Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் முழுக்காட்டுதல்

இயேசுவின் முழுக்காட்டுதல்

அதிகாரம் 12

இயேசுவின் முழுக்காட்டுதல்

யோவான் பிரசங்கிக்க ஆரம்பித்து ஏறக்குறைய ஆறாவது மாதத்தில், இப்பொழுது 30 வயதாயிருக்கும் இயேசு யோர்தானுக்கு அவனிடம் வருகிறார். என்ன காரணத்துக்காக? வெறுமென அவனை சந்திப்பதற்காகவா? யோவானின் வேலை எவ்வாறு முன்னேறுகிறது என்பதில் மட்டுமே இயேசு அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? இல்லை, தம்மை முழுக்காட்டும்படி இயேசு யோவானிடம் கேட்கிறார்.

அச்சமயத்திலே யோவான் மறுத்துவிடுகிறான். ‘நான் உம்மாலே முழுக்காட்டுதல் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வருகிறீரோ?’ என்று கேட்கிறான். இயேசு கடவுளுடைய விசேஷித்த குமாரன் என்று அவருக்கு உறவினனான யோவான் அறிந்திருக்கிறான். ஏன், இயேசுவை கருப்பையில் தாங்கியவளாய் மரியாள் அவர்களை சந்தித்தபோது, அவனுடைய தாயின் வயிற்றிலிருந்த யோவான் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தானே! பின்னர் இதைக் குறித்து யோவானின் தாயாகிய எலிசபெத் அவனிடம் சந்தேகமில்லாமல் சொல்லியிருப்பாள். மேலும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய தேவதூதரின் அறிக்கையைக் குறித்தும், இயேசு பிறந்த இரவின்போது தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு காட்சியளித்ததைக் குறித்தும் அவனிடம் சொல்லியிருப்பாள்.

எனவே யோவானுக்கு இயேசு ஓர் அந்நியன் அல்ல. தான் கொடுக்கும் முழுக்காட்டுதல் இயேசுவுக்கானதல்ல என்றும் யோவான் அறிந்திருந்தான். அது தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்புதலை காட்டுபவர்களுக்கு மட்டுமே, ஆனால் இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார். யோவான் மறுத்தப்போதிலும், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று இயேசு வற்புறுத்துகிறார்.

இயேசு முழுக்காட்டப்படுவது ஏன் சரியாக இருக்கிறது? ஏனென்றால், இயேசுவின் முழுக்காட்டுதல் பாவங்களிலிருந்து மனந்திரும்புதலுக்கான அடையாளமாக இல்லை, ஆனால் தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்ய வருவதற்கு தம்மை அளிப்பதற்கே அடையாளமாக இருக்கிறது. இயேசு ஒரு தச்சனாக இருக்கிறார், ஆனால் யெகோவா தேவன் தம்மை பூமிக்கு அனுப்பின அந்த ஊழியத்தை ஆரம்பிப்பதற்கான காலம் இப்பொழுது வந்துவிட்டது. இயேசுவை முழுக்காட்டுகிறபோது ஏதாவது அசாதாரணமான காரியம் நடக்குமென்று யோவான் எதிர்பார்த்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

உண்மையில், யோவான் பின்பு அறிக்கை செய்ததாவது: “ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்: ஆவியானவர் (ஆவி, NW) இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லிருந்தார்.” எனவே யோவான் தான் முழுக்காட்டுகிற ஒருவர் மீது கடவுளுடைய ஆவி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆகையால், இயேசு தண்ணீரிலிருந்து மேலே வந்தபோது, ‘தேவ ஆவி புறாவைப்போல இறங்கினதைக்’ கண்டது யோவானுக்கு ஒருவேளை உண்மையில் ஆச்சரியமூட்டுவதாய் இல்லை.

ஆனால் இயேசுவின் முழுக்காட்டுதலின்போது அதைவிட அதிகம் நடக்கிறது. ‘வானங்கள் அவருக்கு திறக்கப்பட்டது.’ இது எதை அர்த்தப்படுத்துகிறது? மனிதனாக வருவதற்கு முன்பு பரலோகத்திலிருந்த தம் வாழ்க்கை அவர் முழுக்காட்டப்படுகிற போது திரும்பவும் அவருடைய நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறதை இது தெளிவாக அர்த்தப்படுத்துகிறது. ஆக, இயேசு இப்பொழுது, மனிதனாக வருவதற்கு முன்பு பரலோகத்தில் இருந்த போது, கடவுள் அவரிடம் பேசின எல்லா காரியங்களும் உட்பட யெகோவா தேவனின் ஆவிக்குரிய குமாரனாக இருந்த தம் வாழ்க்கையை முழுவதுமாக நினைவுக்கு கொண்டு வருகிறார்.

கூடுதலாக, அவருடைய முழுக்காட்டுதலின் போது, பரலோகத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” அது யாருடைய குரல்? இயேசுவின் சொந்த குரலா? நிச்சயமாகவே இல்லை! அது கடவுளுடைய குரல். தெளிவாகவே, இயேசு கடவுளுடைய குமாரன், சில ஜனங்கள் உரிமைப் பாராட்டுவது போல், அவர்தாமே கடவுள் இல்லை.

என்றபோதிலும், இயேசு முதல் மனிதனாகிய ஆதாமைப் போல், கடவுளின் மானிட குமாரனாக இருக்கிறார். இயேசுவின் முழுக்காட்டுதலை விவரித்த பின்னர், சீஷனாகிய லூக்கா எழுதுகிறார்: “அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; . . . தாவீதின் குமாரன் . . . ஆபிரகாமின் குமாரன், . . . நோவாவின் குமாரன், . . . ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.”

ஆதாமைப் போன்றே இயேசுவும் கடவுளின் மானிட குமாரனாக இருக்கிறார். இயேசு எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப் பெரிய மனிதன் என்பது அவருடைய வாழ்க்கையை நாம் கூர்ந்து ஆராயும் போது தெளிவாகிறது. என்றபோதிலும், அவருடைய முழுக்காட்டுதலின் போது, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாகவும் ஆவதன் மூலம், இயேசு கடவுளுடன் ஒரு புதிய உறவுக்குள் வருகிறார். தீர்க்கப்பட்ட மனித குலத்தின் சார்பாக தம் மானிட உயிரை நித்திய பலியாக அளிப்பதில் முடிவடையப்போகும் பாதையில் அவரை ஆரம்பித்து வைப்பதன் மூலம் கடவுள் அவரைப் பரலோகத்துக்கு திரும்ப அழைப்பதை போல இருந்தது. மத்தேயு 3:13-17; லூக்கா 3:21-38; 1:34-36, 44; 2:10-14; யோவான் 1:32-34; எபிரெயர் 10:5-9.

▪ யோவானுக்கு இயேசு ஏன் ஓர் அந்நியனல்ல?

▪ இயேசு பாவம் செய்யாதவராக இருப்பதால், அவர் ஏன் முழுக்காட்டப்படுகிறார்?

▪ இயேசுவைப்பற்றி யோவான் அறிந்திருப்பதைக் கவனிக்கும்போது, அவர் மீது கடவுளுடைய ஆவி இறங்கினதைக் குறித்து யோவான் ஏன் ஆச்சரியப்படவில்லை?