Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இதோ! அந்த மனிதன்!”

“இதோ! அந்த மனிதன்!”

அதிகாரம் 123

“இதோ! அந்த மனிதன்!”

இயேசுவின் நடத்தையினால் கவர்ச்சிக்கப்பட்டதாலும் அவருடைய குற்றமற்றத் தன்மையை கண்டுணர்வதாலும், அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து மற்றொரு வழியை பின்தொடருகிறான். “பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே” என்று அவன் ஜனக்கூட்டத்திடம் சொல்கிறான்.

பரபாஸ் என்ற பேர்போன கொலைகாரனும் சிறைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கிறான், ஆகையால் பிலாத்து கேட்கிறான்: “எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ?”

அவர்களைத் தூண்டிவிட்ட பிரதான ஆசாரியர்களால் ஏவப்பட்டு, ஜனங்கள் பரபாசை விடுதலை செய்யவும், ஆனால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்றும் கேட்கின்றனர். விடாப்பிடியாக பிலாத்து மறுபடியும் இவ்வாறு கேட்கிறான்: “இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும்?”

“பரபாஸ்” என்று அவர்கள் கூச்சலிடுகின்றனர்.

“அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மனக்குழப்பத்தில் கேட்கிறான்.

காது செவிடாகும் அளவுக்குப் பலத்த குரலில் அவர்கள் பதிலளிக்கின்றனர்: “அவனைச் சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைய வேண்டும்!” “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்!”

ஒரு குற்றமற்ற மனிதனின் மரணத்தை அவர்கள் வற்புறுத்திக் கேட்கின்றனர் என்பதை அறிந்து பிலாத்து வாதாடுகிறான்: “ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்.”

அவனுடைய முயற்சிகள் மத்தியிலும், தங்கள் மதத் தலைவர்களால் தூண்டப்பட்டு மூர்க்கமடைந்த ஜனக்கூட்டத்தார் தொடர்ந்து கூக்குரலிடுகின்றனர்: “அவனைச் சிலுவையில் அறையும்.” ஆசாரியர்களால் வெறியூட்டப்பட்ட ஜனக்கூட்டம் இரத்தம் விரும்புகிறது. ஐந்து நாட்களுக்கு முன்பு தான் இயேசுவை எருசலேமுக்குள் ராஜாவாக வரவேற்றவர்களில் சிலர் அந்தக் கூட்டத்தில் இருப்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாயிருக்கிறது! இவ்வளவு சம்பவங்கள் நடந்த போதும் இயேசுவின் சீஷர்கள் அங்கு இருந்தாலும், அமைதலாகவும் மறைவாகவும் இருக்கின்றனர்.

தன் வேண்டுகோள்களினால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதையும், அதற்கு மாறாக பெருங்கூச்சல் தான் எழும்புகிறது என்பதையும் கண்ட பிலாத்து, தண்ணீரை எடுத்து, ஜனங்களுக்கு முன்பாக தன் கைகளைக் கழுவி, இவ்வாறு சொல்கிறான்: “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.” அப்போது ஜனங்கள் இவ்வாறு பதிலளிக்கின்றனர்: “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக.”

ஆகையால், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இசைவாக எது சரி என்பதை அறிந்து செயல்படுவதற்கு மேலாக ஜனங்களை திருப்தி செய்ய வேண்டும் என்று விரும்பி பிலாத்து பரபாசை அவர்களுக்கு விடுதலை செய்கிறான். அவன் இயேசுவை கொண்டு போய் அவருடைய வஸ்திரங்களை கழற்றி வாரினால் அடிக்கும்படி செய்கிறான். இது சாதாரண சாட்டையடியாக இல்லை. ரோமர்களின் அடிக்கும் பழக்கத்தை அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது:

“சாதாரணமாக இதற்கு உபயோகிக்கப்படும் கருவி ஒரு சிறிய சாட்டை (கசை) பல்வேறு நீளங்களை உடைய அநேக ஒற்றையான அல்லது பின்னப்பட்ட தோல் வார், சிறிய இரும்பு கோலிகள் அல்லது ஆட்டு எலும்புகளின் கூர்மையான துண்டுகள் அதில் இடையிடையே கட்டப்பட்டிருந்தன. . . . ரோம போர்ச்சேவகர்கள் அந்த நபரின் பின்புறத்தை முழு பலத்தோடு திரும்பத் திரும்ப அடிக்கும் போது, இரும்பு கோலிகள் ஆழமான காயத்தை உண்டுபண்ணும், தோல்வார்களும் ஆட்டு எலும்புகளும் தோலையும், தோலின் கீழ் உள்ள இழைமங்களையும் அறுத்துவிடும். பின்பு, தொடர்ந்து சாட்டையினால் அடிக்கும் போது, கிழிக்கப்பட்ட காயங்கள் கீழே இருக்கும் தசைநார்களை கிழித்து, இரத்தம் கசியும் துடிக்கும் தசையாலான பட்டைகளை உண்டுபண்ணும்.”

