Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு தம் எதிரிகளை வெளிப்படையாகக் கண்டனம் செய்கிறார்

இயேசு தம் எதிரிகளை வெளிப்படையாகக் கண்டனம் செய்கிறார்

அதிகாரம் 109

இயேசு தம் எதிரிகளை வெளிப்படையாகக் கண்டனம் செய்கிறார்

இயேசு தம் மத எதிரிகளை அவ்வளவு முழுமையாக தோல்வியடையச் செய்ததனால், அவர்கள் அவரிடம் இன்னுமதிகமாக காரியங்களைக் கேட்க பயப்படுகின்றனர். ஆகையால் அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துவதற்கு அவர் முதற்படி எடுக்கிறார். “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்?” என்று அவர் கேட்கிறார்.

“தாவீதின் குமாரன்” என்று பரிசேயர்கள் பதிலளிக்கின்றனர்.

கிறிஸ்து அல்லது மேசியாவின் சரீரப்பிரகாரமான முற்பிதா தாவீது என்பதை இயேசு மறுதலிக்காவிட்டாலும், அவர் இவ்வாறு கேட்கிறார்: “அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே [சங்கீதம் 110-ல்] அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் [யெகோவா, NW] என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி.”

பரிசேயர்கள் பேசாமலிருக்கின்றனர், ஏனென்றால் கிறிஸ்து அல்லது அபிஷேகம் பண்ணப்பட்டவரின் உண்மையான அடையாளம் அவர்களுக்குத் தெரியாது. பரிசேயர்கள் வெளிப்படையாக நம்புவது போல், மேசியா வெறுமென தாவீதின் ஒரு மானிட மரபுவழியில் மட்டும் வந்தவரல்ல, ஆனால் அவர் பரலோகத்தில் இருந்தவர், மேலும் அவர் தாவீதின் தலைவராக அல்லது ஆண்டவராக இருந்தார்.

இயேசு ஜனக்கூட்டத்தினிடமும், தம்முடைய சீஷர்களிடமும் இப்போது திரும்பி, வேதபாரகர் மற்றும் பரிசேயர்களைப் பற்றி எச்சரிக்கிறார். இவர்கள் கடவுளுடைய சட்டத்தை போதிப்பதனாலும், “மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்து” இருப்பதினாலும் இயேசு இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்.” மேலும் அவர் சொல்வதாவது: “அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.”

அவர்கள் மாய்மாலக்காரர்கள், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பரிசேயனுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் செய்தது போலவே இப்போதும் அவர் அதேவிதமான வார்த்தைகளால் அவர்களை கண்டனம் செய்கிறார். “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்,” என்று அவர் சொல்கிறார். அவர் அதற்கு உதாரணங்களை கொடுக்கிறார்:

“[வேதாகமம்-அடங்கிய, NW] தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்குகின்றனர்.” நெற்றியிலோ அல்லது கையிலோ அணியப்பட்ட இந்தச் சிறிய பெட்டிகள் சட்டத்தின் நான்கு பகுதிகளை கொண்டதாயிருக்கிறது: யாத்திராகமம் 13:1–10, 11–16; மற்றும் உபாகமம் 6:4–9; 11:13–21. ஆனால் பரிசேயர்கள் சட்டத்தைக் குறித்து தாங்கள் வைராக்கியமுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்ற எண்ணத்தைக் கொடுப்பதற்கு இந்தப் பெட்டிகளின் அளவை அதிகரிக்கின்றனர்.

அவர்கள் “தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்குகின்றனர்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். எண்ணாகமம் 15:38–40-ல் இஸ்ரவேலர்கள் தங்கள் வஸ்திரங்களில் தொங்கல்களை உண்டாக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றனர், ஆனால் பரிசேயர்கள் மற்ற எவரைக் காட்டிலும் தங்கள் தொங்கல்களை பெரிதாக ஆக்குகின்றனர். எல்லாக் காரியங்களும் வெளித் தோற்றத்துக்காகவே செய்யப்படுகின்றன! ‘அவர்கள் முதன்மையான இடங்களை விரும்புகிறார்கள்’ என்று இயேசு அறிவிக்கிறார்.

