Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?

பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?

அதிகாரம் 2

பரிணாமம்​—⁠ஏன் கருத்து வேறுபாடுகள்?

டார்வின் எழுதிய உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்புப் பதிப்பு ஒன்று வெளியிடப்படவிருந்தது. அதற்கு டபிள்யூ. ஆர். தாம்ஸன் முகவுரை எழுதினார். அவர் கனடாவில், ஒட்டாவா என்ற இடத்திலிருக்கும் காமன்வெல்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயலாஜிகல் கண்ட்ரோலின் அப்போதைய இயக்குநர். முகவுரையில் அவர் குறிப்பிட்டதாவது: “பரிணாமத்திற்கான காரணங்கள் பற்றி மட்டுமல்ல, உண்மையில் அது எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்பதிலும்கூட உயிரியல் வல்லுநர்களிடையே பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாம் அறிந்ததே. இத்தகைய கருத்து வேறுபாடுகள் நிலவுவதற்கு காரணம், கைவசம் உள்ள சான்றுகளும் திருப்திகரமாக இல்லை, அச்சான்றுகளை வைத்து எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆகவே, பரிணாமம் பற்றிய கருத்து வேறுபாடுகளை அறிவியல் துறை சாராத பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுதான் நியாயமானது; அதுதான் சரியானது”a

பரிணாமக் கொள்கையை ஆதரிப்போர் அது இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மையென்று நம்புகிறார்கள். “உண்மை” என்ற வார்த்தைக்கு, “மெய் நிகழ்வு, மெய்மை, சத்தியம்” என்று ஓர் அகராதி விளக்கம் தருகிறது. இந்த விளக்கங்கள் பரிணாமத்திற்கும் அப்படியே பொருந்துவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா?

2உதாரணமாக, பூமி தட்டையாக உள்ளதென்று ஒருகாலத்தில் நம்பினார்கள். இப்போதோ அது கோள வடிவத்தில் இருப்பது துளிகூட சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. இது ஓர் உண்மை. அதேபோல, பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம், வானத்திலுள்ள எல்லாம் பூமியை வலம் வருகின்றன என்று நம்பப்பட்ட காலமும் இருந்தது. இன்றோ, பூமிதான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இதுவும்கூட ஓர் உண்மை. ஒருகாலத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்ட கோட்பாடுகளாக இருந்தவை எல்லாம் சான்றுகளின் காரணமாக இப்போது அசைக்க முடியாத உண்மை, மெய்மை, சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

3இதேபோல், பரிணாமத்திற்காக காட்டப்படும் சான்றுகளை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தால் அதை உறுதியாக நிரூபிக்க முடியுமா? இதில் அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தை சார்ல்ஸ் டார்வின் 1859-⁠ல் வெளியிட்டது முதல், பரிணாமத்தை ஏற்றுக்கொண்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மத்தியிலும்கூட அக்கொள்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இன்றோ, என்றும் இல்லாத அளவிற்கு விவாதம் பயங்கரமாக சூடுபிடித்துள்ளது. பரிணாமத்தை ஆதரிப்பவர்களிடமே இந்த விஷயத்தைப் பற்றி கேட்டுவிடுவோமே. அவர்கள் சொல்வதைக் கவனித்தால் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

பரிணாமம் தாக்கப்படுகிறது

4 டிஸ்கவர் என்ற அறிவியல் பத்திரிகை நிலைமையை இவ்வாறு விவரித்தது: “பரிணாமத்தை . . . தாக்கிப் பேசுவது கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அதற்கு எதிராக கேள்விக் கணை தொடுக்கிறார்கள். தொல்லுயிரியல் நிபுணர்கள் (paleontologists), அதாவது புதைப்படிவ (fossils) சான்றுகளை ஆராயும் விஞ்ஞானிகள் மத்தியில் டார்வின் கொள்கையைப் பற்றி நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு வளர்ந்துகொண்டே வருகிறது.”1 ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து (The Neck of the Giraffe) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃபிரான்ஸிஸ் ஹிட்சிங் ஒரு பரிணாமவாதி. அவர் கூறியதாவது: “டார்வினின் கொள்கையே உயிரியலை ஒன்றிணைக்கும் மாபெரும் கொள்கை என்பதாக விஞ்ஞான உலகம் தன் இரு கரம் நீட்டி வரவேற்றது. இப்போது ஒண்ணேகால் நூற்றாண்டு ஆகியும் அது இன்னும் பயங்கர சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.”2

5பரிணாம நிபுணர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்ட முக்கிய மாநாடு ஒன்று சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் என்ற இடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பிறகு வெளிவந்த ஓர் அறிக்கை இவ்வாறு கூறி முடித்தது: “[பரிணாமம்], கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மிகப் பரவலாகவும், பெரிய அளவிலும் புரட்சிகரமாக மாறிவருகிறது. . . . பரிணாமம் எப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்பதே உயிரியல் வல்லுநர்களிடையே இப்போது பயங்கர சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்டது. . . . இந்தச் சர்ச்சைகளுக்கு தெளிவான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை.”3

