Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியே ஒரு பூங்காவனம் வெகு விரைவில்

பூமியே ஒரு பூங்காவனம் வெகு விரைவில்

அதிகாரம் 19

பூமியே ஒரு பூங்காவனம் வெகு விரைவில்

முடிவில்லாத, முழுமையான, திருப்தியளிக்கும் வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. செய்வதற்கு அநேக ஆர்வமூட்டும் காரியங்கள் உள்ளன, கண்டுகளிப்பதற்கு பிரமிப்பூட்டும் அநேக இடங்கள் உள்ளன, கற்றுக்கொள்ள அநேக புதிய விஷயங்கள் உள்ளன என்பது உண்மையல்லவா?

2இருந்தாலும் நாம் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் போகிறது. தீர்க்க முடியாததைப் போல தோன்றும் பிரச்சினைகளே இதற்கு முட்டுக்கட்டையாய் உள்ளன. உதாரணமாக, நம்முடைய இப்போதைய வாழ்க்கை மிகவும் குறுகியதே. இது போதாதென்று வியாதி, துன்பம், துயரம் போன்றவையும் சேர்ந்துகொள்கின்றன. ஆகவே, மக்கள் வாழ்க்கையை அதன் எல்லா அம்சங்களிலும் முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்றால் முழுநிறைவான சூழ்நிலைகள் தேவை. அவை: (1) பூந்தோட்டம் போன்ற பரதீஸிய சூழ்நிலைகள், (2) முழுமையான பாதுகாப்பு, (3) ஆர்வமூட்டும் வேலை, (4) குறைவற்ற ஆரோக்கியம், (5) முடிவில்லா வாழ்க்கை.

3ஆனால் நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறோமோ? மனித நோக்குநிலையில் பார்த்தால் அது அதிகம்தான். மனிதர்கள் தாங்களாகவே இப்படிப்பட்ட முழுநிறைவான நிலைமைகளைக் கொண்டுவர முடியாது என சரித்திரம் நிரூபித்துள்ளது அல்லவா? ஆனால் நம் சிருஷ்டிகருடைய நோக்குநிலையில் அவை சாத்தியமானது மட்டுமல்ல, அத்தியாவசியமானவையும்கூட! ஏன்? ஏனென்றால் இந்த விரும்பத்தக்க சூழ்நிலைமைகள், இந்தப் பூமிக்கான கடவுளின் ஆரம்ப நோக்கத்தின் பாகமானவையே.​—சங்கீதம் 127:1; மத்தேயு 19:⁠26.

பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும்

4முந்தைய அதிகாரங்களில் நாம் பார்த்ததைப்போலவே முதல் மானிட ஜோடி மிருகங்களைப் போல இருக்கவில்லை. மாறாக, அவர்கள் முற்றுமுழுக்க மனிதர்களாகவே படைக்கப்பட்டனர். அவர்களுடைய ஆரம்ப வீடான ஏதேன், “சந்தோஷ பூங்காவனமாக” இருந்தது. (ஆதியாகமம் 2:8, டூவே வர்ஷன்) அவர்கள் “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” வேண்டும். (ஆதியாகமம் 2:15) கூடுதலாக, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் “பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்[]” வேண்டும் என்ற மனிதர்களுக்கே உரிய நிர்வாக பொறுப்பும் உட்பட்டிருந்தது. (ஆதியாகமம் 1:28) அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கையில் அந்த அழகிய பூந்தோட்டத்தின் எல்லைகளை விரிவாக்கி முழு பூமியையுமே பரதீஸாக மாற்றும் வேலை அவர்களுக்கு இருக்கும். அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? இந்தப் பூமி, “என்றைக்கும் நிலைத்திருக்”கும் என பைபிள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. (பிரசங்கி 1:4; சங்கீதம் 104:5) ஆகவே பூந்தோட்டமான பூமியே நித்திய காலத்திற்கும் பரிபூரண மனிதர்களின் மகிழ்ச்சி பொங்கும் வீடாகும். அவர்களும் நித்தியத்திற்கு அதிலே வாழ்வார்கள்.​—ஏசாயா 45:11, 12, 18.

