Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டாள்

அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டாள்

அதிகாரம் 46

அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டாள்

தெக்கப்போலி நாட்டிலிருந்து இயேசு திரும்பி வந்துவிட்ட செய்தி கப்பர்நகூமை அடைய, கடலருகே அவரை மீண்டும் வரவேற்பதற்காக ஒரு திரள்கூட்டம் கூடிவிடுகிறது. புயற்காற்றை அவர் அமைதலாக்கியதையும் பிசாசு பிடித்த மனிதர்களை சுகப்படுத்தியதையும் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது அவர் கரையேறுகையில், அவர்கள் ஆவலோடும் எதிர்பார்ப்புடனும் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

அவரைக் காண ஆவலாயிருந்தவர்களில் ஒருவன், ஜெப ஆலயத் தலைவனாகிய யவீரு ஆவான். அவன் இயேசுவின் பாதத்திலே விழுந்து மீண்டும் மீண்டும் இவ்விதமாக மன்றாடுகிறான்: “என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்.” அவள் அவனுடைய ஒரே மகளாயும் 12 வயதே நிரம்பியவளாயும் இருப்பதால் அவள் யவீருவுக்கு விசேஷமாக அருமையானவளாக இருக்கிறாள்.

இயேசு அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனக்கூட்டத்தாரோடேக்கூட யவீருவின் வீட்டை நோக்கிப் புறப்படுகிறார். மற்றொரு அற்புதத்தை எதிர்நோக்கியிருந்த ஜனக்கூட்டத்தின் உணர்ச்சிகளை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீயின் கவனம் அவளுடைய சொந்த தீவிரமான பிரச்னையின் மீதே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பன்னிரண்டு நீண்ட ஆண்டுகளாக இந்தப் பெண் உதிரத்தின் ஊறலால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு வைத்தியரிடமிருந்து மற்றொருவரிடமாகச் சென்று வைத்தியத்துக்காக தன் பணத்தையெல்லாம் செலவழித்து வந்திருக்கிறாள். ஆனால் அவள் சொஸ்தப்படவில்லை; மாறாக அவளுடையப் பிரச்னை இன்னும் மோசமாகிவிட்டிருக்கிறது.

அவளுடைய இந்த நோய் அவளை வெகுவாக பலவீனப்படுத்துவதைத் தவிர, அது மிகவும் சங்கடமானதும் அவமானப்படுத்தக்கூடியதுமாக இருப்பதை நீங்கள் ஒருவேளை உணரலாம். ஒருவர் பொதுவாக இப்படிப்பட்ட வியாதியைக்குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. மேலுமாக மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், உதிரம் ஊறிக்கொண்டிருத்தல் ஒரு ஸ்திரீயைத் தீட்டுப்படுத்துகிறது. அவளையோ அல்லது உதிரக் கறைப்படிந்த அவளுடைய வஸ்திரத்தையோ தொடுகிற எவரும் தண்ணீரில் முழுகி சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருக்க வேண்டும்.

அந்த ஸ்திரீ இயேசுவின் அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டு இப்பொழுது அவரைத் தேடி கண்டுபிடித்துவிடுகிறாள். அவள் தீட்டுப்பட்டிருப்பதன் காரணமாக, முடிந்த அளவு மறைவாகவே, கூட்டத்திற்குள் நுழைந்து “நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்” என்று சொல்லிக் கொள்கிறாள். அவள் அவ்விதமாகச் செய்கையில் உடனடியாக தன் உதிரத்தின் ஊறல் நின்று போனதை அவள் உணருகிறாள்!

என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?” இயேசுவின் அந்த வார்த்தைகள் எப்படி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும்! அவர் எப்படி அறிவார்? பேதுரு, ‘போதகரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர்?’ என்று கேட்கிறான்.

அந்த ஸ்திரீயைக் காணும்படிக்குச் சுற்றிலும் பார்த்து, இயேசு விளக்குகிறார்: “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு.” ஆம், அது வெறும் சாதாரணமான தொட்டுணர்வு அல்ல, ஏனென்றால் இதனால் ஏற்பட்ட சுகப்படுத்தல் இயேசுவின் வல்லமையை வெளிக்கொண்டுவருவதாக இருந்தது.

தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, அந்தப் பெண் பயத்தோடும் நடுக்கத்தோடும் இயேசுவுக்கு முன்பாக வந்து விழுகிறாள். எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவள் தன்னுடைய வியாதியைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தான் எவ்விதமாக இப்பொழுது சொஸ்தமானாள் என்பதையும் பற்றி சொல்கிறாள்.

அவள் முழுவதுமாக ஒப்புக்கொண்டதைக் கேட்டு இயேசு இரக்கத்தோடு அவளைத் தேற்றுகிறார்: “மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு.” பூமியை ஆட்சி செய்வதற்குக் கடவுள் தெரிந்துகொண்டிருப்பவர் அன்புள்ள, இரக்கமுள்ள நபர் என்பதையும் ஜனங்கள் மீது அக்கறையுள்ளவராகவும் அவர்களுக்கு உதவி செய்ய வல்லமையுள்ளவராகவும் இருப்பதை அறிந்துகொள்வது எத்தனை சிறந்ததாய் இருக்கிறது! மத்தேயு 9:18–22; மாற்கு 5:21–34; லூக்கா 8:40–48; லேவியராகமம் 15:25–27.

▪ யவீரு யார், அவன் ஏன் இயேசுவிடம் வருகிறான்?

▪ ஒரு ஸ்திரீக்கு என்ன தொந்தரவு இருக்கிறது? உதவிக்காக இயேசுவிடம் வருவது அவளுக்கு ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?

▪ அந்த ஸ்திரீ எவ்விதமாக சுகமடைகிறாள்? இயேசு அவளை எவ்விதமாகத் தேற்றுகிறார்?