Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு மறுபடியும் எருசலேமை நோக்கிச் செல்கிறார்

இயேசு மறுபடியும் எருசலேமை நோக்கிச் செல்கிறார்

அதிகாரம் 82

இயேசு மறுபடியும் எருசலேமை நோக்கிச் செல்கிறார்

இயேசு மறுபடியும் கிராமங்கள் தோறும் பட்டணங்கள் தோறும் கற்பித்துக் கொண்டே செல்கிறார். யூதேயாவிலிருந்து யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள பெரேயா மாவட்டத்தில் அவர் இருக்கிறார். ஆனால் அவர் போய் சேர வேண்டிய இடம் எருசலேம்.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆட்கள் மட்டுமே இரட்சிப்படைவதற்கு தகுதியானவர்கள் என்ற யூதேய தத்துவம், இவ்வாறு கேட்பதற்கு ஒரு மனிதனை தூண்டுகிறது: “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சில பேர் தானோ?” இரட்சிக்கப்படுவதற்கு தேவையானது என்ன என்பதை ஜனங்களைச் சிந்திக்க வைப்பதற்கு தம் பதிலைக் கொண்டு இயேசு இவ்வாறு சொல்கிறார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்க [மும்முரமாய்ப், NW] பிரயாசப்படுங்கள் [அதாவது போராடு அல்லது கடுமுயற்சி செய்].”

அப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பான முயற்சி உடனடியாகத் தேவைப்படுகிறது, ஏனென்றால் இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற் போகும்.” அவர்களால் ஏன் கூடாமற் போகும்? வீட்டுக்காரர் எழுந்து கதவைப் பூட்டின பின்பு, “ஆண்டவரே, எங்களுக்குத் திறக்க வேண்டு”மென்று சொல்லி ஜனங்கள் வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டும் போது, அவர் பிரதியுத்தரமாக: “நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்று போங்கள்.”

கதவைப் பூட்டின பின்பு வெளியே நிற்பவர்கள், தங்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும் ஒரு நேரத்தில் வருகின்றனர். ஆனால் அதற்குள் வாய்ப்பின் கதவு மூடப்பட்டு, பூட்டப்படுகிறது. அவ்வாறு செல்வதற்கு அப்போது வசதியாய் இல்லாமல் இருந்திருந்தாலும் உள்ளே செல்வதற்கு அவர்கள் முன்பே வந்திருக்க வேண்டும். யெகோவாவின் வணக்கத்தை தங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக ஆக்கிக் கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்பவர்களுக்கு உண்மையிலேயே ஒரு விசனகரமான முடிவு காத்திருக்கிறது!

இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள தங்களுக்கிருந்த மகத்தான வாய்ப்பை பற்றிக்கொள்ள பெருமளவில் தவறிய யூத ஜனங்களுக்கு ஊழியம் செய்யவே இயேசு அனுப்பப்பட்டார். ஆகையால் அவர்கள் வெளியே தள்ளப்படும் போது, அழுது பற்கடித்துக் கொள்வார்கள் என்று இயேசு சொல்கிறார். மறுபட்சத்தில், “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து,” ஆம், எல்லா தேசங்களிலுமிருந்து வந்து, “தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.”

இயேசு தொடர்ந்து சொல்கிறார்: ‘அப்பொழுது பிந்தினோர் [இழிவாகக் கருதப்பட்ட யூதரல்லாதவர்களும், ஒடுக்கப்பட்ட யூதர்களும்] முந்தினோராவார்கள், முந்தினோர் [பொருள் சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும் ஆதரவு பெற்ற யூதர்கள்] பிந்தினோராவார்கள்.’ சோம்பலான, நன்றியற்ற ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் இருக்கவே மாட்டார்கள் என்பது பிந்தினோராவர் என்பதன் அர்த்தம்.

பரிசேயர்கள் இப்பொழுது இயேசுவிடம் வந்து சொல்கின்றனர்: “நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது [அந்திப்பா] உம்மைக் கொலை செய்ய மனதாய் இருக்கிறான்.” இயேசுவை அந்தப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஏரோது தானே இந்த வதந்தியை ஒருவேளை ஆரம்பித்திருக்கலாம். யோவான் ஸ்நானன் கொலை செய்யப்படுவதில் தான் உட்பட்டிருந்தது போல, மற்றொரு கடவுளின் தீர்க்கதரிசியின் மரணத்திலும் உட்பட ஏரோது ஒருவேளை பயந்திருக்கலாம். ஆனால் இயேசு பரிசேயர்களிடம் சொல்கிறார்: “நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி மூன்றாம் நாளில் நிறைவடைவேன் . . . யென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.”

தம் வேலை அங்கு முடிந்த பிறகு, இயேசு எருசலேமை நோக்கி தம் பயணத்தை தொடருகிறார். ஏனென்றால் அவர் விளக்குகிறது போல், “எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்து போகிறதில்லை.” இயேசு எருசலேமில் கொல்லப்படுவார் என்று ஏன் எதிர்பார்க்கப்பட வேண்டும்? ஏனென்றால் எருசலேம் தலைநகரமாயிருக்கிறது, அங்கு தான் 71 அங்கத்தினர்கள் அடங்கிய ஆலோசனை சங்க உயர் நீதிமன்றம் இருக்கிறது. மேலும் மிருக பலிகள் அங்குதான் செலுத்தப்படுகின்றன. ஆகையால், “தேவ ஆட்டுக்குட்டி” எருசலேமில் அல்லாமல் வேறெங்கும் கொல்லப்படுவது ஒத்துக் கொள்ளப்படக் கூடாததாயிருக்கிறது.

“எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள் ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்.” கடவுளுடைய குமாரனை ஏற்றுக் கொள்ள மறுத்ததினாலே அந்தத் தேசம் அழிவுக்குரியதாக தீர்க்கப்பட்டது.

இயேசு எருசலேமை நோக்கி தொடர்ந்து செல்கையில், ஒரு பரிசேயர்களின் தலைவன் வீட்டுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அது ஓய்வுநாளாயிருந்தது, ஜனங்கள் அவரை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், கைகளிலும் கால்களிலும் நீர் தேங்கியிருந்த நீர்க்கோவை என்னும் வியாதியால் கஷ்டப்படும் ஒரு மனிதன் அங்கே இருக்கிறான். இயேசு அங்கிருந்த பரிசேயர்களையும் சட்ட வல்லுநர்களையும் இவ்வாறு கேட்கிறார்: “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா?”

ஒருவரும் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. ஆகையால் இயேசு அந்த மனிதனை சுகப்படுத்தி அனுப்பி விடுகிறார். பின்பு அவர் கேட்கிறார்: “உங்களில் ஒருவனுடைய கழுதையாவது [மகனாவது, NW] எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ?” மறுபடியும் அதற்கு ஒருவரும் ஒரு வார்த்தைக்கூட பதில் சொல்லவில்லை. லூக்கா 13:22–14:6; யோவான் 1:29.

▪ இரட்சிப்புக்கு தேவையானது என்ன என்பதை இயேசு காண்பிக்கிறார், அநேகர் ஏன் வெளியே விடப்பட்டு பூட்டப்படுகின்றனர்?

▪ “பிந்தினோர்” முந்தினோராயும் “முந்தினோர்” பிந்தினோராயும் ஆவது யார்?

▪ ஏரோது இயேசுவை கொலை செய்ய விரும்புகிறான் என்று ஏன் சொல்லப்பட்டது?

▪ எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசி அழிக்கப்படுவது ஏன் ஒப்புக்கொள்ளமுடியாததாக இருக்கிறது?