5ஏதேனில் பிறந்த கலகம் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் கொஞ்ச காலத்திற்கு இடைஞ்சலாயிருந்தாலும் அந்த நோக்கத்தை அது மாற்றிவிடவில்லை. பொல்லாப்பை நீக்குவதற்கும் பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதற்கும் தேவையானதைக் கடவுள் அறிமுகப்படுத்தினார். இதைக் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் செய்யப் போகிறார். இயேசு மனிதர்களிடம் பிரசங்கித்த செய்தியில் முக்கிய பாகம் வகித்ததும் இந்தப் பரலோக ராஜ்யமே. (மத்தேயு 6:10, 33) கடவுளுடைய ஆரம்ப நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம். ஏனென்றால், அதன் காரணகர்த்தாவான சர்வசக்தி படைத்த சிருஷ்டிகரே அதை வாக்கு கொடுக்கிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”​—ஏசாயா 55:⁠11.

6‘கடைசி நாட்களின்’ ‘அடையாளத்தை’ நிறைவேற்றும் உலக சம்பவங்கள் நம் நாளில் நிகழ்வதைக் காண்பது உற்சாகமளிக்கிறது. (மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5) ஏனென்றால், கடவுளுடைய ‘வசனம் ஆகும்படி வாய்க்கும்’ அந்தக் காலம் வெகு சமீபம் என்பதை இது குறிக்கிறது. இது நிச்சயம் நடக்கும்; சர்வ வல்லமையுள்ள கடவுள் தம்முடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்காக மனித விவகாரங்களில் தலையிடுவார். (எரேமியா 25:31-33) ‘பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்’ என கூறும் தீர்க்கதரிசன சங்கீதம் வெகு சீக்கிரத்தில் நிறைவேறுவதை நாம் காணப்போகிறோம்.​—சங்கீதம் 37:9-11, 29; மத்தேயு 5:⁠5.

7இவ்வாறு, சிருஷ்டிகரிடமிருந்து விலகி சுதந்திரமாக இருக்க தீர்மானிப்பவர்கள் “அறுப்புண்டு போவார்கள்.” “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ” இந்த ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து பரதீஸைத் திரும்ப நிலைநாட்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக பரவி முழு பூமியையும் வியாபிக்கும். இந்தப் பரதீஸ் வருவது அவ்வளவு நிச்சயம் என்பதாலேயே இயேசு தம் அருகே அறையப்பட்டிருந்த கள்ளனிடம் முழு நம்பிக்கையுடன் பின்வருமாறு கூறினார்: “இன்று மெய்யாகவே நான் உனக்கு சொல்கிறேன், நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”​—லூக்கா 23:⁠43, NW.

புத்தாடை புனையும் பூமி

8பரதீஸைப் பற்றிய பைபிளின் விவரிப்பு உண்மையில் திகைப்பூட்டுகிறது. உதாரணமாக, இந்தப் பூமியில் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என அது கூறுகிறது. ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டபோது முதல் மானிடர்களிடம் சொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முள்ளும் குருக்கும்தான் நிலத்தில் முளைக்கும் என்றும் தங்கள் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டால்தான் வயிறார சாப்பிட முடியும் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 3:17-19) அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் செத்து செத்துப் பிழைக்கிறான். பெருகி வரும் பாலைவனங்கள், செழுமையிழந்த மண், வறட்சி, களைகள், பூச்சிகள், தாவர நோய்கள், விளைச்சல் குறைவுபடுவது போன்ற பிரச்சினைகளோடு மல்லுக்கட்டியிருக்கிறான். ஆனால் இந்தப் போராட்டத்தில் அநேக சமயங்களில் பஞ்சமே வெற்றி பெற்றுள்ளது.

9ஆனால் இந்த நிலைமை அடியோடு மாறப்போகிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.” “முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்.” (ஏசாயா 35:1, 6, 7; 55:13) ஆகவே கடவுளுடைய நோக்கம் நிறைவேறுகையில், இந்தப் பூமியை ஓர் அழகிய பூந்தோட்டமாக மாற்றும் மனோகரமான வேலை மனிதர்களுக்கு இருக்கும் என்பதை இது குறிக்கிறது. அதில் வசிப்பவர்களுக்கு என்றென்றும் ஆனந்தம்தான். ஆனால் கொஞ்சும் அழகு மட்டுமல்ல, அதில் இன்னும் எத்தனை எத்தனையோ இன்பங்கள் இருக்கும்.