6தொல்லுயிரியல் நிபுணர் நைல்ஸ் எல்ட்ரெட்ஜ் புகழ்பெற்ற ஒரு பரிணாமவாதி. அவர் கூறியதாவது: “பரிணாம உயிரியல் ஒருகாலத்தில் திருப்திகரமானதாக, சந்தேகத்திற்கு இடமின்றி ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது; ஆனால் கடந்த இருபது வருடங்களாக அதற்குள் சந்தேகம் நுழைந்துவிட்டதால் உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.” பரிணாமத்திற்காக “குரலெழுப்புவோர் மத்தியில்கூட ஒருமித்த கருத்து துளியும் இல்லை” என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: “இப்போதெல்லாம் விவாதங்கள் உண்மையிலேயே பயங்கரமாக சூடுபிடித்துள்ளன . . . எத்தனை உயிரியல் வல்லுநர்கள் இருக்கிறார்களோ அத்தனை வித்தியாசமான மையப் பொருள்கள் [பரிணாமத்தில்] இருக்குமோ என்று சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது.”4

7இதைப் பற்றி லண்டனின் டைம்ஸ் பத்திரிகை எழுத்தாளர் (பரிணாமவாதி) கிறிஸ்டஃபர் புக்கர் இவ்வாறு கூறினார்: “[பரிணாமம்] மனதைக் கவரும் மிகவும் எளிய கொள்கையாக இருந்தது. ஆனால் இதில் ஏகப்பட்ட பெரிய ஓட்டைகள் இருந்ததுதான் பிரச்சினையே. டார்வினே இதை ஓரளவு அறிந்திருந்தார்.” டார்வின் எழுதிய உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தைப் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “உயிரினங்களின் ஆரம்பத்தைப் பற்றி விளக்குவதாக பெயரெடுத்த ஒரு புத்தகம், உண்மையில் அத்தகைய விளக்கத்தை தருவதில்லை என்பதுதான் உலக மகா வேடிக்கை.”​—⁠நேரெழுத்துகள் எங்களுடையவை.

8புக்கர் மேலும் கூறியதாவது: “டார்வின் இறந்து நூறு வருடங்கள் ஆகியும், பரிணாமம் உண்மையில் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்பதற்கு சிறு ஆதாரம் அல்லது இலேசான பிடிகூட நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால், அது எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வியைப் பற்றியே சமீப வருடங்களில் பெரும் சர்ச்சைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. . . . பரிணாமவாதிகள் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக தாக்கிக்கொள்ளாததுதான் குறை; ஒவ்வொரு [பரிணாமவாத] பிரிவினரும் சில புதிய மாற்றங்கள் தேவை என வற்புறுத்துகிறார்கள்.” அவர் கடைசியாக இவ்வாறு கூறி முடித்தார்: “அது உண்மையில் எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என்பதற்கு நமக்கு ஒரு சின்ன ஐடியாக்கூட கிடைக்கவில்லை. அநேகமாக கிடைக்காமலே போகலாம்.”5

9பரிணாமவாதி ஹிட்சிங் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “பரிணாமக் கொள்கைப் பற்றிய சர்ச்சைகள் ‘டமார்’ என்று வெடித்தேவிட்டன . . . பிரபலமானவர்கள் மத்தியில் ஆதரிக்கும் அணியும், எதிர்க்கும் அணியும் தங்களை வலுவாக நிலைநாட்டிக் கொண்டன, பீரங்கி குண்டுகளைப்போல இரண்டு அணிகளும் வசை சொற்களை சரமாரியாக பொழிந்தன.” அவர் மேலுமாக, அது எதிர்காலத்தைப் பெருமளவு பாதிக்கும் அறிவுப்பூர்வமான சர்ச்சை என்றார். “நீண்டகாலமாக நம்பி வந்த அறிவியல் கருத்துக்கு எதிராக பலமான ஆதாரம் கிடைக்கையில், உடனே அதை நீக்கிவிட்டு புதிய கருத்துக்கு இடமளித்ததைப் போலவே இதற்கும் நேரிடலாம்”6 என்றும் கூறினார். பிரிட்டனின் நியூ சயன்டிஸ்ட் என்ற பத்திரிகை குறிப்பிட்டதாவது: “டார்வினுடைய பரிணாமக் கொள்கை உண்மையில் அறிவியல் ரீதியான கொள்கையே கிடையாது என . . . விவாதிக்கும் விஞ்ஞானிகளின், அதிலும் குறிப்பாக பரிணாமவாதிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது . . . இத்தகைய திறனாய்வாளர்களில் பலர் பெரும் மேதைகள்.”7

