Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்கிவிட்டது

இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்கிவிட்டது

அதிகாரம் 112

இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்கிவிட்டது

செவ்வாய் நிசான் 11 முடிவுக்கு வருகையில், ஒலிவ மலையின் மேல் அப்போஸ்தலர்களுக்கு கற்பிப்பதை இயேசு முடித்துக் கொள்கிறார். எவ்வளவு வேலையும் சுறுசுறுப்புமுள்ள நாளாய் இது இருந்திருக்கிறது! இப்போது, இரவுக்கு பெத்தானியாவுக்கு திரும்பும் போது, அவர் தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “இரண்டு நாளைக்குப் பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் [கழுமரத்தில், NW] அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்.”

இயேசு, அதற்கு அடுத்த நாள், புதன் கிழமை, நிசான் 12, அன்று தம்முடைய அப்போஸ்தலர்களோடு அமைதியாக ஓய்வெடுப்பதில் செலவழிக்கிறார். அதற்கு முந்தின நாள், அவர் மதத் தலைவர்களை வெளிப்படையாக கண்டித்தார், அவர்கள் அவரை கொலை செய்வதற்கு தேடுகின்றனர் என்பதை அவர் உணருகிறார். ஆகையால் அவர் புதன்கிழமையன்று தம்மை வெளிப்படையாக காண்பித்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் அதற்கு அடுத்த நாள் மாலை தம்முடைய அப்போஸ்தலர்களோடு பஸ்காவை கொண்டாடுவதில் எந்தக் காரியமும் தலையிடக்கூடாது என்று அவர் விரும்புகிறார்.

இதற்கிடையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் காய்பா என்ற பிரதான ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடியிருந்தனர். முந்தின நாள் இயேசுவின் தாக்கும் வார்த்தைகளால் வேதனையடைந்து, அவரை தந்திரமாய் பிடித்து கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகின்றனர். என்றபோதிலும், அவர்கள் தொடர்ந்து இவ்வாறு சொல்கின்றனர்: “ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது.” அவர்கள் ஜனங்களுக்காக பயப்படுகின்றனர், அவர்களுடைய ஆதரவை இயேசு அனுபவிக்கிறார்.

இயேசுவைக் கொலைசெய்வதற்கு மதத் தலைவர்கள் ஒன்றுகூடி கொடுமையாக சதி செய்து கொண்டிருக்கையில், அவர்களை சந்திக்க ஒருவன் வருகிறான். அவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அவன் இயேசுவின் சொந்த அப்போஸ்தலர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து! தன் எஜமானை காட்டிக்கொடுக்கும் இழிவான எண்ணத்தை சாத்தான் அவனுக்குள் ஊன்றியிருக்கிறான்! யூதாஸ் இவ்வாறு கேட்கையில் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுகின்றனர்: “நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?” அவனுக்கு 30 வெள்ளிக்காசைக் கொடுப்பதற்கு அவர்கள் சந்தோஷத்துடன் ஒத்துக்கொள்கின்றனர், இது மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி ஓர் அடிமையின் விலை. அச்சமயத்திலிருந்து, ஜனக்கூட்டம் சுற்றி இல்லாத சமயத்தில் இயேசுவை அவர்களிடம் காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறான்.

நிசான் 13 புதன்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து ஆரம்பமாகிறது. இயேசு எரிகோவிலிருந்து வெள்ளிக்கிழமையன்று வந்து சேர்ந்தார், ஆகையால் இது அவர் பெத்தானியாவில் செலவிடும் ஆறாவதும் மற்றும் கடைசி இரவுமாயிருக்கிறது. அடுத்த நாள், வியாழன், சூரிய அஸ்தமனத்தின் போது ஆரம்பமாகும் பஸ்காவுக்காக கடைசியான தயாரிப்புகள் செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. அப்போது பஸ்கா ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டு, முழுமையாக வதக்கப்பட வேண்டும். அவர்கள் விருந்தை எங்கே கொண்டாடுவர், யார் தயாரிப்புகளைச் செய்வர்?

இயேசு இப்படிப்பட்ட விவரங்களை கொடுக்கவில்லை, பிரதான ஆசாரியரிடம் யூதா இதை தெரிவித்து பஸ்கா ஆசரிப்பின் போது அவர்கள் இயேசுவை கைது செய்வதை தவிர்ப்பதற்காக ஒருவேளை இருக்கலாம். ஆனால் இப்போது, வியாழன் பிற்பகலின் ஆரம்பப் பகுதியாக இருக்கலாம், இயேசு பேதுருவையும் யோவானையும் பெத்தானியாவிலிருந்து இவ்வாறு சொல்லி அனுப்புகிறார்: “நாம் பஸ்காவை புசிக்கும்படிக்கு நீங்கள் போய் அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள்.”

“நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும் போது, தண்ணீர்க்குடம் சுமந்து வருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல் வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் பண்ணுங்கள்” என்று இயேசு விளக்குகிறார்.

சந்தேகமின்றி அந்த வீட்டெஜமான் இயேசுவின் ஒரு சீஷனாயிருக்கிறான், இந்த விசேஷ நிகழ்ச்சிக்காக தன் வீட்டை உபயோகிப்பதற்கு இயேசுவின் வேண்டுகோளை ஒருவேளை எதிர்பார்த்திருக்கிறான். என்னவாயிருந்தாலும், பேதுருவும் யோவானும் எருசலேமுக்கு வந்து சேர்ந்த போது, இயேசு முன்னறிவித்தபடியே அவர்கள் எல்லாக் காரியங்களையும் காண்கின்றனர். ஆகையால் அவர்கள் இருவரும் ஆட்டுக்குட்டி தயாராயிருக்கிறதா என்பதையும், இயேசுவும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் ஆகிய 13 பேரின் தேவைகளை கவனிப்பதற்கு மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்கின்றனர். மத்தேயு 26:1–5, 14–19; மாற்கு 14:1, 2, 10–16; லூக்கா 22:1–13; யாத்திராகமம் 21:32.

▪ இயேசு புதன்கிழமையன்று என்ன செய்கிறார்? ஏன்?

▪ பிரதான ஆசாரியனின் வீட்டில் என்ன கூட்டம் நடைபெறுகிறது? என்ன நோக்கத்துக்காக யூதாஸ் மதத்தலைவர்களைப் போய்ச் சந்திக்கிறான்?

▪ வியாழக்கிழமையன்று இயேசு எருசலேமுக்குள் யாரை அனுப்புகிறார்? என்ன நோக்கத்துக்காக?

▪ இயேசுவின் அற்புதகரமான வல்லமைகளை மறுபடியும் வெளிக்காட்டும் எதை இந்த அனுப்பப்பட்டவர்கள் காண்கின்றனர்?