Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு எரிகோவில் கற்பிக்கிறார்

இயேசு எரிகோவில் கற்பிக்கிறார்

அதிகாரம் 99

இயேசு எரிகோவில் கற்பிக்கிறார்

விரைவில் இயேசுவும் அவரோடு பயணம் செய்யும் திரள் கூட்டமான ஜனங்களும் எரிகோ வந்து சேருகின்றனர், எருசலேமிலிருந்து ஏறக்குறைய ஒரு நாள் பயண தூரத்தில் இப்பட்டணம் இருக்கிறது. எரிகோ ஓர் இரட்டை நகரம், பழைய யூத நகரம், புதிய ரோம நகரத்திலிருந்து ஏறக்குறைய ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஜனக்கூட்டத்தார் பழைய நகரத்தை விட்டு, புதிய நகரத்தை நெருங்கி வருகையில், இரண்டு பிச்சைக்கார குருடர்கள் சந்தடியைக் கேட்கின்றனர். அவர்களில் ஒருவனுடைய பெயர் பர்திமேயு.

இயேசு அவ்வழியே செல்கிறார் என்பதை கேள்விப்பட்டு பர்திமேயும் அவனுடைய கூட்டாளியும் உரத்த குரலில் கூப்பிடத் தொடங்குகின்றனர்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்.” ஜனக்கூட்டத்தார் அமைதலாயிருக்கும்படி கண்டிப்பாக சொன்ன போது, அவர்கள் இன்னுமதிக உரத்த சப்தத்தோடு கூப்பிடுகின்றனர்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்.”

குழப்பத்தைக் கேட்டு இயேசு நிற்கிறார். கூச்சலிடுகிறவர்களை அழைத்து வருமாறு தம்மோடு இருப்பவர்களிடம் சொல்கிறார். இவர்கள் பிச்சைக்கார குருடர்களிடம் சென்று, அவர்களில் ஒருவனிடத்தில் இவ்வாறு சொல்கின்றனர்: “திடன் கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்.” கட்டுக்கடங்காத உணர்ச்சியூக்கத்தோடு அந்தக் குருடன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு குதித்தெழுந்து இயேசுவிடம் செல்கிறான்.

“நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறீர்கள்” என்று இயேசு கேட்கிறார்.

“ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்க வேண்டும்” என்று இரண்டு குருடர்களும் மன்றாடுகின்றனர்.

இயேசு மனதுருகி அவர்கள் கண்களைத் தொடுகிறார். மாற்குவின் பதிவின்படி, இயேசு அவர்களில் ஒருவனிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” உடனடியாக அந்த இரண்டு பிச்சைக்கார குருடர்களும் பார்வையடைகின்றனர், சந்தேகத்துக்கிடமின்றி இருவரும் கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பிக்கின்றனர். என்ன நடந்தது என்பதை எல்லா ஜனங்களும் கண்டபோது, அவர்களும் கடவுளுக்கு துதி செலுத்துகின்றனர். தாமதமின்றி, பர்திமேயும் அவனுடைய கூட்டாளியும் இயேசுவை பின்பற்ற ஆரம்பிக்கின்றனர்.

இயேசு எரிகோவுக்குள் செல்கையில், ஜனக்கூட்டம் மிகப் பெரியதாயிருக்கிறது. குருடர்களை சுகப்படுத்தியவரை ஒவ்வொருவரும் காண வேண்டுமென்று விரும்புகின்றனர். ஜனங்கள் எல்லாத் திசைகளிலுமிருந்து இயேசுவை நெருக்குகின்றனர், அதன் விளைவாக சிலர் அவரை கணநேரம்கூட பார்க்க முடியவில்லை. அவர்களில் ஒருவன் தான் சகேயு. அவன் எரிகோவிலும், அதைச் சுற்றிலுமுள்ள வரிவசூலிப்பவர்களின் தலைவன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண முடியாதபடி அவன் அதிக குள்ளமானவனாயிருக்கிறான்.