ஆரம்பம் பற்றிய குழப்பம்

10உயிர் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு வானவியல் வல்லுநர் ராபர்ட் ஜாஸ்ட்ரோ இவ்வாறு பதிலளித்தார்: “பெருத்த ஏமாற்றம் அடைந்திருக்கும் [விஞ்ஞானிகளால்] வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் தர முடியவில்லை. ஏனென்றால் உயிரற்ற பொருளிலிருந்து உயிரைப் பிறப்பிக்க இயற்கை செய்த செயலை, சோதனை செய்து பார்க்க நினைத்த வேதியியல் வல்லுநர்களுக்குத் தோல்விதான் மிஞ்சியது. அது எப்படித்தான் நிகழ்ந்ததோ என்று விஞ்ஞானிகள் முழிக்கிறார்கள்.” அவர் மேலும் கூறியதாவது: “உயிர் தோன்றியதற்கு படைப்பு காரணமல்ல என சொல்வதற்கும் விஞ்ஞானிகளிடம் சான்று இல்லை.”8

11உயிரின் ஆரம்பத்தை அறிந்துகொள்வதில் மட்டும்தான் சிக்கல் என்று சொல்ல முடியாது. கண், காது, மூளை போன்ற உடல் உறுப்புகளைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த உறுப்புகளின் சிக்கலான அமைப்புகளுக்கு முன்னால் மனிதன் உருவாக்கிய எந்தவொரு நுட்பமான கருவியும் கால் தூசுக்கு சமானம். இந்த உறுப்புகளின் எல்லா பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் பார்த்தல், கேட்டல், யோசித்தல் போன்ற செயல்களுக்கே இடமுண்டு; இந்த உண்மை பரிணாமத்திற்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. இத்தகைய உறுப்புகளின் தனித்தனி பகுதிகள் அனைத்தும் முழுமை பெறாதவரை அவற்றால் ஒரு பயனும் இருந்திருக்காது. ஆகவே கேள்வி என்னவென்றால்: பரிணாமம் சொல்கிறபடி உயிர் தற்செயலாக நிகழ்ந்திருந்தால், இவ்வளவு சிக்கலான உடல் உறுப்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் ஒன்றிணைந்திருக்க முடியுமா?

12இது ஒரு பிரச்சினை என டார்வினே ஒப்புக்கொண்டார். உதாரணத்திற்கு அவரே இவ்வாறு எழுதினார்: “கண் . . . [பரிணாமத்தினால்] தோன்றியது என நினைப்பதைப் போன்ற அபத்தமான காரியம் வேறொன்றுமில்லை என நான் மனம்விட்டு சொல்கிறேன்.”9 இதை அவர் சொல்லி நூறு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டன. ஆனால் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? இல்லையே. அதற்கு மாறாக, டார்வினின் காலத்தைவிட இன்று கண்ணைப் பற்றி அதிகம் அறியப்பட்டிருப்பதால் அவர் நினைத்ததைவிட அது இன்னும் சிக்கல் நிறைந்தது என்பது தெளிவாகியுள்ளது. எனவே ஜாஸ்ட்ரோ இவ்வாறு கூறினார்: “கண்ணை ஒருவர் வடிவமைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது; தொலைநோக்கியை வடிவமைக்கும் யாராலும் கண்ணைவிட சிறப்பான ஒன்றை உருவாக்கியிருக்க முடியாது.”10

13கண்ணுக்கே இப்படி என்றால் மனித மூளையைப் பற்றி என்ன? ஒரு சாதாரண இயந்திரமே தற்செயலாக பரிணமிக்க முடியாதென்றால் சிக்கலோ சிக்கல் நிறைந்த மூளை மாத்திரம் தானாக தோன்றியது என்றால் எப்படி? ஜாஸ்ட்ரோ இவ்வாறு கூறி முடித்தார்: “மனிதனின் கண் தற்செயலாக பரிணமித்ததென ஏற்றுக்கொள்வதே மிகவும் கடினம்; அப்படியிருக்கும்போது, நம் முன்னோர்களின் மூளை செல்களில் ஏதோ குளறுபடி நடந்ததால் மனிதனுக்கு அறிவாற்றல் பரிணமித்தது என்பதை ஏற்றுக்கொள்வது அதைவிட இன்னும் கடினமானது.”11