ஏழ்மைக்கு முடிவு

10பெரும் பாலைவனங்களும் வறண்ட நிலப் பகுதிகளும் மாற்றமடைவதால் விளைநிலப் பகுதிகள் ஏராளமாய் அதிகரிக்கும். சிருஷ்டிகரின் மேற்பார்வையில், இந்தப் பூமியை செழிப்புள்ளதாக்க மனிதன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் முன்னொருபோதும் இராத வண்ணம் அமோக வெற்றியடையும்: “கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.” (சங்கீதம் 85:12) அந்தப் ‘பலனால்’ “தேசத்தில், மலையின் உச்சியிலும், திரள் தானியமிருக்கும்.” (சங்கீதம் 72:16, தி.மொ.) இனிமேலும் கோடிக்கணக்கானோர் அரை வயிறும் கால் வயிறுமாக பட்டினியில் வாடமாட்டார்கள்.​—ஏசாயா 25:⁠6.

11அதுமட்டுமா, வேலையில்லா திண்டாட்டமும் கடந்தகால கதையாகிவிடும். அனைவரும் அவரவருடைய கைப்பலனை அனுபவிப்பார்கள்: “திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். . . . அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.” (ஏசாயா 65:21, 22) இவையெல்லாம் எசேக்கியேல் 34:27-⁠ல் விவரிக்கப்படும் பொருளாதார பாதுகாப்பைத் தரும்: ‘வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத் தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள் [“பாதுகாப்பாயிருப்பார்கள்,” NW].’

12அதுமட்டுமா, மனிதர்கள் கச்சிதமான ஒரு வீட்டையும், தோட்டம் துரவுக்குக் கொஞ்சம் நிலத்தையும் விரும்புவது இயற்கைதானே? ஆனால், லட்சக்கணக்கானோர் படுநெருக்கமான அப்பார்ட்மெண்ட் வீடுகளிலோ மிக மோசமான சேரிகளிலோ வானமே கூரையென வீதிகளிலோ வாழும்போது அதை குடியிருப்பு வசதி மிக்கது என்றா சொல்லமுடியும்? வரவிருக்கும் பரதீஸில் இவற்றில் எதற்குமே இடமில்லை. ஏனென்றால் கடவுளுடைய நோக்கம் இதுவே: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள் . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறது”மாய் இருக்காது. உலகளாவிய அந்தக் கட்டுமான வேலை முழுமையான வெற்றி பெரும், நிலைத்தும் நிற்கும்: “நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.” (ஏசாயா 65:21-23) இவ்விதமான வீட்டு வசதியை அனுபவிக்கப் போவது சிறுபான்மையான பணக்கார வர்க்கம் மட்டுமே அல்ல. மாறாக கடவுளுடைய ஆட்சிக்கு தங்களைக் கீழ்ப்படுத்துகிறவர்கள் அனைவருக்கும் அது உரித்தானது.

வியாதி இல்லை, மரணம் இல்லை

13குறைபாடுகள், நோய்நொடி, மரணம் என்ற பேச்சுக்கே பரதீஸில் இடமில்லை என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. “வியாதியாய் இருக்கிறேன் என்று அங்கு வசிக்கும் ஒருவரும் சொல்லமாட்டார்கள்.” (ஏசாயா 33:24, NW) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:⁠4.

14எந்த விதமான வியாதிகளும் குறைபாடுகளும் இல்லாத ஓர் உலகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! கடவுளுடைய வார்த்தை கூறுகிறது: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.” (ஏசாயா 35:5, 6) எப்பேர்ப்பட்ட தலைகீழ் மாற்றம்! அந்தச் சமயம் முதல், கடவுளைப் போல நித்திய காலமாக வாழும் மகத்தான வாய்ப்பை பெறுவோம் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள். சாவுக்கே சாவுமணி அடித்துவிட்டதால் அது இனியும் மனிதவர்க்கத்தைப் பயமுறுத்தாது, ஏனென்றால் கடவுள் ‘மரணத்தை என்றுமாக விழுங்குவார்.’​—ஏசாயா 25:8, தி.மொ.

15ஆனால், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைக்கும் வயதானவர்களுக்கு என்ன ஏற்படும்? முதுமை மாறாமலேயே திடகாத்திரமான உடல் ஆரோக்கியத்தைப் பெற்று என்றென்றும் அப்படியே இருப்பார்களா? இல்லை. வயதாவதை முற்றிலும் மாற்றும் வல்லமை கடவுளுக்கு உள்ளது, அதை அவர் நிகழ்த்திக் காட்டுவார். “அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்” என பைபிள் விவரிக்கிறது. (யோபு 33:25) ஆதாமும் ஏவாளும் ஏதேனில் அனுபவித்த பரிபூரண ஆண்மை மற்றும் பெண்மை நிலையை வயதானவர்கள் மெல்ல மெல்ல அடைவார்கள். இயேசு கூறிய ‘மறு சிருஷ்டிப்பின்’ விளைவுகளில் இதுவும் ஒன்று.​—மத்தேயு 19:28, NW.

