Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் கடைசி எருசலேம் பயணத்தின் போது பத்து குஷ்டரோகிகள் குணமடைகின்றனர்

இயேசுவின் கடைசி எருசலேம் பயணத்தின் போது பத்து குஷ்டரோகிகள் குணமடைகின்றனர்

அதிகாரம் 92

இயேசுவின் கடைசி எருசலேம் பயணத்தின் போது பத்து குஷ்டரோகிகள் குணமடைகின்றனர்

எருசலேமை விட்டு, எப்பிராயீம் பட்டணத்துக்கு பயணம் செய்வதன் மூலம், அவரைக் கொலை செய்வதற்கான நியாயசங்க முயற்சிகளை இயேசு குலைத்து விடுகிறார், இந்தப் பட்டணம் எருசலேமிலிருந்து வடகிழக்கு பக்கமாக அல்லது ஒருவேளை 24 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. தம்முடைய எதிரிகளிடமிருந்து விலகி, அவர் தம் சீஷர்களோடு அங்கே இருக்கிறார்.

என்றபோதிலும், பொ.ச. 33-ம் ஆண்டின் பஸ்காவுக்கான நேரம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, விரைவில் இயேசு மறுபடியும் தம் பயணத்தை துவங்குகிறார். அவர் சமாரியா வழியாக கலிலேயாவுக்குள் பயணம் செய்கிறார். இது அவருடைய மரணத்துக்கு முன்னால் இப்பிராந்தியத்துக்கு அவர் செய்யும் கடைசி விஜயமாகும். கலிலேயாவில் இருக்கையில் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்கு செல்லும் மற்றவர்களோடு அவரும் அவருடைய சீஷர்களும் சேர்ந்து கொள்கின்றனர். யோர்தான் நதிக்கு கிழக்கே இருக்கும் பெரேயா மாவட்டத்தின் வழியாய் செல்லும் மார்க்கத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

பயணத்தின் ஆரம்பத்திலே சமாரியாவிலோ அல்லது கலிலேயாவிலோ உள்ள ஒரு கிராமத்துக்குள் இயேசு நுழைகையில், குஷ்டரோகமுள்ள பத்து மனிதர்களை எதிர்ப்படுகிறார். இந்தப் பயங்கரமான வியாதி ஒரு நபரின் உடல் பாகங்களை—அவனுடைய விரல்கள், அவனுடைய கால்விரல்கள், அவனுடைய காதுகள், அவனுடைய மூக்கு மேலும் அவனுடைய உதடுகள்—படிப்படியாக தின்று விடுகிறது. மற்றவர்களுக்கு நோய் தொற்றிக் கொள்ளாமல் பாதுகாப்பதற்கு, குஷ்டரோகியைக் குறித்து கடவுளுடைய சட்டம் இவ்வாறு சொல்கிறது: “அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிட வேண்டும். அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன். . . . அவன் தனியே குடியிருக்க வேண்டும்.”

இந்தப் பத்து குஷ்டரோகிகளும் குஷ்டரோகிகளுக்கான சட்டத்தின் தடைகளை கடைப்பிடித்து, இயேசுவிடமிருந்து நீண்ட தூரம் தள்ளி இருக்கின்றனர். என்றபோதிலும், அவர்கள் “இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்” என்று பலத்த சத்தத்தோடு கூப்பிடுகின்றனர்.

அவர்கள் தூரத்தில் இருப்பதைப் பார்த்து, இயேசு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்.” தங்கள் நோயிலிருந்து குணமடைந்தவர்களை, குணமடைந்த குஷ்டரோகிகள் என்று தீர்ப்பு சொல்வதற்கு கடவுளுடைய சட்டம் ஆசாரியர்களுக்கு அதிகாரம் அளிப்பதால் இயேசு இதை சொல்கிறார். இந்த விதத்தில் இப்பேர்ப்பட்ட நபர்கள் ஆரோக்கியமான ஜனங்களோடு மறுபடியும் வாழ்வதற்கு அங்கீகாரம் பெறுகின்றனர்.

இயேசுவின் அற்புதகரமான வல்லமைகளில் பத்து குஷ்டரோகிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் அவர்கள் இன்னும் குணமடையவில்லை என்றாலும் ஆசாரியர்களைக் காண்பதற்கு விரைவாகச் செல்கின்றனர். போகும் வழியில், இயேசுவில் அவர்களுக்கிருந்த விசுவாசம் பலனளிக்கப்படுகிறது. அவர்கள் திரும்பவும் பெற்ற ஆரோக்கியத்தை காணவும் உணரவும் ஆரம்பிக்கின்றனர்!

சுத்தமாக்கப்பட்ட குஷ்டரோகிகளில் ஒன்பது பேர் தங்களின் வழியில் தொடர்ந்து செல்கின்றனர், ஆனால் சமாரியனாய் இருந்த ஒரு குஷ்டரோகி இயேசுவை பார்ப்பதற்காக திரும்பி வருகிறான். ஏன்? ஏனென்றால் தனக்கு நடந்ததைக் குறித்து அவன் அதிக நன்றியுள்ளவனாக இருக்கிறான். அவன் பலத்த சத்தத்தோடு கடவுளை துதிக்கிறான், இயேசுவைக் கண்டபோது அவருடைய பாதத்தில் விழுந்து அவருக்கு நன்றி சொல்கிறான்.

அதற்கு பதிலளிப்பவராய் இயேசு சொல்கிறார்: “சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக் காணோமே?”

பின்பு அவர் சமாரியனிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.”

பத்து குஷ்டரோகிகளை இயேசு சுகப்படுத்தியதைப் பற்றி நாம் வாசிக்கும் போது, அவருடைய கேள்வியால் குறிப்பாகச் சொல்லப்பட்ட பாடத்தை நாம் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்: “மற்ற ஒன்பது பேர் எங்கே?” ஒன்பது பேர் வெளிக்காட்டிய நன்றிமறத்தல் ஒரு வினைமையான குறைபாடாகும். நாமும் அந்தச் சமாரியனைப் போன்று, கடவுளுடைய நீதியான புதிய உலகில் நித்திய ஜீவன் என்ற நிச்சய வாக்கு உட்பட கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோமா? யோவான் 11:54, 55; லூக்கா 17:11–19; லேவியராகமம் 13:16, 17, 45, 46; வெளிப்படுத்துதல் 21:3, 4.

▪ தம்மைக் கொலை செய்வதற்கான முயற்சிகளை இயேசு எவ்வாறு குலைக்கிறார்?

▪ இயேசு அடுத்து எங்கே பயணம் செல்கிறார், அவர் போய் சேர வேண்டிய இடம் என்ன?

▪ குஷ்டரோகிகள் ஏன் தூரத்தில் நிற்கின்றனர், ஆசாரியர்களிடம் செல்லுமாறு இயேசு ஏன் அவர்களுக்குச் சொல்கிறார்?

▪ இந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?