Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு உண்மையில் யார்?

இயேசு உண்மையில் யார்?

அதிகாரம் 59

இயேசு உண்மையில் யார்?

அவருடைய சீஷர்களையும் ஏற்றி வந்த படகு பெத்சாயிதாவை அடைந்தபோது மக்கள் அவரிடத்தில் ஒரு குருடனைக் கொண்டுவந்து, அவனைத் தொட்டுக் குணப்படுத்தும்படி வேண்டிக்கொள்கிறார்கள். இயேசு அவனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துவந்து, அவன் கண்களில் உமிழ்ந்து, “எதையாகிலும் காண்கிறாயா?” என்று கேட்கிறார்.

“நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன்,” என்று பதிலளிக்கிறான் அந்த மனுஷன். அவனுடைய கண்களில் தம்முடைய கைகளை வைத்து, அவன் தெளிவாய்ப் பார்க்கும்படி இயேசு அவனைப் பார்வையடையச் செய்கிறார். பின்பு அவன் நகரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது என்று சொல்லி இயேசு அவனை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.

இயேசு இப்பொழுது தம்முடைய சீஷர்களுடன் பலஸ்தீனாவுக்கு வடக்கு முனையில் அமைந்த பிலிப்புச் செசரியா கிராமத்துக்குப் புறப்படுகிறார். அது கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 1,150 அடிகள் உயரத்தில் அமைந்த அழகிய இடமாகிய பிலிப்புச் செசரியாவுக்குச் செல்லும் ஏறக்குறைய 48 கிலோமீட்டரை உட்படுத்தும் நீண்ட மேட்டுப் பாதையாகும். அது அநேகமாக இரண்டு நாள் பயணத்தை உட்படுத்துகிறது.

வழியில் இயேசு ஜெபம் செய்வதற்குத் தனியே போய்விடுகிறார். தம்முடைய மரணத்துக்கு முன் ஒன்பது அல்லது பத்து மாதங்கள்தான் இருக்கின்றன. அவர் தம்முடைய சீஷர்களைக் குறித்து அக்கறையாயிருக்கிறார். அவரைப் பின்பற்றுவதிலிருந்து பலர் ஏற்கெனவே பின்வாங்கிவிட்டார்கள். மற்றவர்கள் ஒரே குழப்பமும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்றனர். ஏனென்றால் அவரை ராஜாவாக்குவதற்கான மக்களுடைய முயற்சிகளை அவர் நிராகரித்துவிட்டார். மேலும் தம்முடைய ராஜரீகத்தை நிரூபிப்பதற்கு வானத்தில் அடையாளம் காட்டும்படி எதிரிகள் கேட்டு சவாலிட்டபோது, அவர் அதை செய்யவில்லை. அவர் யார் என்பதைக் குறித்து அவருடைய அப்போஸ்தலர்கள் என்ன நம்புகிறார்கள்? அவர் ஜெபித்துக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று இயேசு கேட்கிறார்.

“சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்” என்று பதிலளிக்கிறார்கள். ஆம், இயேசு இவர்களில் ஒருவர், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து வந்திருப்பவர் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

“நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று இயேசு கேட்கிறார்.

“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு உடனடியாக பதிலளிக்கிறான்.

பேதுரு சொன்னதை ஆமோதித்தப்பிறகு இயேசு சொல்லுகிறார்: “நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் [ஹேடீஸின், NW] வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” தாம் ஒரு சபையைக் கட்டுவார் என்றும், பூமியில் அதன் அங்கத்தினர்களுடைய உண்மையான வாழ்வுக்குப் பின்பு அவர்களை மரணம் தன் பிடியில் வைத்திருக்கமாட்டாது என்றும் இயேசு இவ்விடத்தில் முதலாவது அறிவிக்கிறார். பின்பு அவர் பேதுருவிடம் சொல்லுகிறார்: “பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்.”

இப்படியாகப் பேதுரு விசேஷ சிலாக்கியங்களைப் பெறுகிறவன் என்று இயேசு வெளிப்படுத்துகிறார். இல்லை, பேதுரு அப்போஸ்தலர்களுக்குள் முதலிடத்தைப் பெறுகிறவனாகவோ அல்லது சபையின் அஸ்திபாரமாகவோ ஆக்கப்படுவதில்லை. இயேசு தாமே சபை கட்டப்படும் அந்தக் கல்லாக இருக்கிறார். ஆனால் சொல்லப்போனால், பேதுருவுக்கு மூன்று திறவுகோல்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு மக்கள் தொகுதிகள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகள் திறக்கப்படவிருந்தன.

பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே அன்று மனந்திரும்பிய யூதர்களிடம், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் காண்பித்தபோது பேதுரு அந்த முதல் திறவுகோலைப் பயன்படுத்தினான். அதற்கு சற்றே பின்பு, விசுவாசித்த சமாரியர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பைத் திறந்தபோது இரண்டாவது திறவுகோலைப் பயன்படுத்தினான். பின்பு, பொ.ச. 36-ல் விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார், கொர்நேலியுவுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் அதே வாய்ப்பைத் திறந்தபோது அவன் மூன்றாவது திறவுகோலைப் பயன்படுத்தினான்.

இயேசு அப்போஸ்தலரோடு தம்முடைய சம்பாஷணையை தொடருகிறார். தாம் எருசலேமில் சீக்கிரத்திலேயே சந்திக்கப்போகும் தம்முடைய துன்பங்களையும் மரணத்தையும் பற்றி சொல்லுவதன் மூலம் அவர்களை ஏமாற்றமடையச் செய்கிறார். இயேசு பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறியவனாய், பேதுரு, இயேசுவை தனியே அழைத்துச் செல்கிறான். “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்கிறான். இயேசு திரும்பி, “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்கிறார்.

அப்போஸ்தலரைத் தவிர மற்றவர்களும் அவரோடு பயணமாய்ச் செல்கிறார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. எனவேதான் அவர்களை அழைத்து, தம்மைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை விளக்குகிறார். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை [கழுமரத்தை, NW] எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.”

ஆம், இயேசுவின் சீஷர்கள் தம்முடைய தயவுக்குப் பாத்திரராக நிரூபிக்க தைரியமுள்ளவர்களாகவும், சுயதியாகம் செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். அவர் விளக்குகிறார்: “விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார்.” மாற்கு 8:22–38; மத்தேயு 16:13–28; லூக்கா 9:18–27.

▪ இயேசு தம்முடைய சீஷர்கள் பேரில் அக்கறையாயிருப்பதற்குக் காரணம் என்ன?

▪ இயேசு யார் என்பதன் பேரில் மக்களுடைய கருத்து என்ன?

▪ பேதுருவிடம் என்ன திறவுகோல்கள் கொடுக்கப்படுகின்றன? அவை எவ்விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்?

▪ பேதுரு என்ன திருத்தத்தைப் பெறுகிறான்? ஏன்?