Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“குரங்கு மனிதர்”—உண்மையில் என்ன?

“குரங்கு மனிதர்”—உண்மையில் என்ன?

அதிகாரம் 7

“குரங்கு மனிதர்”​—⁠உண்மையில் என்ன?

அநேக வருடங்களாக, குரங்கு போன்ற மனிதர்களின் எஞ்சிய புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. அப்படிப்பட்ட உயிரினங்கள் பற்றி ஓவியர்கள் வரைந்து தள்ளிய எண்ணற்ற சித்திரங்கள் அறிவியல் புத்தகங்களில் மலிந்து கிடக்கின்றன. இவைதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான பரிணாம இணைப்பா? “குரங்கு மனிதர்” (“ape-men”) நம் மூதாதையரா? ஆம் என்று அடித்துச் சொல்கின்றனர் பரிணாமவாத விஞ்ஞானிகள். இதன் காரணமாகத்தான், ஓர் அறிவியல் பத்திரிகையில் வெளிவந்தபடி, “மனிதக் குரங்கு மனிதனான விதம்”1 போன்ற வாசகங்களை அடிக்கடி வாசிக்கிறோம்.

2மனிதனின் மூதாதை என கோட்பாட்டளவில் கருதப்படும் இவற்றை “மனிதக் குரங்குகள்” என்று அழைப்பதே தவறு என சில பரிணாமவாதிகள் கருதுவதும் உண்மையே. அவர்களுடைய கூட்டாளிகளில் சிலரோ அவ்வளவு பிடிவாதக்காரர்களாக இல்லை.2 “குரங்கு போன்ற மூதாதையரிலிருந்தே . . . மக்கள் பரிணமித்தனர்”3 என்று ஸ்டீஃபன் ஜே கௌல்ட் கூறுகிறார். ஜார்ஜ் கேலார்டு சிம்ஸன் பின்வருமாறு கூறினார்: “பொதுவான மூதாதையைப் பார்த்த எவரும் அதை மனிதக் குரங்கு அல்லது குரங்கு என்றே பேச்சு வழக்கில் அழைப்பர். மனிதக் குரங்கு, குரங்கு போன்ற வார்த்தைகளின் அர்த்தம் பொதுவான உபயோகத்தால் நிர்ணயிக்கப்படுவதால் மனிதனின் மூதாதையர் மனிதக் குரங்குகள் அல்லது குரங்குகள் தான்.”4

3மனிதர்களின் மூதாதையர் மனிதக் குரங்குபோல இருந்ததை நிரூபிக்க புதைப்படிவ அத்தாட்சி ஏன் அவ்வளவு முக்கியம்? ஏனென்றால், இந்தக் கருத்தை ஆதரிக்க உயிரோடிருப்பவை மத்தியில் எந்த அத்தாட்சியும் இல்லை. மனிதருக்கும், குரங்கு குடும்பம் உட்பட இன்று உயிரோடிருக்கும் எந்த மிருகத்திற்கும் மத்தியில் மிகப் பெரிய பிளவுகள் இருப்பதைப் பற்றி அதிகாரம் 6-⁠ல் படித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மனிதனுக்கும் மிருகத்திற்கும் மத்தியிலான இணைப்பை இன்று உயிரோடிருப்பவற்றில் காண முடியாததால் அது புதைப்படிவத்தில் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

4பரிணாமத்தைப் பொருத்தவரை, இன்று மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் இடையில் வெளிப்படையாக உள்ள பிளவு வினோதமானது. ஏனென்றால், பரிணாமம் என்ற ஏணியில் மிருகங்கள் முன்னேறுகையில் அவை உயிர்வாழ அதிக திறமை பெறுகின்றன என்று பரிணாமக் கொள்கை கூறுகிறது. அப்படியென்றால், “தரம் குறைந்த” மனிதக் குரங்கு குடும்பம் மாத்திரம் உயிரோடிருக்க, பரிணாம வளர்ச்சியில் அதிக முன்னேற்றம் அடைந்தவை என்று சொல்லப்பட்ட, இணைப்புகளாக கருதப்பட்டவை ஒன்றுகூட ஏன் உயிரோடில்லை? இன்று சிம்பான்ஸிகளையும் கொரில்லாக்களையும் ஒராங்குட்டன்களையும் பார்க்கிறோம், ஆனால் ‘குரங்கு மனிதர்களைப்’ பார்ப்பதில்லை. கீழான மனிதக் குரங்குகள் அழியாமல் இருக்க, நவீன மனிதனுக்கும் மனிதக் குரங்கு போன்ற பிராணிகளுக்கும் மத்தியிலுள்ள, சமீபத்தில் தோன்றிய, அதிக வளர்ச்சியடைந்ததாய் கருதப்பட்ட ‘இணைப்புகளில்’ ஒன்றும் இல்லாமல் போனது நியாயமாய் தோன்றுகிறதா?

புதைப்படிவ அத்தாட்சி எவ்வளவு உள்ளது?

5அறிவியல் புத்தகங்கள், பொருட்காட்சி சாலையிலுள்ள பொருட்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் காணப்படும் விவரங்களைப் பார்க்கையில் மனிதக் குரங்குபோன்ற பிராணிகளிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருப்பதாக தோன்றலாம். ஆனால் அது உண்மையா? உதாரணமாக, டார்வினுடைய காலத்தில் இதைப் பற்றிய புதைப்படிவ அத்தாட்சி எவ்வளவு இருந்தது? அப்படிப்பட்ட அத்தாட்சிகள் அடிப்படையில்தான் அவர் தன் கொள்கையை தோற்றுவித்தாரா?

6 த புல்லட்டீன் ஆஃப் தி அட்டாமிக் சயன்டிஸ்ட்ஸ் பின்வருமாறு கூறுகிறது: “மனித பரிணாமம் பற்றிய ஆரம்பகால கொள்கைகளை ஒருவர் உற்று கவனித்தாலே அவை உண்மையில் விசித்திரமானவை என்பது அம்பலமாகிவிடும். அந்த ஆரம்பகால கொள்கைகளைப் ‘புதைப்படிவம் இல்லாதவை’ என்றே டேவிட் பில்பீம் விவரித்துள்ளார். அதாவது, மனித பரிணாமம் பற்றி இப்போதுள்ள சில கொள்கைகளுக்கு புதைப்படிவ அத்தாட்சி அவசியம் தேவை என்றே சிலர் நினைப்பர். ஆனால், அந்தக் கொள்கைமீது எந்தப் பாதிப்புமே ஏற்படுத்த முடியாதளவு மிகவும் குறைவான புதைப்படிவங்களே உள்ளன அல்லது ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஆகவே, மனிதனின் நெருங்கிய உறவினர்கள் என சொல்லப்பட்டவற்றிற்கும் ஆரம்பகால மனிதனின் புதைப்படிவத்திற்கும் இடையில் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கற்பனையே.” அதற்கான காரணத்தையும் இந்த அறிவியல் பத்திரிகை விளக்குகிறது: “பரிணாமத்தை, அதிலும் மனித பரிணாமத்தை நம்பவேண்டும் என மக்கள் விரும்பினர், அதன் காரணமாக அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவுகளும் பாதிக்கப்பட்டன.”5

7ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தேடிய பிறகு, “குரங்கு மனிதர்” பற்றி இப்போது எவ்வளவு புதைப்படிவ அத்தாட்சி கிடைத்துள்ளது? “இத்துறையில் வேலை செய்பவர்களின் முடிவுகளை ஆதரிக்க மிகவும் குறைவான அத்தாட்சிகளே கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது”6 என்று ரிச்சர்ட் லீகே கூறினார். நியூ சயன்டிஸ்ட் இவ்வாறு கூறியது: “புதைப்படிவ மனிதனுக்கு தரப்படும் அத்தாட்சியை வைத்துப் பார்த்தால், இந்த ஆராய்ச்சி தொல்லுயிரியலின் அல்லது மனித இயலின் ஒரு கிளை பிரிவாக கருதப்பட மட்டுமே தகுதி வாய்ந்தது. . . . ஏனெனில் கிடைத்துள்ள புதைப்படிவங்களும் முழுமை பெறாதவை, மாதிரி படிவங்களும் [specimens] துண்டு துண்டாகவே உள்ளன, அதனால் எந்தவொரு தீர்மானத்திற்கும் வரமுடியாது.”7

