Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவருடைய பிரிவிற்கு அப்போஸ்தலர்களை தயாரித்தல்

அவருடைய பிரிவிற்கு அப்போஸ்தலர்களை தயாரித்தல்

அதிகாரம் 116

அவருடைய பிரிவிற்கு அப்போஸ்தலர்களை தயாரித்தல்

ஞாபகார்த்த உணவு முடிந்து விட்டது, ஆனால் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் இன்னும் மேலறையிலேயே இருக்கின்றனர். இயேசு விரைவில் செல்லப்போவதாக இருந்தாலும், சொல்வதற்கு அவருக்கு இன்னும் அநேக காரியங்கள் இருக்கின்றன. “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று அவர் அவர்களை ஆறுதல்படுத்துகிறார். “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்.” ஆனால் அவர் கூடுதலாக “என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்று சொல்கிறார்.

“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். . . . நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, . . . நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்.” பரலோகத்துக்கு செல்லப்போவதைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்ளவில்லை, ஆகையால் தோமா இவ்வாறு கேட்கிறான்: “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்?”

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு பதிலளிக்கிறார். ஆம், அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே எவரும் தகப்பனின் பரலோக வீட்டுக்குள் பிரவேசிக்க முடியும், ஏனென்றால் இயேசு பின்வருமாறு சொல்கிறார்: “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

“ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்று பிலிப்பு கேட்டுக்கொள்கிறான். பண்டைய காலங்களில் மோசே, எலியா, ஏசாயா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட காட்சிகளைப் போன்று கடவுளின் உருவத்தை இயேசு வெளிப்படுத்திக் காட்டுமாறு பிலிப்பு விரும்புகிறான். ஆனால், உண்மையில், அதைப் போன்ற காட்சிகளைக் காட்டிலும் மேலான ஏதோவொன்றை அப்போஸ்தலர்கள் கொண்டிருக்கின்றனர், அதை இயேசு இவ்வாறு சொல்கிறார்: “பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.”

இயேசு அவ்வளவு பரிபூரணமாக தம் தகப்பனின் ஆள்தன்மையை பிரதிபலிக்கிறதினால், அவரோடு வாழ்ந்து அவரை கவனித்துக் கொண்டிருப்பது உண்மையில் தகப்பனைக் காண்பது போல் இருக்கிறது. என்றபோதிலும், தகப்பன் குமாரனைவிட உயர்ந்தவராய் இருக்கிறார், அதை இயேசு ஒப்புக்கொள்கிறார்: “நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை.” இயேசு பொருத்தமாகவே தம்முடைய போதனைகளுக்குரிய எல்லா மதிப்பையும் தம் பரலோக தகப்பனுக்கு கொடுக்கிறார்.

“என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்று இயேசு இப்போது அவர்களிடம் சொல்வதை கேட்பது அப்போஸ்தலர்களுக்கு எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்க வேண்டும்! அவரை பின்பற்றுபவர்கள் அவரைக் காட்டிலும் பெரிய அற்புதகரமான வல்லமைகளை செய்வதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. இல்லை, ஆனால் அவர்கள் அதைவிட நீண்ட காலமாக, அதைவிட மிகப் பரந்த பரப்பளவில், அதைவிட அதிகமான ஆட்களுக்கு ஊழியம் செய்வார்கள் என்றே அவர் அர்த்தப்படுத்துகிறார்.

அவர் புறப்பட்டுச் சென்ற பின்பு இயேசு தம்முடைய சீஷர்களை கைவிட்டு விட மாட்டார். “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று அவர் வாக்களிக்கிறார். மேலும் அவர் சொல்கிறார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” பின்னர், பரலோகத்துக்கு ஏறிச்சென்ற பின்பு, இயேசு இந்த மற்றொரு தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை தம் சீஷர்கள் மீது பொழிகிறார்.

இயேசு பிரிந்து செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, அவர் சொல்வதாவது: “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது.” ஒரு மானிடனும் காணக்கூடாத ஆவிக்குரிய சிருஷ்டியாக இயேசு இருப்பார். ஆனால் மறுபடியும் தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு இவ்வாறு வாக்களிக்கிறார்: “நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” ஆம், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பிறகு இயேசு மானிட வடிவத்தில் தோன்றுவது மட்டுமல்லாமல், குறித்த காலத்தில் அவர் அவர்களை ஆவி சிருஷ்டிகளாக தம்மோடு பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்புவார்.

