மனிதன் என்ற அற்புதம்
அதிகாரம் 14
மனிதன் என்ற அற்புதம்
நம்மைத் திகைப்பில் ஆழ்த்தும் ஏராளமான காரியங்கள் பூமியில் நிறைந்துள்ளன, ஆனால் மனித மூளையானது அவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. உதாரணமாக, பல்வேறு புலன்களிலிருந்து ஒவ்வொரு நொடியும் நம் மூளைக்கு சுமார் 10 கோடி செய்திகள் செல்கின்றன. ஆனால் இந்தத் ‘தகவல்’ வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கிவிடாமல் அது எவ்வாறு தப்பிக்கிறது? நம்மால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் யோசிக்க முடியும் என்றால், ஒரே சமயத்தில் வந்து குவியும் இந்த லட்சக்கணக்கான செய்திகளை அது எவ்வாறு சமாளிக்கிறது? மூளையானது, இந்தத் ‘தகவல்’ வெள்ளத்தின் பெருக்கெடுப்பை வெறுமனே தப்பிப்பது மட்டுமல்ல அதை மிகவும் சுலபமாக கையாளுவதும் தெளிவாக உள்ளது.
2இதை எவ்வாறு சமாளிக்கிறது என்பது மனித மூளையின் அநேக அதிசயங்களில் ஒன்று மட்டுமே. இதில் இரண்டு காரியங்கள் உட்பட்டுள்ளன. முதலாவதாக, மூளையின் அடிப்பகுதியில், உங்கள் சுண்டுவிரல் அளவே உள்ள நரம்புகளின் பின்னல் அமைப்பு ஒன்றுள்ளது. இது ரெட்டிகுலார் அமைப்பு (reticular formation) என அழைக்கப்படுகிறது. மூளைக்கு வரும் லட்சக்கணக்கான செய்திகளைக் கட்டுப்படுத்துவதால் இது போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்போல சேவிக்கிறது. முக்கியமற்ற விஷயங்களைத் தரம் பிரித்து, பெருமூளைக் கார்டெக்ஸின்
கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய முக்கிய விஷயங்களை மட்டுமே தெரிவு செய்கிறது. இவ்வாறு நரம்புகளின் இந்தச் சிறிய அமைப்பு, ஒவ்வொரு நொடியும் அதிகபட்சமாக நூறு தகவல்கள் மட்டுமே உணர்வுள்ள மூளைக்குள் செல்ல அனுமதிக்கிறது.3இரண்டாவதாக, ஒரு நொடிக்கு 8 முதல் 12 முறை நம் மூளையை ஸ்கேன் செய்யும் அலைகள் நம் கவனத்தை இன்னும் அதிகம் ஒருமுகப்படுத்த உதவுவதாக தோன்றுகிறது. இந்த அலைகள் காரணமாக, அதிக பலமான சமிக்கைகளைக் கண்டுணர்ந்து அதின் பேரில் நடவடிக்கை எடுக்க உதவும் அதிக கூருணர்வு சமயங்கள் மூளையில் ஏற்படுகின்றன. இந்த அலைகளால் மூளை தன்னைத் தானே ஸ்கேன் செய்வதாக நம்பப்படுகிறது, இவ்வாறு அதிமுக்கிய காரியங்கள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. ஆக, ஒவ்வொரு நொடியும் நம் மூளைக்குள் தகவல் புரட்சியே நடந்துகொண்டிருக்கிறது!
“ஆச்சரியப்பட வேண்டிய” ஒன்று
4சமீப வருடங்களில், மூளை பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் பேரளவான முன்னேற்றம் கண்டுள்ளனர். அப்படியிருந்தும், இன்னும் அறியப்படாமல் இருப்பவற்றோடு ஒப்பிடுகையில் அவர்கள் கண்டுபிடித்திருப்பது ஒன்றுமேயில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களின் ஊகத்திற்கு பிறகும் சமீப பத்தாண்டுகளில் மூளை பற்றிய தீவிரமான அறிவியல் ஆராய்ச்சிக்கு பிறகும், நம் மூளை நம் பிரபஞ்சத்தைப் போலவே இன்னமும் “முற்று முழுமையாகவே விளங்கா புதிராக”1 உள்ளது என ஓர் ஆராய்ச்சியாளர் கூறினார். “அற்புதம்” என்றால் “ஆச்சரியப்பட வேண்டிய” ஒன்று என பொருள்படுவதால், மனிதன் என்ற அற்புதத்தில் முற்றிலும் விளங்கா புதிராகவுள்ள பகுதி மூளைதான் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?
5இந்த அதிசயம் கருப்பையிலேயே ஆரம்பிக்கிறது. கருவுற்ற மூன்றே வாரங்களில் மூளை செல்கள் உருவாக ஆரம்பித்துவிடுகின்றன. அவை படுவேகமாக வளருகின்றன; சில சமயத்தில் ஒரு நிமிடத்திற்கு 2,50,000 செல்கள்கூட உருவாகின்றன! பிறந்த பிறகும்கூட மூளை தொடர்ந்து வளர்ந்துகொண்டும் இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டும் உள்ளது. மனித மூளைக்கும் மிருக மூளைக்கும் மத்தியிலுள்ள இடைவெளி வெகு சீக்கிரத்திலேயே தென்பட்டுவிடுகிறது. “மனித குழந்தையின் மூளை, மற்ற எந்த மிருகத்தையும் போலில்லாமல் முதல் வருடத்தில் அளவில் மூன்று மடங்கு பெரிதாகிறது”2 என உள்ளுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என்ற புத்தகம் கூறுகிறது. காலப்போக்கில், சுமார் 10,000 கோடி நியூரான்கள் (neurons) என்ற நரம்பு செல்களும் மற்ற வகை செல்களும் மனித மூளைக்குள் உருவாகின்றன. மூளையோ, உடலின் மொத்த எடையில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே!