8அதைப் போலவே ஆரம்பங்கள் (Origins) என்ற புத்தகமும் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “மனிதனை நோக்கிச் செல்லும் பரிணாம பாதையில் நாம் முன்னேறுகையில் அது இன்னும் தெளிவற்றதாகவே ஆகிறது; புதைப்படிவ அத்தாட்சிகள் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.”8 சயன்ஸ் பத்திரிகை கூடுதலாக கூறுகிறது: “அறிவியல் தரும் முக்கிய அத்தாட்சி ஒருசில எலும்புத் துண்டுகளே. இதை வைத்து மனித பரிணாமம் விவரிக்கப்படுகிறது. இது, யுத்தமும் சமாதானமும் (War and Peace) என்ற புத்தகத்திலிருந்து கண்மூடித்தனமாக 13 பக்கங்களை எடுத்து, அதன் மையக் கதையை மறுபடியும் உருவாக்குவதற்கு சமம் என மனித இயல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.”9

9“குரங்கு மனிதர்” பற்றிய புதைப்படிவ அத்தாட்சி எவ்வளவு குறைவாக உள்ளது? பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள். நியூஸ்வீக்: “‘அந்தப் புதைப்படிவங்களை எல்லாம் ஒரே ஒரு மேசை மேல் வைத்துவிடலாம்’ என டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்வின் சிம்ஸ் கூறினார்.”10 த நியூ யார்க் டைம்ஸ்: “மனிதனுடைய முன்னோர் பற்றிய எஞ்சிய புதைப்படிவங்களை எல்லாம் ஒரு பில்லியர்டு மேசைமீது வைத்துவிடலாம். இதை வைத்துக்கொண்டு கடந்த பல கோடிக்கணக்கான வருட மூடுபனியை எப்படி விலக்கிப் பார்க்க முடியும்.”11 சயன்ஸ் டைஜஸ்ட்: “மனித பரிணாமத்திற்கு ஆதரவாக நம்மிடமுள்ள அத்தாட்சிகள் எல்லாவற்றையும் ஒரே ஒரு சவப்பெட்டிக்குள் வைத்தாலும் இன்னும் இடமிருக்கும் என்பதே உண்மை! . . . உதாரணமாக, நவீனகால மனிதக் குரங்குகள் எங்கிருந்தோ திடீரென்று குதித்தன என்றே தோன்றுகிறது. அவற்றிற்கு கடந்த காலமும் இல்லை, புதைப்படிவ பதிவும் இல்லை. நேர்மையாக சொல்லப்போனால், நவீன மனிதனின்​—⁠நிமிர்ந்து நடைபோடும், நிர்வாணமாக தோன்றும், கருவிகளை உருவாக்கும், அபார மூளையுடைய மனிதனின்​—⁠ஆரம்பமும் மர்மமான ஒன்றே. நமக்கு நாமே நேர்மையாக இருந்தோமென்றால், நிமிர்ந்த, நிர்வாணமான, கருவிகள் செய்கின்ற, வளர்ச்சியடைந்த மூளையுடைய நவீனகால மனிதனின் உண்மையான ஆரம்பமும் அதேபோல் மர்மமான ஒன்றே.”12

10நியாயமாய் சிந்திக்கும், காரியங்களைத் திட்டமிடும், புதிது புதிதாக கண்டுபிடிக்கும், அறிவை வளர்த்துக்கொள்ளும், சிக்கலான மொழிகளை கற்று உபயோகிக்கும் திறமைகளுள்ள நவீனகால மனிதர்கள் புதைப்படிவ பதிவில் திடீரென்றே தோன்றுகின்றனர். த மிஸ்மெஷர் ஆஃப் மேன் என்ற தன் புத்தகத்தில் கௌல்ட் இவ்வாறு கூறுகிறார்: “சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு புதைப்படிவ பதிவில் மனித இனம் (Homo sapiens) தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே மூளையின் அளவில் அல்லது அமைப்பில் உயிரியல் மாற்றம் ஏற்பட்டதற்கு எந்த அத்தாட்சியுமே கிடையாது.”13 ஆகவே, உள்ளுக்குள் இருக்கும் பிரபஞ்சம் (The Universe Within) என்ற புத்தகம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது: “மிகவும் விசேஷித்த மூளையுடைய நவீனகால மனிதனை எவ்வாறு பரிணாமத்தால் . . . திடீரென உருவாக்க முடிந்தது?”14 பரிணாமம் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது. அப்படியென்றால், மிகவும் சிக்கல் வாய்ந்த, வித்தியாசமான உயிரினமாக மனிதன் படைக்கப்பட்டிருப்பானோ?

எங்கே அந்த “இணைப்புகள்”?

11ஆனால், மனிதனுக்கும் மனிதக் குரங்குபோன்ற மிருகங்களுக்கும் இடையில் தேவைப்படும் ‘இணைப்புகளை’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர் அல்லவா? அத்தாட்சியின்படி பார்த்தால், இல்லை என்பதே பதில். “நவீனகால மனிதன் திடீரென தோன்றியதை விளக்கும் இணைப்பு ஒன்றுமில்லை”15 என சயன்ஸ் டைஜஸ்ட் குறிப்பிடுகிறது. நியூஸ்வீக் கூறியதாவது: “மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் மத்தியிலுள்ள காணாமற்போன இணைப்பு . . . மாயப் பிராணிகளின் ஒரு பெரும் தொகுதியில் மிகவும் கவர்ச்சிகரமானது மட்டுமே. புதைப்படிவ பதிவிலோ இணைப்புகள் இல்லாதிருப்பது இயல்பானதே.”16

12இணைப்புகள் எதுவுமே இல்லாததால், கிடைக்கும் குறைவான அத்தாட்சிகளை வைத்து “மாயப் பிராணிகள்” உருவாக்கப்பட்டு, அவை உண்மையில் இருந்ததைப் போல காட்டப்படுகின்றன. முரண்பாடு எழுவதற்கான காரணத்தை இது விளக்குகிறது. அதை ஓர் அறிவியல் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “மனிதக் குரங்குபோன்ற மூதாதையரிலிருந்து மெதுமெதுவாக மனிதர்கள் பரிணமித்தனர். வேறுசில விஞ்ஞானிகள் கூறுவதுபோல, ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு திடீரென தாவவில்லை. . . . ஆனால், ஏறக்குறைய இதே தகவலை வைத்து ஆராயும் மனித இயல் நிபுணர்களில் வேறுசிலரோ இதற்கு நேர்மாறான முடிவிற்கே வந்துள்ளனர்.”17

13ஆகவே, ஜர்னல் ஆஃப் த ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் ஆஃப் எடின்பர்க்-⁠ல் எழுதுகையில் பிரபல உடற்கூறியல் நிபுணர் சாலி ஸுக்கர்மேன் கூறியவற்றை நம்மால் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. “என்றுமே தோல்வியை ஏற்காத உடற்கூறியல் மற்றும் உயிரியல் நிபுணர்களுக்கு பரிசுத்த பானபாத்திரமாக திகழும் மனிதனுடைய பரிணாமத்தில் புகழ்பெற்று விளங்கும் ‘காணாமற்போன இணைப்பைத்’ தேடுவது, 50-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் ஊகங்களையும் கட்டுக்கதைகளையும் ஊட்டி வளர்த்திருக்கிறது.”18 அதற்கு எதிரான அத்தாட்சிகள் இருந்தபோதிலும், பெரும்பாலும் உண்மைகள் அசட்டை செய்யப்பட்டு, அன்றைய பிரபல கருத்தே ஆதரித்து பேசப்பட்டது என்று அவர் கூறினார்.