இயேசு இப்போது எளிய சட்டத்தை சொல்கிறார்: “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”

ததேயு என்று அழைக்கப்படும் அப்போஸ்தலனாகிய யூதா இப்போது குறுக்கிட்டு இவ்வாறு சொல்கிறான்: “ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன?”

“ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ள மாட்டான்,” என்று இயேசு பதிலளிக்கிறார். அவருடைய கீழ்ப்படிதலுள்ள சீஷர்களைப் போலின்றி இந்த உலகம் கிறிஸ்துவின் போதனைகளை புறக்கணிக்கிறது. ஆகையால் அவர் உலகத்துக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கவில்லை.

தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது, இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு அநேக காரியங்களைக் கற்பித்திருக்கிறார். அவைகள் எல்லாவற்றையும் அவர்கள் எவ்வாறு ஞாபகத்தில் வைக்க முடியும், விசேஷமாக இந்த விநாடி வரையிலும்கூட, அவர்கள் அதிகமாக கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றனரே? சந்தோஷப்படத்தக்க விதத்தில் இயேசு இவ்வாறு வாக்களிக்கிறார்: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”

மறுபடியும் அவர்களை ஆறுதல்படுத்தி, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; . . . உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” உண்மைதான், இயேசு புறப்படப் போகிறார், ஆனால் அவர் இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”

இயேசு அவர்களோடு இருக்கப்போகும் மீதமான நேரம் குறுகினதாயிருக்கிறது. “இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்று அவர் சொல்கிறார். யூதாசுக்குள் புகுந்து, அவன் மீது ஒரு பிடிப்பை கொண்டிருக்கக்கூடிய பிசாசாகிய சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாய் இருக்கிறான். ஆனால் கடவுளை சேவிப்பதிலிருந்து இயேசுவை விலகிப் போகச் செய்வதற்கு சாத்தான் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பாவமுள்ள பெலவீனம் எதுவும் அவரில் இல்லை.

ஒரு நெருக்கமான உறவை அனுபவிப்பது

ஞாபகார்த்த உணவை தொடர்ந்து இயேசு ஒரு தனிமுறையான இருதயப்பூர்வமான பேச்சின் மூலம் தம்முடைய அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்துகிறார். அப்போது நேரம் ஒருவேளை நள்ளிரவை தாண்டி இருக்கும். ஆகையால் இயேசு இவ்வாறு துரிதப்படுத்துகிறார்: “எழுந்திருங்கள், இவ்விடம் விட்டுப்போவோம் வாருங்கள்.” என்றபோதிலும், அவர்கள் அவ்விடத்தைவிட்டு போவதற்கு முன்பு, அவர்கள் மீது இருக்கும் அன்பினால் உந்தப்பட்டு இயேசு தொடர்ந்து பேசுகிறார், செயல்பட வைக்கும் உவமையை கொடுக்கிறார்.

“நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்” என்று அவர் ஆரம்பிக்கிறார். பெரிய திராட்சத் தோட்டக்காரராகிய யெகோவா தேவன் பொ.ச. 29-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் முழுக்காட்டுதல் சமயத்தில் அவர் இயேசுவை பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்த போது இந்த அடையாளப்பூர்வமான திராட்சச் செடியை நட்டார். ஆனால் அந்தத் திராட்சச் செடி அவரைக் காட்டிலும் அதிகமானதை அடையாளப்படுத்துகிறது என்பதை இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார் . . . கொடியானது திராட்சச் செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்க மாட்டீர்கள். நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்.”

பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி அவர்கள் மீது ஊற்றப்பட்ட போது, 51 நாட்களுக்குப் பின், அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் திராட்சச்செடியின் கொடிகளாக ஆகின்றனர். இறுதியில், 1,44,000 பேர்கள் அடையாளப்பூர்வமான திராட்சச்செடியின் கொடிகளானார்கள். நடுத்தண்டாகிய இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து இவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் கனிகளை பிறப்பிக்கும் ஓர் அடையாளப்பூர்வமான திராட்சச் செடியாகின்றனர்.