புதைப்படிவங்கள் பற்றிய குழப்பம்

14ஏற்கெனவே வாழ்ந்த உயிரினங்களுக்கு சான்றாக கோடிக்கணக்கான எலும்புகளையும் மற்ற அத்தாட்சிகளையும் விஞ்ஞானிகள் தோண்டி எடுத்துள்ளனர்; இவற்றிற்கு புதைப்படிவங்கள் என்று பெயர். பரிணாமம் உண்மை என்றால், ஒரு வகை உயிரினம் மற்றொரு வகை உயிரினமாக மாறியதற்கு ஏராளமான சான்றுகள் இந்தப் புதைப்படிவங்களில் கிடைக்க வேண்டும். ஆனால் சிகாகோவில் உள்ள ஃபீல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி வெளியிடும் புல்லட்டீன் இவ்வாறு குறிப்பிட்டது: “டார்வினுடைய [பரிணாம] கொள்கைக்கும் புதைப்படிவத்தில் காணப்படும் சான்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நெடுங்காலமாக கருதப்பட்டது. உயிர் தோன்றிய வரலாற்றை விளக்கிடும் டார்வினின் கொள்கைக்கு பக்க பலமாக இருப்பது புதைப்படிவங்களே என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையே அல்ல.”

15ஏன் உண்மை இல்லை? டார்வின், “புதைப்படிவ சான்றுகளால் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; ஏனென்றால் அவர் நினைத்தமாதிரி அது இருக்கவில்லை . . . சங்கிலித் தொடர்போல் மெல்லமெல்ல, படிப்படியாக பரிணாமம் நிகழ்ந்தது என்பதற்கு அன்றும்சரி, இன்றும்சரி புதைப்படிவ ஆதாரம் கிடைக்கவே இல்லை” என்று அதே புல்லட்டீன் தொடர்ந்து கூறியது. நூறு வருடங்களுக்கு மேலாக புதைப்படிவங்கள் சேகரிக்கப்பட்டன, இருந்தும் இன்றைய நிலைமை என்ன? “படிப்படியாக பரிணாமம் நிகழ்ந்ததற்கு டார்வின் காலத்தில் கிடைத்ததைவிட இன்று இன்னும் குறைவான ஆதாரங்களே நம்மிடம் உள்ளன” என்று விளக்கம் தந்தது அந்தப் புல்லட்டீன்.12ஏன் இப்படி? ஏனென்றால், ஒருகாலத்தில் பரிணாமத்தை ஆதரிக்க சில புதைப்படிவங்களை சான்றாக காட்டினார்கள். ஆனால் அவை உண்மையல்ல என்பதை இன்று கிடைத்திருக்கும் எக்கச்சக்கமான புதைப்படிவ சான்றுகள் அம்பலப்படுத்திவிட்டன.

16பரிணாமம் படிப்படியாக நிகழ்ந்திருக்கும் என்பதைப் புதைப்படிவ சான்றுகள் ஆதரிக்க தவறிவிட்டன. அதனால் பல பரிணாமவாதிகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். “ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் படிப்படியாக உருமாறியதை [புதைப்படிவம்] நிரூபிக்க தவறிவிட்டது” என புதிய பரிணாம கால அட்டவணை (The New Evolutionary Timetable) என்ற பிரசுரத்தில் ஸ்டீவன் ஸ்டான்லி கூறினார். “[பரிணாமம் படிப்படியாக] நிகழ்ந்ததை நாமறிந்த புதைப்படிவ சான்று ஆதரிக்கவில்லை, அது ஒருபோதும் அவ்வாறு இருந்ததும் கிடையாது”13 என்றும் அவர் கூறினார். நைல்ஸ் எல்ட்ரெட்ஜ் என்பவரும் இதை ஒப்புக்கொண்டார்: “ஒன்று மற்றொன்றாக மாறியதற்கான அத்தாட்சியைக் கடந்த 120 வருடங்களாக தேடியும் அது கிடைக்கவே இல்லை.”14

புதுப்புது கொள்கைகள்

17இவை அனைத்தின் காரணமாக விஞ்ஞானிகள் பலர் பரிணாமத்தைப் பற்றி புதுப்புது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்கள். சயன்ஸ் டைஜஸ்ட் இவ்வாறு விவரித்தது: “வேகமான பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இவ்வாறு ஒருகாலத்தில் கற்பனைக் கதைகளில் மாத்திரம் பிரபலமாயிருந்த கருத்துகளை இப்போது முன்வைக்கிறார்கள்.”15

18உதாரணமாக, பூமியில் உயிர் தானாக தோன்றியிருக்க முடியாது என்ற முடிவுக்கு சில விஞ்ஞானிகள் வந்துள்ளனர். ஆகவே, அது விண்வெளியில் தோன்றி, பிறகு மிதந்து மிதந்து பூமிக்கு வந்துசேர்ந்திருக்கும் என ஊகிக்கிறார்கள். ஆனால் இது, உயிர் எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற கேள்வியை இன்னும் அதிக சிக்கலாக்குகிறது. விண்வெளியில் உயிரோடிருக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலைகளை எதிர்ப்பட வேண்டும் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். அப்படியென்றால் உயிர் பிரபஞ்சத்தில் எங்கேயோ ஒரு மூலையில் தானாகவே தோன்றியது, பயங்கரமான சூழ்நிலைகளை எல்லாம் தாக்குப்பிடித்தது, பிறகு இந்தப் பூமிக்கு வந்து உயிரினங்களாக வளர்ச்சி அடைந்தது என்றா நினைக்கிறீர்கள்?

