. பரிணாம கோட்பாட்டை பலர் அறிய பரப்பிய சார்லஸ் டார்வினே தான் உருவாக்கிய கொள்கைக்கு வரம்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். உயிரினங்களின் ஆரம்பம் (The Origin of Species) என்ற தனது ஆங்கில புத்தகத்தின் முடிவுரையில் உயிரின் அற்புதத்தைப் பற்றி எழுதுகையில், “உயிரைப் பொருத்த வரை, சில உயிரினங்களில் அல்லது ஒரேவொரு உயிரினத்தில் அதற்குத் தேவையான பல்வேறு சக்திகளை முதன்முதலில் படைப்பாளரே கொடுத்திருக்க வேண்டும்”3 என்று எழுதினார். இவ்வாறு, உயிரின் ஆரம்பத்தைப் பற்றி ஆராய இன்னும் வாய்ப்புள்ளது என தெளிவாக்கினார்.

விவாதம் அறிவியலைப் பற்றி அல்ல

7நம் ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிக் கொள்வோம்: இந்த விவாதத்தில், அறிவியல் சாதனைகளை நாம் குறைகூறிக் கொண்டில்லை. நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் பல துறைகளில் சாதனைப் படைத்துள்ளனர் என்பது விவரமறிந்த ஒவ்வொருவருக்கும் அத்துப்படி. இந்தப் பிரபஞ்சம், பூமி, உயிரினங்கள் ஆகியவைப் பற்றி செய்யப்பட்ட அறிவியல் ஆய்வு நமது அறிவை பெருமளவு அதிகரித்துள்ளது. மனித உடலைப் பற்றிய ஆய்வுகள், நோய்களுக்கும் காயங்களுக்கும் இன்னும் சிறப்பாக மருத்துவம் பார்க்க உதவியிருக்கின்றன. எலக்ட்ரானியல் (electronics) துறையில் ஏற்பட்ட கிடுகிடு வளர்ச்சி நம்மை கம்ப்யூட்டர் யுகத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளது; கம்ப்யூட்டர் யுகமோ நம் வாழ்க்கையையே மாற்றி வருகிறது. மனிதனை சந்திர மண்டலத்துக்கு அனுப்பி அசரவைக்கும் சாகசங்களையும் விஞ்ஞானிகள் செய்துள்ளனர். கண்ணுக்கு தெரியாத சிறிய பொருள் முதல் மிக பிரமாண்டமான பொருள் வரை நம்மை சுற்றி இருக்கும் அனைத்தையும் அறிந்துகொள்ள உதவிய அறிவியல் திறமைகளை மதிப்பது நியாயமானதே.

8இந்தச் சமயத்தில் சொற்களுக்கான விளக்கங்களையும் தெளிவாக்கிக் கொள்வது பிரயோஜனமாய் இருக்கும்: இப்புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளபடி பரிணாமம் என்பது கரிமப் பொருளிலிருந்து (organic evolution) உயிர் பரிணமித்தது என்ற கோட்பாட்டை குறிக்கும்; அதாவது முதல் உயிரினம் உயிரற்ற ஒரு பொருளிலிருந்து தோன்றியது என்ற கோட்பாடு. பிறகு அந்த உயிர் மறு உற்பத்தி செய்கையில் மற்ற உயிரினங்கள் தோன்றி அவை வெவ்வேறு வகைகளாக உருமாறிவிட்டன. இவ்வாறு மெல்ல மெல்ல, மனிதன் உட்பட பூமியில் இதுவரை வாழ்ந்த எல்லா வகையான உயிரினங்களும் தோன்றின. இவை அனைத்துமே அறிவுப்பூர்வமான வழிநடத்துதலோ, மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் தலையிடுதலோ இல்லாமல் நடந்தேறின என்று கருதப்படுகிறது. மறுபுறத்திலோ, படைப்பு என்பது சர்வ சக்தியுள்ள கடவுளே உயிரினங்கள் தோன்ற காரணம் என்பதைக் குறிக்கும்; அவரே பிரபஞ்சத்தையும், பூமியில் உள்ள எல்லா வகையான அடிப்படை உயிரினங்களையும் வடிவமைத்து, உருவாக்கியவர்.