கனியை பிறப்பிக்க அத்தியாவசியமானதை இயேசு விளக்குகிறார்: “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” என்றபோதிலும், ஒரு நபர் கனி கொடுக்கத் தவறினால், இயேசு சொல்கிறார்: “வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்து போம்.” மறுபட்சத்தில் “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று இயேசு வாக்களிக்கிறார்.

கூடுதலாக இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.” கொடிகளிலிருந்து கடவுள் விரும்பும் கனி, கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயங்கள், விசேஷமாக அன்பை அவர்கள் வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டும். மேலுமாக, கிறிஸ்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவிப்பவராக இருந்ததால், விரும்பத்தக்க கனியில் சீஷராக்கும் வேலையை அவர் செய்தது போலவே அவர்கள் செய்வதும் உட்பட்டிருக்கிறது.

“என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” என்று இயேசு இப்போது ஊக்குவிக்கிறார். என்றபோதிலும், அவருடைய அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதை செய்ய முடியும்? “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்,” என்று சொல்கிறேன். தொடர்ந்து இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.”

இன்னும் சில மணிநேரங்களில், தம் அப்போஸ்தலர்களுக்காகவும், அவரில் விசுவாசம் வைக்கப்போகும் மற்றவர்களுக்காகவும் தம்முடைய ஜீவனை கொடுப்பதன் மூலம் இயேசு இந்த மிக மேம்பட்ட அன்பை வெளிப்படுத்திக் காட்டுவார். அவருடைய உதாரணம் அவரை பின்பற்றுபவர்கள் இதே சுய-தியாகமுள்ள அன்பை ஒருவரிலொருவர் கொண்டிருக்க உந்துவிக்க வேண்டும். இயேசு இதற்கு முன்பு சொன்னபடி, இந்த அன்பு அவர்களை அடையாளங்காட்டும்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.”

தம்முடைய நண்பர்கள் யார் என அடையாளங்காட்டி, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.”

பெற்றிருப்பதற்கு என்னே ஒரு மதிப்புமிக்க உறவு—இயேசுவின் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பது! ஆனால் இந்த உறவை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அவரை பின்பற்றுபவர்கள் “தொடர்ந்து கனி கொடுக்க வேண்டும்.” அவர்கள் அவ்வாறு செய்தால், இயேசு சொல்கிறார்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” ராஜ்ய கனியை கொடுப்பதற்கு நிச்சயமாகவே அது ஒரு மகத்தான வெகுமதியாயிருக்கிறது! “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்” என்று மறுபடியும் அப்போஸ்தலர்களை ஊக்குவித்த பிறகு, உலகம் அவர்களை பகைக்கும் என்று இயேசு விளக்குகிறார். என்றபோதிலும், அவர் அவர்களை ஆறுதல்படுத்துகிறார்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.” உலகம் தம்மைப் பின்பற்றுபவர்களை ஏன் பகைக்கிறது என்பதை இயேசு அடுத்து வெளிப்படுத்துகிறார்: “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”

உலகத்தின் பகைக்கு காரணத்தை கூடுதலாய் விளக்குபவராய், இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “அவர்கள் என்னை அனுப்பினவரை [யெகோவா தேவனை] அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” இயேசுவின் அற்புதகரமான வேலைகள், அவரை பகைப்பவர்களை குற்றவாளிகளென காண்பிக்கிறது. அவர் குறிப்பிடுகிறார்: “வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.” ஆக, இயேசு சொல்கிறபடி வேதவசனம் நிறைவேற்றமடைகிறது: “முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்.”

அவர் முன்பு செய்தது போலவே, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை, தேவனுடைய வல்லமையான கிரியை நடப்பிக்கும் சக்தியை, அனுப்புவதாக வாக்களிப்பதன் மூலம் இயேசு அவர்களை மறுபடியும் ஆறுதல்படுத்துகிறார். “அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார். நீங்களும் . . . எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”

கூடுதலான பிரிவுரை புத்திமதிகள்

இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் மேலறையை விட்டு புறப்படுவதற்கு தயாராய் இருக்கின்றனர். “நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” என்று அவர் தொடர்ந்து சொல்கிறார். பின்பு அவர் இந்த வினையார்ந்த எச்சரிப்பை கொடுக்கிறார்: “அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.”

