Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து சீஷரில் பலர் விலகிச்சென்றார்கள்

இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து சீஷரில் பலர் விலகிச்சென்றார்கள்

அதிகாரம் 55

இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து சீஷரில் பலர் விலகிச்சென்றார்கள்

இயேசு கப்பர்நகூமிலுள்ள ஒரு ஜெபாலயத்தில் வானத்திலிருந்து வந்த உண்மையான அப்பமாகத் தம்முடைய பாகத்தைக்குறித்துப் போதித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சு, கலிலேயக் கடலுக்குக் கிழக்கேயிருந்து திரும்பிகொண்டிருந்த போது அவரைக் கண்ட சமயத்தில் ஜனங்களோடு அவர் கொண்டிருந்த சம்பாஷணையின் தொடர்ச்சியாகவே இருக்கிறது; அங்கே தங்களுக்கு அற்புதமாக அளிக்கப்பட்ட அப்பங்களையும் மீன்களையும் அவர்கள் சாப்பிட்டிருந்தார்கள்.

இயேசு தம்முடைய பேச்சை இப்படியாகத் தொடருகிறார்: “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.” இரண்டு வருடங்களுக்கு முன்புதானே, பொ.ச. 30-ன் இலைதுளிர் பருவத்தின்போது, இயேசு நிக்கொதேமுவிடம், கடவுள் இந்த உலகத்தை இவ்வளவாய் நேசித்ததால் தம்முடைய குமாரனை இரட்சகராய்த் தந்தருளினார் என்று சொன்னார். இப்படியாக, மனிதவர்க்க உலகில் எவனொருவன் தாம் விரைவில் கொடுக்கப்போகும் பலியில் விசுவாசம் வைப்பதன்மூலம் அடையாள அர்த்தத்தில் தம்முடைய மாம்சத்தைப் புசிப்பானோ, அவன் நித்தியஜீவனைப் பெறக்கூடும் என்று இயேசு இப்பொழுது காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

என்றபோதிலும் இயேசுவின் வார்த்தைகளில் மக்கள் இடறுகிறார்கள். “இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். தம்முடைய மாம்சத்தைப் புசிப்பது ஓர் அடையாள அர்த்தத்திலே செய்யப்படும் என்பதைத் தமக்குச் செவிகொடுப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார். எனவே, இதை அழுத்திக்கூறுவதற்காக, சொல்லர்த்தமாக எடுத்துக்கொண்டால் இன்னும் அதிக எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் ஒன்றை அவர் கூறுகிறார்.

“மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை,” என்கிறார் இயேசு. “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.”

உண்மைதான், இங்கு இயேசு தன்னிணத்தைப் புசிப்பது குறித்து பேசுகிறவராயிருந்தால், அவருடைய போதனைகள் மிகவும் முரணான ஒன்றாய்த் தொனிக்கும். ஆனால், இயேசு இங்கு சொல்லர்த்தமாகவே மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைக் குடிப்பதும் குறித்து பேசிக்கொண்டில்லை. நித்திய ஜீவன் பெறுகிற எல்லாரும், தம்முடைய பரிபூரண மானிட உடலை அளித்து தம்முடைய ஜீவஇரத்தத்தை ஊற்றும்போது தாம் கொடுக்கவிருக்கும் பலியில் கண்டிப்பாக விசுவாசம் வைக்கவேண்டும் என்பதைத்தானே அழுத்திக்காண்பிக்கிறார். அப்படியிருந்தும், அவருடைய சீஷரில் பலரும்கூட அவருடைய போதனையைப் புரிந்துகொள்வதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கிறவர்களாயில்லை. எனவேதான் அவர்கள், “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தம்முடைய சீஷரில் பலர் முறுமுறுக்கிறார்கள் என்பதை அறிந்து, இயேசு சொல்லுகிறார்: “இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? . . . நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு.”

இயேசு தொடருகிறார்: “ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன்.” அதைக் கேட்டு அவருடைய சீஷரில் பலர் அவரை இனிமேலும் பின்பற்றாதவர்களாக விட்டுச்செல்கிறார்கள். எனவே இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலரிடமாகத் திரும்பி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று கேட்கிறார்.

பேதுரு பதில் சொல்லுகிறான்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து [கடவுளுடைய பரிசுத்தர், NW] என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” இந்தக் காரியத்தில் பேதுருவும் இயேசுவின் அப்போஸ்தலரும் அவருடைய போதனையை முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்களாக இருந்திருந்தாலும், இது உத்தமத்திற்கு என்னே ஓர் அருமையான வெளிக்காட்டு!

பேதுருவின் பிரதிபலிப்பு அவருக்குப் பிரியமாயிருந்தபோதிலும், இயேசு கூறுகிறார்: “பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் [பழிதூற்றுகிறவனாயிருக்கிறான், NW].” அவர் யூதாஸ்காரியோத்துவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். அநேகமாக இந்தக் கட்டத்தில் இயேசு யூதாஸில் ஒரு தவறான போக்கின் “ஆரம்பத்தைக்” கணிக்கிறவராயிருக்கிறார்.

தம்மை ஒரு ராஜாவாக ஆக்குவதற்கான ஜனங்களின் முயற்சிக்கு இடங்கொடாததன் மூலம் இயேசு அவர்களை ஏமாற்றமடையச் செய்திருப்பதால், அவர்கள், ‘மேசியாவுக்கு உரிய நிலையை இவர் ஏற்கவில்லையென்றால், இவர் எப்படி மேசியாவாக இருக்க முடியும்?’ என்று நியாய விவாதம் செய்யக்கூடும். இதுவுங்கூட ஜனங்களின் மனதில் பசுமையாக இருக்கும் ஒரு காரியம். யோவான் 6:51–71; 3:16.

▪ இயேசு தம்முடைய மாம்சத்தை யாருக்கு அளிக்கிறார்? இவர்கள் எவ்விதம் அவருடைய ‘மாம்சத்தைப் புசிக்கிறார்கள்’?

▪ இயேசு மேலும் கூறிய எந்த வார்த்தைகள் ஜனங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? என்றபோதிலும் அவர் அழுத்திக்காண்பிப்பது என்ன?

▪ இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து பலர் அவரை விட்டுச்செல்கிறபோது, பேதுருவின் பிரதிபலிப்பு என்னவாயிருக்கிறது?