Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு 70 பேரை வெளியே அனுப்புகிறார்

இயேசு 70 பேரை வெளியே அனுப்புகிறார்

அதிகாரம் 72

இயேசு 70 பேரை வெளியே அனுப்புகிறார்

அது பொ.ச. 32-ன் இலையுதிர்க் காலம். இயேசு முழுக்காட்டுதல் பெற்றதிலிருந்து முழு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவரும் அவருடைய சீஷர்களும் சமீபத்தில் எருசலேமில் நடந்த கூடாரப் பண்டிகைக்கு ஆஜராயிருந்தனர், ஆகையால் அவர்கள் இன்னும் அதற்கு அருகாமையில் தான் இருக்கின்றனர். உண்மையில் இயேசு தம்முடைய ஊழியத்தின் மீதியான ஆறு மாதங்களை யூதேயாவில் அல்லது யோர்தான் நதியைக் கடந்த பெரேயா மாவட்டத்தில் அதிகமாக செலவழிக்கிறார். இந்தப் பிராந்தியமும் செய்து முடிக்கப்பட வேண்டும்.

பொ.ச. 30-ம் ஆண்டின் பஸ்காவுக்குப் பிறகு, இயேசு ஏறக்குறைய எட்டு மாதங்கள் யூதேயாவில் பிரசங்கித்தார் என்பது உண்மையே. ஆனால் பொ.ச. 31-ம் ஆண்டு பஸ்காவின் போது யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்த பிறகு, ஒன்றரை வருடங்கள் கலிலேயாவில் மட்டுமே போதிப்பதில் செலவழித்தார். அந்தச் சமயத்தின் போது, இதற்கு முன் கொண்டிராத ஒரு பெரிய, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பிரசங்கிப்பாளர்களாலான ஓர் அமைப்பை அவர் உருவாக்கினார். ஆகையால் அவர் இப்பொழுது யூதேயாவில் ஒரு கடைசி தீவிரமான சாட்சி கொடுக்கும் வேலையை ஆரம்பிக்கிறார்.

இயேசு இந்த வேலையின் ஆரம்பமாக 70 சீஷர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்புகிறார். ஆக, மொத்தமாக பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் 35 குழுக்கள் இருக்கின்றன. அப்போஸ்தலர்களோடு சேர்ந்து இயேசு செல்வதற்கு திட்டமிட்டிருக்கும் ஒவ்வொரு நகரத்துக்குள்ளும், இடத்துக்குள்ளும் இவர்கள் முன்னே செல்கின்றனர்.

அந்த 70 பேரை ஜெப ஆலயத்துக்குச் செல்லும்படி வழி காண்பிக்காமல், தனிப்பட்ட வீடுகளுக்குச் செல்லுமாறு இயேசு சொல்கிறார்: “ஒரு வீட்டில் பிரவேசிக்கிற போது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும்.” அவர்களுடைய செய்தி என்னவாயிருக்க வேண்டும்? “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்” என்று இயேசு சொல்கிறார். அந்த 70 பேரின் வேலைகளைப் பற்றி மாத்யு ஹென்றியின் விளக்கவுரை அறிக்கை செய்கிறது: “எங்கெல்லாம் அவர்கள் சென்றார்களோ, அங்கெல்லாம் தங்களுடைய எஜமானைப் போல அவர்கள் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தனர்.”

ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு, கலிலேயாவில் பிரசங்கிக்கும்படி 12 பேரை அவர் அனுப்பின போது கொடுத்த அறிவுரைகள், இயேசு இந்த 70 பேருக்கு கொடுக்கும் அறிவுரைகளுக்கு ஒத்ததாக இருக்கின்றன. அவர்கள் எதிர்ப்பட வேண்டிய எதிர்ப்பைப் பற்றி எச்சரித்து வீட்டுக்காரர்களுக்குச் செய்தியை அளிக்க அவர்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வியாதியாயிருப்பவர்களை சுகப்படுத்தும் வல்லமையையும் அவர்களுக்கு அளிக்கிறார். அதற்குப் பின் சீக்கிரத்தில் இயேசு வந்து சேரும் போது, இப்பேர்ப்பட்ட அற்புதமான காரியங்களைச் செய்யும் சீஷர்களின் எஜமானை சந்திக்க இதன் மூலம் அநேகர் ஆவலுள்ளவர்களாய் இருப்பர்.

இந்த 70 பேரால் செய்யப்பட்ட பிரசங்கிப்பு வேலையும், அதைத் தொடர்ந்து செய்த இயேசுவின் வேலையும் சிறிது காலத்துக்குத் தான் நிலைத்திருக்கின்றன. சீக்கிரத்தில் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் 35 குழுக்கள் இயேசுவிடம் திரும்பி வர ஆரம்பிக்கின்றனர். “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” என்று அவர்கள் சந்தோஷத்தோடே சொல்கின்றனர். அப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த ஊழிய அறிக்கை நிச்சயமாக இயேசுவை கிளர்ச்சியடையச் செய்கிறது, ஏனென்றால் அவர் பிரதிபலிக்கிறார்: “சாத்தான் மின்னலைப் போல் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க . . . உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்.”

முடிவின் காலத்தின் போது கடவுளுடைய ராஜ்யம் பிறந்த பிறகு, சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவார்கள் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது இந்தக் காணக்கூடாத பிசாசுகளை வெறும் மானிடர்கள் அகற்றுவது, வரப்போகும் அந்த நிகழ்ச்சிக்கு கூடுதலான நிச்சயம் அளிப்பதாக சேவிக்கிறது. ஆகையால், எதிர்காலத்தில் பரலோகத்திலிருந்து சாத்தான் தள்ளப்படுவது ஒரு முழுமையான நிச்சயமாய் இருப்பதாக இயேசு பேசுகிறார். எனவே, அடையாள அர்த்தத்தில் அந்த 70 பேர் சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிப்பதற்கு வல்லமை கொடுக்கப்படுகின்றனர். என்றபோதிலும் இயேசு சொல்கிறார்: “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.”

தம்முடைய தாழ்மையான ஊழியர்களை இப்பேர்ப்பட்ட வல்லமையான விதத்தில் உபயோகிப்பதற்காக இயேசு களிகூர்ந்து தம்முடைய தகப்பனை பகிரங்கமாக துதிக்கிறார். தம்முடைய சீஷர்களிடமாகத் திரும்பி, அவர் சொல்கிறார்: “நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளை காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” லூக்கா 10:1–24; மத்தேயு 10:1–42; வெளிப்படுத்துதல் 12:7–12.

▪ தம்முடைய ஊழியத்தின் முதல் மூன்று ஆண்டுகளின் போது இயேசு எங்கே பிரசங்கிக்கிறார், தம்முடைய கடைசி ஆறு மாதங்களில் எந்தப் பிராந்தியத்தை அவர் செய்து முடிக்கிறார்?

▪ ஜனங்களை கண்டுபிடிப்பதற்கு அந்த 70 பேரை இயேசு எங்கே வழிகாட்டுகிறார்?

▪ பரலோகத்திலிருந்து சாத்தான் ஏற்கெனவே விழுந்துவிட்டதை தாம் கண்டதாக இயேசு ஏன் சொல்கிறார்?

▪ என்ன அர்த்தத்தில் அந்த 70 பேர் சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்க முடியும்?