19ஒரு வகை உயிரினம் மெல்ல மெல்ல மற்றொரு வகையாக வளர்ச்சி அடைந்ததைப் புதைப்படிவ சான்றுகள் காட்ட தவறியதால் சில பரிணாமவாதிகள் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதன்படி, உயிர் சீராக மெல்ல மெல்ல உருவாகவில்லை, ஆனால் திடீரென்று உருமாறியிருக்கும் என்கிறார்கள். த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “மரபணுக்களில் திடீரென்று பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால் புதிய உயிரினங்கள் உருவாக வாய்ப்பிருக்கலாம் என உயிரியல் வல்லுநர்கள் பலர் நினைக்கிறார்கள்.”16

20இக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் சிலர் இதற்கு “நிறுத்த சமநிலை” (“punctuated equilibrium”) என்று பெயர் சூட்டியுள்ளனர். அதாவது உயிரினங்கள் ‘சமநிலையில்’ (எந்தவித மாற்றமும் இல்லாமல்) இருந்துவருகின்றன, ஆனால் எப்பொழுதாவது ஒருமுறை ஒரு “நிறுத்தம்” (வேறொன்றாக பரிணமிக்க ஒரு பெரும் தாவல்) ஏற்படுகிறது. இப்புதிய கொள்கை, கிட்டத்தட்ட எல்லா பரிணாமவாதிகளும் பல பத்தாண்டுகளாக ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. “வேகமான பரிணாம மாற்றம்​—⁠எதிர்ப்பு அலைகள்” என த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு தலைப்புச் செய்தி வந்தது. இது, இந்த இரண்டு கொள்கைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை படம்பிடித்து காட்டியது. பழைய பரிணாமக் கருத்துகளை விடாப்பிடியாய் பிடித்திருப்போர் “நிறுத்த சமநிலை” என்ற புத்தம்புதிய கருத்துக்கு “எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.17

21இதில் எந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சரி, ஒரு வகை உயிரினம் மற்றொரு வகையாக மாறியதற்கு ஒரு சின்ன சான்றாவது இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால், புதைப்படிவ சான்றுகளில் வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையே பெரும் இடைவெளிகள் உள்ளன; அதுபோலவே இன்றும், பல்வேறு உயிரினங்களிடையே உள்ள இடைவெளிகளும் தொடர்கின்றன.

22மேலும், “வலியவை உயிர் வாழ்தல்” (“survival of the fittest”) என்ற டார்வினுடைய கருத்தின் முகத்திரையும் இதனால் கிழிக்கப்படுகிறது. அவர் இதை “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு” (“natural selection”) என அழைத்தார். அதாவது, வலிய உயிரினங்கள் தொடர்ந்து வாழ இயற்கையே “தேர்ந்தெடுக்கிறது” என அவர் நம்பினார். “வலியவை” என்ற இத்தகைய உயிரினங்கள் சாதகமான புதிய உடலமைப்பைப் பெறுகையில், மெல்ல மெல்ல வேறு வகையாக பரிணமித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 125 வருடங்களாக கிடைத்த சான்றுகளின்படி, வலியவை உயிர் வாழலாம் என சுட்டிக்காட்டினாலும் அவை எப்படி வந்தன என்று விளக்கவில்லையே. ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தைவிட வலியதாக இருக்கலாம், ஆனால் அது எப்படி சிங்கமாக ஆனது என்று விளக்கம் தரவில்லையே. அதன் குட்டிகள் எல்லாம் இன்னும் சிங்கக் குட்டிகளாகவே உள்ளன, வேறொன்றாக மாறிவிடவில்லையே.

23இதனால் ஹார்ப்பர்ஸ் பத்திரிகையில் எழுத்தாளர் டாம் பெத்தெல் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஓர் உயிரினம் மற்றொன்றைவிட ‘வலியதாக’ இருக்கலாம். . . . ஆனால், அந்த உயிரினம் எப்படி உருவானது என்பதை இது விளக்கவில்லை, . . . டார்வின் செய்த இந்தப் பெரும் தவறே அவருடைய கொள்கைக்கு குழிபறித்துவிட்டது. இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. . . . இது மிகப்பெரிய தவறு என்பது இப்போது தெளிவாக உள்ளது என்றே நினைக்கிறேன்.” பெத்தெல் தொடர்ந்து கூறியதாவது: “டார்வினின் கொள்கை எந்த நிமிஷத்திலும் விழுந்து நொறுங்கலாம் என்பதே அதிர்ச்சி தரும் உண்மை.”18

உண்மையா, வெறும் கோட்பாடா?