விசனகரமாக முதன்மையானவர்களாக கருதப்பட வேண்டும் என்ற இந்த விருப்பத்தால் அவருடைய சொந்த சீஷர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகையால் அவர் இவ்வாறு புத்திமதி கொடுக்கிறார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.” முதல் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை சீஷர்கள் விட்டுவிட வேண்டும்! “உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்று இயேசு அறிவுறுத்துகிறார்.

அடுத்து அவர் வேதபாரகர் மற்றும் பரிசேயர்கள் மேல் சாபங்களை வரிசையாக உரைக்கிறார். அவர்களை திரும்பத் திரும்ப மாயக்காரர் என்று அழைக்கிறார். “மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்” என்றும், “பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள்” என்றும் அவர் சொல்கிறார்.

“குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ” என்று இயேசு சொல்கிறார். அவர்கள் மனவிருப்பப்படி செய்யும் பட்சபாத பாகுபாடுகளால் தெளிவாக காண்பிக்கப்படுகிறபடி ஆவிக்குரிய மதிப்பீடுகள் பரிசேயர்களிடம் இல்லாமல் இருப்பதைக் குறித்து அவர் கண்டனம் செய்கிறார். உதாரணமாக, ‘எவனாகிலும் தேவாலயத்தின் பேரில் சத்தியம் பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின் பேரில் சத்தியம் பண்ணினால் அவன் கடனாளியென்றும்’ அவர்கள் சொல்லுகின்றனர். அந்த வணக்கத்துக்குரிய இடத்தின் ஆவிக்குரிய மதிப்பைக் காட்டிலும் ஆலயத்தின் பொன்னின் பேரில் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் ஒழுக்கநெறி சம்பந்தமான குருட்டுத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

“நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்” புறக்கணித்து, முக்கியத்துவம் இல்லாத பூண்டுகளின் தசமபாகத்தை செலுத்துவதற்கு அதிக கவனம் கொடுப்பதைப் பற்றி இயேசு பரிசேயர்களை முன்பு செய்தது போலவே கண்டனம் செய்கிறார்.

“குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.” என்று இயேசு பரிசேயர்களை அழைக்கிறார். அவர்கள் தங்கள் திராட்சரசத்திலிருந்து ஒரு கொசுவை, அது வெறுமென ஒரு பூச்சி என்பதற்காக அல்ல, ஆனால் அது சடங்காச்சாரப்படி அசுத்தமாயிருப்பதால் வடிகட்டுகின்றனர். ஆயினும் நியாயப்பிரமாணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை புறக்கணிப்பது, சடங்காச்சாரப்படி அசுத்தமான மிருகமான ஓர் ஒட்டகத்தை விழுங்குவதற்கு ஒப்பாயிருக்கிறது. மத்தேயு 22:41–23:24; மாற்கு 12:35–40; லூக்கா 20:41–47; லேவியராகமம் 11:4, 21–24.

சங்கீதம் 110-ல் தாவீது சொன்னதைப் பற்றி இயேசு பரிசேயர்களிடம் கேள்விகேட்டபோது அவர்கள் ஏன் பேசாமல் இருக்கின்றனர்?

▪ பரிசேயர்கள் தங்கள் வேதாகமம்–அடங்கிய பெட்டிகளையும் தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களையும் ஏன் பெரிதாக்குகின்றனர்?

▪ இயேசு தம் சீஷர்களுக்கு என்ன புத்திமதி கொடுக்கிறார்?

▪ தெளிவாக காணப்படும் என்ன பாகுபாடுகளை பரிசேயர்கள் செய்கின்றனர், முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை புறக்கணிப்பதற்காக இயேசு எவ்வாறு அவர்களை கண்டனம் செய்கிறார்?