Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதுவரை கொடுத்திராத மிகப் பிரபலமான பிரசங்கம்

இதுவரை கொடுத்திராத மிகப் பிரபலமான பிரசங்கம்

அதிகாரம் 35

இதுவரை கொடுத்திராத மிகப் பிரபலமான பிரசங்கம்

 பிள் வரலாற்றில் அது எளிதில் மறக்கமுடியாத ஒரு காட்சியாகும்: இயேசு மலையோரத்தில் அமர்ந்து கொண்டு தம்முடைய பிரபலமான மலைப் பிரசங்கத்தைக் கொடுக்கிறார். அது கலிலேயா கடலோரத்தின் அருகே ஒருவேளை கப்பர்நகூமுக்கு அருகாமையில் இருக்கலாம். இயேசு ஓர் இராமுழுவதையும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுவதில் செலவிட்டப் பின்பு, அடுத்த நாள் காலை அப்போஸ்தலர்களாயிருக்கும்படி தம்முடைய 12 சீஷர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார். பின்பு, அவர்கள் அனைவரோடுங்கூட அவர் மலையின் மீது இந்தச் சமனான இடத்துக்கு வருகிறார்.

இதற்குள் மிகவும் களைப்படைந்தவராய் இயேசு சிறிது உறங்க விரும்புவார் என்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் திரளான ஜனங்கள் வந்துவிட்டிருக்கிறார்கள். சிலர் 96-லிருந்து 112 கிலோமீட்டருக்கு அப்பால் யூதேயாவிலும் எருசலேமிலிருந்தும் பிரயாணப்பட்டு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் வடக்கே தீரு, சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரப்பகுதியிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும் தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படியும் வந்திருக்கிறார்கள். சாத்தானின் பொல்லாத தூதர்களாகிய பேய்களால் வாதிக்கப்பட்டவர்களுங்கூட அங்கே இருக்கிறார்கள்.

இயேசு கீழே இறங்கி வருகையில், வியாதியஸ்தர்கள் அவரைத் தொடுவதற்கு அவரை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் அவர் குணமாக்குகிறார். அதற்குப் பின்னர் இயேசு மலையின் மேல் சற்றே உயரமான இடத்துக்கு ஏறிப் போகிறார். அங்கே அவர் உட்காருகிறார், தமக்கு முன்னால் சமனான இடத்தில் பரவி உட்கார்ந்திருந்த திரளான ஜனக்கூட்டத்துக்குப் போதிக்க ஆரம்பிக்கிறார். அதைக் கற்பனை செய்து பாருங்கள்! அந்த முழு ஜனக்கூட்டத்திலும் இப்பொழுது கவலைக்குரிய நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட இல்லை!

வியப்பூட்டும் இந்த அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிற போதகர் பேசுவதைக் கேட்க ஜனங்கள் ஆவலாயிருக்கிறார்கள். என்றபோதிலும், இயேசு தம்மைச் சுற்றி அமர்ந்திருந்த தம்முடைய சீஷர்களின் நன்மைக்காகவே முக்கியமாக பிரசங்கிக்கிறார். ஒருவேளை இவர்கள் அவரைச் சுற்றி மிக நெருங்கி உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் நாமுங்கூட நன்மையடையும் பொருட்டு மத்தேயுவும் லூக்காவும் அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

பிரசங்கத்தைப் பற்றிய மத்தேயுவின் பதிவு லூக்காவினுடையதைவிட நான்கு மடங்கு நீளமாயுள்ளது. மேலுமாக மத்தேயுவின் பதிவிலுள்ள சில பகுதிகளை இயேசு அவருடைய ஊழித்தின் போது மற்றொரு சமயத்தில் சொன்னதாக லூக்கா பதிவு செய்கிறான். மத்தேயு 6:9–13-ஐ லூக்கா 11:1–4 உடனும் மத்தேயு 6:25–34-ஐ லூக்கா 12:22–31 உடனும் ஒப்பிடுகையில் இதைக் காண முடிகிறது. என்றபோதிலும் இது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல. இயேசு சில காரியங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் போதித்திருக்கிறார். இந்தப் போதகங்களில் சிலவற்றை லூக்கா வேறு ஒரு சூழ்நிலையில் பதிவு செய்வதைத் தெரிந்து கொண்டிருக்கிறான்.