6மூளையின் முக்கிய செல்களான நியூரான்கள் ஒன்றை ஒன்று உண்மையில் தொடுவதே இல்லை. அவற்றிற்கு இடையே சைனேப்ஸஸ் (synapses) என்ற மிகச் சிறிய இடைவெளிகள் உண்டு; அவை ஒரு மில்லிமீட்டரில் 40,000-ல் ஒரு பங்கிற்கும் குறைவானவையே. இந்த இடைவெளிகளை நரம்புச் செலுத்திகள் (neurotransmitters) என்ற இரசாயனங்கள் நிரப்புகின்றன. இவற்றில் 30 மட்டுமே அறியப்பட்டுள்ளன, ஆனால் மூளையில் இன்னும் அநேகம் இருக்கலாம். இந்த இரசாயன சமிக்கைகள் நியூரானின் ஒரு முனையில் உள்ள டெண்ட்ரைட்டுகள் (dendrites) என அழைக்கப்படும் சிறிய இழைகளின் பின்னலமைப்பால் பெறப்படுகின்றன. பிறகு, நரம்பணுவின் மறுபுறத்திலுள்ள நரம்பிழையான ஆக்ஸான் (axon) வழியாக இவை கடத்தப்படுகின்றன. இந்தச் சமிக்கைகள் சைனேப்ஸஸ்களில் இருக்கும்போது இரசாயன துடிப்புகளாகவும் நியூரான்களிலோ மின் துடிப்புகளாகவும் உள்ளன. ஆகவே நரம்புச் சமிக்கைகள், மின் இரசாயன (electrochemical) முறையில் கடத்தப்படுகின்றன. ஒவ்வொரு துடிப்பும் அதே சக்தியுடையதே. ஆனால் துடிப்புகளின் எண்ணிக்கையை சார்ந்தே சமிக்கைகளின் செறிவு (frequency) அமைகிறது; அது நொடிக்கு ஆயிரம் என்ற அளவில்கூட இருக்கலாம்!
7நாம் கல்வி கற்கும்போது மூளையில் என்ன விதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. நாம் கல்வி கற்கையில் அதிலும் முக்கியமாக வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் கற்கையில் வலுவான இணைப்புகள் ஏற்படுகின்றன; மேலும் நியூரான்கள் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்பும் அதிகமான இரசாயனங்கள் வெளிவிடப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. தொடர்ந்து உபயோகிக்கும்போது இந்த இணைப்புகள் பலப்படுகின்றன, இவ்வாறு கற்கும் ஆற்றலும் பலமடைகிறது. “ஒரே சமயத்தில் அடிக்கடி தூண்டப்படும் வழித்தடங்கள் ஏதோவொரு விதத்தில் பலமடைகின்றன”3 என்று சயன்டிஃபிக் அமெரிக்கன் அறிவிக்கிறது. இதைப் பற்றி, ‘பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்கிற’ முதிர்ச்சியுள்ள மக்கள் கருத்தாழமிக்க விஷயங்களை எளிதில் புரிந்துகொள்கின்றனர் என பைபிள் கூறுவது ஆர்வத்திற்குரிய ஒன்றல்லவா? (எபிரெயர் 5:14) மானசீக திறமைகள் உபயோகிக்கப்படாதபோது மறைந்துபோகின்றன என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. இவ்வாறு, மூளையும் தசைகளைப் போலவே உபயோகிக்கும்போது பலமடைகிறது, உபயோகிக்காதபோதோ பலவீனமடைகிறது.
8மூளைக்குள் இணைப்புகளை ஏற்படுத்தும் இந்த ஏராளமான நுண்ணிய நரம்பிழைகள் அதன் “வயரிங்” (“wiring”) என பொதுவாக அழைக்கப்படுகின்றன. திணறடிக்கும் சிக்கல் வாய்ந்த அமைப்பில் அவை
எல்லாமே இம்மியும் பிசகாமல் சரியான இடங்களில் அமைந்துள்ளன. ஆனால், “வயரிங் வரைபடங்கள்” தேவைப்படுத்தும் சரியான இடங்களில் அவை எவ்வாறு துல்லியமாக அமைந்துள்ளன என்பது புரியாப் புதிரே. “நியூரான்கள் எவ்வாறு குறிப்பிட்ட விதமான இணைப்புகளை ஏற்படுத்துகின்றன என்ற கேள்வியே மூளையின் வளர்ச்சியில் உட்பட்டுள்ள அதிமுக்கிய, தீர்க்கப்படாத பிரச்சினை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. . . . இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே மிகவும் துல்லியமாய் ஸ்தாபிக்கப்படுவதாக தோன்றுகிறது”4 என ஒரு விஞ்ஞானி கூறினார். இவ்வாறு திட்டவட்டமாக மேப் வரையப்பட்டுள்ள மூளையின் பகுதிகள், “நரம்பு மண்டலம் முழுவதிலும் காணப்படுகின்றன; துல்லியமான இந்த வயரிங் எவ்வாறு போடப்படுகிறது என்பது தீர்க்கப்படாத, மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகவே தொடருகிறது”5 என மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.9இந்த இணைப்புகளின் எண்ணிக்கை தலைச்சுற்ற வைக்கும் ஒன்றாகும்! ஒவ்வொரு நியூரானும் மற்ற நியூரான்களோடு ஆயிரக்கணக்கான இணைப்புகளை ஏற்படுத்தலாம். நியூரான்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் மட்டுமல்ல, நேரடியாக டெண்ட்ரைட்டுகள் இடையிலேயே ஏற்படும் நுண் மின்சுற்றுகளும் (microcircuits) உள்ளன. “மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதே மண்டையை குழப்புகிற விஷயம், அதிலும் இந்த ‘நுண் மின்சுற்றுகள்’ ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டுகின்றன”6 என்கிறார் நரம்பியல் வல்லுனர் ஒருவர். “மனித மூளையிலுள்ள கோடானுகோடிக் கணக்கான நரம்பு செல்கள், 10 கோடி கோடி இணைப்புகளைக்கூட ஏற்படுத்தலாம்”7 என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதன் திறன் எவ்வளவு? “உலகின் மிகப் பெரிய நூலகங்களில் இருப்பதைப்போல சுமார் இரண்டு கோடி புத்தகங்களை நிரப்ப போதுமான”8 தகவலை நம் மூளையால் சேகரிக்க முடியும் என கார்ல் சாகன் கூறுகிறார்.