ஆகையால் சகேயு முன்னாக ஓடி, இயேசு செல்லும் வழியே உள்ள ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொள்கிறான். இந்த அனுகூலமான இடத்திலிருந்து, எல்லாவற்றையும் அவன் நன்றாக காண முடியும். ஜனக்கூட்டத்தார் நெருங்கி வருகையில், இயேசு அண்ணாந்து பார்த்து: “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்று சொல்கிறார். சகேயு சந்தோஷத்தோடே இறங்கி தன்னுடைய புகழ்பெற்ற விருந்தாளிக்கு காரியங்களை தயார் செய்வதற்கு வீட்டுக்கு விரைவாக செல்கிறான்.

என்றபோதிலும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணும் போது, ஜனங்கள் எல்லாரும் முறுமுறுக்கத் தொடங்குகின்றனர். அப்பேர்ப்பட்ட ஒரு மனிதனின் விருந்தினராக இயேசு இருக்கப் போவதை சரியற்றதாக அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் தன் வரி வசூலிக்கும் தொழிலில் நேர்மையற்ற விதத்தில் பணத்தை அச்சுறுத்தி பெறுவதன் மூலம் சகேயு செல்வந்தனாக ஆனவன்.

அநேக ஜனங்கள் பின்தொடருகின்றனர், இயேசு சகேயுவின் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் குறை கூறுகின்றனர்: “இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்.” என்றபோதிலும் மனந்திரும்புவதற்கான சாத்தியம் சகேயுவில் இருப்பதை இயேசு காண்கிறார். இதில் இயேசு ஏமாற்றமடையவில்லை, ஏனென்றால் சகேயு எழுந்து நின்று இவ்வாறு அறிவிக்கிறான்: “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்.”

தன் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலமும் தான் ஏமாற்றினவர்களுக்கு திரும்ப பணம் செலுத்துவதற்கு மற்றொரு பாதியை உபயோகிப்பதன் மூலமும் சகேயு தன் மனந்திரும்புதல் உண்மையானது என்பதை நிரூபிக்கிறான். தன்னுடைய வரி பதிவுகளிலிருந்து இப்பேர்ப்பட்ட நபர்களுக்கு அவன் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அவன் கணக்கிடலாம். ‘ஒருவன் ஓர் ஆட்டைத் திருடினால், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளை பதிலாகக் கொடுக்கக்கடவன்’ என்று கடவுளுடைய சட்டம் சொல்வதற்கு இசைவாக அவன் நான்கு மடங்காக திரும்பச் செலுத்துவதாக உறுதி கூறுகிறான்.

சகேயு தன் உடைமைகளை பங்கிட்டுக் கொடுக்கப் போகும் விதத்தைக் குறித்து இயேசு மகிழ்ச்சியடைகிறார், அவர் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.”

சமீபத்தில், இயேசு கெட்ட குமாரனைப் பற்றிய தம் கதையின் மூலம் ‘இழந்து’ போனவர்களின் நிலைமையை சிறப்பித்துக் காட்டினார். இழந்து போன ஒருவன் காணப்பட்டதைப் பற்றிய உண்மை-வாழ்க்கை உதாரணம் இப்போது நமக்கு இருக்கிறது. மதத் தலைவர்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும் முணுமுணுத்து, சகேயுவைப் போன்ற ஆட்களிடமாக இயேசு காட்டிய கவனத்தை பற்றி குறைகூறினாலும், இழந்து போன ஆபிரகாமின் குமாரர்களைத் தேடி, திரும்பவும் நிலைநிறுத்துவதற்காக இயேசு தொடர்ந்து முயற்சி செய்கிறார். மத்தேயு 20:29–34; மாற்கு 10:46–52; லூக்கா 18:35–19:10; யாத்திராகமம் 22:1.

▪ பிச்சைக்கார குருடர்களை இயேசு எங்கே சந்திக்கிறார், அவர்களுக்காக அவர் என்ன செய்கிறார்?

▪ சகேயு யார், அவன் ஏன் ஒரு மரத்தில் ஏறிக்கொள்கிறான்?

▪ சகேயு தன் மனந்திரும்புதலை எவ்வாறு நிரூபிக்கிறான்?

▪ இயேசு சகேயுவை நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?