அதில் அடங்கியுள்ள ஆவிக்குரிய காரியங்களின் ஆழம் மட்டுமல்லாமல், இந்தச் சத்தியங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதே இயேசுவின் பிரசங்கத்தை அத்தனை மதிப்புள்ளதாகச் செய்கிறது. அவர் சாதாரணமான அனுபவங்களையும் ஜனங்களுக்கு பழக்கமாயிருந்த காரியங்களையுமே பயன்படுத்தி, கடவுளுடைய வழியில் மேம்பட்ட வாழ்க்கையை நாடிக் கொண்டிருந்த அனைவரும் அவருடைய கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ளும்படிச் செய்தார்.

யார் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள்?

எல்லாரும் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். இதை உணர்ந்தவராக இயேசு மலைப் பிரசங்கத்தைத் தொடங்குகையில் யார் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள் என்பதை விவரிக்கிறார். இது உடனடியாக அங்கிருந்த பெருங்கூட்டத்தினரின் கவனத்தைக் கவரக்கூடியதாக இருந்தது என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இருந்தபோதிலும், அவருடைய துவக்க வார்த்தைகள் முரண்பாடாக இருப்பதாக பலர் நினைக்கலாம்.

தம்முடைய சீஷர்களை நோக்கி தம்முடைய குறிப்புகளை இயேசு இப்படியாக சொல்லத் துவங்குகிறார்: “தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். . . . ஜனங்கள் உங்களைப் பகைக்கும் போது நீங்கள் பாக்கியவான்கள் . . . அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.”

இயேசுவின் துவக்க உரையைப் பற்றிய லூக்காவின் பதிவு இதுவாக இருக்கிறது. ஆனால் சாந்தகுணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் என்று இயேசு கூறியதும் மத்தேயுவின் பதிவில் காணப்படுகிறது. இவர்களெல்லாம் சந்தோஷமுள்ளவர்கள் என்று இயேசு கூறுவதற்குக் காரணம் இவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்பவர்களாக, இரக்கத்தைப் பெறக்கூடியவர்களாக, கடவுளைக் காணக்கூடியவர்களாக, கடவுளுடைய குமாரர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இங்கு இயேசு சந்தோஷமுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது வெறுமென கேலிசெய்யும் போது ஒருவர் உல்லாசமாக அல்லது களிப்பாக இருப்பதைக் குறிப்பிடவில்லை. உண்மையான சந்தோஷம் ஆழமானது, திருப்தியான மனநிலையைக் கொண்டிருக்கும், வாழ்க்கையில் திருப்தியான மனநிலையையும், நிறைவேற்றத்தையும் கொண்டிருக்கும்.

ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்து, பாவமான நிலையைக் குறித்து வருந்தி, மேலும் கடவுளைத் தெரிந்துகொண்டு அவரை வணங்கக்கூடிய ஆட்களே உண்மையில் சந்தோஷமுள்ள ஆட்கள் என்று இயேசு காண்பித்தார். அவர்கள் வெறுக்கப்பட்டாலோ அல்லது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் துன்புறுத்தப்பட்டாலோ சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்துகிறார்கள் என்றும் அதற்கான பரிசாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அறிந்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்ட அநேக ஆட்களைப் போலவே இன்றும்கூட சில ஆட்கள் செழுமையாக இருப்பதும், இன்பங்களை அனுபவிப்பதுமே ஓர் ஆளை சந்தோஷமுள்ளவனாக்கும் என்று நம்புகின்றனர். இயேசுவுக்கு இது அப்படியில்லை என்று தெரியும். கேட்டுக் கொண்டிருந்த அநேக ஆட்கள் ஆச்சரியப்படும் வகையில் வித்தியாசமான காரியத்தை அவர் கூறுகிறார்:

“ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள். எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.”

இயேசு எதை அர்த்தப்படுத்துகிறார்? ஐசுவரியத்தைக் கொண்டிருத்தல், சிரித்துக்கொண்டு இன்பங்களைத் தொடருதல், மற்றும் மனிதரின் கைகொட்டுதலோடு கூடிய பாராட்டுதலை அனுபவித்தல் ஆகிய இவையெல்லாம் விரும்புகிறவர்களுக்கு ஐயோ என்று ஏன் சொல்லப்படுகிறது? ஏனென்றால் இதை ஒரு மனிதன் கொண்டிருந்து பூரிப்படையும் போது, கடவுளுக்குச் சேவை செய்வதால் வரும் உண்மையான சந்தோஷம் அவனுடைய வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும். அதே சமயத்தில், வெறுமென தரித்திரராக, பசியாக, வருந்தக்கூடிய நிலைதானே ஒரு மனிதனை சந்தோஷமுள்ளவனாக்கும் என்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. இருந்தபோதிலும் அடிக்கடி இப்படிப்பட்ட தீமைகளை அனுபவிக்கும் ஆட்கள் இயேசுவின் போதனைகளுக்கு செவி சாய்ப்பவர்களாகவும் அதன் மூலம் உண்மையான சந்தோஷத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

