Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அசுத்த ஆவி பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான்

அசுத்த ஆவி பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான்

அதிகாரம் 61

அசுத்த ஆவி பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான்

இயேசு பேதுரு, யாக்கோபு, யோவானுடன் எர்மோனின் பக்க மலையின்மேல் சென்றிருக்கையில், மற்ற சீஷர்கள் ஒரு பிரச்னைக்குள்ளாகி விடுகின்றனர். திரும்பி வந்தபோது இயேசு ஏதோவொன்று தவறாக இருக்கிறது என்பதை உடனடியாக காண்கிறார். அவருடைய சீஷர்களைச் சுற்றி ஒரு ஜனக்கூட்டம் கூடியிருக்கிறது, வேதபாரகர்கள் அவர்களோடு தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் இயேசுவைக் கண்டவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டு, அவருக்கு வந்தனம் செய்வதற்கு ஓடுகிறார்கள். “நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம் பண்ணுகிறீர்கள்?” என்று அவர் கேட்கிறார்.

ஜனக்கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் முன்வந்து, இயேசுவுக்கு முன் முழுங்காற்படியிட்டு விளக்குகிறான்: “போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டு வந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்து போகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற் போயிற்று.”

அந்தப் பையனை குணமாக்குவதற்கு சீஷர்கள் தவறினதை வேதபாரகர்கள் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது, ஒருவேளை அவர்களுடைய முயற்சிகளை கேலி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் இயேசு வந்து சேருகிறார். “விசுவாசமில்லாத சந்ததியே, எது வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எது வரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்?” என்று அவர் கேட்கிறார்.

இயேசு தம்முடைய குறிப்புகளை அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வது போல் தெரிகிறது, ஆனால் சந்தேகமின்றி அவைகள் குறிப்பாக தம்முடைய சீஷர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வேதபாரகரை நோக்கி சொல்லப்படுகின்றன. அடுத்து, இயேசு அந்தப் பையனைப் பற்றி சொல்கிறார்: “அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்.” ஆனால் அந்தப் பையன் இயேசுவிடம் வருகையில், அவனைப் பற்றியிருக்கும் பிசாசு அவனைத் தரையிலே தள்ளி, அவனை வன்மையாய் பிடித்தாட்டி தூக்கியெறிகிறது. அந்தப் பையன் தரையிலே உருண்டு, வாயினால் நுரை தள்ளுகிறான்.

“இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று?” என்று இயேசு கேட்கிறார்.

“சிறு வயது முதற்கொண்டே” என்று தகப்பன் பதிலளிக்கிறான். “இவனைக் கொல்லும்படிக்கு அது [பிசாசு] அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று.” பின்னர் தகப்பன் மன்றாடுகிறான்: “நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”

ஒருவேளை பல வருடங்களாக தகப்பன் உதவிக்காக தேடிக்கொண்டிருக்கலாம். இப்போது, இயேசுவின் சீஷர்கள் தவறினதால், அவருடைய மனக்கசப்பு அதிகமாயிருக்கிறது. உதவியற்ற நிலையிலிருந்த அந்த மனிதனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, இயேசு உற்சாகமூட்டும் வண்ணம் சொல்கிறார்: ‘அந்தச் சொற்றொடர், ‘உம்மால் கூடுமானால்!’ ஏன், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.’

“விசுவாசிக்கிறேன்!” என்று உடனடியாக தகப்பன் கண்ணீரோடே சத்தமிட்டுச் சொல்கிறான், ஆனால் அவன் கெஞ்சுகிறான்: “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்.”

அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் அவர்களை நோக்கி ஓடிவருகிறதைக் கண்டு, இயேசு அந்தப் பிசாசை கண்டிக்கிறார்: “ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப் போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.” அந்தப் பிசாசு புறப்படுகையில், அது அந்தப் பையனை மறுபடியும் சத்தமிடச் செய்கிறது, மிகவும் அலைக்கழிக்கிறது. பின்பு அந்தப் பையன் தரையில் அசைவின்றி கிடக்கிறான், ஆகையால் அநேக ஜனங்கள் “அவன் செத்துப் போனான்” என்று சொல்ல ஆரம்பிக்கின்றனர். ஆனால் இயேசு அவன் கையைப் பிடித்து அவனைத் தூக்குகிறார், அவன் எழுந்திருக்கிறான்.

இதற்கு முன்பு, பிரசங்கிக்கும்படி சீஷர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்கள் பிசாசுகளை துரத்தியிருக்கின்றனர். ஆகையால் இப்போது, ஒரு வீட்டில் அவர்கள் பிரவேசிக்கும் போது அவர்கள் இயேசுவை தனித்துக் கேட்கிறார்கள்: “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று?”

அது அவர்கள் விசுவாசமின்மையின் காரணமாக என்பதை குறிப்பிட்டு காட்டுகிறவராய், இயேசு பதிலளிக்கிறார்: “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது.” (NW) இந்த விஷயத்தில் உட்பட்டிருந்த அதிக வல்லமையான பிசாசை துரத்துவதற்கு தயாரிப்பு தேவையாயிருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. பலமான விசுவாசத்தோடுகூட, கடவுளின் வல்லமையான உதவிக்காக விண்ணப்பிக்கும் ஜெபமும் தேவைப்பட்டது.

அதற்குப் பிறகு இயேசு கூடுதலாக சொல்கிறார்: “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” விசுவாசம் எவ்வளவு வல்லமையானதாக இருக்கக்கூடும்!

யெகோவாவின் சேவையில் முன்னேறுவதைத் தடுக்கும் இன்னல்களும், இடையூறுகளும் சொல்லர்த்தமான ஒரு பெரிய மலையைப் போல் சமாளிக்க முடியாததாகவும் அகற்ற முடியாததாகவும் ஒருவேளைத் தோன்றலாம். என்றபோதிலும், நாம் நம்முடைய இருதயங்களில் விசுவாசத்தைப் பண்படுத்தி அதற்கு தண்ணீர் ஊற்றி, வளருவதற்கு உற்சாகப்படுத்தினோமானால், அது முதிர்ச்சிக்கு விரிவடைந்து, அப்பேர்ப்பட்ட மலையைப் போன்ற இன்னல்களையும், இடையூறுகளையும் மேற்கொள்ள நமக்கு உதவும். மாற்கு 9:14–29; மத்தேயு 17:19, 20; லூக்கா 9:37–43.

▪ எர்மோன் மலையிலிருந்து திரும்பிய போது என்ன சூழ்நிலையை இயேசு எதிர்ப்படுகிறார்?

▪ பிசாசு பிடித்திருந்த பையனின் தகப்பனுக்கு என்ன உற்சாகத்தை இயேசு கொடுக்கிறார்?

▪ சீஷர்கள் ஏன் அந்தப் பிசாசை துரத்த முடியவில்லை?

▪ விசுவாசம் எவ்வளவு வல்லமையானதாக ஆகக்கூடும் என்று இயேசு காண்பிக்கிறார்?