Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவும் ஒரு பணக்கார இளவரசனும்

இயேசுவும் ஒரு பணக்கார இளவரசனும்

அதிகாரம் 96

இயேசுவும் ஒரு பணக்கார இளவரசனும்

இயேசு பெரேயா மாவட்டத்தின் வழியாய் எருசலேமை நோக்கி சென்று கொண்டிருக்கையில், ஒரு வாலிபன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிடுகிறான். அந்த மனிதன் இளவரசன் என்றழைக்கப்படுகிறான், உள்ளூர் ஜெப ஆலயத்தில் ஒரு முக்கியமான ஸ்தானத்தை பெற்றிருப்பதாலோ அல்லது நியாயசங்கத்தின் ஓர் உறுப்பினராக இருப்பதாலோ அவன் அவ்வாறு அழைக்கப்படுகிறான். மேலும், அவன் அதிக செல்வந்தனாகவும் இருக்கிறான். “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்” என்று அவன் கேட்கிறான்.

“நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே” என்று இயேசு பதிலளிக்கிறார். அந்த இளம் மனிதன் “நல்லவர்” என்ற வார்த்தையை ஒரு பட்டப்பெயராக உபயோகிக்கிறான், ஆகையால் இயேசு அப்பேர்ப்பட்ட ஒரு பட்டப்பெயர் கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதை அவன் அறியும்படி செய்கிறார்.

“நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் [தொடர்ந்து, NW] கைக்கொள்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார்.

“எவைகளை” என்று அந்த மனிதன் கேட்கிறான்.

பத்து கற்பனைகளில் ஐந்து கற்பனைகளை மேற்கோளாய் எடுத்து இயேசு பதிலளிக்கிறார்: “கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.” இவைகளைக் காட்டிலும் முக்கியமான ஒரு கட்டளையை கூட்டி இயேசு சொல்கிறார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”

“இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த மனிதன் உண்மை மனதுடன் பதிலளிக்கிறான். “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன.”

அந்த மனிதனின் ஆழ்ந்த, ஊக்கமான வேண்டுகோளைக் கேட்ட போது, இயேசு அவன் பேரில் அன்பு கொள்கிறார். ஆனால் அந்த மனிதனுக்கு பொருள் உடைமைகளின் மேல் இருந்த பற்றுதலை இயேசு மனதில் உணர்ந்து, அவனுடைய தேவையை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார்: “உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு . . . என்னைப் பின்பற்றி வா.”

அந்த மனிதன் எழுந்து, ஆழ்ந்த துக்கத்தோடே போவதை இயேசு வருத்தத்தோடு கவனிக்கிறார். உண்மையான பொக்கிஷத்தின் மதிப்பைக் காண முடியாதபடி அவனுடைய செல்வம் அவனை குருடாக்குகிறது. “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது,” என்று இயேசு கவலையுடன் கூறுகிறார்.

இயேசுவின் வார்த்தைகள் சீஷர்களை திகைப்படையச் செய்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து ஒரு பொதுவான கட்டளையை சொல்லும்போது அவர்கள் மேலும் ஆச்சரியமடைகின்றனர்: “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.”

“அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்று சீஷர்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

அவர்களை நேராக நோக்கிப் பார்த்து இயேசு பதிலளிக்கிறார்: “மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்.”

பணக்கார இளவரசன் தேர்ந்தெடுத்ததற்கு முற்றிலும் அவர்கள் அதிக வித்தியாசமானதை தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து பேதுரு சொல்கிறார்: “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே.” ஆகையால் அவர் கேட்கிறார்: “எங்களுக்கு என்ன கிடைக்கும்.”

“மறுஜென்ம [மறுசிருஷ்டிப்பில், NW] காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்,” என்று இயேசு வாக்களிக்கிறார். ஆம், ஏதேன் தோட்டத்தில் இருந்தது போல் பூமியில் மறுபடியுமாக சிருஷ்டிக்கப்பட்டது போன்ற நிலைமைகள் வரும் என்று இயேசு காண்பிக்கிறார். பேதுருவும் மற்ற சீஷர்களும் இந்தப் பூகோள பரதீஸின் மீது கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும் வெகுமதியைப் பெற்றுக்கொள்வர். நிச்சயமாகவே, இந்த மகத்தான வெகுமதிக்காக எப்படிப்பட்ட தியாகமும் தகுதியாயிருக்கிறது!

என்றபோதிலும், இப்போதும்கூட பலன்கள் இருக்கின்றன, இதை இயேசு உறுதியாக பின்வருமாறு சொல்கிறார்: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும் இப்போது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும் சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையில் நித்திய ஜீவனையும் அடைவான்.”

இயேசு வாக்களிக்கிற விதமாய், அவருடைய சீஷர்கள் உலகில் எங்கு சென்றாலும், சொந்த குடும்ப அங்கத்தினர்களோடு அனுபவிப்பதைவிட நெருக்கமான, அதிக அருமையான ஓர் உறவை உடன் கிறிஸ்தவர்களோடு அனுபவிக்கின்றனர். அந்தப் பணக்கார இளவரசன் இந்த வெகுமதியையும், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியையும் இழந்து விடுவதைப் போல தோன்றுகிறது.

அதற்குப் பின்பு இயேசு கூடுதலாக சொல்கிறார்: “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்.” அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?

பணக்கார இளவரசனைப் போல் மத சம்பந்தமான சிலாக்கியங்களை அனுபவிப்பதில் “முந்தினோர்” ஆக இருக்கும் அநேக ஜனங்கள் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தினார். அவர்கள் “பிந்தினோர்” ஆக இருப்பர். சுய–நீதியுள்ள பரிசேயர்களால் “பிந்தினோர்” என்று இழிவாகவும், பூமியின் ஜனங்கள் அல்லது அம்ஹரட்ஸ் என்பதாகவும் கருதப்பட்ட இயேசுவின் தாழ்மையான சீஷர்கள் உட்பட அநேகர் “முந்தினோர்” ஆக ஆவர். அவர்கள் “முந்தினோர்” ஆவர் என்பதன் அர்த்தம் ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன் அரசர்களாக ஆவதற்கான சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்வர் என்பதாகும். மாற்கு 10:17–31; மத்தேயு 19:16–30; லூக்கா 18:18–30.

▪ தெளிவாகவே பணக்கார இளம் மனிதன் எப்படிப்பட்ட இளவரசன்?

▪ நல்லவர் என்று அழைக்கப்பட்டதற்கு இயேசு ஏன் மறுப்பு தெரிவித்தார்?

▪ பணக்காரராக இருப்பதன் அபாயத்தை அந்த இளவரசனின் அனுபவம் எவ்வாறு எடுத்துக் காட்டுகிறது?

▪ இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன பலன்களை வாக்களிக்கிறார்?

▪ முந்தினோர் எவ்வாறு பிந்தினோராயும் பிந்தினோர் எவ்வாறு முந்தினோராயும் ஆகின்றனர்?