Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு ஏன் பூமிக்கு வந்தார்

இயேசு ஏன் பூமிக்கு வந்தார்

அதிகாரம் 24

இயேசு ஏன் பூமிக்கு வந்தார்

இயேசு தம்முடைய நான்கு சீஷர்களோடு கப்பர்நகூமில் கழித்த நாள் அதிக சுறுசுறுப்பானதாக இருக்கிறது, கப்பர்நகூம் மக்கள் சாயங்காலமான போது சுகம் பெறுவதற்காகத் தங்களுடைய நோயாளிகள் எல்லாரையும் அவரிடம் கொண்டு வந்ததோடு முடிவடைகிறது. தனித்து இருப்பதற்கு அவருக்கு நேரமில்லை.

இப்பொழுது அடுத்த நாள் விடியற்காலை. வானம் இன்னும் வெளுக்காமலிருக்க, இயேசு எழுந்து தனிமையாக வெளியே செல்கிறார். தம்முடைய தகப்பனிடம் தனிமையிலிருந்து ஜெபிப்பதற்காக ஒரு தனி இடம் தேடிச் செல்கிறார். ஆனால் இயேசு தனிமையை விரும்பிய அந்த நேரம் குறுகிவிட்டது, ஏனெனில் அவர் தங்களோடு இல்லை என்பதை அறிந்த பேதுருவும் மற்றவர்களும் அவரைத் தேடுவதற்குப் புறப்படுகிறார்கள்.

அவர்கள் இயேசுவைக் கண்டவுடன் பேதுரு அவரிடம், “உம்மை எல்லாரும் தேடுகிறார்கள்” என்று சொல்லுகிறான். இயேசு தங்களோடு தங்கியிருக்க வேண்டும் என்று கப்பர்நகூம் மக்கள் விரும்புகிறார்கள். அவர் அவர்களுக்காக செய்த காரியங்களை உண்மையிலேயே அவர்கள் போற்றுகிறார்கள்! ஆனால் இப்பேர்ப்பட்ட அற்புத சுகமளிப்பதற்காகவா இயேசு முக்கியமாக பூமிக்கு வந்தார்? இதைக் குறித்து அவர் என்ன சொல்லுகிறார்?

பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு விவரப் பதிவின்படி இயேசு தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன்.” அவர் தங்களோடு தங்கவேண்டும் என்று அந்த மக்கள் அவரை வற்புறுத்தியபோதிலும் அவர் சொல்கிறார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.”

ஆம், தம்முடைய பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்துவதோடு மனிதர் அனுபவிக்கும் கேடுகள் அனைத்தையும் நிரந்தரமாக தீர்த்து வைக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவே இயேசு பூமிக்கு வந்தார். என்றபோதிலும் அவர் கடவுளால் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவர் அற்புத சுகமளிப்புகளைச் செய்கிறார். இதேவிதமாகவே மோசே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தான் கடவுளுடைய ஊழியன் என்பதற்கான அத்தாட்சியை நிலைநாட்டும் வகையில் அற்புதங்களை நடப்பித்தான்.

இப்பொழுது இயேசு கப்பர்நகூமை விட்டு மற்ற பட்டணங்களுக்குச் சென்று பிரசங்கிக்க புறப்படுகிறார். அவருடைய நான்கு சீஷர்களும் அவரோடுகூட செல்கிறார்கள். பேதுருவும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவும், யோவானும் அவனுடைய சகோதரனாகிய யாக்கோபும் அந்த நான்கு பேர் ஆவர். ஒரு வாரத்திற்கு முன்புதான் அவர்கள் இயேசுவோடுகூட அவருடைய முதல் பயண உடன் ஊழியர்களாக இருக்க அழைக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கலிலேயாவில் இயேசுவின் பிரசங்க ஊழிய பயணம் ஓர் ஆச்சரியமான வெற்றி! உண்மையில், அவருடைய செயல்கள் குறித்த அறிக்கை சீரியா முழுவதும் பரவுகிறது. கலிலேயா, யூதேயா மற்றும் யோர்தானுக்கு அப்புறமிருந்தும் திரளான மக்கள் கூட்டம் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் பின்பற்றுகிறது. மாற்கு 1:35-39; லூக்கா 4:42, 43; மத்தேயு 4:23-25; யாத்திராகமம் 4:1-9, 30, 31.

▪ கப்பர்நகூமில் இயேசு கழித்த சுறுசுறுப்பான நாளுக்கு மறுநாள் காலையில் என்ன நடக்கிறது?

▪ இயேசு ஏன் பூமிக்கு அனுப்பப்பட்டார்? அவருடைய அற்புதங்கள் என்ன நோக்கத்தை நிறைவேற்றின?

▪ கலிலேய பிரசங்க பயணத்தில் இயேசுவோடு செல்வது யார்? இயேசுவின் செயல்களுக்கு என்ன பிரதிபலிப்பு இருக்கிறது?