10மனிதனை மற்ற எந்த மிருகத்திலிருந்தும் வெகுவாக வேறுபடுத்திக் காட்டுவது அவனுடைய மூளையின் கார்டெக்ஸே (cortex). மண்டையோட்டிற்குள் கச்சிதமாக அமைந்துள்ள, மடிப்புகள் நிறைந்த இதன் பருமன் சுமார் 6 மில்லிமீட்டருக்கும் குறைவே. கார்டெக்ஸை விரித்து வைத்தால் சுமார் கால் சதுர மீட்டர் பரப்பளவு இருக்கும்; அதில் ஒரு கன சென்டிமீட்டரை எடுத்தால் சுமார் 16,000 கிலோமீட்டர் நீளமுள்ள இணைக்கும் நார்களை அதில் காண முடியும். மனித கார்டெக்ஸ் மற்றெந்த மிருகத்திற்கும் இருப்பதைவிட பெரியதாக இருப்பது மட்டுமல்ல, அதில் கட்டுப்படுத்தப்படாத (uncommitted) பகுதியும் மிக அதிகம் உண்டு.
அதாவது, உடலின் அன்றாட செயல்பாடுகளைக் கையாள அது கட்டுப்படுத்தப்பட்டில்லை; மாறாக, மனிதர்களை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் உயர்தரமான மானசீக செயல்பாடுகளுக்காக அது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. “நாம் வெறுமனே புத்திசாலித்தனமான மனிதக் குரங்குகள் அல்ல” என ஓர் ஆராய்ச்சியாளர் கூறினார். நம் மூளையானது, “மற்ற எல்லாவித உயிரினங்களிலிருந்தும் நம்மை தரத்தில் வித்தியாசப்பட்டவர்கள் ஆக்குகிறது.”9நமது மிகச் சிறந்த திறமை
11“பல்வேறு விதமான விசேஷித்த செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ளும் திறமையே மனித மூளையை வேறுபடுத்திக் காட்டுகிறது”10 என விஞ்ஞானி ஒருவர் கூறினார். ஒரு புரோகிராமரால் கணிப்பொறிக்குள் வைக்கப்படும் புரோகிராம்களைப் போலில்லாமல் அதனுள்ளேயே அமைந்த இயல்புகளைக் குறிக்க “ஹார்டுவயர்டு” (“hardwired”) என்ற பதம் கணிப்பொறி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. “இதை மனிதருக்கு பொருத்தும்போது ஹார்டு வயரிங் என்பது உள்ளியல்பான திறமைகளை அல்லது முன்பே வைக்கப்பட்ட இயல்புகளைக் குறிக்கிறது”11 என ஒரு புத்தகம் கூறுகிறது. கற்றுக்கொள்ள உதவும் அநேக உள்ளான திறமைகள் மனிதனுக்குள் புதைந்து கிடக்கின்றன, ஆனால் கல்வியே அங்கு வைக்கப்படவில்லை. மிருகங்களுக்கோ ஹார்டுவயரான இயல்புணர்வு ஞானம் உண்டு, ஆனால் புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கான திறமைகளோ குறைவாக உள்ளன.
12மிகவும் புத்திசாலியான மிருகம்கூட, “மனிதனுக்கு இருப்பதைப் போன்ற மனதை வளர்த்துக்கொள்வதே இல்லை. ஏனென்றால், நாம் பார்ப்பவற்றிலிருந்து ஒரு கருத்தை, கேட்பவற்றிலிருந்து மொழியை, நம் அனுபவங்களிலிருந்து எண்ணங்களை உருவாக்க நமது நரம்புமண்டல அமைப்புகள் முன்பே திட்டமிடப்பட்டுள்ளன; நம்மிடம் இருக்கும் இது அதனிடம் இல்லை” என உள்ளுக்குள் இருக்கும் பிரபஞ்சம் கூறுகிறது. ஆனால் நம் சுற்றுச்சூழலிலிருந்து விஷயங்களை உட்கிரகிப்பதன் மூலம் நம் மூளையை புரோகிராம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்தப் புத்தகம் கூறுகிற விதமாக, “மனித மனது முழுமையாக வளர்ச்சியடையாது. . . . அவ்வளவு ஏராளமான அனுபவங்கள் உள்ளே நுழையவில்லை என்றால் புத்திக்கூர்மை ஒரு சிறு துளிகூட உருவாகாது.”12 ஆக, மனித மூளைக்குள் இருக்கும் இயல்பான திறமை புத்திக்கூர்மையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, மிருகங்களைப் போலில்லாமல், நம் சொந்த அறிவு, மதிப்பீடுகள், வாய்ப்புகள், இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் புத்திக்கூர்மையை நம் விருப்பப்படி திட்டமிடும் சுதந்திரமும் நமக்கு உள்ளது.