அடுத்து தம்முடைய சீஷர்களைக் குறித்து இயேசு கூறுகிறார்: “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” உண்மையாகவே அவர்கள் சொல்லர்த்தமாக உப்பாக இருக்கிறார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. மாறாக உப்பு கெடாமல் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது. யெகோவாவின் ஆலயத்தில் பலிபீடத்திற்கு அருகில் உப்பைக் குவித்து வைத்திருப்பார்கள், பலி செலுத்தும் ஆசாரியர்கள் பலிகளை உப்பிட இதை உபயோகித்தனர்.

ஜனங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் செல்வாக்கை இயேசுவின் சீஷர்கள் அவர்கள் மேல் கொண்டிருப்பதானது அவர்கள் “பூமிக்கு உப்பாயிருப்பதை” அர்த்தப்படுத்துகிறது. நிச்சயமாகவே அவர்கள் சொல்லக்கூடிய செய்திக்குச் சரியாக பிரதிபலிப்பவர்களின் வாழ்க்கையை அது பாதுகாப்பதாக இருக்கும்! இது இப்படிப்பட்ட ஆட்களின் வாழ்க்கையில் நிலையான தன்மை, உண்மைத்தவறாமை, உண்மைத்தன்மைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டுவரும், ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான அழிவிலிருந்து பாதுகாக்கக்கூடியதாக இருக்கும்.

“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று சீஷர்களிடம் இயேசு கூறுகிறார். விளக்கை கூடைக்கு அடியில் வைக்கமாட்டார்கள். மாறாக, விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள். எனவே இயேசு கூறுகிறார்: ‘உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கக்கடவது.’ இயேசுவின் சீஷர்கள் தங்களுடைய வெளியரங்கமான சாட்சி கொடுக்கும் வேலையின் மூலமும் மற்றும் பைபிள் நியமங்களுக்கிசைவான நடத்தைப் போக்கை உடைய ஒளிதரும் முன்மாதிரிகளாக செயல்படுவதன் மூலமும் இதைச் செய்கிறார்கள்.

தம்மைப் பின்பற்றுபவருக்கு மிக உயர்ந்த தராதரம்

இயேசு கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாக எண்ணி, அண்மையில் அவரை கொலைசெய்யவும்கூட மதத்தலைவர்கள் வகைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் அவர் “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று விளக்குகிறார்.

இயேசு கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மிக உயர்வாக மதிப்பவராய் மற்றவர்களையும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும்படியாக உற்சாகப்படுத்துகிறார். உண்மையில் அவர் சொல்வதாவது: “இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்.” அதாவது, அப்படிப்பட்ட ஒருவன் ராஜ்யத்திற்குள்ளேயே பிரவேசிக்கமாட்டான் என்பதாகச் சொல்கிறார்.

கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அசட்டையாக கருதுவதற்கு பதிலாக, அதை மீறுவதற்கு வழிநடத்தக்கூடிய மனநிலைகளையும்கூட அவர் கண்டனம் செய்கிறார். “கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாக நியாயப்பிரமாணம் சொல்வதை குறிப்பிட்டுவிட்டு இயேசு சொல்வதாவது: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.”

ஒருவனுடைய தோழனிடம் தொடர்ந்து கோபித்துக்கொண்டிருப்பது ஒருவேளை கொலைக்கும்கூட வழிநடத்தக்கூடியதாக அத்தனை வினைமையானதாக இருப்பதன் காரணமாக, சமாதானம் பண்ண ஒருவர் எந்த அளவுக்குப் போக வேண்டும் என்பதை தெளிவாக்குகிறார். “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில் அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

பத்து கற்பனைகளில் ஏழாவதுக்கு கவனத்தைத் திருப்புகிறவராய் இயேசு தொடர்ந்து சொல்வதாவது: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.” என்றபோதிலும் விபசாரத்தின் சம்பந்தமாக ஊன்றிய ஒரு மனநிலையையும்கூட இயேசு கண்டனம் செய்கிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”