மனிதனின் “குடும்ப மரபுவழி”

14இதன் காரணமாக, தரம் குறைந்த மிருகங்களிலிருந்து மனிதன் பரிணமித்ததாக கருதி வரையப்படும் “குடும்ப மரபுவழி” (“family tree”) சித்திரம் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளது. உதாரணமாக, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள், “ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்களை எல்லாம் பரிணாம மாற்றங்களுக்கான ஓர் ஒழுங்கான வரிசையில் அடுக்கிவிடலாம் என்ற எண்ணத்தைக் குலைத்துவிட்டன”19 என ரிச்சர்ட் லீகே கூறினார். இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அறிக்கை செய்த ஒரு செய்தித்தாள் இவ்வாறு கூறியது: “மனித இயல் பற்றிய ஒவ்வொரு புத்தகமும், மனித பரிணாமம் பற்றிய ஒவ்வொரு கட்டுரையும், மனிதனின் குடும்ப மரபுவழி பற்றிய ஒவ்வொரு படமும் குப்பையில் தூக்கியெறியப்பட வேண்டும். அவை எல்லாமே தவறு என்பது தெளிவாகி உள்ளது.”20

15மனித பரிணாமம் பற்றிய கோட்பாட்டளவான குடும்ப மரபுவழி சித்திரம், முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் தூக்கியெறியப்பட்ட ‘இணைப்புகளின்’ மிச்சமீதங்களால் குப்பை மேடாகிவிட்டது. த நியூ யார்க் டைம்ஸ்-⁠ல் வந்த ஒரு தலையங்கம் பின்வருமாறு கூறியது: பரிணாம அறிவியல் “ஊகத்திற்கு அவ்வளவு அதிக இடம்கொடுப்பதால் மனிதன் எப்படி தோன்றினான் என்பதைப் பற்றிய கொள்கைகள் அந்த விஷயத்தைவிட அதை எழுதியவரைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. . . . ஒரு புதிய மண்டையோட்டைக் கண்டுபிடிப்பவர் மனிதனின் குடும்ப மரபுவழி சித்திரத்தை அநேகமாக மாற்றியே வரைகிறார்; அதிலும் தான் கண்டுபிடித்த மண்டையோடே படிப்படியாய் மனிதனுடையதாக மாறியது என்று வலியுறுத்திக் காட்டும்படி அதை மையக்கோட்டில் வைத்து அந்தச் சித்திரத்தை வரைகிறார்; அதே சித்திரத்தில், மற்றவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரயோஜனமற்றது என்பது போல் அவற்றை ஓரங்கட்டிவிடுகிறார்.”21

16பரிணாமவாதிகளான நைல்ஸ் எல்ட்ரெட்ஜ் மற்றும் இயன் டாட்டர்சால் எழுதிய மனித பரிணாமம் பற்றிய கட்டுக்கதைகள் (The Myths of Human Evolution) என்ற புத்தகத்தை டிஸ்கவர் பத்திரிகை விமர்சித்தது. அந்த ஆசிரியர்கள் குடும்ப மரபுவழி சித்திரத்தை முழுமையாக தவிர்த்துவிட்டனர் என டிஸ்கவர் கூறியது. ஏன் தவிர்த்தனர்? அதே பத்திரிகை சொல்கிறது: “மனித இனத்தின் மூதாதையரை உண்டாக்கும் அந்த இணைப்புகளைப் பற்றி ஊகிக்கத்தான் முடியும். . . . மனிதன் தன் மூதாதையருக்காக தேடுவது வீணே என எல்ட்ரெட்ஜ் மற்றும் டாட்டர்சால் உறுதியாக கூறுகின்றனர். . . . அத்தாட்சி இருந்திருந்தால், ‘மனித இனத்தோடு தொடர்புடைய புதைப்படிவங்கள் கிடைக்க கிடைக்க மனித பரிணாமம் இன்னும் தெளிவாக ஆகும் என்றுதான் எவரும் எதிர்பார்ப்பர். ஆனால் நிகழ்ந்திருப்பதோ அதற்கு நேர் எதிர்மாறானது’ என்றும் அடித்துக் கூறுகின்றனர்.”

17 டிஸ்கவர் பத்திரிகை இந்த முடிவுக்கு வந்தது: “ஒரு விதத்தில், மனித இனமும் மற்ற எல்லா இனங்களும் அனாதைகள்தான்; அவற்றின் பெற்றோர் பற்றிய அடையாளம் காணாமல் போயிருப்பதால் அவை அனாதைகளே.”22 பரிணாம கொள்கையைப் பொருத்தவரை அது “காணாமல்” போயிருக்கலாம். ஆனால் ஆதியாகம பதிவு, புதைப்படிவ பதிவில் காணப்படுவதைப் போலவே, நம் பெற்றோரை உண்மையில் “கண்டுபிடித்துள்ளது” அல்லவா? அவர்கள் நம்மைப் போலவே முழுமையான மனிதர்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறது அல்லவா?

18மனிதர்களும் மனிதக் குரங்குகளும் தனித்தனியாக தோன்றியதை புதைப்படிவ பதிவு தெளிவாக காட்டுகிறது. அதனால்தான், மனிதனுக்கும் மனிதக் குரங்குபோன்ற மிருகங்களுக்கும் மத்தியிலான எந்த இணைப்பும் புதைப்படிவ பதிவில் இல்லை. சொல்லப்போனால், இணைப்புகள் ஒருபோதுமே இருந்ததில்லை.

அவை பார்ப்பதற்கு எப்படியிருந்தன?

19மனிதனுடைய மூதாதையர் மனிதக் குரங்குபோல் இல்லையென்றால், உலகமுழுவதிலும் உள்ள பொருட்காட்சி சாலைகளிலும் அறிவியல் புத்தகங்களிலும் “குரங்கு மனிதர்” பற்றிய ஏராளமான படங்களும் மாடல்களும் மலிந்து கிடப்பதேன்? எதன் அடிப்படையில் இவை வரையப்பட்டன? இனத்தின் உயிரியல் (The Biology of Race) என்ற புத்தகம் பதிலளிக்கிறது: “இப்படிப்பட்ட மாடல்களின் உடலும் முடிகளும் கற்பனையின் விளைவே.” அது மேலுமாக கூறுகிறது: “தோலின் நிறம்; முடியின் நிறம், வகை, காணப்படும் இடங்கள்; உடலமைப்பு; முகத்தின் தோற்றம் ஆகிய இந்த விஷயங்களில் முற்கால மனிதன் எப்படி இருந்தான் என்பதைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது.”23

20 சயன்ஸ் டைஜஸ்ட்-⁠ம் இவ்வாறு கூறியது: “பெரும்பாலான ஓவியர்களின் கருத்துகள், அத்தாட்சிகளைவிட கற்பனையிலேயே அதிகம் சார்ந்துள்ளன. . . . மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றை ஓவியர்கள் உருவாக்க வேண்டும். அதிக பழமையான உருவத்தை வரைகையில் அது அதிகளவில் மனிதக் குரங்கைப் போல தோன்றும்படி வரைகிறார்கள்.”24 புதைப்படிவங்களைத் தேடுபவரான டோனால்ட் யோஹான்சன், “முற்றிலும் அழிந்துபோன மனிதனைப் போன்ற இனம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது என ஒருவராலும் உறுதியாக சொல்லவே முடியாது”25 என்று ஒப்புக்கொண்டார்.

21உண்மையில், “நம்முடைய கொள்கைகளைக் கற்பனை உலகிலிருந்து வெளியே கொண்டுவர போதுமான அத்தாட்சி புதைப்படிவ பதிவில்”26 இல்லை என்றே நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது. ஆக, ஒரு பரிணாமவாதி ஒப்புக்கொண்டது போலவே “குரங்கு மனிதர்” பற்றிய எல்லா மாடல்களும், “சொல்லப்போனால் கட்டுக்கதையே . . . வெறும் கற்பனைப் படைப்பே.”27 ஆகவே, மனிதன், கடவுள் மற்றும் மாந்திரீகம் (Man, God and Magic) என்ற புத்தகத்தில் ஈவார் லிஸ்னர் பின்வருமாறு கூறினார்: “ஆரம்பகால மனிதர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருவதைப் போலவே பனிக்கால மனிதர்களும் கொடூரமான மிருகங்களாகவோ, அரைக் குரங்குகளாகவோ, குறைவான அறிவுடைய குட்டையர்களாகவோ இருக்கவில்லை என்பதையும் ஏற்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, நியாண்டெர்தல் அல்லது பீக்கிங் மனிதனைக்கூட மறுபடியும் உருவாக்க எடுக்கும் எல்லா முயற்சிகளும் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமே.”28

