Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவரைக் கைது செய்ய அவர்கள் தவறுகின்றனர்

அவரைக் கைது செய்ய அவர்கள் தவறுகின்றனர்

அதிகாரம் 67

அவரைக் கைது செய்ய அவர்கள் தவறுகின்றனர்

கூடாரப் பண்டிகை இன்னும் நடந்துகொண்டிருக்கையில், மதத் தலைவர்கள் இயேசுவைக் கைது செய்ய காவல் அதிகாரிகளை அனுப்புகின்றனர். அவர் மறைந்து கொள்வதற்கு முயற்சி செய்யவில்லை. மாறாக, இயேசு தொடர்ந்து வெளிப்படையாக போதித்துக் கொண்டு சொல்கிறார்: “இன்னுங் கொஞ்சக் காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங் கூடாது.”

யூதர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை, ஆகையால் அவர்கள் தங்களுக்குள்ளே கேட்டுக் கொள்கின்றனர்: “இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம் பண்ணுவாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன?” இயேசு இங்கே நெருங்கி வரும் தம் மரணத்தைக் குறித்தும், உயிர்த்தெழுந்து பரலோகத்தில் ஜீவனை அடைவதைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார், அங்கே அவருடைய சத்துருக்கள் அவரைப் பின்தொடர்ந்து வரமுடியாது.

பண்டிகையின் கடைசி நாளான ஏழாவது நாள் வருகிறது. பண்டிகையின் போது, ஒவ்வொரு நாள் காலையிலும், ஓர் ஆசாரியன் ஸீலோவாம் குளத்திலிருந்து தான் எடுத்த தண்ணீரை பலிபீடத்தின் அடிப்பகுதிக்கு வழிந்தோடும்படி ஊற்றுவான். தினந்தோறும் செய்யப்படும் இந்தச் சடங்கை ஜனங்களுக்கு ஞாபகப்படுத்துபவராய் இயேசு சத்தமிடுகிறார்: “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்.”

உண்மையில், இயேசு பரிசுத்த ஆவி ஊற்றப்படும் போது நடக்கவிருக்கும் மகத்தான விளைவுகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வந்த வருடத்தில் பெந்தெகொஸ்தே நாளன்று, இந்தப் பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதானது நடக்கிறது. அங்கே, 120 சீஷர்கள் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய ஆரம்பிக்கிற போது, ஜீவத் தண்ணீரின் நீருற்றுகள் வழிந்தோடுகின்றது. ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களில் எவருமே பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்படவில்லை என்ற கருத்தில் அதுவரையில் அங்கு ஆவி இல்லை.

இயேசுவின் போதகத்துக்குப் பிரதிபலித்து, சிலர் சொல்ல ஆரம்பிக்கின்றனர்: “மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர்,” வருவதாக வாக்குப்பண்ணப்பட்ட மோசேயைக் காட்டிலும் பெரிய தீர்க்கதரிசியைக் குறிப்பிட்டு இவ்விதமாகச் சொல்கின்றனர். மற்றவர்கள் சொல்கின்றனர்: “இவர் கிறிஸ்து.” ஆனால் மற்றவர்கள் எதிர்க்கின்றனர்: “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா?”

ஆகையால் ஜனங்கள் மத்தியில் ஒரு பிரிவினை உண்டாகிறது. சிலர் இயேசுவை கைது செய்ய விரும்புகின்றனர், ஆனாலும் ஒருவனும் அவர் மேல் கை போடவில்லை. காவல் அதிகாரிகள் இயேசு இல்லாமல் திரும்பி வந்த போது, பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் கேட்கின்றனர்: “நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை?”

“அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று அதிகாரிகள் பதிலளிக்கின்றனர்.

கோபம் நிறைந்தவர்களாய், மதத் தலைவர்கள் ஏளனம், தவறாக எடுத்துரைத்தல், பேரிட்டு அழைத்தல் ஆகியவற்றால் பாய்கின்றனர். அவர்கள் ஏளனம் செய்கின்றனர்: “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.”

அப்போது, பரிசேயனும் யூதர்களின் ஆட்சியாளனுமான நிக்கொதேமு (அதாவது, ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர்) இயேசுவின் சார்பாக துணிந்து பேசுகிறான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு, நிக்கொதேமு இயேசுவிடம் இராத்திரியிலே வந்து, அவர் பேரில் விசுவாசத்தை வெளிக்காட்டினான் என்பதை நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கலாம். இப்போது நிக்கொதேமு சொல்கிறான்: “ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா?”

அவர்களில் ஒருவனே இயேசுவை ஆதரிக்கிறான் என்பதைக் கேட்ட பரிசேயர்கள் இன்னுமதிக கோபம் அடைகின்றனர். “நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்து பாரும்” என்று அவர்கள் குத்தலாக குறிப்பிடுகின்றனர்.

வேதாகமங்கள் ஒரு தீர்க்கதரிசி கலிலேயாவிலிருந்து வருவார் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும், “ஒரு பெரிய வெளிச்சம்” இந்தப் பகுதியில் காணப்படும் என்று சொல்வதன் மூலம் கிறிஸ்து அங்கிருந்து வருவதாக அவைகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலுமாக, இயேசு பெத்லகேமில் பிறந்தார், அவர் தாவீதின் சந்ததியாக இருந்தார். பரிசேயர்கள் ஒருவேளை இதை அறிந்தவர்களாய் இருந்தபோதிலும், இயேசுவைப் பற்றி ஜனங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை பரவச் செய்வதற்கு அவர்கள் காரணராயிருந்திருக்கின்றனர். யோவான் 7:32–52; ஏசாயா 9:1, 2; மத்தேயு 4:13–17.

▪ பண்டிகையின் ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன நடக்கிறது, இதற்கு இயேசு எவ்வாறு கவனத்தை இழுக்கக்கூடும்?

▪ காவல் அதிகாரிகள் ஏன் இயேசுவைக் கைது செய்ய தவறுகின்றனர், மதத் தலைவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?

▪ நிக்கொதேமு யார், இயேசுவினிடமாக அவனுடைய மனநிலை என்ன, அவன் எவ்வாறு தன் உடன் பரிசேயர்களால் நடத்தப்படுகிறான்?

▪ கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வருவார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?