Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் ஆரம்ப குடும்ப வாழ்க்கை

இயேசுவின் ஆரம்ப குடும்ப வாழ்க்கை

அதிகாரம் 9

இயேசுவின் ஆரம்ப குடும்ப வாழ்க்கை

இயேசு நாசரேத்தில் வளர்ந்து வரும்போது, அது சிறிய, முக்கியமற்ற ஒரு பட்டணமாக இருக்கிறது. அழகிய யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிற்கு வெகு தூரமாக இல்லாத கலிலேயா என்ற ஒரு மலை பிரதேசத்தில் அது இருக்கிறது.

அநேகமாக, இரண்டு வயதாக இருக்கும் இயேசு, யோசேப்பு மரியாள் ஆகியோரால், இங்கே எகிப்திலிருந்து அழைத்து வரப்படுகிறார். அவர் மரியாளின் ஒரே பிள்ளையாக இருக்கிறார். ஆனால் அதிக காலத்திற்கு இல்லை. காலப்போக்கில் யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா பிறக்கிறார்கள். மரியாளும் யோசேப்பும் பெண்பிள்ளைகளுக்கும்கூட பெற்றோராகிறார்கள். இறுதியில் இயேசுவுக்கு குறைந்தபட்சம் ஆறு இளைய சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள்.

இயேசுவுக்கு மற்ற உறவினரும் இருக்கிறார்கள். அநேக கிலோமீட்டர் தூரத்தில், யூதேயாவில் வசித்து வரும் அவருடைய உறவினன் யோவானைப் பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். ஆனால் அருகில் கலிலேயாவில் வசித்து வரும் சலோமே என்பவள் அநேகமாக மரியாளின் சகோதரி. சலோமே செபெதேயுவை விவாகம் செய்திருக்கிறாள், ஆகையால் அவர்களுடைய இரண்டு குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் இயேசுவின் உறவினர்களாவர். அவர்கள் வளர்ந்து வருகையில், இயேசு இந்தச் சிறுவர்களோடு அதிக நேரத்தை செலவழித்தாரா என்பது நமக்கு தெரியாது, ஆனால் பிறகு அவர்கள் நெருங்கிய தோழர்களாகிறார்கள்.

யோசேப்பு தன்னுடைய வளர்ந்து வரும் குடும்பத்தை ஆதரிக்க அதிக கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கிறது. அவர் ஒரு தச்சர். யோசேப்பு இயேசுவை தன்னுடைய சொந்த மகனைப் போல வளர்த்து வந்த காரணத்தினால், இயேசு ‘தச்சனின் மகன்’ என்று அழைக்கப்படுகிறார். இயேசுவும் ஒரு தச்சனாகும்படி யோசேப்பு அவருக்கு கற்று கொடுக்கிறார், அவரும் நன்றாக கற்றுக் கொள்கிறார். எனவேதான் ஜனங்கள் பின்பு இயேசுவைக் குறித்து, ‘இவர் தச்சன் தானே’ என்று சொல்கிறார்கள்.

யோசேப்பின் குடும்ப வாழ்க்கை யெகோவா தேவனின் வணக்கத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய சட்டத்தை கைக்கொள்பவர்களாக, யோசேப்பும் மரியாளும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ‘அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ அவர்களுக்கு ஆவிக்குரிய போதனையை கொடுக்கிறார்கள். நாசரேத்தில் ஒரு ஜெப ஆலயம் இருக்கிறது. யோசேப்பு ஒழுங்காக வணக்கத்திற்காக தன்னுடைய குடும்பத்தை அங்கு கூட்டிச் செல்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆனால் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு ஒழுங்காக பிரயாணப்பட்டு செல்வதன் மூலம் அவர்கள் அதிக சந்தோஷத்தைக் காண்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. மத்தேயு 13:55, 56; 27:56; மாற்கு 15:40; 6:3; உபாகமம் 6:6-9.

▪ இயேசு குறைந்தபட்சம் எத்தனை இளைய சகோதரர்களையும் சகோதரிகளையும் உடையவராக இருக்கிறார், அவர்களில் சிலருடைய பெயர்கள் என்ன?

▪ இயேசுவின் நன்கு அறியப்பட்ட மூன்று உறவினர்கள் யார்?

▪ இயேசு இறுதியில் எடுத்துக் கொண்ட உலகப்பிரகாரமான தொழில் என்ன? ஏன்?

▪ தன் குடும்பத்துக்கு என்ன அத்தியாவசியமான போதனையை யோசேப்பு ஏற்பாடு செய்கிறார்?