22“குரங்கு மனிதர்” பற்றிய அத்தாட்சியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சில விஞ்ஞானிகள் பயங்கர மோசடியினால் ஏமாந்து போயிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம் 1912-⁠ல் கிடைத்த பில்ட்டௌன் மனிதன். அது உண்மையென பெரும்பாலான பரிணாமவாதிகள் சுமார் 40 வருடங்களாக ஏற்றுக்கொண்டிருந்தனர். கடைசியாக 1953-⁠ல் அது மோசடி என கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் மற்றும் ஒராங்குட்டனின் எலும்புகள் இணைக்கப்பட்டு, வயதான தோற்றமளிக்கும்படி செய்யப்பட்டது என்பது நவீன தொழில்நுட்பத்தால் அம்பலமாக்கப்பட்டது. மற்றொரு சந்தர்ப்பத்தில், மனிதக் குரங்குபோன்ற “காணாமற்போன இணைப்பு” ஒன்றின் சித்திரம் வரையப்பட்டு பத்திரிகைத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், “அத்தாட்சி” என குறிப்பிடப்பட்டது முற்றிலும் அழிந்துபோயிருந்த ஒரு வகை பன்றியின் ஒரே ஒரு பல் மட்டுமே என்பது பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.29

அவை உண்மையில் என்ன?

23“குரங்கு மனிதர்” என்று வரையப்பட்ட மாடல்கள் எல்லாம் பொய்யானவை என்றால் புதைப்படிவங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகள் எந்தப் புராதன மிருகங்களுக்கு சொந்தமானவை? மனிதனுடைய வம்சாவளியைச் சேர்ந்ததாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பாலூட்டிகளில் ஒன்று, எலிபோன்ற ஒரு சிறிய கொறிக்கும் பிராணியாகும். அது சுமார் ஏழு கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. டோனால்ட் யோஹான்சன் மற்றும் மேயிட்லான் ஈடே, லூசி: மனிதவர்க்கத்தின் ஆரம்பங்கள் (Lucy: The Beginnings of Humankind) என்ற தங்கள் புத்தகத்தில் இவ்வாறு எழுதினர்: “அவை அணில்களைப் போன்ற உருவமும் அளவும் கொண்ட, பூச்சிகளைத் தின்னும் நாலு கால் பிராணிகள்.”30 அந்தப் பாலூட்டியை, “எலிபோன்ற மனித மூதாதை”31 (primate) என ரிச்சர்ட் லீகே அழைத்தார். ஆனால் இந்தச் சிறிய மிருகங்களே மனிதனின் மூதாதை என்பதை ஆதரிக்க உறுதியான அத்தாட்சி ஏதாவது உள்ளதா? ஒன்றுமே இல்லை, மாறாக கண்மூடித்தனமான ஊகமே உள்ளது. அவற்றை மற்ற எவற்றோடும் இணைக்கும் எந்த இடைப்பட்ட நிலைகளும் கிடையாது. அவை சிறிய, கொறிக்கும் பிராணிகளாகவேதான் இருந்தன.

24பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் வரிசையில் அடுத்ததாக வருவது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்களாகும்; சுமார் 4 கோடி வருடங்களுக்குப் பிறகு தோன்றியதாக கருதப்படும் இவை எஜிப்டோபிதெகஸ் அதாவது எகிப்திய மனிதக் குரங்கு என்று பெயரிடப்பட்டன. இந்தப் பிராணிகள் சுமார் 3 கோடி வருடங்கள் முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகின்றன. பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் இந்தச் சிறிய பிராணியின் படங்கள் பின்வரும் தலைப்புகளில் வெளிவந்துள்ளன: “குரங்கு போன்ற பிராணிதான் நம் மூதாதை.” (டைம்)32“குரங்கு போன்ற ஆப்பிரிக்க மிருகமே மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் பொதுவான மூதாதை என அழைக்கப்படுகிறது.” (த நியூ யார்க் டைம்ஸ்)33 “எஜிப்டோபிதெகஸ் உயிரோடிருக்கும் மனிதக் குரங்குகளுக்கும் நமக்கும் பொதுவான மூதாதை.” (ஆரிஜின்ஸ்)34ஆனால் இதற்கு முன்பு சொன்ன கொறிக்கும் பிராணிக்கும் இதற்கும் மத்தியிலுள்ள இணைப்புகள் எங்கே? பரிணாம வரிசையில் இதற்கு அடுத்ததாக வைக்கப்படுவதுடன் இருக்க வேண்டிய இதன் இணைப்புகள் எங்கே? ஒன்றுமே கண்டுபிடிக்கப்படவில்லை.

‘குரங்கு மனிதரின்’ எழுச்சியும் வீழ்ச்சியும்

25புதைப்படிவ பதிவில் மற்றொரு மாபெரும் இடைவெளிக்கு பிறகு, மனிதனைப் போன்ற முதல் மனிதக் குரங்கு என மற்றொரு புதைப்படிவ பிராணி முன்வைக்கப்பட்டது. சுமார் 140 லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்பட்ட அது ராமாபிதெகஸ், ராமரின் மனிதக் குரங்கு என அழைக்கப்பட்டது (இந்திய புராணக்கதைகளில் வரும் இளவரசனே ராமர்). அதன் புதைப்படிவங்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதைப்படிவங்கள் அடிப்படையில் மனிதக் குரங்கு போன்ற ஒரு பிராணி உருவாக்கப்பட்டது. அது இரண்டு கால்களில் செல்லும் நிமிர்ந்த பிராணியாக வரையப்பட்டது. அதைப் பற்றி ஆரம்பங்கள் கூறியதாவது: “இத்தருணத்தில் நாம் சொல்ல முடிந்ததெல்லாம், இதுவே மனித குடும்பத்தின் முதல் பிரதிநிதியாகும் என்பதே.”35

26எந்த புதைப்படிவ அத்தாட்சி அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? அதே பிரசுரம் தொடர்கிறது: “ராமாபிதெகஸ் சம்பந்தப்பட்ட அத்தாட்சி போதுமானது. திட்டவட்டமான வார்த்தைகளில் சொன்னால் ஏமாற்றமளிக்கும் வண்ணம் குறைவாகவே உள்ளது: கிடைத்திருப்பதெல்லாம் மேல் மற்றும் கீழ் தாடைகளின் சில பகுதிகளும், பற்களின் ஒரு தொகுதியுமே.”36 மனிதர்களின் மூதாதையான, நிமிர்ந்து நிற்கும் ‘குரங்கு மனிதனை’ உருவாக்க இந்த “அத்தாட்சி போதுமானது” என நீங்கள் நினைக்கிறீர்களா? இருப்பினும், பெரும்பாலும் கோட்பாட்டளவில் மட்டுமே உள்ள இந்தப் பிராணியே ‘குரங்கு மனிதனாக’ ஓவியரால் வரையப்பட்டு, பரிணாம பிரசுரங்களில் அதன் படங்கள் ஏராளமாக குவிந்தன. இவை எல்லாமே தாடையின் சில பகுதிகளையும் பற்களையும் மட்டுமே வைத்து வரையப்பட்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்படி இருந்தும் த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்ததுபோலவே, ராமாபிதெகஸ் “மனித பரிணாம மரபுவழி சித்திரத்தின் அடித்தளத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக அமர்ந்திருந்தது.”37

27ஆனால் இனிமேலும் அது உண்மையல்ல. ராமாபிதெகஸ், இன்றுள்ள நவீன நாளைய மனிதக் குரங்கு குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடையது என சமீபத்திய, அதிக முழுமையான புதைப்படிவ அத்தாட்சிகள் காண்பிக்கின்றன. ஆகவே நியூ சயன்டிஸ்ட் இப்போது கூறுவதாவது: “ராமாபிதெகஸ், மனித இனத்தின் முதல் நபராக இருந்திருக்க முடியாது.”38 இப்படிப்பட்ட புதிய தகவல் காரணமாக நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை பின்வரும் கேள்வியை எழுப்பியது: “மனிதனை நோக்கி முன்னேறும் இந்த அணிவரிசையில், இடுப்பெலும்பு, கை கால் எலும்புகள் அல்லது மண்டையோடு இல்லாமல் வெறுமனே பற்களையும் தாடையையும் வைத்து உருவாக்கப்பட்ட . . . ராமாபிதெகஸ் எவ்வாறு . . . திருட்டுத்தனமாக நுழைந்தது?”39 அந்த அத்தாட்சி கூறாத ஒன்றை கூற வைப்பதற்காக செய்யப்பட்ட இந்த முயற்சியில் பெருமளவு கற்பனைத் திறன் புகுந்து விளையாடியிருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