நிலையான உலக சமாதானம்

16பரதீஸின் சமாதானத்திற்கு யுத்தம் அல்லது வன்முறை இடைஞ்சலாக இருக்குமா? அந்தப் பயமே வேண்டாம். ஏனென்றால், “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள் [“மீந்திருப்பார்கள்,” NW]. துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22) சமாதானத்தைக் குலைப்பவர்களே அங்கு இல்லாதபோது யுத்தமோ வன்முறையோ ஏற்பட வாய்ப்பேது?

17கடவுள் துன்மார்க்கரையும் அக்கிரமக்காரரையும் அழித்த பிறகு “மீந்திருப்”பவர்கள், “செவ்வையானவர்கள்” என்றும் “உத்தமர்கள்” என்றும் ஏன் அழைக்கப்படுகின்றனர்? ஏனென்றால், சமாதானமாய் வாழ்வதற்கான கடவுளுடைய தராதரங்களில் அவர்கள் ஏற்கெனவே கற்பிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கடவுளைப் பற்றிய இந்த அறிவும் அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதுமே பரதீஸில் சமாதானம் நிலவுவதற்கான முக்கிய காரணம். பைபிள் இவ்வாறு கூறுகிறது: அங்கு ‘தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ (ஏசாயா 11:9) அவர்கள் “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்” என இயேசுவும் கூறினார். இந்தப் போதகத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர்களுக்கே ‘நித்தியஜீவன்.’​—யோவான் 6:45-47.

18கடவுளை மையமாக கொண்ட இந்த உலகளாவிய கல்வி, குற்றச்செயல், தப்பெண்ணம், வெறுப்பு, அரசியல் பிளவுகள், யுத்தம் போன்றவற்றின் சுவடே தெரியாத முழுமையான சமாதானமும் ஒத்திசைவும் நிரம்பி வழியும் உலகை உருவாக்க முடியும் என்பது சந்தோஷகரமானது அல்லவா? இந்தப் போதகத்தின் இனிய விளைவுகள் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இன்றே தெள்ளத் தெளிவாக காணப்படுகின்றன. அவர்கள், அன்பையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச சகோதர கூட்டுறவின் பாகமாகிறார்கள். (யோவான் 13:34, 35) அவர்கள் மத்தியில் நிலவும் உலகளாவிய சமாதானமும் ஐக்கியமும் தகர்க்க முடியாதவை. உலகின் எந்தப் பகுதியிலுமுள்ள தங்கள் அயலகத்தாருக்கு எதிராக ஆயுதங்களை கையிலெடுக்கும்படி துன்புறுத்தலோ உலக யுத்தமோகூட அவர்களை மசியவைக்க முடியாது. இன்றைய பிளவுபட்ட உலகத்திலும்கூட இப்பேர்ப்பட்ட உலகளாவிய சமாதானமும் ஐக்கியமும் நிலவுகிறது என்றால், பரதீஸில் கடவுளுடைய ஆட்சியில் இதே நிலைமைகளைத் தொடந்து காத்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்லவே!​—மத்தேயு 26:52; 1 யோவான் 3:10-12.

19ஆகவே, பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும் ஆரம்ப கால கட்டத்திலேயே பூமி முழுவதிலும் சமாதானம் நிலவும். கடவுளுடைய உலகளாவிய யுத்தமான அர்மகெதோனை தப்பிப்பிழைப்பவர்கள் இன்று நிறைவேற்றுகிற தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்: ‘ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.’ இதன் காரணமாகவே அத்தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறியது: ‘அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.’ (மீகா 4:3, 4) எவ்வளவு காலத்திற்கு? “அதின் சமாதானத்துக்கு முடிவில்லை” என்பதே உற்சாகமூட்டும் வாக்குறுதியாகும்.​—ஏசாயா 9:⁠7.