இந்தச் சித்தரவதையான அடிகளுக்குப் பிறகு, இயேசு தேசாதிபதியின் அரண்மனைக்கு கொண்டு போகப்படுகிறார், போர்ச்சேவகரின் கூட்டம் கூடிவரச் செய்யப்படுகிறது. அங்கே போர்ச்சேவகர்கள் முள்முடியைப் பின்னி, அதை அவர் தலையின் மேல் கீழிறங்கும்படி அமிழ்துவதன் மூலம் அவரை பழிதூற்றுகின்றனர். அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து அரச குடும்பத்தார் உடுத்திக் கொண்டதைப் போன்ற சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்துகின்றனர். பின்பு அவர்கள் கேலிசெய்யும் விதத்தில் அவரிடம் இவ்வாறு சொல்கின்றனர்: “யூதருடைய ராஜாவே, வாழ்க.” மேலும் அவர்கள் அவர் மேல் துப்பி, அவரை கன்னத்தில் அறைகின்றனர். அவருடைய கையிலிருந்த உறுதியான கோலை எடுத்து, அவர் தலையை அடிக்க உபயோகப்படுத்துகின்றனர், அவரை அவமானப்படுத்தும் “கிரீடத்தின்” கூரான முட்கள் அவருடைய மண்டை ஓட்டுக்குள் இன்னும் ஆழமாகத் தைக்கின்றன.

இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டதை இயேசு குறிப்பிடத்தக்க கண்ணியத்தோடும் பலத்தோடும் எதிர்ப்பட்டது பிலாத்துவை அவ்வளவாக கவர்ந்ததனால், அவரை விடுதலை செய்வதற்கு மற்றொரு முறை முயற்சி செய்ய அவன் உந்தப்படுகிறான்: “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டு வருகிறேன்” என்று அவன் ஜனங்களிடம் சொல்கிறான். சித்திரவதை செய்யப்பட்ட இயேசுவின் நிலைமையை பார்த்தால் அவர்களுடைய இருதயங்கள் மென்மையாகும் என்று அவன் கற்பனை செய்து கொள்கிறான். முட்கிரீடத்தையும் சிவப்பங்கியையும் தரித்தவராக, இரத்தம் வழியும் வேதனையுள்ள முகத்துடன் இயேசு இரக்கமற்ற மக்கட்கூட்டத்துக்கு முன் நிற்கையில், பிலாத்து இவ்வாறு அறிவிக்கிறான்: “இதோ, அந்த மனுஷன்.”

கடுமையாக நடத்தப்பட்டு காயமடைந்தவராக இருந்த போதிலும், முழு சரித்திரத்திலேயும் அதிக முதன்மை வாய்ந்தவர், எக்காலத்தில் வாழ்ந்தவருள் உண்மையிலேயே மிகப் பெரிய மனிதர் இங்கே நிற்கிறார்! ஆம், பிலாத்துவும்கூட ஒத்துக் கொள்ள வேண்டியிருந்த மேன்மையை வெளிப்படுத்தும் ஓர் அமைதியான கண்ணியத்தையும் சாந்தத்தையும் இயேசு காட்டுகிறார். ஏனெனில் பிலாத்துவின் வார்த்தைகளில் மரியாதையும் பரிதாபமும் கலந்து தொனிக்கின்றன. யோவான் 18:39–19:5; மத்தேயு 27:15–17, 20–30; மாற்கு 15:6–19; லூக்கா 23:18–25.

▪ என்ன விதத்தில் இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து முயற்சி செய்கிறான்?

▪ பிலாத்து எவ்வாறு தன் உத்தரவாதத்திலிருந்து விடுபட முயற்சி செய்கிறான்?

▪ சாட்டையினால் அடிக்கப்படுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?

▪ சாட்டையினால் அடிக்கப்பட்ட பிறகு, இயேசு எவ்வாறு கேலி செய்யப்படுகிறார்?

▪ இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து என்ன கூடுதலான முயற்சி செய்கிறான்?