28இதற்கும், “குரங்கு மனித” மூதாதையரின் வரிசையில் அடுத்ததாக வைக்கப்பட்ட பிராணிக்கும் இடையே மற்றொரு அதலபாதாள இடைவெளி உள்ளது. இந்தப் பிராணியின் பெயர் ஆஸ்டிராலோபிதெகஸ், தென்னக மனிதக் குரங்கு. இதன் புதைப்படிவங்கள் தென் ஆப்பிரிக்காவில் 1920-களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு மனிதக் குரங்கு போன்ற சிறிய மண்டையோடும், பெரிய தாடை எலும்புகளும் உள்ளன; இரண்டு கால்களில் நடக்கின்ற, கூன் விழுந்த, முடி நிறைந்த, குரங்குபோல தோற்றமளிப்பதாக வரையப்பட்டது. அது சுமார் 30 அல்லது 40 லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்பட்டது. காலப்போக்கில் அதுவே மனிதனின் முன்னோடி என அநேகமாக எல்லா பரிணாமவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

29உதாரணமாக, த சோஷியல் காண்டிராக்ட் என்ற புத்தகம் இவ்வாறு கூறியது: “ஆஸ்டிராலோபிதெகஸ் இனத்தைச் சேர்ந்தவைதான் . . . உண்மையில் மனிதனின் மூதாதை என்பதை இந்தத் துறையிலுள்ள ஓரிரண்டு பேரைத் தவிர தகுதிவாய்ந்த எல்லா ஆராய்ச்சியாளர்களும் இப்போது ஒப்புக்கொள்கின்றனர்.”40 த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிவித்தது: “ஹோமோ செபியன்ஸ்-ஆக அல்லது நவீனகால மனிதனாக கடைசியில் பரிணமித்தது . . . ஆஸ்டிராலோபிதெகஸ்தான்.”41மேலுமாக, “கிடைக்கும் எல்லா அத்தாட்சிகளின்படி, நீண்டகாலம் அறியப்படாதிருந்த ஆரம்பகால மூதாதையரை மனிதர் கடைசியில் சந்தித்துவிட்டனர்” என்று மனிதன், நேரம் மற்றும் புதைப்படிவங்கள் (Man, Time, and Fossils) என்ற புத்தகத்தில் ரூத் மூர் கூறினார். “அத்தாட்சிகள் நிரம்பி வழிந்தன . . . காணாமற்போன இணைப்பைக் கடைசியில் கண்டுபிடித்துவிட்டார்கள்”42 என அவர் ஆணித்தரமாக கூறினார்.

30ஆனால் ஏதோ ஒன்றின் அத்தாட்சி அற்பமானதாக, உண்மையில் இல்லாத அல்லது பகிரங்க மோசடியாக இருந்தால், அது பொய் என என்றைக்காவது ஒரு நாள் நிரூபிக்கப்பட்டுவிடும். “குரங்கு மனிதர்” என்பதாக முற்காலத்தில் உரிமைபாராட்டிய அநேக அத்தாட்சிகளுக்கு இப்படிதான் நிகழ்ந்திருக்கிறது.

31 ஆஸ்டிராலோபிதெகஸ் விஷயத்திலும் இதுவேதான் நிகழ்ந்தது. அதன் மண்டையோடு, “மூளையின் கொள்ளளவில் சிறியதாக இருப்பது மட்டுமல்ல மனிதனுடையதிலிருந்து மற்ற அநேக விதங்களிலும் வேறுபடுகிறது”43 என்பதை கூடுதலான ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. உடற்கூறியல் நிபுணர் ஸுக்கர்மேன் பின்வருமாறு எழுதினார்: “ஆஸ்டிராலோபிதெகஸ்ஸின் மண்டையோட்டை மனித மற்றும் மனிதக் குரங்கின் மண்டையோட்டோடு ஒப்பிடுகையில் அது தோற்றத்தில் அதிகம் மனிதக் குரங்கினுடையதைப் போலத்தான் உள்ளது, மனிதனுடையதைப் போலில்லை. இதற்கு விரோதமான கருத்தை ஏற்றுக்கொள்வதை, கருப்பு நிறத்தை வெள்ளை நிறம் என அடித்து கூறுவதோடு ஒப்பிடலாம்.”44 அவர் தொடர்ந்து கூறினார்: “ஆஸ்டிராலோபிதெகஸ், ஹோமோ செபியன்ஸ்-ஐ அல்ல மாறாக இன்று உயிரோடிருக்கும் குரங்குகளையும் மனிதக் குரங்குகளையுமே ஒத்திருக்கிறது . . . என்பதை எங்கள் ஆராய்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கியுள்ளது.”45 டோனால்ட் யோஹான்சனும் இவ்வாறு கூறினார்: “ஆஸ்டிராலோபிதெகஸ் இனம் . . . மனித இனமே அல்ல.”46அதைப் போலவே, “நமது நேரடியான மூதாதையர் ஆஸ்டிராலோபிதெகஸ் இனத்திலிருந்து பரிணமித்து வந்தவர்கள் என்பதற்கு துளியும் சாத்தியம் இல்லை”47 என்று ரிச்சர்ட் லீகே கூறினார்.

32ஆஸ்டிராலோபிதெகஸ் இனத்தைச் சேர்ந்தவற்றில் எவையாவது இன்று உயிருடன் இருந்தால் அவற்றை மற்ற மனிதக் குரங்குகளுடன் சேர்த்து மிருகக்காட்சி சாலையில்தான் வைப்பார்கள். அவற்றை “குரங்கு மனிதர்” என்று யாருமே அழைக்கமாட்டார்கள். “லூசி” என்றழைக்கப்பட்ட சிறிய வகை ஆஸ்டிராலோபிதெகஸ்ஸைப் போல, உருவத்தில் அதை ஒத்திருக்கும் மற்ற புதைப்படிவ “உறவினர்கள்” விஷயத்திலும் இதுவே உண்மையாகும். அதைப் பற்றி ராபர்ட் ஜாஸ்ட்ரோ கூறுகிறார்: “மனித மூளையோடு ஒப்பிட இதன் மூளை பெரியதாக இல்லை; அது மனித மூளையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.”48 ஆக, அது வெறும் “மனிதக் குரங்கு”தான் என்பதில் சந்தேகம் ஏதுமுண்டோ? உண்மையில், ‘லூசியின்’ மண்டையோடு “சிம்பான்ஸியுடையதை அதிகம் ஒத்திருக்கிறது”49 என்று நியூ சயன்டிஸ்ட் கூறியது.

33மற்றொரு புதைப்படிவ வகை ஹோமோ எரெக்டஸ், அதாவது நிமிர்ந்த மனிதன் என அழைக்கப்படுகிறது. அதன் மூளை அளவும் வடிவமும் நவீனகால மனிதனுக்கிருப்பதைப் போலவே உள்ளது, ஆனால் அளவில் சற்று சிறியது. மேலுமாக, “இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கை கால் எலும்புகள் ஹோமோ செபியன்ஸ் உடையதைப் போலவே”50 இருப்பதாக என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. ஆனாலும் அது மனிதன் தானா இல்லையா என்பது தெளிவாய் இல்லை. அப்படியே மனிதனாக இருந்தாலும் அது வெறுமனே மனித குடும்பத்தின் ஒரு பிரிவாக இருந்து முற்றிலும் மரித்துபோயிருக்கலாம்.