20இன்றைய இராணுவ பலம்படைத்த தேசங்கள் போர்த் தளவாடங்களை எக்கச்சக்கமாக குவித்து வைத்திருப்பது உண்மையே. ஆனால் இப்பிரபஞ்சத்தையே படைத்தவரின் வல்லமைக்கு முன்னால் இவை எல்லாம் கால் தூசிக்கு சமானம். இந்தத் தேசங்களின் போர்த் தளவாடங்களுக்கு சீக்கிரத்தில் சம்பவிக்கப் போவதைப் பற்றி அவரே கூறுகிறார்: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” (சங்கீதம் 46:8, 9) இவ்வாறு, தேசங்களும் அவற்றின் இராணுவங்களும் கிள்ளி எறியப்படுவது பரதீஸில் உலகளாவிய சமாதானம் நிலவுவதற்கு வழிவகுக்கும்.​—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:11-21.

மிருகங்களோடும் சமாதானம்

21பரதீஸில் நிலவும் உலகளாவிய சமாதானம் முழுமைபெற, ஏதேனில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியில் நிலவிய சமாதானம் திரும்பவும் தலைதூக்கும். (ஆதியாகமம் 1:26-31) இன்று மனிதன் அநேக மிருகங்களைக் கண்டு அஞ்சி வாழ்கிறான், அதே சமயம் அவனே அவற்றிற்கு எதிரியுமாகிறான். ஆனால் பரதீஸில் நிலைமை வேறு. ஏதேனில் மனிதனும் மிருகமும் சமாதானமாய் வாழ வழிசெய்த கடவுள் அதையே பரதீஸில் திரும்பவும் ஸ்தாபிப்பார். இவ்வாறாக, மனிதன் மிருகங்களை அன்பால் அடக்கி ஆளுவது மறுபடியும் சாத்தியமாகும்.

22இதைப் பற்றி சிருஷ்டிகர் கூறுவதாவது: “அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை பண்[ணுவேன்].” (ஓசியா 2:18) அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? ‘நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரை பண்ணுவார்கள்.’​—எசேக்கியேல் 34:⁠25.

23மனிதர் மத்தியிலும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியிலும் நிலவும் சமாதானம் மிருக இனங்கள் மத்தியிலேயும் காணப்படும்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வலையின் மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை.”​—ஏசாயா 11:6-9.

24பரதீஸில் நிலவவிருக்கும் முற்றுமுழுமையான சமாதானத்தை பைபிள் வர்ணிக்கும் அழகே அழகு! இதன் காரணமாகவே, அந்தப் புதிய உலகில் வாழ்க்கைப் பற்றி சங்கீதம் 37:11 பின்வருமாறு கூறுவது நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை: ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.’

மரித்தோர் உயிர் பெறுகின்றனர்

25தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைப்பவர்கள் மட்டுமே பரதீஸின் நன்மைகளை அனுபவிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ஆட்சியில் மகத்தான வெற்றி ஒன்றும் உண்டு; அதுவே மரணத்தின்மீது முழுமையான வெற்றியாகும். ஆதாமிலிருந்து கடத்தப்பட்ட பாவம் நீக்கப்படுவதோடுகூட ஏற்கெனவே மரித்திருக்கும் ஆட்கள் மறுபடியும் உயிரடைந்து, பரதீஸில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள்! “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்”பார்கள் என கடவுளுடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) ஒவ்வொரு சந்ததியாக, மரித்த அன்பானோர் பிரேதக்குழியின் ‘ஆழ்ந்த நித்திரையிலிருந்து’ வெளியே வருவதைக் காண்பது நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடும்!​—லூக்கா 7:11-16; 8:40-56; யோவான் 11:38-45.

26இயேசு இவ்வாறு கூறினார்: “பிரேதக்குழிகளிலுள்ள [“ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள,” NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) கடவுளுடைய நினைவில் இருப்பவர்களுக்கு கல்லறையிலிருந்து விடுதலை நிச்சயம். கடவுளால் இதைச் செய்ய முடியாதென்றா நினைக்கிறீர்கள்? அவர் கோடிக்கணக்கான, ஆம் கோடானுகோடி நட்சத்திரங்களை சிருஷ்டித்தவர் என்பதை நினைவில் வையுங்கள். அதுமட்டுமா, அவர் அவற்றை எல்லாம் “பேர்பேராக” அழைக்கிறார் என்றும் பைபிள் கூறுகிறதே! (ஏசாயா 40:26) அவற்றோடு ஒப்பிட, இந்தப் பூமியில் வாழ்ந்து மரித்தவர்களின் எண்ணிக்கை ஒரு சிறிய பிண்ணம்கூட இல்லையே! ஆகவே, அவர்களையும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் நினைவில் வைப்பது கடவுளுக்கு ஒன்றும் கஷ்டமே இல்லை.