தற்செயலாக தோன்றி மறையக்கூடிய ஒழுக்கமற்ற எண்ணத்தைப் பற்றி இங்கு இயேசு பேசிக்கொண்டில்லை. ‘ஆனால் தொடர்ந்து பார்த்துக்கொண்டே’ இருப்பது பற்றி பேசுகிறார். இப்படிப் பார்த்துக்கொண்டே இருப்பது காம உணர்ச்சிகளைத் தூண்டி, சந்தர்ப்பம் கிட்டுமானால் விபசாரம் செய்வதில் வந்து முடிந்துவிடக்கூடும். இது சம்பவிக்காதபடி ஒரு நபர் அதை எவ்விதமாக தவிர்க்கலாம்? எவ்விதமாக கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்பதை இயேசு இவ்விதமாக விளக்குகிறார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு . . . உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு.”

தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக பிணியினால் பீடிக்கப்பட்ட சொல்லர்த்தமான கை கால்களைத் தியாகம் செய்ய அநேகமாய் மக்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின்படி ஒழுக்கங்கெட்ட சிந்தனையையும் செயல்களையும் தவிர்க்க எதையும், ஒரு கண் அல்லது ஒரு கைப் போன்ற மதிப்புள்ள ஒன்றையும்கூட ஒருவர் ‘எறிந்து’விடுவது இன்னும் அதிக முக்கியமானதாகும். மற்றபடி இப்படிப்பட்ட ஆட்கள் நித்திய அழிவுக்கு அடையாளமாயிருக்கும் கெஹென்னாவுக்குள் (எருசலேமுக்கு அருகே எரிந்து கொண்டிருக்கும் ஒரு குப்பைக்கூளம்) தள்ளப்படுவார்கள் என்று இயேசு விளக்குகிறார்.

தீங்கிழைக்கும் அல்லது புண்படுத்தும் ஆட்களிடம் ஒருவர் எவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும்கூட இயேசு பேசுகிறார். “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்” என்பதே அவருடைய ஆலோசனை. “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.” ஒருவன் தானோ தன்னுடைய குடும்பமோ தாக்கப்படுகையில், தற்காப்பு செய்துகொள்ளக்கூடாது என்பதாக இயேசு இங்கு அர்த்தப்படுத்தவில்லை. அறைதல் என்பது சரீரப்பிரகாரமாக காயப்படுத்துவதற்காக அல்லாமல், அவமானப்படுத்தவே செய்யப்படுகிறது. ஆகவே இயேசு இங்கு சொல்வது, சொல்லர்த்தமாகவே திறந்த கையினால் அறைவதன் மூலமோ அல்லது அவமரியாதையான வார்த்தைகளால் மனவேதனையை உண்டுபண்ணுவதன் மூலமோ ஒரு சண்டையை அல்லது வாக்குவாதத்தை தூண்டிவிட எவராவது முயற்சி செய்கையில் பழிவாங்குவது தவறாகும் என்பதே.

பிறனை சிநேகிக்க வேண்டும் என்ற கடவுளுடைய சட்டத்துக்கு கவனத்தைத் திருப்பிய பின்பு இயேசு சொல்வதாவது: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” இவ்விதமாகச் செய்வதற்குப் பலமான காரணத்தைக் கொடுப்பவராய் அவர் மேலும் சொல்வதாவது: “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் சூரியனை உதிக்கப்பண்ணு”கிறார்.

இயேசு தம்முடைய பிரசங்கத்தின் இந்தப் பகுதியை பின்வரும் அறிவுரையோடு முடிக்கிறார்: “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” முழுமையான அர்த்தத்தில் ஜனங்கள் பூரணராயிருக்க முடியும் என்பதாக இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, கடவுளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய சத்துருக்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுடைய அன்பை விரிவாக்கமுடியும். லூக்காவின் இணையான பதிவு, இயேசுவின் வார்த்தைகளை இவ்விதமாக பதிவு செய்கிறது: “ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”

ஜெபமும், கடவுள் பேரில் நம்பிக்கையும்

இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தைத் தொடருகிறார், அப்பொழுது தங்களைத் தேவபக்தியுடையவர்களாகக் காட்டிக்கொள்ளும் அவர்களுடைய மாய்மாலத் தோற்றத்தை அவர் கண்டனம் செய்கிறார். “நீ தர்மஞ் செய்யும்போது, . . . மாயக்காரர் . . . செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” என்று கூறினார்.