மொழி—மனிதர்களுக்கே உரியது
13ஹார்டுவயர்டு திறமைகளுக்கான மிகச் சிறந்த உதாரணம் மொழியாகும்; இது நாமே புரோகிராம் செய்யும்படி பெருமளவு வளைந்துகொடுக்கும் தன்மையும் பெற்றது. “மனித மூளை, மொழியை கற்றுக்கொள்ளும் திறமையுடன் மரபியல் ரீதியில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது”13 என நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் பேச்சை, “மொழியைக் கற்று உபயோகிக்கும் நம் மூளையின் இயல்பான திறமையின் அடிப்படையில் மட்டுமே விளக்க முடியும்”14 என்றும் கூறுகின்றனர். மிருகங்களின் இயல்புணர்வு செயல்பாடுகளில் ஒரு விறைப்பு தன்மை காணப்படுகிறது, மனிதர்களிலோ மொழிக்கான இந்த ஹார்டுவயர்டு திறமையைப் பயன்படுத்துவதில் அதிகளவான வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது.
14ஒரு குறிப்பிட்ட மொழி நம் மூளைக்குள் ஹார்டுவயர்டு செய்யப்படுவதில்லை. மாறாக மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான திறமையோடு முன்பே திட்டமிடப்பட்டுள்ளோம். வீட்டில் இரண்டு மொழிகள் பேசப்பட்டால் ஒரு குழந்தை இரண்டையுமே கற்றுக்கொள்கிறது. மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வந்தால் அதையும் கற்றுக்கொள்ளும். ஒரு சிறுமி, சின்னஞ்சிறு வயதிலிருந்தே அநேக மொழிகள் பேசப்பட்ட இடத்தில் வளர்க்கப்பட்டாள். ஐந்து வயதாகையில் எட்டு மொழிகளை அவளால் சரளமாக பேச முடிந்தது. இப்படிப்பட்ட இயல்பான திறமைகள் நமக்கிருப்பதால், சிம்பான்ஸிகளை வைத்து சைகை மொழியில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, “சிம்பான்ஸிகளோ மிகவும் அடிப்படையான மனித மொழியைக்கூட
பேச இயலாதவை”15 என மொழியியல் வல்லுனர் ஒருவர் கூறியது ஆச்சரியம் அல்லவே!15இத்தகைய வியக்கத்தக்க திறமை மிருகங்களின் உறுமல்களிலிருந்து பரிணமித்திருக்க முடியுமா? மிகவும் புராதன மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள்கூட மொழிகள் பரிணமித்திருக்க முடியாது என்றே காட்டுகின்றன. “வளர்ச்சியடையாத மொழிகளே கிடையாது”16 என வல்லுனர் ஒருவர் கூறினார். வளர்ச்சியடையாத மொழிகள் என அழைக்கப்படுபவை, “இன்றைய முன்னேறிய நாகரிக மொழிகளைவிட பெருமளவு சிக்கல் வாய்ந்தவையாகவும் அதிக திறம்பட்டவையாகவும் இருந்தன”17 என்று மனிதவியல் நிபுணர் ஆஷ்லி மான்டாகூ ஒப்புக்கொண்டார்.
16நரம்பியல் வல்லுனர் ஒருவர் பின்வரும் முடிவுக்கு வந்தார்: “மொழியின் செயல்முறை பற்றி நாம் எந்தளவுக்கு ஆராய்கிறோமோ அது அந்தளவுக்கு புரியாப் புதிராகவே ஆகிறது.”18 மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்: “இலக்கண ரீதியான பேச்சின் ஆரம்பம் தற்போது முற்றிலும் இரகசியமாகவே உள்ளது.”19 மற்றொருவரின் கூற்று இதுவே: “மற்ற எந்த ஆற்றலையும்விட தனிப்பட்ட மனிதர்களையும் முழு தேசங்களையும் தூண்டியெழுப்பும் பேச்சுத் திறமை, மனிதர்களை மிருகங்களிலிருந்து தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக வேறுபடுத்திக் காட்டுகிறது. இருந்தாலும் மொழியின் ஆரம்பம், மூளையின் திணறடிக்கும் புதிர்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.”20 ஆனால் அதில் சிருஷ்டிகரின் கைவேலையைப் பார்க்க முடிந்தவர்களுக்கு அது ஒரு புதிரே அல்ல. ஏனென்றால் அவரே, மூளையின் சில பகுதிகளை மொழி திறமைகளுக்காக “ஹார்டுவயர்டு” செய்து வைத்தவர்.
