Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவை கொலைசெய்ய கூடுதலான முயற்சிகள்

இயேசுவை கொலைசெய்ய கூடுதலான முயற்சிகள்

அதிகாரம் 81

இயேசுவை கொலைசெய்ய கூடுதலான முயற்சிகள்

பனிக்காலமாய் இருப்பதனால் இயேசு சாலொமோனின் மண்டபம் என்றழைக்கப்படும் பாதுகாப்பான இடத்தில் நடந்து கொண்டிருக்கிறார். இது ஆலயத்தோடு சேர்ந்து இருக்கிறது. இங்கே யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கின்றனர்: “எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும்.”

“அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை” என்று இயேசு பதிலளிக்கிறார். கிணற்றருகே சமாரியப் பெண்ணிடம் அவர் சொன்னது போல், தாம் கிறிஸ்து என்று அவர்களிடம் நேரடியாக இயேசு சொல்லவில்லை. ஆபிரகாமுக்கு முன்பே தாம் இருந்ததாகவும், மேலேயிருந்து தாம் வந்ததாகவும் அவர்களுக்கு விளக்கின போது, தாம் யார் என்ற அடையாளத்தை அவர் அவர்களுக்கு வெளிக்காட்டியிருந்தார்.

என்றபோதிலும், கிறிஸ்து எதை சாதிப்பார் என்று பைபிள் முன்னறிவிக்கிறதை, தாம் செய்யும் வேலைகளோடு ஒப்பிடுவதன் மூலம், அவர் தான் கிறிஸ்து என்று ஜனங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அதன் காரணமாகத்தான் அவர் தாம் கிறிஸ்து என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர் முன்பே தம்முடைய சீஷர்களிடம் அறிவுறுத்தி கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் தம்மை எதிர்க்கிற இந்த யூதர்களிடம் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. ஆனால், நீங்கள் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.”

அவர்கள் ஏன் நம்பவில்லை? இயேசு தான் கிறிஸ்து என்பதற்கு அத்தாட்சி இல்லாததன் காரணமாகவா? இல்லை, ஆனால் அவர் அவர்களிடம் சொல்லும்போது, அவர் கொடுக்கும் காரணத்துக்காகவே: “நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்கிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கைகளிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது.”

பின்பு இயேசு தம் தகப்பனோடு தமக்கு இருக்கும் நெருங்கிய உறவை விளக்குகிறார்: “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” இயேசு பூமியிலும், அவருடைய பிதா பரலோகத்திலும் இருப்பதால், சொல்லர்த்தமாக அல்லது சரீரப்பிரகாரமாக அவரும் அவருடைய பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று அவர் சொல்லவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மாறாக, அவர்கள் நோக்கத்தில் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை அவர் அர்த்தப்படுத்துகிறார், அவர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.

இயேசு சொன்ன வார்த்தைகளால் கோபமடைந்து இதற்கு முன்பு கூடாரப் பண்டிகையின் போது செய்தது போலவே யூதர்கள் அவரைக் கொல்வதற்கு கற்களை எடுக்கின்றனர். தம்முடைய எதிர்கால கொலைகாரர்களை தைரியமாக எதிர்ப்பட்டு இயேசு சொல்கிறார்: “நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள்?”

“நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை. நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். இயேசு தம்மை ஒருபோதும் ஒரு கடவுளாக உரிமைப் பாராட்டிக் கொள்ளவில்லையென்றாலும், யூதர்கள் இதை ஏன் சொல்கின்றனர்?

கடவுளுக்கு மட்டுமே உரியது என்று அவர்கள் நம்பும் வல்லமைகளை இயேசு தம்முடையதாகக் கருதுகிறதினால் அவர்கள் அவ்வாறு சொல்கின்றனர் என்பது தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, அவர் அப்போது தான் தம் “ஆடுகளைப்” பற்றி சொல்லும் போது, “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்” என்று சொன்னது, எந்த மனிதனும் செய்யமுடியாத காரியமாயிருக்கிறது. தம் தகப்பனிடமிருந்து வல்லமையைப் பெற்றுக் கொள்வதாக இயேசு ஒப்புக்கொள்ளும் இந்த உண்மையை, யூதர்கள் காணத் தவறுகின்றனர்.

கடவுளுக்குத் தாழ்ந்தவராக தாம் இருப்பதாக இயேசு தம்மை சொல்லிக் கொள்வதை, இவ்வாறு கேட்பதன் மூலம் அவர் காண்பிக்கிறார்: “தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் [சங்கீதம் 82:6-ல்] எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, . . . பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”

அநீதியான மானிட நீதிபதிகளையும்கூட “கடவுட்கள்” (NW) என்று வேதாகமம் அழைப்பதினாலே, “நான் தேவனுடைய குமாரன்” என்று இயேசு கூறியதற்காக என்ன குற்றத்தை இந்த யூதர்கள் இயேசுவிடம் கண்டுபிடிக்க முடியும்? இயேசு கூடுதலாக சொல்கிறார்: “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்.”

இயேசு இதைச் சொல்கிறபோது, யூதர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர் இதற்கு முன்பு கூடாரப் பண்டிகையின் போது செய்தது போலவே இப்போதும் தப்பித்துச் செல்கிறார். அவர் எருசலேமை விட்டு ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் யோவான் முழுக்காட்ட ஆரம்பித்த யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள இடத்துக்குச் செல்கிறார். இந்த இடம் கலிலேய கடலின் தெற்கத்திய கரையிலிருந்து தூரமானதாய் இல்லை, எருசலேமிலிருந்து இரண்டு நாள் பயணமாயிருக்கிறது.

இந்த இடத்தில் அநேக ஜனங்கள் இயேசுவிடம் வந்து இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கின்றனர்: “யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக் குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது.” ஆக, இங்கு அநேகர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். யோவான் 10:22–42; 4:26; 8:23, 58; மத்தேயு 16:20.

▪ என்ன விதத்தில் ஜனங்கள் அவரைக் கிறிஸ்து என்று அடையாளங் கண்டுபிடிக்க இயேசு விரும்புகிறார்?

▪ இயேசுவும் அவருடைய தகப்பனும் எவ்வாறு ஒன்றாயிருக்கிறார்கள்?

▪ இயேசு தம்மை ஒரு கடவுளாக ஆக்கிக்கொள்கிறார் என்று யூதர்கள் ஏன் சொல்கின்றனர்?

▪ அவர் கடவுளுக்குச் சமமாக இருப்பதாக உரிமை பாராட்டிக் கொள்ளவில்லை என்பதை சங்கீதங்களிலிருந்து இயேசுவின் மேற்கோள் எவ்வாறு காட்டுகிறது?