Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்கள் இயேசுவை சிக்கவைக்க தவறுகின்றனர்

அவர்கள் இயேசுவை சிக்கவைக்க தவறுகின்றனர்

அதிகாரம் 108

அவர்கள் இயேசுவை சிக்கவைக்க தவறுகின்றனர்

இயேசு ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்ததாலும், அவருடைய மத விரோதிகளின் துன்மார்க்கத்தை வெளிப்படுத்தும் மூன்று உவமைகளை அவர்களிடம் அப்போது தான் சொல்லி முடித்திருந்ததாலும், பரிசேயர்கள் கோபமடைந்து, அவரை சிக்க வைத்து கைதுசெய்யப்படும்படி ஏதாவது சொல்லுமாறு செய்வதற்காக ஆலோசனை செய்கின்றனர். அவர்கள் கற்பனை செய்து, சதித் திட்டமிட்டு தங்கள் சீஷர்களையும், ஏரோதியரையும் அவரைத் தடுமாறச் செய்வதற்காக அனுப்புகின்றனர்.

“போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக் குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும்” என்று இந்த மனிதர்கள் சொல்கின்றனர்.

இயேசு போலிப் புகழ்ச்சியினால் ஏமாறவில்லை. ‘இல்லை, இந்த வரியை செலுத்துவது சட்டத்துக்கு இசைவானதல்ல அல்லது சரியானதல்ல’ என்று சொல்வாரேயானால் ரோம ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்யும் குற்றமுடையவராக இருப்பார் என்பதை அவர் தெளிவாக உணருகிறார். ‘ஆம், இந்த வரியை செலுத்த வேண்டும்’ என்று அவர் சொல்வாரேயானால், ரோமாபுரிக்கு அடிமைப்பட்டிருக்கும் தங்கள் நிலைமையை இழிவாகக் கருதும் யூதர்கள் அவரை வெறுப்பார்கள். ஆகையால் அவர் இவ்வாறு பதிலளிக்கிறார்: “மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள்.”

அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டு வந்த போது, அவர் இவ்வாறு கேட்கிறார்: “இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது.”

“இராயனுடையது” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

“அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” இந்த மனிதர்கள் இயேசுவின் தேர்ச்சி வாய்ந்த பதிலைக் கேட்டபோது, வியப்படைகின்றனர். அவர்கள் அவரை விட்டு போய்விடுகின்றனர்.

இயேசுவுக்கு எதிராக ஏதோவொன்றை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய பரிசேயர்களின் தோல்வியைப் பார்த்து, உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் சதுசேயர்கள் அவரை அணுகி இவ்வாறு கேட்கின்றனர்: “போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டு விட்டுப் போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழு பேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே.”

அதற்கு இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப் போலிருப்பார்கள். மரித்தோர் எழுந்திருப்பதைப் பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக் குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.”

மறுபடியும் ஜனக்கூட்டத்தார் இயேசுவின் பதிலால் வியப்படைகின்றனர். வேதபாரகரில் சிலரும்கூட, “போதகரே, நன்றாய்ச் சொன்னீர்” என்று ஒப்புக்கொள்கின்றனர்.

சதுசேயர்களை இயேசு பேசமுடியாமல் செய்ததை பரிசேயர்கள் கண்டபோது, அவர்கள் ஒரு தொகுதியாக அவரிடம் வருகின்றனர். அவரை மேலுமதிகமாக சோதிப்பதற்கு, அவர்களில் ஒரு நியாயசாஸ்திரி இவ்வாறு கேட்கிறான்: “போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது.”

இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை.” உண்மையில் இயேசு கூடுதலாகச் சொல்கிறார்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.”

“போதகரே, நீர் சொன்னது சத்தியம்” என்று அந்த நியாயசாஸ்திரி ஒத்துக் கொள்கிறான். “ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும் [புத்தியோடும், NW], . . . முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.”

அந்த நியாயசாஸ்திரி விவேகமாய் பதிலளித்ததை இயேசு தெளிவாக அறிந்து கொண்டவராய், அவனிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல.”

இப்போது மூன்று நாட்களாக—ஞாயிறு, திங்கள், செவ்வாய்—இயேசு ஆலயத்தில் போதித்துக் கொண்டிருக்கிறார். ஜனங்கள் மனமகிழ்ச்சியோடு அவருக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்றபோதிலும் மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர், ஆனால் இதுவரை அவர்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. மத்தேயு 22:15–40; மாற்கு 12:13–34; லூக்கா 20:20–40.

▪ இயேசுவை சிக்கவைப்பதற்கு பரிசேயர்கள் என்ன சதித்திட்டமிடுகின்றனர், அவர் ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்தால் என்ன நேரிடும்?

▪ அவரை சிக்க வைப்பதற்கு சதுசேயர்கள் எடுத்த முயற்சிகளை இயேசு எவ்வாறு தோல்வியடையச் செய்கிறார்?

▪ இயேசுவை சோதிப்பதற்கு பரிசேயர்கள் என்ன கூடுதலான முயற்சிகளை செய்கின்றனர், அதனுடைய விளைவு என்ன?

▪ எருசலேமில் தம்முடைய கடைசி ஊழியத்தின் போது எவ்வளவு நாட்கள் இயேசு ஆலயத்தில் போதிக்கிறார், என்ன விளைவுகளோடு?