முக்கியமான சில கேள்விகள்

9மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல பரிணாமக் கொள்கைக்கும் ஆதியாகமத்தில் உள்ள படைப்பின் விவரப்பதிவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெளிவாய் தெரிகிறது. பரிணாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள் படைப்பு விஞ்ஞானப்பூர்வமானதல்ல என்று வாதாடுகிறார்கள். அப்படியென்றால் இந்தக் கேள்வியைக் கேட்பதும் நியாயமே: பரிணாமம் மட்டும் உண்மையிலேயே விஞ்ஞானப்பூர்வமானதா என்ன? இது ஒருபுறமிருக்க, ஆதியாகமத்திலுள்ள படைப்பு பற்றிய பதிவை வெறும் பழங்கால கட்டுக்கதை என பலர் விவாதிக்கிறார்களே அது உண்மையா? அல்லது அது நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இசைவாக உள்ளதா? அநேகருடைய மண்டையை குடைந்துகொண்டிருக்கும் இன்னும் சில கேள்விகளும் உள்ளன. அவை: சர்வ சக்தி படைத்த சிருஷ்டிகர் ஒருவர் இருந்தால் மக்களை அற்ப ஆயுசில் கொன்றுபோடும் போர்களும், பஞ்சமும், வியாதியும் ஏன் இவ்வளவு பரவலாக உள்ளன? அவர் ஏன் இவ்வளவு கொடுமைகளை அனுமதிக்கிறார்? சிருஷ்டிகர் ஒருவர் உண்டென்றால் நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறாரா?

10இத்தகைய கேள்விகளையும் இதோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் ஆராய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். இதில் அடங்கியுள்ள விவரங்களை நீங்கள் திறந்த மனதோடு ஆராய்ந்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை இதன் பிரசுரிப்பாளர்களுக்கு உள்ளது. இது ஏன் அவ்வளவு முக்கியம்? ஏனென்றால், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்பதை நீங்கள் அறிய வரலாம்.

[கேள்விகள்]

1. இந்தப் பூமியில் உயிர் எவ்வளவு பரவலாக காணப்படுகிறது?

2. மக்கள் மனங்களில் காலங்காலமாக நிறைந்திருக்கும் கேள்விகள் யாவை?

3. சிலர் இக்கேள்விகளைப் பற்றி எவ்வாறு உணருகிறார்கள், ஆனால் இவை ஒவ்வொருவருக்கும் ஏன் முக்கியமானவை?

4. பூமியிலுள்ள உயிரினங்களின் எதிர்காலத்தை பற்றி பலர் என்ன நினைக்கிறார்கள்?

5. (அ) “விஞ்ஞான படைப்புவாதிகள்” பூமியை எவ்வாறு நோக்குகின்றனர்? (ஆ) இந்த நோக்குநிலையால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?

6. பூமியில் உயிர் ஆரம்பித்ததை நாம் எதன் அடிப்படையில் முடிவுசெய்ய வேண்டும், இந்த விஷயத்தை டார்வின் எவ்வாறு விவாதத்திற்கு விட்டுவிட்டார்?

7. அறிவியலையும் நாம் அதை மதிப்பதையும் பற்றி என்ன விஷயம் தெளிவாக்கப்படுகிறது?

8. இப்புத்தகத்தில் பரிணாமம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது, படைப்பு எதைக் குறிக்கிறது?

9. பரிணாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள் படைப்பைப் பற்றி என்ன வாதாடுகிறார்கள், ஆனால் பரிணாமம் பற்றியும் படைப்பு பற்றியும் என்ன கேள்விகள் எழும்பலாம்?

10. (அ) இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன, இதன் பிரசுரிப்பாளர்களுக்கு என்ன நம்பிக்கை உள்ளது? (ஆ) இந்த விஷயங்களை ஆராய்வது ஏன் அவ்வளவு முக்கியம்?

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

உயிர் பரிணமித்ததா அல்லது படைக்கப்பட்டதா?

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

உயிரின் ஆரம்பத்தைப் பற்றிய நம் மனப்பான்மை, வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாம் நோக்கும் விதம் முழுவதையுமே பாதிக்கும்

[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]

பரிணாமத்தை ஆதரிப்பவர்கள் படைப்பு விஞ்ஞானப்பூர்வமானதல்ல என்று வாதாடுகிறார்கள்; ஆனால் பரிணாமக் கொள்கை மட்டும் உண்மையில் விஞ்ஞானப்பூர்வமானதா என்ன?