இந்த எச்சரிப்பால் அப்போஸ்தலர்கள் மிகவும் கலக்கமடைகின்றனர். உலகம் அவர்களை பகைக்கும் என்று இதற்கு முன்பு இயேசு சொல்லியிருந்த போதிலும், அவர்கள் கொலைசெய்யப்படுவார்கள் என்று அவர் அவ்வளவு நேரடியாக வெளிப்படுத்தியதில்லை. “நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை” என்று இயேசு விளக்குகிறார். என்றபோதிலும் அவர் புறப்படுவதற்கு முன் அவர்கள் முன்னெச்சரிக்கையாயிருப்பதற்கு இந்தத் தகவலை கொடுப்பது எவ்வளவு சிறந்ததாயிருக்கிறது!

“இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். அவர் எங்கே போகிறார் என்பதைப் பற்றி அவர்கள் இதற்கு முன் மாலையில் அவரை கேட்டனர், ஆனால் இப்போது அவர் அவர்களிடம் சொல்லியிருந்த காரியங்களினால் அவர்கள் அதிக கலக்கமடைந்திருப்பதனால், இதைக் குறித்து அவர்கள் கூடுதலாக கேட்க தவறுகின்றனர். “ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். அவர்கள் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவார்கள் என்பதை அறிந்து கொண்டதனால் மட்டும் அப்போஸ்தலர்கள் துக்கமடையாமல் அவர்களுடைய எஜமான் அவர்களை விட்டு செல்லப் போவதினாலும் துக்கமடைகின்றனர்.

ஆகையால் இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.” ஒரு மனிதனாக, இயேசு ஒரு சமயத்தில் ஓர் இடத்தில் மட்டுமே இருக்க முடியும், ஆனால் அவர் பரலோகத்தில் இருக்கையில், தம்மைப் பின்பற்றுகிறவர்கள் பூமியில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை அவர் அனுப்பி வைக்கமுடியும். ஆகவே இயேசு புறப்பட்டுச் செல்வது பிரயோஜனமாயிருக்கும்.

பரிசுத்த ஆவியைக் குறித்து “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்தின் பாவம், அது கடவுளுடைய குமாரனில் விசுவாசம் வைக்க தவறியது வெளிப்படுத்தப்படும். கூடுதலாக, தம் பிதாவிடம் ஏறிச்செல்வதன் மூலம் இயேசுவின் நீதிக்கு நம்ப வைக்கும் அத்தாட்சி வெளிக்காட்டப்படும். இயேசுவின் உத்தமத்தன்மையை முறிப்பதற்கு சாத்தான் மற்றும் அவனுடைய துன்மார்க்க உலகின் தோல்வி இந்த உலகத்தின் அதிபதி குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான் என்பதற்கு நம்பவைக்கும் அத்தாட்சியாய் இருக்கிறது.

“இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஆகையால், கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவியை அவர் ஊற்றும்போது, அவர்களுடைய கிரகித்துக்கொள்ளும் திறமைக்கு ஏற்ப இந்தக் காரியங்களை புரிந்து கொள்வதற்கு இது அவர்களை வழிநடத்தும் என்று இயேசு வாக்களிக்கிறார்.

இயேசு மரிப்பார் என்பதையும், அதற்குபின் அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு அவர்களுக்கு காட்சியளிப்பார் என்பதையும் குறிப்பாக புரிந்துகொள்வதற்கு அப்போஸ்தலர்கள் தவறுகின்றனர். ஆகையால் அவர்கள் ஒருவரையொருவர் இவ்வாறு கேட்டுக்கொள்கின்றனர்: “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன?”

அவர்கள் அவரை கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதை இயேசு உணருகிறார், ஆகையால் அவர் இவ்வாறு விளக்குகிறார்: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.” அந்த நாளின் பிற்பகுதியில், பிற்பகலில் இயேசு கொலைசெய்யப்பட்ட போது, உலகப்பிரகாரமான மதத்தலைவர்கள் சந்தோஷப்படுகின்றனர், ஆனால் சீஷர்களோ துக்கப்படுகிறார்கள். என்றபோதிலும், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட போது அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது! பெந்தெகொஸ்தே நாளன்று அவருடைய சாட்சிகளாக இருப்பதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியை அவர்கள் மீது ஊற்றுவதன் மூலம் அவர்களை அவர் திடப்படுத்திய போது அவர்களுடைய சந்தோஷம் தொடருகிறது!