24ஃபிரான்ஸிஸ் ஹிட்சிங் என்பவர் பரிணாமத்திற்கு எதிரான, இன்னும் தீர்க்கப்படாத சிக்கல்களை இவ்வாறு சுருக்கி கூறினார்: “பின்வரும் முக்கியமான மூன்று அம்சங்களில் [நவீன பரிணாமக் கொள்கையை] பரிசோதிக்க முடியும்: புதைப்படிவ சான்று (fossil record), பரிணாமம் மெல்ல மெல்ல நிகழ்ந்ததை அல்ல, மாறாக திடீர் தாவல்கள் இருந்ததையே காட்டுகிறது. மரபணுக்கள் (genes), மாறாதத் தன்மை உள்ளவை, புதிய வடிவங்கள் உருவாவதைத் தடுப்பதே அவற்றின் முக்கிய செயல். மூலக்கூறுகளில் படிப்படியாக ஏற்படும் திடீர் மாற்றங்கள் (mutations) உயிரினத்தில் காணப்படும் ஒழுங்கமைப்பையும், சிக்கலான தன்மையையும் விளக்குவதில்லை. இவை எல்லாவற்றிலுமே பரிணாமம் தோற்றுவிட்டது.”​—⁠நேரெழுத்துகள் எங்களுடையவை.

25பிறகு ஹிட்சிங் இவ்வாறு கூறிமுடித்தார்: “இதை பட்டும் படாமல் சொல்லவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர்கள் மத்தியிலேயே நிறைய சந்தேகங்களைக் கிளப்பும் பரிணாமக் கொள்கைக்கு எதிராக ஒருவர் தாராளமாக கேள்வி எழுப்பலாம். டார்வினின் கொள்கை உயிரியலை ஒன்றிணைக்கும் மாபெரும் கொள்கை என்பது உண்மையானால், அறியாமைக்கான அநேக விஷயங்கள் அதில் நிறைந்துள்ளன. உயிரற்ற இரசாயனங்களுக்கு எப்படி உயிர் வந்தது, மரபணு குறியீட்டில் உட்பட்டிருக்கும் இலக்கண விதிகள் யாவை, உயிரினங்களின் வடிவங்களை மரபணுக்கள் எவ்வாறு உருவாக்குகின்றன போன்ற அடிப்படையான கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் தர அது தவறிவிட்டது.” உண்மையில் நவீன பரிணாம கொள்கை, “கொஞ்சம்கூட ஏற்கும்படி இல்லாததால் அதை விசுவாசத்திற்குரிய ஒன்றாக மட்டுமே கருத முடியும்”19 என நினைப்பதாக ஹிட்சிங் குறிப்பிட்டார்.

26ஆனாலும், பரிணாமத்தை உண்மை என்று வலியுறுத்த போதுமான காரணம் இருப்பதாக அதை ஆதரிக்கும் பலர் நினைக்கிறார்கள். பரிணாமம் பற்றிய சின்ன சின்ன விஷயங்களுக்குத்தான் கொஞ்சம் விவாதம் உள்ளது என்று விளக்குகிறார்கள். ஆனால், வேறு ஏதாவது ஒரு கோட்பாட்டிற்கு தீர்க்கப்படாத ஏராளமான சிக்கல்கள் இருந்து, அதை ஆதரிப்பவர்கள் மத்தியிலேயே பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அது உண்மையென உடனே ஏற்றுக்கொள்ளப்படுமா? ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப உண்மை என்று சொல்வதால் அது உண்மையாகிவிடாது. லண்டனின் த கார்டியன் என்ற பிரசுரத்தில் உயிரியல் வல்லுநர் ஜான் ஆர். ட்யூரண்ட் இவ்வாறு எழுதினார்: “நிறைய விஞ்ஞானிகளுக்கு தாங்கள் சொல்லும் கருத்தில் பிடிவாதம் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது, . . . உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு முடிவான பதிலைக் கொடுத்துவிட்டதைப் போலவே திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவதில் ஒரு துளிகூட உண்மை இல்லை. . . . என்றாலும், அவர்கள் பிடிவாதத்தை விட்டபாடில்லை. இது எவ்விதத்திலும் அறிவியலுக்கு தொண்டாற்றப் போவதில்லை.”20

27மறுபட்சத்தில், உயிர் எவ்வாறு இங்கு வந்தது என்பதற்கு படைப்பு என்ன விளக்கத்தைத் தருகிறது? பிடிவாதமான விவாதங்களையே பரிணாமத்திற்கு ஆதாரமாக சொல்கின்றனர், அதனால் படைப்புக்காவது இன்னும் பலமான சான்றுகள் உள்ளனவா? படைப்பு பற்றிய புகழ்பெற்ற பதிவான ஆதியாகமம் என்ற புத்தகம், பூமியும் உயிரினங்களும் எவ்வாறு தோன்றின என்பதற்கு நம்பத்தகுந்த தகவல்களை அளிக்கிறதா?

