Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆலயத்தில் ஊழியம் முடிவடைகிறது

ஆலயத்தில் ஊழியம் முடிவடைகிறது

அதிகாரம் 110

ஆலயத்தில் ஊழியம் முடிவடைகிறது

இயேசு ஆலயத்தில் கடைசி முறையாக தோற்றமளிக்கிறார். உண்மையில், மூன்று நாட்களுக்குப் பிறகு அவருடைய விசாரணை மற்றும் கொல்லப்படுதல் சம்பவிக்க வேண்டியிருந்ததைத் தவிர அவர் பூமியில் தம் பொது ஊழியத்தை முடிக்கிறார். அவை எதிர்காலத்தில் மூன்று நாட்களில் சம்பவிக்க வேண்டியவை. இப்போது அவர் தொடர்ந்து வேதபாரகரையும் பரிசேயர்களையும் கண்டிக்கிறார்.

இன்னும் மூன்று முறைகள் அவர் இவ்வாறு உணர்ச்சி மிகுந்து கூறுகிறார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ.” முதலில், அவர்களுக்கு ஐயோ என்று சொல்லுகிறார், ஏனென்றால் அவர்கள் “போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச்” சுத்தமாக்குகிறார்கள்; “உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.” ஆகையால் அவர் இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.”

அடுத்து அவர் வேதபாரகருக்கும் பரிசேயர்களுக்கும் ஐயோ என்று சொல்கிறார், ஏனென்றால் உள்ளே அழுகி, கெட்டுப் போனதை அவர்கள் வெளித்தோற்றத்துக்கு கடவுள் பற்று உள்ளவர்கள் போல் காண்பித்து மறைக்கின்றனர். “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்” என்று அவர் சொல்கிறார்.

இறுதியில், தங்களுடைய சொந்த தர்ம செயல்களுக்கு மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்கு தீர்க்கதரிசிகளுக்கு கல்லறைகளைக் கட்டி அதை அலங்கரிப்பதற்கு விருப்பமுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் அவர்களுடைய மாய்மாலத்தனம் வெளிக்காட்டப்படுகிறது. இயேசு வெளிப்படுத்துகிறபடி அவர்கள் “தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கி”றார்கள். உண்மையிலேயே, அவர்களுடைய மாய்மாலத்தை வெளிப்படுத்துகிற எவரும் ஆபத்தில் இருக்கின்றனர்!

தொடர்ந்து இயேசு மிகப்பலமான கண்டன வார்த்தைகளை கூறுகிறார். “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு [கெஹன்னாவின் நியாயத்தீர்ப்புக்கு, NW] எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்?” என்று கூறுகிறார். எருசலேமின் குப்பைக் கொட்டும் இடமாக கெஹன்னா பள்ளத்தாக்கு உபயோகிக்கப்பட்டது. ஆகையால் தங்களுடைய துன்மார்க்கமான போக்கை பின்தொடர்ந்ததன் காரணமாக, வேதபாரகரும் பரிசேயர்களும் நித்திய அழிவை அனுபவிப்பர் என்று இயேசு சொல்கிறார்.

இயேசு தம்முடைய பிரதிநிதிகளாக தாம் அனுப்புகிறவர்களைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் [கழுமரத்தில், NW] அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் [இரண்டு நாளாகமத்தில் யோய்தா என்று அழைக்கப்படுகிறான்] இரத்தம் வரைக்கும், பூமியின் மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள் மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின் மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

சகரியா இஸ்ரவேலின் தலைவர்களை கண்டித்ததினால், “அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] ஆலயப்பிரகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.” ஆனால், இயேசு முன்னறிவிக்கிறபடி, அப்பேர்ப்பட்ட நீதிமான்களின் இரத்தம் சிந்தப்பட்டதற்காக இஸ்ரவேல் தண்டனையை அனுபவிக்கும். 37 வருடங்களுக்குப் பின்பு பொ.ச. 70-ல் ரோம சேனைகள் எருசலேமை அழித்த போது பத்து லட்சத்துக்கும் மேலான யூதர்கள் அழிந்தபோது அவர்கள் தண்டனையை அனுபவித்தார்கள்.

இந்த அச்சம் தரும் நிலைமையை இயேசு சிந்திக்கையில், அவர் அதிக வருத்தப்படுகிறார். மீண்டும் ஒருமுறை அறிவிக்கிறார்: “எருசலேமே, எருசலேமே,” “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”

பின்பு இயேசு இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள்.” அந்த நாள் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் போது இருக்கும். அப்போது அவர் தம்முடைய பரலோக ராஜ்யத்துக்குள் வரும்போது, ஜனங்கள் அவரை விசுவாசக் கண்களோடு காண்பார்கள்.

ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள் இருக்கும் இடத்துக்கு இயேசு இப்போது செல்கிறார், அங்கிருந்து அவர் ஜனங்கள் பெட்டிக்குள் பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். செல்வந்தர்கள் அநேக காசுகளைப் போடுகின்றனர். ஆனால் ஓர் ஏழை விதவை மிகக்குறைவான மதிப்பை உடைய இரண்டு காசுகளை போடுகிறாள்.

தம்முடைய சீஷர்களை அழைத்து இயேசு இவ்வாறு சொல்கிறார்: ‘காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.’ இது எவ்வாறு இருக்க முடியும் என்று அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். ஆகையால் இயேசு விளக்குகிறார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்.” இந்தக் காரியங்களைச் சொன்ன பின்பு, இயேசு கடைசி முறையாக ஆலயத்தை விட்டுப் புறப்படுகிறார்.

ஆலயத்தின் அளவையும், அழகையும் கண்டு வியந்து அவருடைய சீஷர்கள் இவ்வாறு கூறுகின்றனர்: “போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும்.” உண்மையிலேயே அந்தக் கற்கள் 11 மீட்டர் நீளமாயும், 5 மீட்டருக்குமேல் அகலமாயும், 3 மீட்டருக்கு மேல் உயரமாயும் இருக்கின்றன!

“இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

இந்தக் காரியங்களையெல்லாம் சொன்ன பின்பு, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து ஒலிவ மலையின் மேல் ஏறுகின்றனர். இங்கிருந்து அவர்கள் அந்த மகிமைபொருந்திய ஆலயத்தை கீழே பார்க்கலாம். மத்தேயு 23:25–24:3; மாற்கு 12:41–13:3; லூக்கா 21:1–6; 2 நாளாகமம் 24:20–22.

▪ ஆலயத்துக்கு தம் இறுதி விஜயத்தின் போது இயேசு என்ன செய்கிறார்?

▪ வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் மாய்மாலத்தனம் எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?

▪ “கெஹன்னாவின் நியாயத்தீர்ப்பு” என்பதன் அர்த்தம் என்ன?

▪ அந்த விதவை ஐசுவரியவான்களைப் பார்க்கிலும் அதிகமாக கொடுத்தாள் என்று இயேசு ஏன் சொல்கிறார்?