சிருஷ்டிப்பால் மட்டுமே விளக்க முடிந்தவை
17மனிதனின் மூளையில், “ஒருவரின் வாழ்நாளில் உபயோகிக்க முடிந்ததைவிட பேரளவான திறமை உள்ளது”21 என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. இன்று நாம் மூளைக்குள் செலுத்தும் கல்வி மற்றும் நினைவாற்றலைப் போல 100 கோடி மடங்கு அதிகம் செலுத்தினாலும்கூட மூளையால் அதைச் சேகரிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது! ஆனால், தேவைக்கும் இவ்வளவு அதிகத்தை பரிணாமம் ஏன் தோற்றுவித்தது? “ஓர் இனத்திற்கு ஓர் உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என அதற்கு இன்னமும் கற்றுக்கொடுக்கவில்லை; இதற்கான ஒரே உதாரணம் இது மட்டுமே” என ஒரு விஞ்ஞானி ஒப்புக்கொண்டார். அவர் பிறகு இவ்வாறு கேட்டார்: “பரிணாமத்தின் மிகவும் அடிப்படையான
கோட்பாடாகிய இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு படிப்படியாக மட்டுமே முன்னேறுகிறது; ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க நன்மையை அந்த மிருகத்திற்கு அளிக்க வேண்டும் என்கிறது; அப்படியிருக்கும்போது மனித மூளையை இந்தக் கோட்பாட்டோடு எப்படி ஒத்திசைவிக்க முடியும்?” மனித மூளையின் வளர்ச்சி, “பரிணாமத்தால் விளக்கவே முடியாத விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது”22 என்றும் அவர் கூறினார். பரிணாமமானது, ஒருபோதுமே உபயோகிக்காத இவ்வளவு அதிக மூளைத் திறமையை உண்டாக்கி, அடுத்த சந்ததிக்கு கடத்தவே கடத்தாது. ஆக, முடிவே இல்லாமல் கற்றுக்கொள்ளும் திறமையுடைய மனிதன் என்றுமாக வாழ்வதற்காகவே படைக்கப்பட்டான் என நம்புவது அதிக நியாயமாக தோன்றுகிறதல்லவா?18“சுமார் இரண்டு கோடி புத்தகங்களை நிரப்ப போதுமான” தகவலை மனித மூளை “சுமக்க” முடியும் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்ட கார்ல் சாகன் இவ்வாறு கூறினார்: “மூளை, மிகவும் சிறிய இடத்திலுள்ள மிகப் பெரிய ஒன்று.”23 அதுமட்டுமா, இந்தச் சிறிய இடத்தில் நிகழ்வது மனிதனுக்கு புரியாமல் தண்ணீர்காட்டுகிறதே! உதாரணமாக, சிக்கலான இசைப் “படைப்பை” பியானோவில் இசைத்துக்கொண்டிருக்கும் ஒரு கலைஞரின் மூளைக்குள் என்ன நிகழும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அவருடைய விரல்கள் எல்லாம் ஸ்வரக்கட்டைகள் மீது துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும். அவருடைய தலையிலிருக்கும் ஸ்வரங்களுக்கு இசைவாக அவருடைய விரல்கள் அசைந்து, சரியான கட்டைகளை, சரியான நேரத்தில், சரியான அழுத்தத்தோடு தட்டவேண்டும் என்றால் அவருடைய மூளைக்குள் ஆச்சரியப்பட வைக்கும் என்னே திறமை இருக்க வேண்டும்! அவர் தவறான கட்டையைத் தட்டிவிட்டாலும்கூட அவருடைய மூளை அதை அவருக்கு சுட்டிக்காட்டுகிறது! இந்த நம்பமுடியாத, சிக்கல்வாய்ந்த செயல்பாடு பல வருட பயிற்சிக்குப் பிறகு அவருடைய மூளைக்குள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது எப்படி சாத்தியமானது? இசைக்கான திறமை பிறப்பிற்கு முன்பே மனித மூளைக்குள் வைத்து புரோகிராம் செய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.
19இப்படிப்பட்ட காரியங்களை மிருக மூளையால் யோசித்துக்கூட பார்க்க முடியாதபோது அவற்றை செய்ய முடிவதைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. இதைப் பற்றிய ஒரு விளக்கத்தை எந்தப் பரிணாம கொள்கையாலும் கொடுக்க முடியவில்லை. உன்னத அறிவாற்றல் மிக்கவரின் குணங்களை மனிதனின் புத்திக்கூர்மை பிரதிபலிக்கவில்லையா? இது, “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” என கூறும் ஆதியாகமம் 1:27-க்கு இசைவாக இருக்கிறதல்லவா? மிருகங்களோ கடவுளுடைய சாயலில் படைக்கப்படவில்லை. அதனால்தான் மனிதனுக்கிருக்கும் திறமைகள் அவற்றிற்கு இல்லை. முன்பே திட்டமிடப்பட்ட, வளைந்துகொடுக்காத இயல்புணர்வின் காரணமாக மிருகங்கள் அநேக வியத்தகு காரியங்களைச் செய்வது உண்மையே, ஆனால் மனிதனோடு ஒப்பிட அவை ஒன்றுமேயில்லை. ஏனென்றால் மனிதனின் சிந்தனையிலும் செயலிலும் வளைந்துகொடுக்கும் தன்மை உள்ளது; அதோடு ஏற்கெனவே உள்ள அறிவை தொடர்ந்து வளர்க்கும் திறமையும் உள்ளது.