27உயிர்த்தெழுப்பப்படும் அனைவருக்கும், பரதீஸிய சூழ்நிலையில் கடவுளுடைய நீதியுள்ள தராதரங்கள் போதிக்கப்படும். தங்களுடைய முற்கால வாழ்க்கையில் அனுபவித்த துன்மார்க்கம், துன்பம் அல்லது அநீதி அவர்களுக்கு இடறலாக இருக்காது. அவர்கள் கடவுளுடைய ஆட்சியை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டு அவருடைய தராதரங்களுக்கு பூரண கீழ்ப்படிதலைக் காட்டினால், தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். (எபேசியர் 4:22-24) ஆகவே, இயேசுவோடு கழுமரத்தில் அறையப்பட்ட அந்தக் கள்ளன் பரதீஸில் தொடர்ந்து வாழ விரும்பினால் அவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையுள்ளவனாக மாற வேண்டும். ஆனால் கடவுளுடைய நீதியுள்ள ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து மற்றவர்களின் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கெடுப்பவர்கள் அங்கு தொடர்ந்து வாழ அனுமதி கிடையாது. அவர்கள் பாதகமான நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். இவ்வாறாக, “நீதி வாசமாயிருக்கும்” பரதீஸிய பூமியில் வாழ விரும்புகிறாரா என்பதை நிரூபிக்க ஒவ்வொரு நபருக்கும் முழுமையான, நேர்மையான வாய்ப்பளிக்கப்படும்.​—2 பேதுரு 3:⁠13.

28அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் மீண்டும் உயிர்பெற்ற மற்ற நபர்களும் நித்திய மகிழ்ச்சியில் வாழ்க்கையை கழிப்பார்கள். அறிவைப் பெறுவதற்கு எல்லையற்ற திறமை படைத்த பரிபூரண மனிதனின் மூளை, நித்திய காலத்திற்கும் தகவலை சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்தப் பூமியையும் நூறு கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் அலங்கரிக்கும் பயபக்தி ஏற்படுத்தும் இப்பிரபஞ்சத்தையும் பற்றி நாம் எத்தனை எத்தனை விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! கட்டுமானம், நிலப்பரப்பை மாற்றியமைத்தல், தோட்ட வேலை, போதிப்பது, கலை, இசை, மற்ற அநேக துறைகள் ஆகியவற்றில் நாம் சாதிக்கப் போகும் சவால் நிறைந்த, திருப்தியளிக்கும் வேலைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஆகவே வாழ்க்கை சலிப்பு தட்டுவதாகவோ பிரயோஜனமற்றதாகவோ இருக்காது. மாறாக, பைபிள் கூறும்விதமாக பரதீஸ் நித்தம் நித்தம் “மனமகிழ்ச்சி” அளிக்கும். (சங்கீதம் 37:11) இவ்வாறாக, மகத்தான ஒரு புதிய சகாப்தத்தின் பிறப்பு சீக்கிரத்தில் சம்பவிக்கவிருக்கிறது.

[கேள்விகள்]

1, 2. (அ) மனிதர்களின் இயல்பான ஆசை என்ன, ஆனால் அதை அடைவதற்கு இடையூறாக இருப்பவை எவை? (ஆ) என்ன நிலைமைகள் முழுநிறைவளிக்கும்?

3. அப்படிப்பட்ட முழுநிறைவான சூழ்நிலைமைகளை யாரால் மட்டுமே கொண்டுவர முடியும்?

4. இந்தப் பூமிக்கான கடவுளுடைய ஆரம்ப நோக்கம் என்ன?

5. கடவுளுடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நாம் ஏன் உறுதியாயிருக்கலாம்?

6, 7. (அ) பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும் காலம் சமீபித்துவிட்டது என்பது நமக்கு எப்படி தெரியும்? (ஆ) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் யார் பாதுகாக்கப்படுவர், யார் அழிக்கப்படுவர்?

8, 9. சடப்பொருளான இந்தப் பூமியில் என்ன தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும்?

10, 11. யெகோவா பசிப்பிணியை எவ்வாறு நீக்குவார்?

12. பரதீஸில் நல்ல வீட்டு வசதியை யார் அனுபவிப்பர்?