[பக்கம் 12,13-ன் பெட்டி/படம்]

சிந்தனைக்கு சில முத்துக்கள்

நம்மை வியப்பில் சொக்கவைக்கும் எத்தனையோ விஷயங்கள் இப்பூவுலகில் நிறைந்துள்ளன:

பிரமாண்டமானவை: மேற்கு வானத்தில் பளபளக்கும் வண்ணமயமான நிறங்களைப் பூசி அஸ்தமிக்கும் சூரியன். ஏராளமான நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் இரவுநேர வானம். கதிரவனின் கிரணம் ஊடுருவி வரும் வானுயர்ந்த மரங்கள் நிறைந்த காடு. கரடுமுரடான மலைத்தொடர்கள், சூரிய ஒளியில் ஜொலிக்கும் அவற்றின் பனி மூடிய சிகரங்கள். பொங்கியெழும் அலைகளை சொந்தம் கொண்டாடும் பெருங்கடல்கள். இவற்றை பார்க்கையில் நமக்குள் குதூகலம் பிறக்கிறது, பிரமித்துப்போய் நிற்கிறோம்.

சின்னஞ்சிறியவை: வார்ப்ளர் என்பது ஒரு குட்டி குருவி. அது அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்காவிற்கு செல்வதற்காக ஆப்பிரிக்காவை நோக்கி பறந்துசெல்கிறது. அவ்வாறு பறக்கும்போது சுமார் 6,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தென் அமெரிக்காவை நோக்கிச் செல்லும் காற்றோட்டத்தைப் பிடிக்கிறது. காற்றோ அதை அலக்காகத் தூக்கிக்கொண்டுபோய் தென் அமெரிக்காவில் இறக்கிவிடுகிறது. இவ்வாறு இடம்பெயர்ந்து செல்ல அதன் இயல்புணர்வே அதற்கு வழிகாட்டுகிறது. அந்த வழியை பல நாட்களுக்கு அப்படியே பின்பற்றி 3,800 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இறகுகளால் சுற்றப்பட்ட வெறும் 21 கிராம் அளவே உள்ள இந்தக் குட்டி குருவியின் தைரியத்தைப் பாருங்கள்! நாம் ஆச்சரியத்தால் வாய்ப்பிளந்து நிற்கிறோம்.

கெட்டிக்கார உயிரினங்கள்: ஒலி அலைகளை பயன்படுத்தும் வெளவால்கள். மின்சாரம் உற்பத்தி செய்யும் விலாங்கு மீன்கள். கடல் நீரை நன்னீராய் மாற்றும் கடற்காகங்கள். காகிதம் தயாரிக்கும் குளவிகள். ஏர்கன்டிஷன் வசதி செய்துகொள்ளும் கறையான்கள். ஜெட் உந்துவிசை உதவியால் பயணம் செய்யும் எண்காலிகள் (Octopuses). தனியான அல்லது அப்பார்ட்மென்ட் போல கூடுகளைப் பின்னும் பறவைகள். தோட்ட வேலை, நெசவு செய்யும் அல்லது பண்ணை வைத்து பராமரிக்கும் எறும்புகள். பிளாஷ் லைட்டோடு பறந்துதிரியும் மின்மினிப்பூச்சிகள். இத்தகைய கெட்டிக்கார உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

சின்னச் சின்ன விஷயங்கள்: நம் ஆயுள் முடியப்போகிற காலத்தில்தான் சின்னச் சின்ன விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறோம்; இத்தனைக் காலமாக அவற்றை சட்டைசெய்திருக்கவே மாட்டோம்: அழகிய புன்னகை. ஆசையாய் தொடும் அன்புக் கரம். கனிவான ஒரு வார்த்தை. ஒரு சின்னஞ்சிறிய மலர். பறவையின் தேனிசை கானம். வெயிலின் கதகதப்பு.

இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது, பிரமாண்டமானவை நம்மை பிரமிக்க வைக்கின்றன. சின்னஞ்சிறியவை நம் சிந்தனையை ஆட்கொள்கின்றன. கெட்டிக்கார உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சின்னச் சின்ன விஷயங்களின் மதிப்பை காலங்கடந்து உணருகிறோம். இவை தோன்றியதற்கு நாம் என்ன காரணம் சொல்ல முடியும்? இவற்றை எவ்வாறு விளக்குவோம்? இவை எங்கிருந்துதான் வந்தன?

[பக்கம் 6-ன் முழுபடம்]

[பக்கம் 9-ன் படம்]

6,000 வருடம்தான் பழமையானதா?

[பக்கம் 11-ன் படம்]

நம் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிற அறிவியல் சாதனைகளை மதிப்பது நியாயமே