20சுயநலமின்றி மற்றவர்களுக்கு அள்ளி வழங்கும் இந்த மனித இயல்பும்கூட பரிணாமத்திற்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பால் பரிணமித்த எதுவும் சுயநலமிக்கதாகவே இருக்கும்” என பரிணாமவாதி ஒருவர் கூறினார். அநேக மனிதர்களும் சுயநலம் மிக்கவர்கள்தான் என்பதும் உண்மையே. ஆனால் பிறகு அவரே இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “உண்மையான, தன்னலம் கருதாத, மெய்யான சுயநலமின்மை மனிதனின் மற்றொரு விசேஷித்த குணமாகும்.”24 இன்னொரு விஞ்ஞானி பின்வருமாறு கூறினார்: “சுயநலமின்மை நமக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது.”25 அதில் உட்பட்டுள்ள தியாகம் அல்லது நஷ்டத்தை அறிந்தும் மனிதர்கள் மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மனிதன் என்ற அற்புதத்தை மதித்துணர்தல்
21இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: மனிதன் அநேக காரியங்களைப் பற்றி சிந்திக்கிறான், உணர்வுடன் இலக்குகளை நிர்ணயிக்கிறான், அவற்றை எட்ட திட்டமிடுகிறான், நிறைவேற்ற வெகுவாக பாடுபடுகிறான், நிறைவேற்றிய பின்னர் அதில் திருப்தி கொள்கிறான். அழகை அள்ளிப் பருகும் கண்கள், இசையை ரசிக்கும் காதுகள், கலையார்வம், கற்பதற்கான விருப்பம், தெரிந்துகொள்வதற்கான எல்லையற்ற ஆவல், புதியவற்றைக் கண்டுபிடித்து, சிருஷ்டிப்பதற்கான கற்பனைத் திறன் ஆகியவற்றுடன் படைக்கப்பட்ட மனிதன் இவற்றை உபயோகிக்கையில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைகிறான். சவால்களை அவன் எதிர்ப்படுகிறான்; தன் மானசீக மற்றும் சரீர ஆற்றல்களைப் பயன்படுத்தி அவற்றை வெற்றி கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி காண்கிறான். சரி, தவறு பற்றிய தார்மீக உணர்வும் தவறு செய்யும்போது குத்திக்காட்ட மனசாட்சியும் மனிதனுக்கு மட்டுமே உள்ளன. அள்ளி வழங்குவதில் சந்தோஷத்தையும் அன்புகூருவதிலும் அன்புகூரப்படுவதிலும் மகிழ்ச்சியையும் காண்கிறான். இவை எல்லாமே வாழ்க்கையில் அவனுடைய மகிழ்ச்சியை அதிகரித்து, அவன் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றன.
22ஒரு மனிதனால் தாவரங்கள், மிருகங்கள், அவனைச் சுற்றியுள்ள
மலைகள் மற்றும் கடல்களின் பேரழகு, அவன் தலைக்கு மேல் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் நிறைந்த வனப்புமிக்க வானம் ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, தான் வெறும் தூசி என்பதை உணர முடியும். காலத்தையும் நித்தியத்தையும் அவன் அறிந்திருக்கிறான், தான் இங்கே வந்ததெப்படி, எங்கே போகிறான் என்பதைப் பற்றி யோசிக்கிறான், இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை அறியவும் ஏங்குகிறான். எந்த மிருகமாவது இப்படிப்பட்ட காரியங்களை யோசிக்கிறதா? ஆனால் மனிதனோ காரண காரியங்களை அறிந்துகொள்ள முற்படுகிறான். இதற்கு காரணம், மனிதனுக்கு ஓர் அற்புதமான மூளை அளிக்கப்பட்டிருப்பதும் அவனைச் சிருஷ்டித்தவரின் ‘சாயல்’ அவனுக்கு இருப்பதுமே.23வியக்கத்தக்க புரிந்துகொள்ளுதலைக் காண்பிப்பவராக பூர்வ சங்கீதக்காரனாகிய தாவீது, மூளையை வடிவமைத்து, மனித பிறப்பின் அற்புதத்திற்கு காரணமென அவர் நினைத்தவருக்கே அதற்கான புகழ் மாலையை சூட்டினார். அவர் பின்வருமாறு கூறினார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைக் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:14-16.
24தாயின் கருப்பையிலுள்ள கருவில், பிறக்கவிருக்கும் மனித உடலின் எல்லா பாகங்களும் உண்மையில் “எழுதியிருந்தது” என்றே சொல்லலாம். இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கண்கள், காதுகள், கைகள், கால்கள், வியக்கத்தக்க மூளை, உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும், தாயின் கருப்பையிலுள்ள கருவின் மரபணுக் குறியீட்டில் ‘எழுதப்பட்டிருந்தன.’ இந்தப் பாகங்கள் ஒவ்வொன்றும் அதனதன் வரிசையில் எந்தச் சமயத்தில் தோன்ற வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் குறியீட்டிற்குள் அட்டவணையும் உள்ளது. மரபணுக் குறியீட்டைப் பற்றி நவீன அறிவியல் கண்டுபிடிப்பதற்கு சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பே இந்த உண்மை பைபிளில் பதிவு செய்யப்பட்டிருந்தது!
25வியக்கவைக்கும் மூளையுடன் மனிதன் இங்கு இருப்பதே ஓர் அற்புதம் அல்லவா? பெரும் ஆச்சரியம் கொள்வதற்கான ஒரு காரணம் அல்லவா? இப்படிப்பட்ட ஓர் அற்புதத்திற்கு காரணம் சிருஷ்டிப்புதான், பரிணாமம் அல்ல என்பதும் தெளிவாக இல்லையா?
[கேள்விகள்]
1. மூளையைப் பற்றிய எந்த உண்மை அதற்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக தோன்றலாம்?
2, 3. எந்த இரண்டு வழிகளில் மூளை இந்தப் பிரச்சினையை சமாளிக்கிறது?