“அன்றியும்” என்று இயேசு தொடருகிறார், “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.” மாறாக, அவருடைய போதனை: “நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு.” இயேசு தாமே கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் வெளியரங்கமாக ஜெபித்தார். எனவே அவர் இவற்றை கண்டனம் செய்யவில்லை. கேட்பவர்களைக் கவர்ச்சித்து அவர்களுடைய போற்றுதலைப் பெறும் வகையில் செய்யப்படும் ஜெபங்களைத் தான் அவர் கண்டனம் செய்கிறார்.

இயேசு மேலுமாகக் கொடுக்கும் ஆலோசனை: “நீங்கள் ஜெபம்பண்ணும் போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் [சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள், NW].” திரும்பச் சொல்வதுதானே தவறாக இருக்கிறது என்று இயேசு அர்த்தப்படுத்துகிறதில்லை. ஒருமுறை அவர்தாமே ஜெபம் பண்ணும்போது “அதே வார்த்தையை” திரும்பத் திரும்பப் பயன்படுத்தினார். ஆனால் ஜெபமாலைகளை பயன்படுத்தி மனப்பாடம் செய்யப்பட்ட வார்த்தைகளை “திரும்பத் திரும்ப” சொல்லுவதைத் தான் அவர் கண்டனம் செய்கிறார்.

தம்முடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஜெபம் செய்ய கற்றுக்கொள்ளும் வகையில், ஏழு விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஒரு மாதிரி ஜெபத்தை சொல்லுகிறார். முதல் மூன்று சரியாகவே கடவுளுடைய அரசுரிமைக்கும் அவருடைய நோக்கத்திற்கும் மதித்துணர்வை காண்பிப்பதாய் இருக்கிறது. அவை கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்கும், அவருடைய ராஜ்யம் வருவதற்கும், அவருடைய சித்தம் செய்யப்படுவதற்குமான வேண்டுதல்களாய் இருக்கின்றன. மற்ற நான்கும் தனிப்பட்ட வேண்டுதல்களாக இருக்கின்றன, அதாவது அன்றாட உணவுக்கும், பாவ மன்னிப்புக்கும், ஒருவருடைய சகிப்புத்தன்மைக்கும் மிஞ்சி சோதிக்கப்படாமலிருப்பதற்கும், பொல்லாதவனிடமிருந்து மீட்கப்படுவதற்குமான விண்ணப்பங்களாகும்.

தொடர்ந்து பேசுபவராக, பொருள் சம்பந்தமான உடைமைகளின் பேரில் அளவுக்கடந்த முக்கியத்துவமளிப்பதாகிய கண்ணியைக் குறித்துப் பேசுகிறார். அவர் கூறுகிறார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.” அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் அழியக்கூடியவை மட்டுமல்ல, கடவுளுடைய பார்வையில் எவ்வித மதிப்பையும் பெற்றுத் தருவதாக இல்லை.

எனவேதான், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்று இயேசு சொல்லுகிறார். கடவுளுடைய சேவையை உங்களுடைய வாழ்க்கையில் முதலாவது வைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. இவ்விதம் கடவுளுடன் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் நன்மதிப்பையும் அல்லது அதன் மகத்தான நற்பலன்களையும் எவராலும் எடுத்துப் போடமுடியாது. இயேசு மேலுமாக கூறுகிறார்: “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”

பொருளாசையாகிய கண்ணியைக் குறித்துத் தொடர்ந்து பேசுபவராய், இயேசு இந்த உவமையைச் சொல்லுகிறார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.” சரியாக செயல்படும் கண் சரீரத்துக்கு இருண்ட இடத்தில் கொளுத்தி வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கிறது. ஆனால் சரியாகப் பார்ப்பதற்குக் கண் தெளிவாயிருக்க வேண்டும், அதாவது பார்வை ஒரு காரியத்தினிடமாக ஒருமுகப்படுத்தியதாயிருக்க வேண்டும். ஒருமுகப்படாத பார்வையுடைய கண் காரியங்களைத் தவறாக கணிக்கிறது. பொருள் சம்பந்தமான காரியங்களைக் கடவுளுடைய சேவைக்கு முன்னால் வைக்கச் செய்கிறது. இதன் விளைவாக “முழு சரீரமும்” இருளடைகிறது.

