Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் சொந்த ஊரின் ஜெப ஆலயத்தில்

இயேசுவின் சொந்த ஊரின் ஜெப ஆலயத்தில்

அதிகாரம் 21

இயேசுவின் சொந்த ஊரின் ஜெப ஆலயத்தில்

இயேசு தம்முடைய சொந்த ஊருக்குத் திரும்பிய போது, சந்தேகமின்றி நாசரேத்தில் கிளர்ச்சி ஏற்படுகிறது. ஓராண்டுக்கும் சற்று மேலாக அவர் யோவானால் முழுக்காட்டப்படும்படி அவ்விடத்தை விட்டு புறப்பட்டுப் போவதற்கு முன்பாக இயேசு ஒரு தச்சனாக அறியப்பட்டிருந்தார். ஆனால் இப்பொழுது அவர் அற்புதம் செய்கிறவர் என்ற பெயரால் எங்கும் அறியப்பட்டிருக்கிறார். உள்ளூர்வாசிகள் இந்த அற்புதமான காரியங்களில் சிலவற்றை அவர் தங்கள் மத்தியில் செய்வதைக் காண ஆவலாக இருந்தார்கள்.

இயேசு தம்முடைய வழக்கத்தின்படியே அவ்வூரின் ஜெப ஆலயத்துக்குப் போகும்போது அவர்களுடைய எதிர்ப்பார்ப்பு அதிகமாகிறது. ஆராதனையின் போது, அவர் வாசிக்க எழுந்து நிற்கிறார். ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்படுகிறது. யெகோவாவின் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவரைப் பற்றி அது பேசும் இடத்துக்கு அவர் அதைத் திறக்கிறார். இன்று நம்முடைய பைபிளில் இது 61-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது.

இவர் எவ்விதமாக சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும், யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தையும் பிரசித்தப்படுத்துவார், என்பது பற்றி வாசித்தப் பிறகு, புஸ்தகத்தைப் பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்துவிட்டு உட்காருகிறார். எல்லாருடைய கண்களும் அவர் மேல் நோக்கமாயிருக்கிறது. அவர் அவர்களோடே விரிவாக பேசிய பிறகு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று விளக்குகிறார்.

அவருடைய “கிருபையுள்ள வார்த்தைகளைக்” கேட்டு ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர் அற்புதங்களைச் செய்வதைக் காண அவர்கள் விரும்பியதை அறிந்தவராக இயேசு தொடர்ந்து, “வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்” என்று சொல்கிறார். சுகப்படுத்தல்கள் முதலில் அவருடைய சொந்த ஜனங்களின் நன்மைக்காக முதலில் சொந்த ஊரில் செய்யப்பட வேண்டும் என்பதாக இயேசுவின் முன்னாள் அயலகத்தார் நினைத்தது தெளிவாக இருக்கிறது. ஆகவே இயேசு தங்களை அசட்டை செய்துவிட்டது போல அவர்கள் உணருகிறார்கள்.

அவர்கள் இவ்விதமாக நினைப்பதை அறிந்து இயேசு பொருத்தமான சில வரலாற்று குறிப்புகளை எடுத்துச்சொல்கிறார். எலியாவின் நாட்களில், “இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்” என்பதாக அவர் சொல்கிறார். ‘ஆனால் எலியா இவர்களில் ஒருவரிடமும் அனுப்பப்படவில்லை. மாறாக சீதோனில் இஸ்ரவேலாக இல்லாத விதவையிடம்’ அவன் சென்று, அங்கே உயிரைக் காத்த ஓர் அற்புதத்தைச் செய்தான். எலிசாவின் நாட்களில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள். ஆனாலும் எலிசா சீரியாவிலிருந்து வந்த நாகமானை மட்டுமே சுத்தமாக்கினான்.

இவர்களுடைய சுயநலத்தையும் விசுவாசக் குறைவையும் வெளிப்படுத்திக் காட்டிய சாதகமில்லாத வரலாற்று ஒப்புமைகளைக் கேட்டு கோபமடைந்தவர்களாய், ஜெப ஆலயத்திலிருந்த எல்லாரும் எழுந்திருந்து அவரை ஊருக்குப் புறம்பே தள்ளுகிறார்கள். அங்கே நாசரேத் கட்டப்பட்டிருந்த மலை சிகரத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தள்ளிவிட முயற்சி செய்கிறார்கள். ஆனால் இயேசு அவர்கள் பிடியிலிருந்து தப்பிப் பத்திரமாய் சென்று விடுகிறார். லூக்கா 4:16-30; 1 இராஜாக்கள் 17:8-16; 2 இராஜாக்கள் 5:8-14.

▪ நாசரேத்தில் ஏன் கிளர்ச்சி ஏற்படுகிறது?

▪ இயேசுவின் பேச்சைக் குறித்து ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆனால் அவர்களை அவ்வளவாக கோபப்படுத்துவது என்ன?

▪ ஜனங்கள் இயேசுவுக்கு என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள்?