4. மூளையைப் புரிந்துகொள்ள தீவிரமான அறிவியல் ஆராய்ச்சி செய்த பிறகும் எது இன்னமும் உண்மையாகவே உள்ளது?
5. வளரும் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றிய எந்த உண்மை அதற்கும் மிருக மூளைக்கும் மத்தியிலுள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது?
6. நரம்புச் சமிக்கைகள் ஒரு நியூரானிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு செல்கின்றன?
7. மூளையின் எந்த அம்சத்தைப் பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ளது, அதற்கு இசைவான எதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்?
8. மூளைப் பற்றிய தீர்க்கப்படாத, மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று எது?
9. மூளைக்குள் எத்தனை இணைப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர், அதன் திறமை பற்றி ஒரு வல்லுனர் என்ன கூறுகிறார்?
10. (அ) மனிதனின் பெருமூளை கார்டெக்ஸ் மிருகங்களுடையதிலிருந்து எந்த விதங்களில் வேறுபடுகிறது, அதனால் மனிதனுக்கு என்ன நன்மைகள் விளைகின்றன? (ஆ) இதைப் பற்றி ஓர் ஆராய்ச்சியாளர் என்ன கூறினார்?
11. மனித மூளை, கற்றுக்கொள்வதில் மிருகங்களுக்கு இல்லாத வளைந்துகொடுக்கும் தன்மையை மனிதர்களுக்கு எவ்வாறு அளிக்கிறது?
12. மிருகங்களைப் போலில்லாமல், மனித மூளை என்ன திறமையுடன் முன்பே திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் மனிதருக்கு என்ன சுதந்திரம் உள்ளது?
13, 14. (அ) மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தங்கள் புத்திக்கூர்மைக்குள் புரோகிராம் செய்ய உதவும் முன்பே திட்டமிடப்பட்ட, அதிகம் வளைந்து கொடுக்கும் திறமைக்கான உதாரணம் என்ன? (ஆ) இதன் அடிப்படையில் மிருகங்களையும் மொழிகளையும் பற்றி புகழ்பெற்ற மொழியியல் வல்லுனர் ஒருவர் என்ன கூறினார்?
15. மிகவும் புராதன மொழிகள் பற்றியதில் அறிவியல் என்ன காட்டுகிறது?
16. மொழியின் ஆரம்பம் பற்றி சில ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர், ஆனால் அது யாருக்கு ஒரு புதிரல்ல?
17. (அ) மூளையைப் பற்றிய எந்த உண்மை பரிணாமத்தால் விளக்கவே முடியாத பிரச்சினையை எழுப்புகிறது? (ஆ) அபரிமிதமான மூளைத் திறமை மனிதனுக்கு இருப்பதால் எது நியாயமானதாக தோன்றுகிறது?
18. மனித மூளை பற்றி ஒரு விஞ்ஞானி முடிவாக என்ன கூறினார், அதன் திறமைகளை எது காட்டுகிறது?
19. மனித மூளையின் அறிவாற்றலும் அற்புதமான மற்ற திறமைகளும் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?
20. மனிதனுக்கிருக்கும் சுயநலமின்மை எந்த விதத்தில் பரிணாமத்திற்கு முரண்பாடாக அமைந்துள்ளது?
21. மனிதனின் எந்தத் திறமைகளும் குணங்களும் அவனை மற்றெந்த மிருகத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன?
22. எதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது மனிதனின் சிறுமையை அவனுக்கு உணர்த்தி, புரிந்துகொள்ளுதலைத் தேட வைக்கிறது?
23. தாவீது தன் ஆரம்பத்திற்கான புகழ்மாலையை எவ்வாறு சூட்டினார், கருப்பையில் அவர் உருவானதைப் பற்றி என்ன சொன்னார்?
24. என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் தாவீதின் வார்த்தைகளை அதிக வியக்கத்தக்கதாக்குகின்றன?
25. இவையெல்லாம் என்ன முடிவுக்கு வழிநடத்துகின்றன?
[பக்கம் 168-ன் சிறு குறிப்பு]
ஒவ்வொரு நொடியும் மூளைக்கு செல்லும் 10 கோடி செய்திகளை அது எவ்வாறு சமாளிக்கிறது?
[பக்கம் 169-ன் சிறு குறிப்பு]
மூளையானது, அதிமுக்கிய காரியங்கள்மீது கவனம் செலுத்துவதற்காக ஒரு நொடியில் பத்தில் ஒரு முறை தன்னைத் தானே ஸ்கேன் செய்கிறது
[பக்கம் 169-ன் சிறு குறிப்பு]
நம் மூளை, “முற்று முழுமையாகவே விளங்கா புதிராக” உள்ளது
[பக்கம் 173-ன் சிறு குறிப்பு]
“நாம் வெறுமனே புத்திசாலித்தனமான மனிதக் குரங்குகள் அல்ல.” நம் மூளையானது, “மற்ற எல்லாவித உயிரினங்களிலிருந்தும் நம்மை தரத்தில் வித்தியாசப்பட்டவர்கள் ஆக்குகிறது”
[பக்கம் 175-ன் சிறு குறிப்பு]
“மொழியின் ஆரம்பம், மூளையின் திணறடிக்கும் புதிர்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது”
[பக்கம் 175-ன் சிறு குறிப்பு]
மனித மூளையின் வளர்ச்சி, “பரிணாமத்தால் விளக்கவே முடியாத விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது”
[பக்கம் 177-ன் சிறு குறிப்பு]
மனிதனின் வியக்கவைக்கும் மூளை, அவனைப் படைத்தவரின் ‘சாயலைக்’ கொண்டுள்ளது
[பக்கம் 171-ன் பெட்டி/படம்]
மனித மூளை—‘விடுவிக்கப்படாத ஒரு புதிரா’?