[கேள்விகள்]

1, 2. (அ) “உண்மை” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) உண்மைக்கு சில உதாரணங்கள் யாவை?

3. (அ) பரிணாமம் நிரூபிக்கப்பட்ட ஓர் “உண்மை” என சொல்வது சந்தேகத்திற்குரியதே என்று எது காட்டுகிறது? (ஆ) பரிணாமத்தின் இன்றைய நிலையை ஆராய எந்த அணுகுமுறை உதவும்?

4-6. பரிணாமத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும்கூட என்ன நடந்துகொண்டிருக்கிறது?

7, 8. டார்வின் எழுதிய உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தைப் பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் என்ன கூறினார்?

9. சமீப காலங்களில் பரிணாமவாதிகளுக்கு இடையே நிலவும் சூழ்நிலை எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

10. பரிணாமத்தின் காரணமாகவே பூமியில் உயிர் தோன்றியது என்ற கொள்கை உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டதா?

11. உடல் உறுப்புகளின் சிக்கலான தன்மை பரிணாமத்திற்கு என்ன பிரச்சினையை ஏற்படுத்துகிறது?

12. (அ) கண் தோன்றியதைப் பற்றி டார்வின் என்ன சொன்னார்? (ஆ) இன்றாவது இப்பிரச்சினையைத் தீர்க்க வழி கிடைத்துள்ளதா?

13. மூளையைப் பற்றி ஒரு விஞ்ஞானி என்ன முடிவுக்கு வந்தார்?

14. புதைப்படிவ சான்று பரிணாமத்தை ஆதரிப்பது உண்மையா?

15. (அ) டார்வின் தன்னுடைய நாளிலிருந்த புதைப்படிவ சான்றைப் பற்றி என்ன நினைத்தார்? (ஆ) நூறு வருடங்களுக்கு மேலாக புதைப்படிவங்களை சேகரித்த பிறகு சான்று எதைச் சுட்டிக்காட்டுகிறது?

16. பரிணாமத்தை ஆதரிக்கும் விஞ்ஞானிகள் பலர் இன்று எதை ஒப்புக்கொள்கிறார்கள்?

17. புதுப்புது கொள்கைகளைப் பற்றி சயன்ஸ் டைஜஸ்ட் கூறியதென்ன?

18. உயிர் விண்வெளியில் தோன்றியது என்ற சமீபத்திய கொள்கையில் என்ன சிக்கல் உள்ளது?

19, 20. சில பரிணாமவாதிகள் பரப்பிவரும் புதிய கொள்கை என்ன?

21. (அ) எந்தப் பரிணாமக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், என்ன சான்று இருக்க வேண்டும்? (ஆ) ஆனால் அத்தாட்சிகள் எதைக் காட்டுகின்றன?

22, 23. “வலியவை உயிர் வாழ்தல்” என்ற டார்வினுடைய கருத்துக்கு எதிராக சமீப காலங்களில் என்ன சர்ச்சை எழுந்துள்ளது?

24, 25. (அ) நிரூபிக்கப்பட்ட உண்மை என்ற தகுதியை அடைய பரிணாமம் எந்தெந்த அம்சங்களில் தவறிவிட்டது? (ஆ) நவீன பரிணாமக் கொள்கையைப் பற்றிய ஒரு பரிணாமவாதியின் கருத்திலிருந்து நாம் அதை எவ்வாறு நோக்க வேண்டும்?

26. பரிணாமத்தை உண்மை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பது ஏன் நியாயமல்ல?

27. உயிர் எவ்வாறு இங்கே தோன்றியது என்பதை அறிய வேறு என்ன உறுதியான சான்று உள்ளது?

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

“டார்வினின் கொள்கை . . . ஒண்ணேகால் நூற்றாண்டு ஆகியும் அது இன்னும் பயங்கர சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது”

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

“பரிணாமம் எப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்பதே உயிரியல் வல்லுநர்களிடையே இப்போது பயங்கர சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்டது”

[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]

“கண்ணை ஒருவர் வடிவமைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது; தொலைநோக்கியை வடிவமைக்கும் யாராலும் கண்ணைவிட சிறப்பான ஒன்றை உருவாக்கியிருக்க முடியாது”

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

“ஒன்று மற்றொன்றாக மாறியதற்கான அத்தாட்சியைக் கடந்த 120 வருடங்களாக தேடியும் அது கிடைக்கவே இல்லை”