இந்தக் காரியத்தை இயேசு ஒரு பலமான உதாரணத்துடன் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”

இந்தப் புத்திமதியைக் கொடுத்த பின்பு, அவர்கள் கடவுளுடைய சேவையை முதலாவது வைப்பார்களானால், அவர்களுடைய பொருளாதார தேவைகளைக் குறித்து கவலைப்படவேண்டியதில்லை என்று தம்முடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உறுதியளிக்கிறார். “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்,” என்கிறார் அவர், “அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.” பின்பு அவர் கேட்கும் கேள்வி, “அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”

அடுத்து, இயேசு, காட்டுப் புஷ்பங்களைக் குறிப்பிட்டு, “சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை” என்றார். தொடர்ந்து கூறுகிறார்: “அற்ப விசுவாசிகளே! . . . காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” எனவே இயேசு இப்படியாக முடிக்கிறார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”

ஜீவனுக்குச் செல்லும் வழி

இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடிப்பதே அந்த ஜீவ வழி. ஆனால் இதை செய்வது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக, பரிசேயர்கள் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று கடுமையாய்த் தீர்ப்பவர்களாய் இருக்கிறார்கள். பலர் அவர்களைப் பின்பற்றவும் செய்தார்கள். எனவேதான் இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தைத் தொடங்கும்போது, இந்தப் புத்திமதியைக் கொடுக்கிறார்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்.”

அளவுக்கு மிஞ்சி குற்றங்கண்டுபிடிப்பவர்களாயிருக்கும் பரிசேயர்களின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது அதிக ஆபத்தானது. லூக்காவுடையப் பதிவு காட்டுகிறபடி, இயேசு இதன் ஆபத்தை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்: “குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?”

மற்றவர்களில் அதிகமாகக் குற்றம் காண்பவர்களாயிருப்பது, அவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தி அவற்றைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது ஒரு பொல்லாத குற்றமாகும். எனவே இயேசு கேட்கிறார்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்லுகிறதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”

இயேசுவின் சீஷர்கள் மற்றவர்கள் சம்பந்தமாகப் புரிந்து செயல்படக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் அவர் சொல்லுகிறார்: “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்.” கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்கள் பரிசுத்தமானவை. அவை அடையாள அர்த்தத்தில் முத்துக்களைப் போலானவை. ஆனால் நாய்களைப் போல அல்லது பன்றிகளைப் போல சில ஆட்கள் இந்த விலைமதிக்கமுடியாத சத்தியங்களுக்குப் போற்றுதல் காட்டாவிட்டால், இயேசுவின் சீஷர்கள் இப்படிப்பட்ட ஆட்களை விட்டுவிட்டு அதிக ஆவலுள்ளவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.

இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் ஜெபத்தைப் பற்றி ஏற்கெனவே பேசியிருந்த போதிலும், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியத்தை அவர் இப்பொழுது அழுத்திக் காண்பிக்கிறார். “கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்,” என்று அவர் துரிதப்படுத்துகிறார். ஜெபங்களுக்குப் பதிலளிக்கக் கடவுள் தயாராக இருக்கிறார் என்பதை உதாரணத்தோடு விளக்க, இயேசு பின்வருமாறு கேட்கிறார்: “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? . . . ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”

அடுத்ததாக, பொன் விதி என்று பொதுவாக சொல்லப்படும் நடத்தைக்குரிய சிறப்பான ஒரு விதிமுறையை இயேசு கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” இந்த விதிமுறைப்படி வாழ்வது, மற்றவர்களுக்கு நன்மைசெய்யும் காரியத்தில் பயன்தரும் செயலையும், நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதேமாதிரி அவர்களையும் நடத்துவதையும் உட்படுத்துகிறது.

ஜீவனுக்குச் செல்லும் வழி சுலபமான வழி அல்ல என்பதை இயேசுவின் போதனை காட்டுகிறது: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாய்ப் பிரவேசிப்பவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”