“மனித மூளையே, முழு பிரபஞ்சத்திலும் அதிக அற்புதமான, புரியாப் புதிரான ஒன்று.”—மனிதவியல் நிபுணர் ஹென்றி எஃப். ஆஸ்பார்ன்a
“மூளையில் எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன? அதுவே முக்கியமான கேள்வி, ஆனால் அதற்கான பதில் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.”—உடலியல் வல்லுனர் சார்ல்ஸ் ஷெரிங்டன்b
“நுணுக்கமான விவரம் தொடர்ச்சியாக கிடைத்திருந்தும், மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பது இன்னமும் பெரும் புதிராகவே உள்ளது.”—உயிரியல் நிபுணர் ஃபிரான்ஸிஸ் க்ரிக்c
“ஒரு கம்ப்யூட்டரை ‘மின்னணு மூளை’ என அழைப்பவர் மூளையைப் பார்த்ததேயில்லை.”—அறிவியல் பதிப்பாசிரியர் டாக்டர் இர்விங் எஸ். பெங்கெல்ஸ்டார்ஃப்d
“ஒரு பெரிய, சமகாலத்திய கம்ப்யூட்டரைவிட நமது செயலாற்றும் நினைவாற்றலில் பல கோடிக்கணக்கான மடங்கு அதிக தகவலை சேகரிக்க முடியும்.”—அறிவியல் எழுத்தாளர் மார்டன் ஹன்ட்e
“மூளையானது, அறியப்பட்ட பிரபஞ்சத்திலுள்ள மற்ற எந்தப் பொருளையும்விட வித்தியாசமானதாகவும் கற்பனை செய்ய முடியாதளவு சிக்கலானதாகவும் இருப்பதால் மூளையின் வினோதமான அமைப்பை புரிந்துகொள்வதற்கு முன்பு நாம் விடாப்பிடியாய் பற்றியிருக்கும் சில எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.”—நரம்பியல் நிபுணர் ரிச்சர்ட் எம். ரீஸ்டாக்f
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியிலுள்ள பெரும் இடைவெளி பற்றி ‘பரிணாமத்தின் உடன் கண்டு பிடிப்பாளரான’ ஆல்ஃபிரட் ஆர். வாலெஸ் டார்வினுக்கு இவ்வாறு எழுதினார்: “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு, மனிதக் குரங்கைவிட கொஞ்சம் உயர்தரமான மூளையை மட்டுமே காட்டுமிராண்டிக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால் இவனுக்கிருப்பதோ நம்மைப் போன்ற படித்தவர்களின் சமுதாயத்திலுள்ள சராசரி குடிமகனின் மூளையைவிட எந்த விதத்திலும் குறைவானது அல்ல.” அவர் ஒப்புக்கொண்டதைக் கேட்ட டார்வின் நிலைகுலைந்து போனவராய், “உன்னுடைய மற்றும் என்னுடைய குழந்தையை நீ முற்றிலும் கொன்று போட்டுவிடவில்லை என நான் நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.g
ஏதோவொரு மிருக மூளையிலிருந்தே மனித மூளை பரிணமித்ததென்று சொல்வது நியாயமாகவும் இல்லை, அத்தாட்சிகளுக்கு இசைவாகவும் இல்லை. மாறாக, பின்வரும் இந்த முடிவே அதிக நியாயமானது: “மனிதனுடைய புரிந்துகொள்ளும் திறமைக்கு மிகவும் அப்பாற்பட்ட, மூளைக்கும் மனதிற்கும் உள்ள வியக்கத்தக்க உறவை வடிவமைத்து உருவாக்கிய உன்னத அறிவாற்றலுள்ள ஒருவர் இருந்தாக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை. . . . இவை எல்லாவற்றிற்கும் புத்திக்கூர்மையுள்ள ஓர் ஆரம்பம் இருந்தது, யாரோ ஒருவர்தான் இவற்றை உருவாக்கினார் என்று நான் நம்பியே ஆகவேண்டும்.”—நரம்பு அறுவைசிகிச்சை டாக்டர் ராபர்ட் ஜே. வைட்h
[பக்கம் 170-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மூளையும் தசைகளைப் போலவே உபயோகிக்கும்போது பலமடைகிறது, உபயோகிக்காதபோதோ பலவீனமடைகிறது
டெண்ட்ரைட்டுகள்
நியூரான்
ஆக்ஸான்
சைனேப்ஸ்
நியூரான்
ஆக்ஸான்
[பக்கம் 172-ன் படம்]
“சுமார் இரண்டு கோடி புத்தகங்களை நிரப்ப போதுமான” தகவலை நம் மூளையால் சேகரிக்க முடியும்
[பக்கம் 174-ன் படங்கள்]
சிக்கலான மொழிகளை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள ஒரு குழந்தையின் மூளை முன்னதாகவே தயார்படுத்தப்பட்டுள்ளது; ஆனால், “சிம்பான்ஸிகளோ மிகவும் அடிப்படையான மனித மொழியைக்கூட பேச இயலாதவை”
[பக்கம் 176-ன் படம்]
எந்த மிருகங்களுக்கும் இல்லாத திறமைகள் மனிதனுக்கு உள்ளன
[பக்கம் 178-ன் படம்]
‘அதன் உறுப்புகள் எல்லாம் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது’