Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்னாவிடம் கொண்டு போகப்படுகிறார், பின்னர் காய்பாவிடம்

அன்னாவிடம் கொண்டு போகப்படுகிறார், பின்னர் காய்பாவிடம்

அதிகாரம் 119

அன்னாவிடம் கொண்டு போகப்படுகிறார், பின்னர் காய்பாவிடம்

இயேசு பொது குற்றவாளியாக கட்டப்பட்டு, செல்வாக்குமிக்க முன்னாள் பிரதான ஆசாரியனாகிய அன்னா என்பவனிடம் வழிநடத்தப்படுகிறார். இயேசு 12 வயது சிறுவனாக இருந்த போது ஆலயத்தில் இருந்த போதகர்களை ஆச்சரியமடையச் செய்த போது, அன்னா பிரதான ஆசாரியனாக இருந்தான். அன்னாவின் அநேக குமாரர்கள் பின்பு பிரதான ஆசாரியராக சேவித்தனர், தற்போது அவனுடைய மருமகனாகிய காய்பா அந்த ஸ்தானத்தை வகிக்கிறான்.

இயேசு முதலில் அன்னாவின் வீட்டுக்கு கொண்டு போகப்படுகிறார், ஏனென்றால் அந்தப் பிரதான ஆசாரியன் யூத மத வாழ்க்கையில் நீண்ட காலமாக முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருக்கிறான். இடையே அன்னாவைப் பார்ப்பதற்கு கொண்டு செல்லப்படுவது, பிரதான ஆசாரியனாகிய காய்பா 71 அங்கத்தினர்கள் அடங்கிய யூத உயர்நீதி மன்றமாகிய நியாயசங்கத்தை ஒன்று கூட்டுவதற்கும் பொய் சாட்சிகளை கூட்டிச் சேர்ப்பதற்கும் நேரத்தை அனுமதிக்கிறது.

பிரதான ஆசாரியனாகிய அன்னா இப்போது இயேசுவை அவருடைய சீஷர்களைப் பற்றியும், அவருடைய போதகத்தைப் பற்றியும் கேள்வி கேட்கிறான். இயேசு அதற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்: “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே.”

அப்போது இயேசுவின் அருகில் நின்று கொண்டிருந்த சேவகரில் ஒருவன் அவரை முகத்தில் அறைந்து, இவ்வாறு சொல்கிறான்: “பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது?”

“நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று இயேசு பதிலளிக்கிறார். இந்தப் பரிமாற்றத்துக்குப் பிறகு, அன்னா காய்பாவினிடத்திற்கு இயேசுவை கட்டுண்டவராக அனுப்புகிறான்.

அதற்குள் எல்லா பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும், வேதபாரகரும், ஆம், முழு நியாயசங்கமும் ஒன்றுகூட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் ஒன்றுகூடும் இடம் காய்பாவின் வீடாயிருக்கிறது. ஒரு பஸ்கா இரவன்று இப்படிப்பட்ட விசாரணையை நடத்துவது யூத சட்டத்துக்கு விரோதமானது என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் இது அந்த மதத்தலைவர்களை அவர்களுடைய பொல்லாத நோக்கத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை.

பல வாரங்களுக்கு முன்பு, இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பிய போது, அவர் மரிக்க வேண்டும் என்று நியாயசங்கம் அவர்களுக்குள்ளே ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு, புதன்கிழமையன்று, மத அதிகாரிகள் இயேசுவை தந்திரமாய் பிடித்து கொலை செய்ய வேண்டும் என்று ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அவருடைய விசாரணைக்கு முன்பே அவர் உண்மையில் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்!

இயேசுவுக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்குவதற்கு பொய் சாட்சி கொடுக்கக்கூடிய சாட்சிகளை கண்டுபிடிப்பதற்கு இப்போது முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்றபோதிலும், தங்கள் அத்தாட்சியில் இணக்கமாயிருக்கும் ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. இறுதியில், இரண்டு பேர் முன்வந்து உறுதியாகக் கூறுகின்றனர்: “கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப் போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்.”

“இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா?” என்று காய்பா கேட்கிறான். ஆனால் இயேசு பேசாமலிக்கிறார். நியாயசங்கம் வெட்கப்பட வேண்டிய விதத்தில் இந்தப் பொய் குற்றச்சாட்டிலும்கூட சாட்சிகள் தங்கள் கதைகளை இணக்கமாய் சொல்ல முடியவில்லை. ஆகையால் பிரதான ஆசாரியன் ஒரு வித்தியாசமான சூழ்ச்சிமுறையை முயற்சி செய்கிறான்.

கடவுளுடைய குமாரனாக உரிமை பாராட்டிக் கொள்ளும் எவரையும் பற்றி யூதர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதை காய்பா அறிந்திருக்கிறான். இதற்கு முன் இரண்டு சமயங்களில் இயேசுவை மரணத்துக்கு தகுதியாயிருக்கும் ஒரு தேவதூஷணம் சொல்பவராக சிந்தியாமல் துணிச்சலாக முடிவு செய்தனர். ஒரு சமயம் அவர் தாம் கடவுளுக்கு சமமாக இருப்பதாக உரிமை பாராட்டிக் கொள்கிறார் என்று அவர்கள் தவறாக கற்பனை செய்து கொண்டு அவ்வாறு கூறினர். காய்பா இப்போது தந்திரமாக வற்புறுத்தி கேட்கிறான்: “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்.”

யூதர்கள் என்ன நினைத்தாலும் சரி, இயேசு உண்மையில் கடவுளுடைய குமாரன். பேசாமலிருந்தால் தாம் கிறிஸ்து என்பதை மறுதலிப்பதாக புரிந்து கொள்வார்கள். ஆகையால் இயேசு தைரியமாக பதிலளிக்கிறார்: “நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

அப்போது, காய்பா நாடக பாணியில் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு சொல்கிறான்: “இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது?”

“மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்” என்று நியாயசங்கம் அறிவிக்கிறது. பின்பு அவர்கள் அவரை கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர், அவருக்கு விரோதமாக அநேக காரியங்களைச் சொல்லி தூஷிக்கின்றனர். அவரை கன்னத்தில் அறைந்து, அதில் துப்புகின்றனர். மற்றவர்கள் அவருடைய முகம் முழுவதையும் மூடிவிட்டு, தங்கள் கைமுட்டியால் அவரை அடித்து ஏளனமாக இவ்வாறு சொல்கின்றனர்: “கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும்.” இந்த முறைகேடான பழிதூற்றுதல் இரவுநேர விசாரணையின் போது நடக்கிறது. மத்தேயு 26:57–68; 26:3, 4; மாற்கு 14:53–65; லூக்கா 22:54, 63–65; யோவான் 18:13–24; 11:45–53; 10:31–39; 5:16–18.

▪ இயேசு முதலில் எங்கே கொண்டு போகப்படுகிறார்? அங்கே அவருக்கு என்ன நடக்கிறது?

▪ அடுத்து இயேசு எங்கே கொண்டு போகப்படுகிறார்? என்ன நோக்கத்துக்காக?

▪ இயேசு மரணத்துக்கு தகுதியானவர் என்பதை காய்பா எவ்வாறு நியாயசங்கம் அறிவிக்குமாறு செய்கிறான்?

▪ விசாரணையின் போது என்ன பழிதூற்றும் முறைகேடான நடத்தை நடக்கிறது?