மனித குடும்பம்

34நியாண்டெர்தல் மனிதன் (அதன் முதல் புதைப்படிவம் ஜெர்மனியிலுள்ள நியாண்டெர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பெயர் பெற்றது) சந்தேகத்திற்கு இடமின்றி மனிதனே. ஆரம்பத்தில் அவன் கூன் விழுந்தவனாக, முட்டாள்போல் காட்சியளிப்பவனாக, முடி நிறைந்த, குரங்குபோல் சித்தரிக்கப்பட்டான். ஆனால் அந்தத் தவறான உருவம், வியாதியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த புதைப்படிவ எலும்புக்கூட்டின் அடிப்படையில் வரையப்பட்டது என்று இப்போது அறியப்பட்டிருக்கிறது. அது முதற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அநேக நியாண்டெர்தல் புதைப்படிவங்கள், அவன் நவீனகால மனிதனைவிட அதிக வித்தியாசமானவன் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. ஐஸ் என்ற தனது புத்தகத்தில் ஃபிரெட் ஹாய்ல் இவ்வாறு கூறினார்: “நியாண்டெர்தல் மனிதன் நம்மைவிட எந்த விதத்திலும் தரம் குறைந்தவன் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.”51 இதன் காரணமாக நியாண்டெர்தல் மனிதன் பற்றிய சமீபத்திய சித்திரங்கள் நவீன தோற்றமளிக்கின்றன.

35க்ரோ-மாக்னான் மனிதன், அறிவியல் பிரசுரங்களில் அடிக்கடி தென்படும் மற்றொரு புதைப்படிவ வகையாகும். தென் பிரான்சில் அவனுடைய எலும்புகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரே அவனுக்கு சூட்டப்பட்டது. இந்த மாதிரிகள், “இன்றுள்ளவற்றோடு அவ்வளவு அதிகம் ஒத்திருப்பதால் அவை மனிதனுடையவையே என்பதை மிகவும் பிடிவாத குணமுள்ள சந்தேகவாதிகூட ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்”52 என லூசி என்ற புத்தகம் கூறியது.

36இவ்வாறு ‘குரங்கு மனிதனில்’ வைத்த நம்பிக்கை ஆதாரமற்றது என அத்தாட்சிகள் தெளிவாக காட்டுகின்றன. மாறாக, எந்த மிருகத்திலிருந்தும் வித்தியாசமானவர்களாக, தனிப்பட படைக்கப்பட்டதற்கான எல்லா அத்தாட்சிகளும் மனிதர்களில் தெள்ளத்தெளிவாக உள்ளன. மனிதர்கள் சந்ததியை உண்டுபண்ணுகையில் தங்கள் இனத்தையே விருத்தி செய்கின்றனர். நேற்றும், இன்றும் இதுவே உண்மை. முற்காலங்களில் உயிரோடிருந்த மனிதக் குரங்குபோன்ற எந்தப் பிராணியும் வெறும் மனிதக் குரங்குகள் அல்லது குரங்குகள்தான், மனிதர்கள் அல்ல. அதைப்போலவே, இன்றுள்ள மனிதனிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படும் பூர்வகால மனிதர்களின் புதைப்படிவங்கள் மனித குடும்பத்திற்குள் காணப்படும் வித்தியாசங்களே அல்லாமல் வேறல்ல. இன்றும்கூட பல்வேறு வகை மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் அல்லவா? பனை மரம் போல் ஏழடி உயரமுள்ள மனிதர்களும் உள்ளனர், சித்திரக் குள்ளர்களைப் போல் இரண்டடி ஆட்களும் உள்ளனர். அவர்களுடைய எலும்புக்கூடுகள் அளவிலும் வடிவிலும் மிகவும் வேறுபடுகின்றன. ஆனாலும் அவர்கள் எல்லாமே மனித “இனம்” தான், மிருக “இனம்” அல்ல.

தேதிகளைப் பற்றியென்ன?

37மனிதர்கள் படைக்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 6,000 வருடங்களே கடந்திருப்பதாக பைபிள் காலக்கணக்கு சுட்டிக்காட்டுகிறது. அப்படியானால், அதற்கும் வெகுகாலத்திற்கு முன்பே மனிதர்களைப் போன்ற புதைப்படிவங்கள் தோன்றியதாக நாம் ஏன் அடிக்கடி வாசிக்கிறோம்?

38பைபிள் காலக்கணக்குதான் தவறு என கண்ணை மூடிக்கொண்டு குறை சொல்லிவிடுவதற்கு பதிலாக, கதிரியக்க கணிப்பு (radioactive dating) முறைகளையே சில விஞ்ஞானிகள் பெரிதும் குறைகூறியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சில ஆராய்ச்சிகளில், “கதிரியக்க சிதைவினால் தீர்மானிக்கப்படும் தேதிகள் பெரிதும் வித்தியாசப்படுகின்றன; ஏதோ சில வருட வித்தியாசங்கள் அல்ல பெருமளவில் வேறுபடுகின்றன” என்று ஓர் அறிவியல் பத்திரிகை காண்பித்தது. அது தொடர்ந்து கூறியது: “கடந்த 36 லட்சம் ஆண்டுகளாக மனிதன் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பதற்கு பதிலாக அவன் தோன்றி சில ஆயிரம் வருடங்களே கடந்திருக்கலாம்.”53

39கதிரியக்க கரிய “கடிகாரம்” (radiocarbon “clock”) அதற்கு ஓர் உதாரணமாகும். இந்தக் கதிரியக்க கரியக் கணிப்பு முறையை, உலகமுழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் இருபதிற்கும் அதிகமான வருடங்கள் போராடிய பிறகு கண்டுபிடித்தனர். மனிதனின் பூர்வகால சரித்திரத்திலிருந்து கிடைத்த கலைப்பொருட்களைத் துல்லியமாக கணிக்க இதுவே மிகவும் சிறந்த முறை என பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆனால், குறிப்புகளை ஒத்துப் பார்ப்பதற்காக உலக முழுவதிலும் உள்ள நிபுணர்களின் ஒரு மாநாடு ஸ்வீடனிலுள்ள உப்சாலாவில் கூடியது. அதில் கதிரியக்க வேதியியலாளர்கள், புதைபொருள் நிபுணர்கள், மண்ணியல் நிபுணர்கள் ஆகியோரும் அடங்கியிருந்தனர். அந்த மாநாட்டின் அறிக்கை, அவர்களுடைய அளவுகோல்களுக்கு ஆதாரமாக சேவித்த அடிப்படை ஊகங்களே குறைந்தளவு அல்லது பெருமளவு நம்ப முடியாதவை என காண்பித்தது. அதற்கு ஓர் உதாரணம் வேண்டுமா? வளிமண்டலத்தில் கதிரியக்க கரியம் உண்டாகும் வேகம் முற்காலத்தில் ஒரே சீராக இருக்கவில்லை என்பதையும் சுமார் பொ.ச.மு. 2,000 அல்லது அதற்கு முற்பட்ட காலத்திய பொருட்களின் தேதிகளைக் கணிக்க இந்த முறை அவ்வளவு நம்பத்தக்கதல்ல என்பதையும் அது கண்டறிந்தது.54

40மனிதன் இந்தப் பூமியில் பல லட்சக்கணக்கான வருடங்கள் அல்ல, மாறாக சில ஆயிரம் வருடங்களே வாழ்ந்திருக்கிறான் என்றே நம்பத்தக்க அத்தாட்சிகள் காட்டுகின்றன என்பதை மனதில் வையுங்கள். உதாரணமாக, பூமியின் விதி (The Fate of the Earth) என்ற புத்தகத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “வெறுமனே ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் வருடங்கள் முன்புதான் . . . நாகரிகம் ஆரம்பமானது; அதனால்தான் ஒரு மனித உலகை உருவாக்குவது சாத்தியமானது.”55 கடந்த இருபது லட்சம் வருடங்கள் (The Last Two Million Years) என்ற புத்தகம் கூறுவதாவது: “பழைய உலகில், பசுமைப் புரட்சியில் ஏற்பட்ட அதிமுக்கியமான படிகளில் பெரும்பாலானவை கி.மு. 10,000 முதல் 5000 வரையில்தான் ஏற்பட்டன.” அது மேலும் கூறுவதாவது: “மனிதன், கடந்த 5000 வருடங்களாகத்தான் எழுதப்பட்ட பதிவுகளை விட்டுச் சென்றுள்ளான்.”56 நவீனகால மனிதன் பூமியில் திடீரென்று தோன்றியதாக புதைப்படிவம் காண்பிப்பதும், நம்பத்தக்க சரித்திர பதிவுகள் சமீபத்தியவைதான் என ஒப்புக்கொள்ளப்படுவதும், பூமியில் மனித வாழ்க்கைக்கான பைபிளின் காலக்கணக்கோடு ஒத்திருக்கின்றன அல்லவா?

