Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் முதல் சீஷர்கள்

இயேசுவின் முதல் சீஷர்கள்

அதிகாரம் 14

இயேசுவின் முதல் சீஷர்கள்

வனாந்தரத்தில் 40 நாட்கள் இருந்த பிறகு, இயேசு தம்மை முழுக்காட்டின யோவானிடம் திரும்பி வருகிறார். அவர் நெருங்கி வருகையில், அவரைச் சுட்டிக் காட்டி அங்கிருந்தவர்களிடம் யோவான் ஆச்சரியத்தோடு: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப் பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்” என்று சொல்லுகிறான். யோவான் தன் உறவினரான இயேசுவைவிட பெரியவனாக இருந்தபோதிலும், இயேசு தனக்கு முன்பு ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் இருந்தார் என்பது யோவானுக்குத் தெரியும்.

என்றபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு இயேசு முழுக்காட்டப்பட வரும் போது, மேசியாவாக ஆகப் போகிறவர் இயேசுவே என்று யோவானுக்கு நிச்சயமாக தெரியாது. “நானும் இவரை அறியாதிருந்தேன்” என்று யோவான் ஒப்புக்கொள்கிறார். “இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.”

அவன் இயேசுவை முழுக்காட்டின போது என்ன நடந்தது என்பதை தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் யோவான் தொடர்ந்து விளக்குகிறான்: “ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.”

மறுநாள், யோவான் தன்னுடைய இரண்டு சீஷர்களோடு நின்று கொண்டிருக்கிறான். மறுபடியும் இயேசு தன்னிடம் நெருங்கி வரும்போது: “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று அவன் சொல்லுகிறான். இந்தச் சமயத்தில் தானே, யோவான் ஸ்நானனின் இந்த இரண்டு சீஷர்கள் இயேசுவை பின்பற்றுகிறார்கள். அதில் ஒருவன் அந்திரேயா, மற்றவன் இந்தக் காரியங்களை பதிவு செய்தவன். அவனும் யோவான் என்று அழைக்கப்பட்டான். விவரப் பதிவுகளின்படி, இந்த யோவானும் இயேசுவின் உறவினனாக, மரியாளின் சகோதரியாகிய சலோமேயின் மகனாக இருக்கிறான்.

அந்திரேயாவும் யோவானும் தம்மைப் பின்பற்றுவதை திரும்பிப் பார்த்து இயேசு: “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார்.

“ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்கிறார்கள்.

“வந்து பாருங்கள்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

இப்போது நேரம் ஏறக்குறைய பிற்பகல் நான்கு மணி, யோவானும் அந்திரேயாவும் அந்த நாளின் எஞ்சிய பகுதி முழுவதும் இயேசுவோடு தங்கி விடுகிறார்கள். அதற்கு பிறகு அந்திரேயா கிளர்ச்சி அடைந்தவனாய் பேதுரு என்று அழைக்கப்பட்ட தன்னுடைய சகோதரனை கண்டுபிடிக்க விரைகிறான். “மேசியாவை கண்டோம்” என்று அவனிடம் சொல்கிறான். பேதுருவை இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான். அதே சமயத்தில் யோவானும் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபுவை கண்டுபிடித்து இயேசுவிடம் அழைத்து வருகிறான். அப்படி செய்தும், தனது பழக்கத்தின்படி யோவான் தன்னை உட்படுத்திய இந்தத் தகவலை தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறான்.

அந்திரேயா மற்றும் பேதுருவின் சொந்த ஊராகிய பெத்சாயிதாவிலிருந்து வந்த பிலிப்புவை இயேசு மறுநாள் காண்கிறார். “நீ எனக்கு பின்சென்று வா” என்று அவனை அழைக்கிறார்.

பின்னர் பிலிப்பு பற்தொலொமேயு என்றும் அழைக்கப்பட்ட நாத்தான்வேலை பார்த்து, “நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்று சொல்லுகிறான். நாத்தான்வேலுக்கு சந்தேகம். “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று கேட்கிறான்.

“வந்து பார்” என்று பிலிப்பு அழைக்கிறான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்த போது, இயேசு நாத்தான்வேலைப் பற்றி சொல்கிறார்: “இதோ, கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்.”

“நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று நாத்தான்வேல் கேட்கிறான்.

“பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

நாத்தான்வேல் ஆச்சரியப்படுகிறான். “ரபீ [போதகர் என்று அர்த்தம்] நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று சொல்கிறான்.

“அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்?” என்று இயேசு கேட்கிறார். “இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்.” பிறகு அவர் வாக்களிக்கிறார்: “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இதற்குப் பிறகு வெகு சீக்கிரத்தில், இயேசு தம்முடைய புதிய சீஷர்களோடு யோர்தானை விட்டு கலிலேயாவுக்குப் பயணம் செய்கிறார். யோவான் 1:29–51.

▪ இயேசுவின் முதற் சீஷர்கள் யார்?

▪ பேதுருவும் யாக்கோபும் எவ்வாறு இயேசுவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்?

▪ இயேசுவே கடவுளுடைய குமாரன் என்று நாத்தான்வேலை நம்பச் செய்தது எது?