பிரசவவேதனைப்படும்போது ஒரு பெண்ணின் நிலைமையை, அப்போஸ்தலர்களின் நிலைமையோடு ஒப்பிட்டு இயேசு இவ்வாறு சொல்கிறார்: “ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்.” ஆனால் பிள்ளை பிறந்தவுடனே அவள் தன் உபத்திரவத்தை இனிமேலும் நினையாதிருக்கிறாள் என்று இயேசு குறிப்பிட்டு, தம் அப்போஸ்தலர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். [நான் உயிர்த்தெழுப்பப்படும் போது] நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப் போட மாட்டான்.”

இந்த நேரம் வரை, அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்தில் ஒருபோதும் விண்ணப்பம் செய்ததில்லை. ஆனால் இப்போது அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். . . . நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார். நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன்.”

இயேசுவின் வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கின்றன. “இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம்” என்று அவர்கள் சொல்கின்றனர். ‘இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?’ என்று இயேசு கேட்கிறார். “இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்.” இது நம்பமுடியாததாய் ஒருவேளை தோன்றலாம், ஆனால் இது இரவு முடியுமுன்னே நடந்துவிடுகிறது!

“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.” இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” இயேசுவின் உத்தமத்தன்மையை முறிப்பதற்கு சாத்தானும் அவனுடைய உலகமும் செய்த எல்லா முயற்சிகளின் மத்தியிலும் கடவுளின் சித்தத்தை உண்மையுடன் நிறைவேற்றி முடிப்பதன் மூலம் இயேசு உலகத்தை ஜெயித்தார்.

மேலறையில் முடிவு ஜெபம்

தம்முடைய அப்போஸ்தலர்களின் பேரில் இருந்த ஆழமான அன்பினால் உந்தப்பட்டு, நெருங்கிவரும் அவருடைய பிரிவிற்காக இயேசு அவர்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர்களுக்கு விரிவாக அறிவுரை கூறி ஆறுதல்படுத்திய பிறகு, அவர் தம் கண்களை வானத்துக்கு ஏறெடுத்து தம் தகப்பனிடம் வேண்டுகிறார்: “நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும் பொருட்டு மாம்சமான யாவர் மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.”

என்னே ஓர் உணர்ச்சி தூண்டும் பொருளை இயேசு அறிமுகப்படுத்துகிறார்—நித்திய ஜீவன்! ‘மாம்சமான யாவர் மேலும் அதிகாரங்கொடுக்கப்பட்டிருப்பதால்’ மரித்துப் போகும் எல்லா மனிதவர்க்கத்துக்கும் இயேசு தம் மீட்பின் பலியின் நன்மைகளை அளிக்க முடியும். என்றபோதிலும், பிதா அங்கீகரிக்கிறவர்களுக்கு மட்டுமே அவர் “நித்திய ஜீவனை” அளிக்கிறார். நித்திய ஜீவன் என்ற இந்தப் பொருளின் பேரில் இயேசு தம் ஜெபத்தை தொடருகிறார்:

“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” ஆம், கடவுளைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் நாம் அறிவு எடுப்பதன் பேரில் இரட்சிப்பு சார்ந்திருக்கிறது. ஆனால் வெறும் தலை அறிவை விட அதிகம் தேவைப்படுகிறது.

ஒரு நபர் அவர்களை மிகவும் நெருக்கமாக அறிய வேண்டும், அவர்களோடு ஒரு புரிந்துகொள்ளும் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். விஷயங்களைக் குறித்து அவர்கள் உணரும் விதத்தில் தானும் உணரவேண்டும், அவர்கள் காண்கிறபடி காணவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நபர் மற்றவர்களோடு உள்ள தன் தொடர்புகளில் அவர்களுடைய ஈடில்லாத குணாதிசயங்களை பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அடுத்து இயேசு இவ்வாறு ஜெபிக்கிறார்: “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.” இந்த நேரம் வரை தன் நியமிப்பை நிறைவேற்றியதாலும், தன் எதிர்கால வெற்றியைக் குறித்து நம்பிக்கையாயிருப்பதாலும், அவர் இவ்வாறு வேண்டுதல் செய்கிறார்: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.” ஆம், உயிர்த்தெழுதலின் மூலம் தம்முடைய முந்தைய பரலோக மகிமையை மீண்டும் வழங்குமாறு அவர் இப்போது விண்ணப்பிக்கிறார்.