13, 14. வியாதி, குறைபாடு, மரணம் ஆகியவற்றிற்குக்கூட என்ன ஏற்படும்?

15. இந்த ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைக்கும் வயதானவர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு உள்ளது?

16, 17. யுத்தமோ வன்முறையோ பரதீஸில் ஏன் இடைஞ்சலாய் இருக்காது?

18. பரதீஸில் சமாதானமாய் வாழ்வதற்காக இன்றே யாருக்குப் போதிக்கப்படுகிறது?

19. இன்று நிறைவேறி வரும் எந்தத் தீர்க்கதரிசனம் பரதீஸிற்குள்ளும் தொடரும்?

20. தேசங்களையும் அவர்களுடைய போர்த் தளவாடங்களையும் யெகோவா என்ன செய்வார்?

21, 22. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியில் என்ன உறவு மீண்டும் நிலவும்?

23. மிருக இனத்திற்கு மத்தியிலேயே நிலவவிருக்கும் என்ன முழுமையான மாற்றத்தைப் பற்றி ஏசாயா முன்னுரைத்தார்?

24. பரதீஸில் நிலவவிருக்கும் சமாதானத்தை சங்கீதம் 37 எவ்வாறு விவரிக்கிறது?

25, 26. (அ) மரித்தோரைப் பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன வாக்குறுதி அளிக்கிறது? (ஆ) மரித்திருக்கும் அனைவரையும் நினைவில் வைப்பது கடவுளுக்கு ஏன் கஷ்டமே அல்ல?

27. பரதீஸில் அனைவருக்கும் என்ன வாய்ப்பளிக்கப்படும்?

28. ஆகவே, சீக்கிரத்தில் சம்பவிக்கவிருப்பது என்ன?

[பக்கம் 232-ன் சிறு குறிப்பு]

முழு நிறைவான நிலைமைகளை மனிதர்களால் அடைய முடியாது, ஆனால் கடவுளால் முடியும்

[பக்கம் 236-ன் சிறு குறிப்பு]

இந்தப் பூமிதானே அடியோடு மாற்றமடையும்

[பக்கம் 242-ன் சிறு குறிப்பு]

தேசங்களையும் அவற்றின் போர் தளவாடங்களையும் நீக்கிவிடுவதால் உலகளாவிய சமாதானம் சாத்தியமாகும்

[பக்கம் 244-ன் சிறு குறிப்பு]

அவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்”

[பக்கம் 246-ன் சிறு குறிப்பு]

மகத்தான புதிய சகாப்தம் நம் கண் முன் நிற்கிறது

[பக்கம் 233-ன் படம்]

பரதீஸிய சூழ்நிலைகள்

இப்படிப்பட்ட முழு நிறைவான நிலைமைகள் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்க உதவும்

முழுமையான பாதுகாப்பு

ஆர்வமூட்டும் வேலை

குறைவற்ற ஆரோக்கியம்

முடிவில்லா வாழ்க்கை

[பக்கம் 234-ன் படம்]

சிருஷ்டிகரிடமிருந்து விலகி சுதந்திரமாக இருக்க தீர்மானிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள்

[பக்கம் 235-ன் படம்]

“கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ” தப்பிப்பிழைப்பார்கள்

[பக்கம் 236, 237-ன் படங்கள்]

இந்தப் பூமியை ஒரு பூந்தோட்டமாக மாற்றும் மனோகரமான வேலை மனிதவர்க்கத்திற்கு இருக்கும்

[பக்கம் 238-ன் படம்]

அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு கிட்டும்

[பக்கம் 239-ன் படங்கள்]

குறைபாடுகளோ, வியாதியோ, மரணமோ பரதீஸின் சந்தோஷங்களைக் கெடுக்காது

[பக்கம் 240-ன் படம்]

“அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” ​—⁠யோபு 33:⁠25

[பக்கம் 241-ன் படம்]

பரதீஸில் யுத்தமோ வன்முறையோ இருக்காது. யுத்தக் கருவிகள் எல்லாம் அழிக்கப்படும்.​—⁠எசேக்கியேல் 39:9, 10

[பக்கம் 243-ன் படம்]

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியில் நிலவிய சமாதானம் திரும்பவும் நிலைநாட்டப்படும்

[பக்கம் 245-ன் படம்]

மரித்தோர் திரும்ப உயிரடைந்து பரதீஸில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள்! “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்”பார்கள் என கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது