Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அச்சுறுத்தும் புயற்காற்றை அடக்குதல்

அச்சுறுத்தும் புயற்காற்றை அடக்குதல்

அதிகாரம் 44

அச்சுறுத்தும் புயற்காற்றை அடக்குதல்

கடலோரத்திலே ஜனங்களுக்குப் போதகம் பண்ணியதும், பின்னால், தம்முடைய சீஷர்களோடு தனித்திருக்கையில் உவமைகளை அவர்களுக்கு விளக்கியதும் உட்பட, இயேசுவினுடைய அந்த நாள் வேலைகள் மிகுந்ததாயிருந்திருக்கிறது. அன்று சாயங்காலமான போது அவர், “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று சொல்லுகிறார்.

கலிலேயா கடலுக்குக் கிழக்குக் கரையின் மறுபக்கத்தில் தெக்கப்போலி என்ற பிரதேசமிருக்கிறது. இந்தப் பெயர் கிரேக்குவில் “பத்து” என்று பொருள்படும் தெக்காவிலிருந்தும் “நகரம்” என்று பொருள்படும் போலிஸியிலிருந்தும் வருகிறது. தெக்கப்போலி நகரங்கள், சந்தேகத்திற்கிடமின்றி அநேக யூதர்களின் தாயகமாக இருந்த போதிலும், அவை கிரேக்க கலாச்சாரத்தின் மையமாக இருக்கின்றன. எனினும் இந்தப் பகுதியில் இயேசுவின் ஊழியம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இந்தச் சமயத்திலும்கூட, நாம் பின்னால் பார்க்கப் போகிற விதமாக, அவர் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பதிலிருந்து தடை செய்யப்படுகிறார்.

அவர்கள் அக்கரைக்குப் போகவேண்டும் என்பதாக இயேசு கேட்டுக்கொண்ட போது, சீஷர்கள் அவரைப் படவில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுடைய புறப்பாடு கவனிக்கப்படாமல் இல்லை. விரைவில் மற்றவர்கள் அவர்களோடுகூடச் செல்ல தங்கள் படவுகளில் ஏறிக்கொள்கிறார்கள். கடந்து செல்ல அது வெகு தூரமாக இல்லை. உண்மையில், கலிலேயாக் கடல், 21 கிலோமீட்டர் நீளமும், உச்ச அளவில் 12 கிலோமீட்டர் அகலமாகவும் இருந்த ஒரு பெரிய ஏரியே ஆகும்.

இயேசு களைப்பாயிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆகவே அவர்கள் படகைத் தள்ளிக் கொண்டு போகையில் அவர் உடனடியாகவே படகின் பின்புறத்தில், தலைக்குத் தலையணையை வைத்து உறங்கிவிடுகிறார். அப்போஸ்தலர்களில் பலர் கலிலேயாக் கடலில் நெடுங்காலமாக மீன் பிடித்திருப்பதால், அனுபவமுள்ள படகோட்டிகளாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் படகைச் செலுத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இது எளிய ஒரு பயணமாக இருக்கப்போவதில்லை. கடல்மட்டத்துக்குக் கீழே 213 மீட்டர் அடியிலுள்ள ஏரியின் மேற்பரப்பில் தட்பவெப்பநிலை வெதுவெதுப்பாக இருப்பதாலும், அருகாமையிலுள்ள மலைகளின் குளிர் காற்றினாலும் சில சமயங்களில் பலத்தக் காற்று வீசியடித்து திடீரென ஏரியில் கட்டுக்கடங்காத சுழற்காற்றை உருவாக்குகிறது. இப்பொழுது இதுதான் நடைபெறுகிறது. விரைவில் அலைகள் படவின் மீது மோதி, படவு அமிழ்ந்துவிடத்தக்கதாக அதனுள் நீர் வாரியடிக்கிறது. என்றபோதிலும் இயேசு தொடர்ந்து நித்திரையாயிருக்கிறார்!

அனுபவமுள்ள படகோட்டிகள் படவைச் செலுத்த கடினமாகப் பிரயாசப்படுகிறார்கள். இதற்கு முன்னால் புயல்காற்றினூடே அவர்கள் படவுகளை ஓட்டிச் சென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த முறை அவர்கள் மிகவும் களைப்படைந்து போகிறார்கள். தங்கள் உயிர்களுக்குப் பயந்தவர்களாய் அவர்கள், “போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா?” என்றுச் சொல்லி இயேசுவை எழுப்புகிறார்கள். ‘எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்!’

இயேசு எழுந்து காற்றையும் கடலையும் ‘இரையாதே, அமைதலாயிரு!’ என்று கட்டளையிடுகிறார். அப்பொழுது காற்று நின்று போய் மிகுந்த அமைதல் உண்டாகிறது. தம்முடைய சீஷர்களைப் பார்த்து, அவர் கேட்கிறார்: “ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?”

அப்போது அசாதாரணமான ஒரு பயம் சீஷர்களைப் பிடித்துக் கொள்கிறது. ‘இவர் யாரோ?’ என்று அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். ‘காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே.’

என்னே ஒரு வல்லமையை இயேசு காண்பிக்கிறார்! நம்முடைய அரசர் இயற்கை சக்திகளின் மீது அதிகாரமுடையவராய் இருப்பதையும், அவருடைய ராஜ்ய ஆட்சியில் அவருடைய முழு கவனம் நம்முடைய பூமியினிடமாகத் திருப்பப்படும்போது, திகிலூட்டும் இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாப்பாக அனைவரும் வாழ்வார்கள் என்பதையும் அறிந்துகொள்வது எத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது!

சுழற்காற்று தணிந்து சற்று நேரமானப் பின், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கிழக்கத்தியக் கரைக்குப் பத்திரமாக வந்து சேருகிறார்கள். அநேகமாய் மற்ற படவுகளும் சுழற்காற்றின் தீவிரத்திலிருந்து தீங்கனுபவியாமல், அவை பத்திரமாகப் புறப்பட்ட இடத்துக்கே போய் சேர்ந்திருக்க வேண்டும். மாற்கு 4:35–5:1; மத்தேயு 8:18, 23–27; லூக்கா 8:22–26.

▪ தெக்கபோலி என்பது என்ன? அது எங்கே இருக்கிறது?

▪ கலிலேயக் கடலில் மூர்க்கமான சுழற்காற்று ஏற்பட இயற்கை அமைப்பின் என்ன அம்சங்கள் காரணமாயிருக்கின்றன?

▪ சீஷர்களுடைய படகோட்டும் திறமை அவர்களைப் பாதுகாக்க இயலாது போனபோது அவர்கள் என்ன செய்கிறார்கள்?