பூமியில் தம்முடைய முக்கியமான வேலையை சுருக்கிக் கூறுபவராய் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.” கடவுளின் பெயராகிய யெகோவாவை இயேசு தம்முடைய ஊழியத்தில் உபயோகித்தார், அதன் சரியான உச்சரிப்பையும் வெளிப்படுத்தினார், ஆனால் தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு கடவுளுடைய பெயரை வெளிப்படுத்த அதற்கும் மேலாக செய்தார். யெகோவாவைப் பற்றிய அவர்களுடைய அறிவு, அவருடைய ஆள்தன்மை, அவருடைய நோக்கங்கள் ஆகியவற்றின் பேரில் அவர்களுக்கிருந்த போற்றுதலையும்கூட அவர் விரிவாக்கினார்.

யெகோவாவை தம்மிலும் உயர்ந்தவராக மதிப்பு கொடுப்பதாலும், அவருக்குக் கீழ் சேவை செய்வதாலும் இயேசு மனத்தாழ்மையோடு இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.”

தம்மைப் பின்பற்றுபவர்களையும், மீதியான மனிதவர்க்கத்தையும் வேறுபடுத்திக் காட்டி, இயேசு அடுத்து இவ்வாறு ஜெபிக்கிறார்: “உலகத்துக்காக வேண்டிக் கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் . . . நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை . . . காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டு வந்தேன்; . . . கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப் போகவில்லை.” கேட்டின் மகன் யூதாஸ் காரியோத்து. இதே விநாடியில், யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுக்கும் இழிவான திட்டத்தில் இருக்கிறான். யூதாஸ் அறியாமலேயே வேதவசனங்களை நிறைவேற்றுகிறான்.

“உலகம் அவர்களைப் பகைத்தது” என்று இயேசு தொடர்ந்து ஜெபிக்கிறார். “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” இயேசுவை பின்பற்றுபவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனர், சாத்தானால் ஆட்சி செய்யப்படும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மனித சமுதாயத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதிலிருந்து பிரிந்திருக்கின்றனர், அவர்கள் அதிலிருந்தும், அதன் துன்மார்க்கத்திலிருந்தும் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும்.

“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். இங்கு இயேசு ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தை “சத்தியம்” என்றழைக்கிறார், அதிலிருந்து அவர் தொடர்ந்து மேற்கோளாக எடுத்து பேசினார். ஆனால் அவர் தம் சீஷர்களுக்கு கற்பித்த காரியங்களும், பின்னர் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்ட காரியங்களும் அதைப்போன்றே “சத்தியம்.” இந்தச் சத்தியம் ஒரு நபரை பரிசுத்தமாக்க முடியும், அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும், மேலும் அவரை இந்த உலகத்திலிருந்து பிரிந்த ஒரு நபராக ஆக்கும்.

“நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று இயேசு இப்போது சொல்கிறார். ஒரு “மந்தை”யாக இன்னும் கூட்டிச்சேர்க்கப்படப்போகும் அவரை பின்பற்றப் போகும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்காகவும் மற்ற எதிர்கால சீஷர்களுக்காகவும் இயேசு ஜெபிக்கிறார். இவர்கள் எல்லாருக்காகவும் அவர் என்ன கேட்கிறார்?

“அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், . . . நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” இயேசுவும் அவருடைய பிதாவும் சொல்லர்த்தமாக ஒரு நபராக இல்லை, ஆனால் எல்லா காரியங்களின் பேரிலும் அவர்கள் ஒத்திசைவாய் இருக்கின்றனர். “என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கு” அவரைப் பின்பற்றுபவர்கள் இதே விதமான ஒருமைப்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்று இயேசு ஜெபிக்கிறார்.

அபிஷேகம் பண்ணப்பட்டு அவரைப் பின்பற்றப்போகும் ஆட்களுக்காக இயேசு இப்போது தம் பரலோக தகப்பனிடம் வேண்டுகிறார். எதற்காக? “உலகத் தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.” “உலகத் தோற்றத்துக்கு முன்” என்பது, ஆதாம் ஏவாள் பிள்ளைகளை பிறப்பிப்பதற்கு முன். அதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்துவாக ஆன தம்முடைய ஒரேபேறான குமாரனை கடவுள் நேசித்தார்.

