Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பங்களும் புளித்தமாவும்

அப்பங்களும் புளித்தமாவும்

அதிகாரம் 58

அப்பங்களும் புளித்தமாவும்

மிகப் பெரிய மக்கள் கூட்டம் தெக்கப்போலியில் இயேசுவினிடம் வந்தது. அவருக்கு செவிகொடுப்பதற்கும், தங்களுடைய நோய்கள் குணமடைவதற்கும் பெரும்பாலும் புறஜாதி ஜனத்தொகை அடங்கிய இப்பகுதிக்கு அநேகர் நெடுந்தொலைவிலிருந்து வந்தனர். புறஜாதி பகுதிகளில் பயணம் செய்யும்போது, உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு பழக்கமாக அவர்கள் உபயோகித்த பெரிய கூடைகள் அல்லது தின்பண்ட அடைப்பைகளைத் தங்களோடு கொண்டு வந்திருக்கின்றனர்.

என்றபோதிலும், இறுதியில் இயேசு தம் சீஷர்களை அழைத்து சொல்கிறார்: “ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே. உண்மையில், இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்கள் என்றார்.”

அதற்கு அவருடைய சீஷர்கள்: “இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களை கொண்டுவந்து இத்தனை பேர்களை திருப்தியாக்கக்கூடும்?” என்கிறார்கள்.

இயேசு வினவுகிறார்: “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு?”

அவர்கள், “ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு” என்கிறார்கள்.

அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, கடவுளிடம் ஜெபித்து, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுக்கிறார், சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறுகிறார்கள், எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைகிறார்கள். ஏறக்குறைய 4,000 ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் சாப்பிட்ட போதிலும் அதற்குப் பின்பு மீதியான துணிக்கைகளை எடுத்தபோது ஏழு கூடை நிறைய இருக்கிறது!

இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு, தன் சீஷர்களோடு படகில் ஏறி, கலிலேயா கடலின் மேற்கு கரையை கடக்கிறார். இங்கே பரிசேயர்கள், இம்முறை சதுசேயர்கள் என்ற மத அங்கத்தினர்களோடு சேர்ந்துகொண்டு இயேசுவை சோதிக்கும்படி அவரை வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அவரைச் சோதிப்பதற்கான அவர்களுடைய முயற்சிகளை அறிந்தவராய் இயேசு பதிலளிக்கிறார்: “அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். . . . வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?”

அதோடு, இயேசு அவர்களைப் பொல்லாத விபசாரசந்ததியார் என்று அழைத்து, பரிசேயர்களுக்கு முன்பு சொன்னது போலவே யோனாவின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று எச்சரிக்கிறார். அவரும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு படகில் ஏறி, கலிலேயா கடலின் வடகிழக்கு கரையில் உள்ள பெத்சாயிதாவை நோக்கிச் செல்கின்றனர். போகிற வழியில் சீஷர்கள் அப்பங்களை கொண்டுவர தாங்கள் மறந்துபோனதை கண்டுபிடிக்கின்றனர், அவர்களிடத்தில் ஓர் அப்பம் மாத்திரம் இருந்தது.

ஏரோதின் ஆதரவாளர்களாகிய பரிசேயர் மற்றும் சதுசேயருடன் தாம் எதிர்ப்பட்ட சம்பவத்தை மனதில் கொண்டவராய் இயேசு எச்சரிக்கிறார்: “நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” அவர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்து போனதைக் குறித்து இயேசு குறிப்பிடுகிறார் என்று சீஷர்கள் நம்பினதால், புளித்த மாவு அவர்கள் மனதில் அப்பங்கள் என்ற எண்ணத்தைக் கொண்டுவர, அவர்கள் அந்த விஷயத்தைக் குறித்து தர்க்கம்பண்ண ஆரம்பிக்கின்றனர். அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டதை இயேசு அறிந்து சொல்கிறார்: “அப்பங்களைக் கொண்டு வராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிறதென்ன?”

சமீபத்தில், இயேசு அற்புதகரமாய் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு அப்பங்களை வழங்கியிருந்தார், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் கடைசி அற்புதத்தை செய்திருந்தார். சொல்லர்த்தமான அப்பங்கள் இல்லாததைக் குறித்து அவர் அக்கறையுள்ளவராயில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ‘உங்களுக்கு ஞாபகமில்லையா?’ என்று அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார், “நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?”

“பன்னிரண்டு” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

“நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?”

“ஏழு” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

“இன்னும் நீங்கள் உணரவில்லையா?” என்று இயேசு கேட்கிறார். “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக் குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி?”

சீஷர்கள் கடைசியில் குறிப்பைப் புரிந்து கொள்கின்றனர். புளித்தமா, புளிக்கச் செய்யும் ஒரு பொருள். அப்பங்களை எழும்பச் செய்யும். பாவத்தைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது; இயேசு அடையாளப்பூர்வமாக உபயோகிக்கிறார் என்பதை சீஷர்கள் இப்பொழுது புரிந்துகொண்டனர். “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்” குறித்து கவனமாக இருக்கும்படி அவர்களுக்கு எச்சரிப்புக் கொடுக்கிறார், அந்த உபதேசத்திற்கு கறைப்படும் பாதிப்பு இருக்கிறது. மாற்கு 8:1-21; மத்தேயு 15:32–16:12.

▪ ஜனங்கள் ஏன் தங்களோடு பெரிய தின்பண்ட கூடைகளை வைத்திருக்கின்றனர்?

▪ தெக்கப்போலியை விட்டுச் சென்ற பின்பு, இயேசு என்ன படகு பயணங்களை மேற்கொள்கிறார்?

▪ புளித்தமாவைப் குறித்த இயேசுவின் குறிப்பைப் பற்றி சீஷர்கள் என்ன தவறானப் புரிந்து கொள்ளுதலை கொண்டிருந்தனர்?

▪ “பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவு” என்று சொல்கையில் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?