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

“சில விஞ்ஞானிகள் . . . ஒருகாலத்தில் கற்பனைக் கதைகளில் மாத்திரம் பிரபலமாயிருந்த [பரிணாமக்] கருத்துகளை இப்போது முன்வைக்கிறார்கள்”

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

புதிய கொள்கைகள், பல பத்தாண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றிற்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளன

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

“டார்வினின் கொள்கை எந்த நிமிஷத்திலும் விழுந்து நொறுங்கலாம் என்பதே அதிர்ச்சி தரும் உண்மை”

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

“உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு முடிவான பதிலைக் கொடுத்துவிட்டதைப் போலவே திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவதில் ஒரு துளிகூட உண்மை இல்லை”

[பக்கம் 18-ன் பெட்டி]

“மனித பார்வைக்கு நிகரான ஒன்றை கண்டுபிடிக்க தவிக்கும் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளுக்கு அது தண்ணீர்காட்டுகிறது”

இந்தத் தலைப்பில் வெளிவந்த செய்தியில் த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிக்கையிட்டது: “சிந்திக்கும் இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற மனிதனின் தீராத கனவை நனவாக்கிட நிபுணர்கள் முயலுகிறார்கள். ஆனால் சுலபமாக தோன்றிய முதல் கட்டத்திலேயே இடறி விழுந்துவிட்டார்கள். மனித பார்வையை ‘காப்பியடிக்க’ நினைத்த அவர்களுக்கு தோல்விதான் மிஞ்சியது.

“அனுதின பொருட்கள் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டு, ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காண்பது சுலபமான காரியமாக தோன்றுகிறது. ஆனால் இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்த பிறகும் இயந்திரங்களுக்கு இச்செயலை அவர்களால் கற்றுக்கொடுக்க முடியவில்லை.

“அதற்கு மாறாக, மனித பார்வையின் அதிநுட்ப தன்மையை இப்போது பெரிதும் போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். . . . கண்ணின் விழித்திரையைப் (retina) பார்த்து கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் பொறாமைப்படுகிறார்கள். இதிலுள்ள 10 கோடி ஒளி உணர் குச்சிகளும் (rods), வண்ணம் உணர் கூம்புகளும் (cones), நியூரான்களாலான படலங்களும் ஒரு நொடியில் குறைந்தபட்சம் 1,000 கோடி கணக்குகளை போட்டுவிடுகின்றன.”b

[பக்கம் 16-ன் படம்]

பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளும், லண்டனின் டைம்ஸ் பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் டார்வினுடைய உயிரினங்களின் ஆரம்பம் என்ற புத்தகத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: “உயிரினங்களின் ஆரம்பத்தைப் பற்றி விளக்குவதாக பெயரெடுத்த ஒரு புத்தகம், உண்மையில் அத்தகைய விளக்கத்தை தருவதில்லை என்பதுதான் உலக மகா வேடிக்கை”

[பக்கம் 17-ன் படம்]

பரிணாமவாதி ஒருவர் குறிப்பிட்டார்: “ஆதரிக்கும் அணியும், எதிர்க்கும் அணியும் தங்களை வலுவாக நிலைநாட்டிக் கொண்டன, பீரங்கி குண்டுகளைப்போல இரண்டு அணிகளும் வசை சொற்களை சரமாரியாக பொழிந்தன”

[பக்கம் 19-ன் படங்கள்]

வானவியல் வல்லுநர் ராபர்ட் ஜாஸ்ட்ரோ இவ்வாறு கூறினார்: “மனிதனின் கண் தற்செயலாக பரிணமித்ததென ஏற்றுக்கொள்வதே மிகவும் கடினம்; அப்படியிருக்கும்போது, நம் முன்னோர்களின் மூளை செல்களில் ஏதோ குளறுபடி நடந்ததால் மனிதனுக்கு அறிவாற்றல் பரிணமித்தது என்பதை ஏற்றுக்கொள்வது அதைவிட இன்னும் கடினமானது”

[பக்கம் 20-ன் படங்கள்]

“பரிணாம வளர்ச்சிக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக டார்வின் கூறிய அந்தக் கால புதைப்படிவ சான்றுகளில் சிலவற்றை . . . அதிக நுணுக்கமான தகவல்கள் கிடைத்திருப்பதன் காரணமாக தூக்கியெறிய அல்லது மாற்றியமைக்க வேண்டியிருந்திருக்கிறது.”c​—⁠டேவிட் ராப், சிகாகோவின் ஃபீல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி

இயோஹிப்பஸ்

ஆர்க்கியாப்டிரிக்ஸ்

லங்ஃபிஷ்

[பக்கம் 22-ன் படம்]

வலியவை உயிர் வாழலாம் என சுட்டிக்காட்டினாலும் அவை எப்படி வந்தன என்று விளக்கவில்லையே