Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்குப் பதிலளிக்கிறார்

அவர் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்குப் பதிலளிக்கிறார்

அதிகாரம் 30

அவர் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்குப் பதிலளிக்கிறார்

யூத மதத்தலைவர்கள் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக அவர் மீது குற்றஞ்சாட்டிய போது, அவர் பதிலளிக்கிறார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்.”

பரிசேயர்கள் இவ்விதமாக இயேசுவை குற்றஞ்சாட்டிய போதிலும், அவர் செய்த கிரியை ஓய்வு நாள் சட்டத்தில் விலக்கப்பட்டிருந்த வகையான ஒரு வேலையாக இல்லை. பிரசங்க வேலையும் சுகப்படுத்தும் வேலையும் கடவுள் அவருக்குக் கொடுத்த வேலையாக இருக்கிறது. கடவுளின் முன்மாதிரியைப் பின்பற்றி அவர் அதை தினந்தோறும் செய்து வருகிறார். என்றபோதிலும் அவருடைய பதில் முன்பிருந்ததைவிட யூதர்களை இன்னும் அதிகமாக கோபங்கொள்ளச் செய்கிறது. அவர்கள் அவரை கொலை செய்ய நாடுகிறார்கள். ஏன்?

இப்பொழுது, இயேசு ஓய்வு நாள் சட்டத்தை மீறுவதாக அவர்கள் நம்புவது மட்டுமல்லாமல் அவர் தம்மை கடவுளுடைய சொந்த குமாரனென சொல்லிக் கொள்வதை தேவதூஷணமாக அவர்கள் கருதுகிறார்கள். என்றபோதிலும் இயேசு இதற்கு பயப்படாமல் கடவுளோடு தமக்கிருக்கும் தனிச்சலுகைக்குரிய உறவைப் பற்றி மேலுமாக அவர்களுக்குச் சொல்லுகிறார். “பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்” என்று அவர் சொல்கிறார்.

“பிதாவானவர் மரித்தோரை எழுப்பி, உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஆம், குமாரன் ஏற்கெனவே மரித்தோரை ஆவிக்குரிய வகையில் உயிர்த்தெழுப்பிக் கொண்டிருக்கிறார்! “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் . . . மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று இயேசு சொல்கிறார். ஆம், தொடர்ந்து அவர் சொல்வதாவது: “மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்.”

அந்தச் சமயம் வரையாக அவர் சொல்லர்த்தமாக எவரையும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பிய பதிவு இல்லாவிட்டாலும் தம்மீது குற்றஞ்சாட்டியவர்களிடம், இப்படியாக மரித்தோர் சொல்லர்த்தமாக உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதாக அவர் சொல்கிறார். “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனெனில் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” என்று அவர் சொல்கிறார்.

இயேசு இதுவரையாக கடவுளுடைய நோக்கத்தில் தம்முடைய இன்றியமையாத பங்கைக் குறித்து இவ்விதமாக வெளிப்படையாக தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விவரிக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் இயேசுவை குற்றஞ்சாட்டியவர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்து நம்புவதற்கு அவருடைய சொந்த சாட்சியைக் காட்டிலும் அதிகமிருக்கிறது. “நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள்” என்று அவர் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். “அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.”

இரண்டே ஆண்டுகளுக்கு முன்பாக யோவான் ஸ்நானன் இந்த யூத மதத் தலைவர்களிடம் தனக்குப் பின்வர இருப்பவரைக் குறித்து சொல்லியிருந்தான். ஒரு சமயம் அவர்களால் வெகு உயர்வாக மதிக்கப்பட்டவனும் இப்பொழுது காவலில் வைக்கப்பட்டவனுமாயிருந்த யோவானைக் குறித்து அவர்களுக்கு நினைப்பூட்டுபவராய் இயேசு சொன்னதாவது: “நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.” அவர்களுக்கு உதவி செய்யவும், ஆம், அவர்களை இரட்சிக்கும் நம்பிக்கையில் இயேசு இதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். என்றபோதிலும் அவர் யோவான் கொடுத்த சாட்சியின் பேரில் சார்ந்திருக்கவில்லை.

“நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்து வருகிறதுமான கிரியைகளே [அவர் அப்போதுதானே செய்து காண்பித்த அற்புதம் உட்பட] பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறது.” ஆனால் இதைத் தவிர இயேசு தொடர்ந்து சொல்வதாவது: “என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்.” உதாரணமாக இயேசு முழுக்காட்டப்பட்ட சமயத்தில் கடவுள் அவரைக் குறித்து: “இவர் என்னுடைய நேசக்குமாரன்” என்பதாக சாட்சிக் கொடுத்தார்.

உண்மையில், இயேசுவின் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்கு அவரை ஏற்காமல் தள்ளிவிடுவதற்கு எந்தச் சாக்கும் இருக்கவில்லை. அவர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பதாக உரிமைப்பாராட்டிய வேத வாக்கியங்கள் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தன! இயேசு முடிவாக, “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்று சொல்கிறார். யோவான் 5:17–47; 1:19–27; மத்தேயு 3:17.

▪ இயேசுவின் கிரியை ஏன் ஓய்வு நாள் சட்டத்தை மீறுவதாக இல்லை?

▪ கடவுளுடைய நோக்கத்தில் தம்முடைய இன்றியமையாத பங்கை இயேசு எவ்விதமாக விவரிக்கிறார்?

▪ தாம் கடவுளுடைய குமாரன் என்பதை நிரூபிக்க யாருடைய சாட்சியை இயேசு சுட்டிக் காண்பிக்கிறார்?