மோசம்போக்கப்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. எனவே இயேசு இப்படியாக எச்சரிக்கிறார்: “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” நல்ல மரங்களும் கெட்ட மரங்களும் அவற்றின் கனிகளின் மூலமாக எவ்வாறு நாம் அடையாளங் கண்டுகொள்ளமுடியுமோ, அவ்விதமே பொய்த் தீர்க்கதரிசிகளை அவர்களுடைய நடத்தையாலும் போதனைகளாலும் கண்டுகொள்ளக்கூடும் என்று இயேசு குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசுகிறவராய், ஒருவன் என்ன சொல்லுகிறான் என்பதுதானே அவனைத் தம்முடைய சீஷனாக்கிவிடாது, ஆனால் என்ன செய்கிறான் என்பதுதானே சீஷனாக்குகிறது என்று இயேசு விளக்குகிறார். சிலர் இயேசுவைத் தங்களுடைய கர்த்தர் என்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அவருடைய பிதாவின் சித்தத்தைச் செய்யாமல் இருந்தால், அவர் சொல்வதாவது: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

கடைசியாக, இயேசு தம்முடைய பிரசங்கத்துக்கு மறக்கமுடியாத முடிவுரையைக் கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”

மறுபட்சத்தில், இயேசு கூறுகிறார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.”

இயேசு தம்முடைய பிரசங்கத்தை முடித்தபோது, திரளாக கூடியிருந்தவர்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய மதத்தலைவர்களைப் போல் அவர் போதிக்கவில்லை, அதிகாரமுடையவராய்ப் போதித்தார். லூக்கா 6:12–23; மத்தேயு 5:1–12; லூக்கா 6:24–26; மத்தேயு 5:13–48; 6:1–34; 26:36–45; 7:1–29; லூக்கா 6:27–49.

▪ எளிதில் மறக்கமுடியாத பிரசங்கத்தை கொடுக்கையில் இயேசு எங்கே இருக்கிறார்? யார் கூடியிருக்கிறார்கள்? அதை அவர் கொடுப்பதற்குச் சற்று முன்னால் என்ன சம்பவித்திருந்தது?

▪ இயேசுவின் பிரசங்கத்தின் போதகங்களில் சிலவற்றை லூக்கா வேறு ஒரு சூழ்நிலையில் பதிவுசெய்வது ஏன் ஆச்சரியப்படுவதற்கில்லை?

▪ இயேசுவின் பிரசங்கத்தை அத்தனை மதிப்புள்ளதாகச் செய்வது என்ன?

▪ யார் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள், ஏன்?

▪ யாருக்கு ஐயோ, ஏன்?

▪ எவ்வாறு இயேசுவின் சீஷர்கள் “பூமிக்கு உப்பாகவும்” “உலகத்திற்கு வெளிச்சமாகவும்” இருக்கின்றனர்?

▪ இயேசு எவ்விதமாக கடவுளின் நியாயப்பிரமாணத்துக்கு உயர்வான மதிப்பைக் காட்டுகிறார்?

▪ கொலைக்கும் விபசாரத்துக்குமான மூலகாரணத்தை வேரோடு நீக்க இயேசு என்ன அறிவுரையைக் கொடுக்கிறார்?

▪ மறு கன்னத்தை திருப்பிக் கொடுப்பதைப் பற்றி இயேசு பேசியபோது அவர் அர்த்தப்படுத்தியது என்ன?

▪ கடவுள் பூரணராயிருப்பது போல நாம் எவ்விதமாக பூரணராயிருக்க முடியும்?

▪ ஜெபத்தின் பேரில் இயேசு என்ன போதனைகளைக் கொடுத்தார்?

▪ பரலோக பொக்கிஷங்கள் ஏன் மேன்மையானவை? அவைகள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றன?

▪ ஒருவர் பொருளாசையைத் தவிர்ப்பதற்கு என்ன உவமைகள் கொடுக்கப்பட்டன?

▪ கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்று இயேசு ஏன் சொல்கிறார்?

▪ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பது குறித்து இயேசு என்ன சொல்லுகிறார்? தம்முடைய சீஷர்கள் மற்றவர்கள் சம்பந்தமாகப் புரிந்து செயல்படவேண்டும் என்பதை அவர் எப்படிக் காண்பிக்கிறார்?

▪ ஜெபத்தைக் குறித்து இயேசு மேலுமாக என்ன சொல்லுகிறார்? நடத்தை சம்பந்தமாக அவர் கொடுக்கும் விதிமுறை என்ன?

▪ ஜீவனுக்குச் செல்லும் வழி சுலபமாக இருக்காது என்றும் மோசம்போவற்கான ஆபத்து இருக்கிறது என்றும் இயேசு எப்படிக் காண்பிக்கிறார்?

▪ இயேசு தம்முடைய பிரசங்கத்தை எப்படி முடிக்கிறார்? அது என்ன பாதிப்பை உடையதாயிருக்கிறது?