41டபிள்யூ. எஃப். லிப்பி என்பவர் கதிரியக்க கரியக் கணிப்பில் முன்னோடியும் நோபல் பரிசு பெற்ற அணுக்கரு இயற்பியல் வல்லுனரும் ஆவார். இதைப் பற்றி அவர் சயன்ஸ் என்ற புத்தகத்தில் கூறியதைக் கவனியுங்கள்: “கணிப்பு முறை ஆராய்ச்சியின் வளர்ச்சியில் இரண்டு நிலைகள் உள்ளன; அவை, சரித்திரக் காலம், சரித்திரத்திற்கு முந்தைய காலம் ஆகியவற்றில் கிடைக்கும் பொருட்களின் தேதிகளைக் கணிப்பதே. சரித்திரம் வெறும் 5000 வருடங்கள்தான் பழமையானது என எங்கள் ஆலோசகர்கள் கூறியபோது ஆர்னால்டுக்கும் [உடன்வேலை செய்பவர்] எனக்கும் தூக்கிவாரிப் போட்டது. . . . இந்த ஒரு சமுதாயம் அல்லது தோண்டியெடுக்கப்பட்ட இந்த ஓர் இடம் 20,000 வருடங்கள் பழமையானது என்ற குறிப்புகளை வாசிக்கிறோமே! இந்த எண்களை, இந்தப் புராதன காலங்களைப் பற்றி நுட்பமாக அறியவே முடியாது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.”57

42ஆங்கில எழுத்தாளரான மால்கம் மக்கரிட்ஜ் பரிணாமம் பற்றிய ஒரு புத்தகத்தை மறு ஆய்வு செய்கையில் பரிணாமத்திற்கு போதுமான அத்தாட்சி இல்லையென குறிப்பிட்டார். அப்படியிருந்தும் கண்மூடித்தனமான ஊகங்கள் தழைத்தோங்கின என்றும் கூறினார். பிறகு, “ஒப்பிடுகையில் ஆதியாகமப் பதிவு அதிக தெளிவாய் இருப்பதாக தோன்றுகிறது; மனிதர்களையும் அவர்களுடைய நடத்தையையும் பற்றி நாம் அறிந்திருப்பதோடு அதிகம் ஒத்திருக்கும் சான்றாவது அதற்கு உள்ளது” என்றும் கூறினார். மேலுமாக, மனிதன் பரிணமிக்க பல லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்தன என்ற நிரூபிக்கப்படாத உரிமைபாராட்டல்களும், “ஒரு மண்டையோடு திடீரென்று மற்றொன்றாக மாறியது என்பதும்கூட, வெறும் கற்பனைக் கதைதான் என்பது [பரிணாம] கட்டுக்கதையில் சிக்கிக்கொள்ளாத எவருக்கும் தெளிவாக தெரியும்” என்றார். மக்கரிட்ஜ் இவ்வாறு கூறி முடித்தார்: “இப்படிப்பட்ட முட்டாள்தனமான, நம்பமுடியாத ஒரு கொள்கை, இருபதாம் நூற்றாண்டினரின் மனங்களை இவ்வளவு எளிதாக கொள்ளைக் கொண்டது எப்படி என்பதைக் குறித்தும் எப்படி இவ்வளவு பரவலாகவும் கண்மூடித்தனமாகவும் பொருத்தப்பட்டது என்பதைக் குறித்தும் எதிர்கால சந்ததி நிச்சயம் மூக்கின் மேல் விரல்வைக்கும்; எள்ளி நகையாடும் எனவும் நான் நினைக்கிறேன்.”58

[கேள்விகள்]

1, 2. நம்முடைய மூதாதையர் எவை என பரிணாமக் கொள்கை அடித்துக் கூறுகிறது?

3. மனிதனுடைய மூதாதையர் பற்றி தீர்மானிப்பதில் புதைப்படிவ பதிவு மிகவும் முக்கியம் என ஏன் கருதப்படுகிறது?

4. பரிணாமத்தின் நோக்குநிலையில், உயிரோடிருக்கும் “குரங்கு மனிதர்” காணப்படாதது ஏன் அவ்வளவு வினோதமானது?

5. மனித பரிணாமம் பற்றிய புதைப்படிவ அத்தாட்சியைக் குறித்து கிடைக்கும் விவரங்கள் என்ன எண்ணத்தை ஏற்படுத்துகின்றன?

6. (அ) மனித பரிணாமம் பற்றிய ஆரம்பகால கொள்கைகள் புதைப்படிவ அத்தாட்சியை சார்ந்தவையா? (ஆ) உறுதியான அத்தாட்சி இல்லாதிருந்தும் பரிணாமம் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

7-9. மனித பரிணாமத்திற்கு ஆதரவாக எவ்வளவு புதைப்படிவ அத்தாட்சிகள் இப்போது உள்ளன?

10. நவீனகால மனிதர்கள் தோன்றியதைப் பற்றி அத்தாட்சி எதைக் காட்டுகிறது?

11. புதைப்படிவ பதிவில் ‘இயல்பானதாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது எது?

12. இணைப்புகள் இல்லாததால் என்ன விளைவு ஏற்பட்டுள்ளது?

13. ‘காணாமற்போன இணைப்புகளைக்’ கண்டுபிடிக்க தவறியிருப்பது எதில் விளைவடைந்துள்ளது?

14, 15. அத்தாட்சிகள் காரணமாக பரிணாமத்தின் மனித “குடும்ப மரபுவழி” சித்திரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது?

16. இரண்டு விஞ்ஞானிகள் தங்களுடைய புத்தகத்தில், பரிணாமத்திற்கான ஒரு குடும்ப மரபுவழி சித்திரத்தை ஏன் தவிர்த்தனர்?

17, 18. (அ) ‘காணாமல் போனதாக’ சில பரிணாமவாதிகள் கருதுவதை ‘கண்டுபிடிக்க’ என்ன வழி? (ஆ) புதைப்படிவ பதிவு இதை எவ்வாறு ஆதரிக்கிறது?

19, 20. “குரங்கு மனிதர்” பற்றிய படங்கள் எதன் அடிப்படையில் வரையப்பட்டவை?

21. “குரங்கு மனிதர்” பற்றிய மாடல்கள் எல்லாம் உண்மையில் எப்படிப்பட்டவை?

22. பரிணாமத்தை ஆதரித்த அநேகர் எவ்வாறு ஏமாந்து போயிருக்கிறார்கள்?

23. மனிதனுடைய மூதாதை என்பதாக கருதப்பட்ட சில புதைப்படிவங்கள் உண்மையில் என்னவாய் இருந்தன?

24. எஜிப்டோபிதெகஸ்-ஐ மனிதர்களின் மூதாதை என்று நிரூபிக்க முயலுகையில் என்ன பிரச்சினைகள் எழுகின்றன?

25, 26. (அ) ராமாபிதெகஸ் பற்றி என்ன உரிமை பாராட்டப்பட்டது? (ஆ) அது, என்ன புதைப்படிவ அத்தாட்சியின் அடிப்படையில் ‘குரங்கு மனிதனாக’ காட்சியளிக்கும்படி செய்யப்பட்டது?

27. ராமாபிதெகஸ் பற்றி பின்னர் கிடைத்த அத்தாட்சி எதை நிரூபித்தது?

28, 29. ஆஸ்டிராலோபிதெகஸ் பற்றி என்ன உரிமைபாராட்டப்பட்டது?

30, 31. ஆஸ்டிராலோபிதெகஸ் பற்றி பின்னர் கிடைத்த அத்தாட்சி எதைக் காட்டுகிறது?

32. அப்படிப்பட்ட பிராணிகள் இன்று உயிருடன் இருந்தால் அவை எவ்வாறு கருதப்படும்?

33. எந்தப் புதைப்படிவ வகை மனிதனாக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம்?

