Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் சோதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

இயேசுவின் சோதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

அதிகாரம் 13

இயேசுவின் சோதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

இயேசு முழுக்காட்டுதல் பெற்ற உடனேயே, கடவுளுடைய ஆவியினால் யூதேயா வனாந்தரத்திற்கு வழிநடத்தப்படுகிறார். சிந்தித்துப் பார்ப்பதற்கு அவருக்கு அநேக காரியங்கள் இருக்கின்றன, ஏனென்றால் அவர் பரலோக காரியங்களை பகுத்துணருவதற்காக அவருடைய முழுக்காட்டுதலின்போது “வானங்கள் திறக்கப்பட்டன.” உண்மையில், அவர் தியானிப்பதற்கு அதிகம் இருக்கிறது!

இயேசு வனாந்தரத்தில் 40 பகல்களும் 40 இரவுகளும் கழிக்கிறார், இந்தச் சமயத்தின்போது அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அப்பொழுது, அவர் அதிக பசியாயிருந்தபோது, பிசாசு அவரை சோதிக்க அவரிடம் வந்து: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்,” என்கிறான். ஆனால் தம்முடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தம்முடைய அற்புதமான வல்லமைகளை உபயோகிப்பது தவறு என்பது இயேசுவுக்குத் தெரியும். எனவே அவர் இந்தச் சோதனைக்கு இடம்கொடுக்கவில்லை.

ஆனால் பிசாசோ விட்டுவிடவில்லை. இன்னொரு அணுகு முறையை முயற்சி செய்து பார்க்கிறான். தேவாலயத்தின் மதில்களிலிருந்து தாழக் குதிக்கும்படியும் அவரைத் தேவதூதர்கள் காப்பாற்றுவார்கள் என்றும் இயேசுவிடம் சவால் விடுகிறான். ஆனால் இயேசு அப்படிப்பட்ட பிறர் கவர்ச்சிக்குரிய செயலை வெளிக்காட்ட விரும்பவில்லை. வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டி, கடவுளை இந்த விதமாக சோதிப்பது தவறு என்று இயேசு காட்டுகிறார்.

மூன்றாவது சோதனையாக, பிசாசு அதிசயமான விதத்தில் உலகத்தின் ராஜ்யங்களையெல்லாம் இயேசுவுக்கு காட்டி, இப்படியாக சொல்லுகிறான்: “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்.” மறுபடியும் தவறு செய்வதற்கு தூண்டிடும் சோதனைக்கு இடம் கொடுக்க இயேசு மறுக்கிறார், கடவுளுக்கு உண்மையாக நிலைத்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.

இயேசுவின் இந்தச் சோதனைகளிலிருந்து நாம் சில காரியங்களைக் கற்றுக்கொள்ளக்கூடும். உதாரணமாக, சிலர் உரிமைப் பாராட்டுவதுபோல் பிசாசு வெறுமென ஒரு தீய தன்மை அல்ல, ஆனால் அவன் உண்மையான காணக்கூடாத ஓர் ஆள் என்பதை அவை காட்டுகின்றன. மேலும் எல்லா உலக அரசாங்கங்களும் பிசாசின் உடைமை என்பதை இயேசுவின் சோதனைகள் காட்டுகின்றன. அவை உண்மையில் அவனுடையதாக இல்லாதிருந்தால், பிசாசு அதை கிறிஸ்துவுக்கு அளிப்பது எவ்வாறு ஓர் உண்மையான சோதனையாக இருந்திருக்கக்கூடும்?

மேலும் இதை சற்று யோசித்துப் பாருங்கள்: ஒரே ஒரு வணக்க செயல் போதும்—உலக ராஜ்யங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட மனமுள்ளவனாக இருப்பதாக பிசாசு சொன்னான். இந்த விதமாக பிசாசு நம்மையும் சோதிக்க முயற்சி செய்யலாம், ஒருவேளை உலகப்பிரகாரமான செல்வம், அதிகாரம் அல்லது அந்தஸ்து ஆகியவற்றை அடையக்கூடிய வஞ்சிக்கும் வாய்ப்புகளை நமக்கு முன்பாக வைக்கலாம். ஆனால் நாம் எந்தவிதமான சோதனையை எதிர்ப்பட்டாலும் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி கடவுளுக்கு உண்மையாக நிலைத்திருப்பது எவ்வளவு ஞானமான செயல்! மத்தேயு 3:16; 4:1-11; மாற்கு 1:12, 13; லூக்கா 4:1-13.

▪ வனாந்தரத்தில் 40 நாட்கள் இருந்தபோது, என்ன காரியங்களைப் பற்றி இயேசு தியானிக்கிறார்?

▪ பிசாசு இயேசுவை எவ்வாறு சோதிக்க முயற்சி செய்கிறான்?

▪ இயேசுவின் சோதனைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?