தம் ஜெபத்தை முடிக்கும் போது, இயேசு மறுபடியும் இவ்வாறு அழுத்தியுரைக்கிறார்: “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.” அப்போஸ்தலர்கள் கடவுளுடைய பெயரை கற்றறிவது, தனிப்பட்ட வகையில் கடவுளுடைய அன்பை அறிய வருவதை உட்படுத்தியிருக்கிறது. யோவான் 14:1–17:26; 13:27, 35, 36; 10:16; லூக்கா 22:3, 4; யாத்திராகமம் 24:10; 1 இராஜாக்கள் 19:9–13; ஏசாயா 6:1–5; கலாத்தியர் 6:16; சங்கீதம் 35:19; 69:4; நீதிமொழிகள் 8:22, 30.

▪ இயேசு எங்கே செல்கிறார்? அங்கிருக்கும் வழியைப் பற்றி தோமா என்ன பதிலை கற்றுக்கொள்கிறான்?

▪ தன்னுடைய வேண்டுகோளின் மூலம், இயேசு எதை கொடுக்கும் படியாக பிலிப்பு விரும்புகிறான்?

▪ இயேசுவை பார்த்திருக்கும் ஒருவர் ஏன் பிதாவையும் பார்த்திருக்கிறார்?

▪ இயேசுவை பின்பற்றுபவர்கள் எப்படி அவர் செய்ததற்கும் மேலான பெரிய கிரியைகளைச் செய்வர்?

▪ என்ன கருத்தில் சாத்தானுக்கு இயேசு மேல் எந்தப் பிடியுமில்லை?

▪ அடையாளப்பூர்வமான திராட்சச்செடியை எப்போது யெகோவா நட்டார், மற்றவர்கள் எப்போது, எவ்வாறு திராட்சச்செடியின் பாகமாக ஆகின்றனர்?

▪ இறுதியில், அடையாளப்பூர்வமான திராட்சச்செடி எத்தனை கொடிகளை உடையதாயிருக்கிறது?

▪ கொடிகளிலிருந்து என்ன கனியை கடவுள் விரும்புகிறார்?

▪ நாம் எவ்வாறு இயேசுவின் நண்பர்களாக இருக்கலாம்?

▪ உலகம் ஏன் இயேசுவை பின்பற்றுபவர்களை பகைக்கிறது?

▪ இயேசுவால் கொடுக்கப்பட்ட என்ன எச்சரிக்கை அவருடைய அப்போஸ்தலர்களை கலக்கமடையச் செய்கிறது?

▪ இயேசு எங்கே செல்கிறார் என்பதைப் பற்றி ஏன் கேள்வி கேட்க அப்போஸ்தலர்கள் தவறுகின்றனர்?

▪ அப்போஸ்தலர்கள் குறிப்பாக எதை புரிந்துகொள்வதற்கு தவறுகின்றனர்?

▪ அப்போஸ்தலர்களின் நிலைமை துக்கத்திலிருந்து சந்தோஷமாக மாறும் என்பதை இயேசு எவ்வாறு உவமையால் விளக்குகிறார்?

▪ அப்போஸ்தலர்கள் விரைவில் என்ன செய்வார்கள் என்று இயேசு சொல்கிறார்?

▪ இயேசு எவ்வாறு உலகத்தை ஜெயிக்கிறார்?

▪ என்ன கருத்தில் இயேசு ‘மாம்சமானவர் யாவர் மேலும் அதிகாரம்’ அளிக்கப்படுகிறார்?

▪ கடவுளைப்பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் அறிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

▪ எந்த வழிகளில் இயேசு கடவுளின் பெயரை வெளிப்படுத்துகிறார்?

▪ “சத்தியம்” என்றால் என்ன? அது எவ்வாறு ஒரு கிறிஸ்தவனை “பரிசுத்தமாக்குகிறது”?

▪ கடவுளும் அவருடைய குமாரனும் எல்லா மெய் வணக்கத்தாரும் எவ்வாறு ஒன்றாயிருக்கிறார்கள்?

▪ “உலகத் தோற்றம்” ஆனது எப்போது?