34. நியாண்டெர்தல் மனிதன் பற்றிய கருத்துகள் எவ்வாறு மாறின?

35. க்ரோ-மாக்னான் மாதிரிகள் என்னவாய் நிரூபித்தன?

36. முற்கால மனிதக் குரங்குபோன்ற புதைப்படிவங்கள், மனிதனைப் போன்ற புதைப்படிவங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகள் என்ன?

37. மனிதர்கள் இந்தப் பூமியில் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பதாக பைபிள் காலக்கணக்கு சுட்டிக்காட்டுகிறது?

38. கதிரியக்க சிதைவினால் தீர்மானிக்கப்பட்ட ஆனால் பைபிள் காலக்கணக்கிற்கு முரணாக உள்ள தேதிகள், பைபிள் தவறு என்று நிரூபிக்கின்றனவா?

39. கதிரியக்க “கடிகாரம்” எப்போதும் நம்பத்தக்கதா?

40. மனித இனத்தின் வயது பற்றிய பைபிளின் காலக்கணக்கை சரித்திர பதிவுகள் எவ்வாறு ஆதரிக்கின்றன?

41. கதிரியக்க கரியக் கணிப்பில் முன்னோடியாக இருக்கும் ஒருவர் “சரித்திரத்திற்கு முந்தைய” கால தேதிகளைப் பற்றி என்ன கூறினார்?

42. பரிணாம மற்றும் ஆதியாகம விவரப்பதிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றி ஓர் ஆங்கில எழுத்தாளர் என்ன கூறினார்?

[பக்கம் 84-ன் சிறு குறிப்பு]

“தரம் குறைந்த” மனிதக் குரங்குகளும் மற்ற குரங்குகளும் உயிரோடிருக்க, “உயர்தரமான” “குரங்கு மனிதன்” மட்டும் ஏன் உயிரோடில்லை?

[பக்கம் 85-ன் சிறு குறிப்பு]

மனித பரிணாமம் பற்றிய ஆரம்பகால கொள்கைகள் எல்லாம் “பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கற்பனையே”

[பக்கம் 85-ன் சிறு குறிப்பு]

“விரல்விட்டு எண்ணுமளவு மிகவும் குறைவாகவுள்ள எலும்புகளின் ஒரு தொகுதியே . . . அடிப்படை அறிவியல்பூர்வ அத்தாட்சியாகும்”

[பக்கம் 87-ன் சிறு குறிப்பு]

“புகழ்பெற்று விளங்கும் ‘காணாமற்போன இணைப்பைத்’ தேடுவது, . . . ஊகங்களையும் கட்டுக்கதைகளையும் ஊட்டி வளர்த்திருக்கிறது”

[பக்கம் 88-ன் சிறு குறிப்பு]

“மனிதனின் குடும்ப மரபுவழி பற்றிய ஒவ்வொரு படமும் குப்பையில் தூக்கியெறியப்பட வேண்டும்”

[பக்கம் 90-ன் சிறு குறிப்பு]

“நம்முடைய கொள்கைகளைக் கட்டுக்கதை என்ற கிணற்றிலிருந்து வெளியே எடுக்க போதுமான அத்தாட்சி புதைப்படிவ பதிவில்” இல்லை

[பக்கம் 93-ன் சிறு குறிப்பு]

“ராமாபிதெகஸ், மனித இனத்தின் முதல் நபராக இருந்திருக்க முடியாது”

[பக்கம் 95-ன் சிறு குறிப்பு]

“நியாண்டெர்தல் மனிதன் நம்மைவிட எந்த விதத்திலும் தரம் குறைந்தவன் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை”

[பக்கம் 98-ன் சிறு குறிப்பு]

“இப்படிப்பட்ட முட்டாள்தனமான, நம்பமுடியாத ஒரு கொள்கை, இருபதாம் நூற்றாண்டினரின் மனங்களை இவ்வளவு எளிதாக கொள்ளை கொண்டது எப்படி என . . . எதிர்கால சந்ததி நிச்சயம் மூக்கின் மேல் விரல்வைக்கும்”

[பக்கம் 94-ன் பெட்டி/படங்கள்]

ஆஸ்டிரலொபிதெகஸ் மனிதனின் மூதாதையாக, ‘காணாமல்போன இணைப்பாக’ ஒரு காலத்தில் கருதப்பட்டது. இப்பொழுதோ, அதன் மண்டையோடு “அதிகம் மனிதக் குரங்கினுடையதைப் போலத்தான் உள்ளது, மனிதனுடையதைப் போலில்லை” என்று சில விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர்

[படங்கள்]

ஆஸ்டிரலொபிதெகஸ் மண்டையோடு

சிம்பான்ஸி மண்டையோடு

மனித மண்டையோடு

[பக்கம் 84-ன் படம்]

மனிதனுக்கும் மிருகத்திற்கும் மத்தியிலான இணைப்பை, இன்று உயிரோடிருப்பவற்றில் காண முடியாததால் அது புதைப்படிவத்தில் கிடைக்கும் என பரிணாமவாதிகள் நம்பினர்

[பக்கம் 86-ன் படம்]

“ஹோமோ செபியன்ஸ் புதைப்படிவ பதிவில் தோன்ற ஆரம்பித்த சமயத்திலிருந்தே மூளையின் அளவில் அல்லது அமைப்பில் உயிரியல் சார்ந்த மாற்றம் ஏற்பட்டதற்கான எந்த அத்தாட்சியுமே கிடையாது” என பரிணாமவாதி ஒருவர் ஒப்புக்கொள்கிறார்

[பக்கம் 89-ன் படம்]

‘குரங்கு மனிதரின்’ சித்திரங்கள் எதன் அடிப்படையில் வரையப்பட்டுள்ளன? பரிணாமவாதிகளின் பதில்கள் இதோ: “கற்பனையே,” “அநேக சமயங்களில் கட்டுக்கதையே,” “வெறும் கற்பனைத் திறனே”

[பக்கம் 91-ன் படங்கள்]

எலி போன்ற ஒரு வகை கொறிக்கும் விலங்குதான் மனிதனின் மூதாதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு தொடர்பைக் காட்டும் புதைப்படிவ அத்தாட்சி எதுவுமே இல்லை

குரங்கு போன்ற இந்த மிருகம் நம் மூதாதைகளில் ஒன்று என அழைக்கப்பட்டுள்ளது. இதை ஆதரிப்பதற்கோ புதைப்படிவ அத்தாட்சி ஒன்றுமேயில்லை

[பக்கம் 92-ன் படங்கள்]

ராமாபிதெகஸ்-⁠ன் பல்லையும் தாடை எலும்பின் சில பகுதிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு அது “மனித குடும்பத்தின் முதல் பிரதிநிதி” என அறைகூவல் விடுத்தனர். அது தவறென்று கூடுதலான அத்தாட்சிகள் நிரூபித்தன

[பக்கம் 96-ன் படம்]

புதைப்படிவ பதிவில் இருப்பதைப் போலவே இன்றும் மனிதர்களின் எலும்பு அமைப்பிலும் அளவிலும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. ஆனாலும் எல்லாமே மனித “இனம்” தான்

[பக்கம் 97-ன் படம்]

மனிதக் குரங்குகளிலிருந்து வித்தியாசமானவர்களாக, தனிப்பட படைக்கப்பட்டதற்கான எல்லா அடையாளங்களும் மனிதர்களில் தெள்ளத்தெளிவாக உள்ளன

[பக்கம் 90-ன் வரைப்படம்/படம்]

போலி என நிரூபிக்கப்படும் வரை, 40 வருடங்களாக பிள்ட்டௌன் மனிதன் ‘காணாமற்போன இணைப்பாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தான். ஒராங்குட்டனின் தாடை மற்றும் பற்களின் சில பகுதிகள், மனித மண்டையோட்டின் சில பகுதிகளோடு சேர்க்கப்பட்டிருந்தன

வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கருப்பான பகுதிகள், மனித மண்டையோட்டின் துண்டுகள்

வெள்ளையான பகுதி முழுவதும் பிளாஸ்டரால் செய்யப்பட்டது

கருப்பான பகுதிகள், ஒராங்குட்டனின் தாடை மற்றும் பற்களின் துண்டுகள்