Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரக்கம் காட்ட யூதேயாவுக்குள் பயணம்

இரக்கம் காட்ட யூதேயாவுக்குள் பயணம்

அதிகாரம் 89

இரக்கம் காட்ட யூதேயாவுக்குள் பயணம்

சில வாரங்களுக்கு முன்பு எருசலேமில் பிரதிஷ்டை பண்டிகையின் போது யூதர்கள் இயேசுவை கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆகையால் அவர் வடதிசை நோக்கி கலிலேயக் கடலுக்கு சமீபமான இடத்துக்கு பிரயாணம் செய்தார்.

சமீப காலங்களில் அவர் தெற்கு பக்கமாக மறுபடியும் எருசலேமை நோக்கி சென்று கொண்டிருக்கிறார், யோர்தான் நதிக்கு கிழக்கே உள்ள பெரேயா மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களில் பிரசங்கித்துக் கொண்டே செல்கிறார். ஐசுவரியவான் மற்றும் லாசருவைப் பற்றிய உவமையை சொன்ன பின்பு, தம் சீஷர்களுக்கு இதற்கு முன்பு கலிலேயாவில் இருக்கையில் கற்றுக் கொடுத்த காரியங்களை தொடர்ந்து கற்பிக்கிறார்.

உதாரணமாக அவர் சொல்கிறார், கடவுளுடைய “சிறுவரில்” ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும் “அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது” அவனுக்கு அதிக நலமாயிருக்கும். மன்னிக்க வேண்டியதன் தேவையையும்கூட அவர் அழுத்திக் காட்டுகிறார். “அவன் [ஒரு சகோதரன்] ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்று விளக்குகிறார்.

“எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும்” என்று சீஷர்கள் கேட்டுக் கொண்ட போது, இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்தி மரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.” ஆகையால் சிறிதளவு விசுவாசம்கூட பெரிய காரியங்களை சாதிக்க முடியும்.

அடுத்து, இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளுடைய ஊழியனின் சரியான மனநிலையை எடுத்துக் காட்டும் வாழ்க்கையில் உண்மையாக இருக்கும் ஒரு சூழ்நிலைமையைப் பற்றிச் சொல்கிறார். “உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டு வா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரை கட்டிக் கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ் செய், அதற்குப் பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ் செய்வானோ? அப்படிச் செய்ய மாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.” ஆகையால், கடவுளுடைய ஊழியர்கள் அவரை சேவிப்பதன் மூலம் தாங்கள் கடவுளுக்கு ஓர் உதவி செய்வதாக ஒருபோதும் எண்ணக்கூடாது. மாறாக, அவருடைய நம்பகமான வீட்டு அங்கத்தினர்களாக அவரை வணங்குவதற்கு தாங்கள் கொண்டிருக்கும் சிலாக்கியத்தை எப்போதும் அவர்கள் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

இந்த உவமையை இயேசு கொடுத்து சிறிது நேரத்துக்குப் பின்பு ஒரு தகவல் அறிவிப்பவன் வந்துசேருகிறான். யூதேயாவில் உள்ள பெத்தானியாவில் வாழும் லாசருவின் சகோதரிகளாகிய மரியாள் மற்றும் மார்த்தாளால் அவன் அனுப்பப்பட்டிருக்கிறான். “ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று தகவல் அறிவிப்பவன் சொல்கிறான்.

இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்.” அவர் இருக்கும் இடத்திலேயே இரண்டு நாட்கள் தங்கிய பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்.” என்றபோதிலும் அவர்கள் அவருக்கு ஞாபகப்படுத்துகின்றனர்: “ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?”

“பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?,” என்று இயேசு அதற்கு பிரதியுத்தரமாக கேட்கிறார். “ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்.”

‘பகல்–வெளிச்ச மணிநேரங்கள்’ அல்லது இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்துக்காக கடவுள் ஒதுக்கியிருக்கும் காலம் இன்னும் கடந்துவிடவில்லை, அந்தக் காலம் முடியும் வரை ஒருவரும் அவருக்கு தீங்கிழைக்க முடியாது. அவருக்காக விடப்பட்டிருக்கும் குறுகிய ‘பகல் வெளிச்சத்தை’ அவர் முழுமையாக உபயோகிக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஏனெனில் அதற்குப் பின்பு “இரவு” வரும், அப்போது அவருடைய விரோதிகள் அவரை கொலை செய்திருப்பார்கள்.

இயேசு கூடுதலாக சொல்கிறார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன்.”

லாசரு உறக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் அவன் அதிலிருந்து நல்ல உடல் நலம் மீண்டும் பெறுவான் என்பதற்கு உறுதியான அடையாளம் என்று சீஷர்கள் நினைத்து இவ்வாறு பிரதிபலிக்கின்றனர்: “ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான்.”

பின்பு இயேசு அவர்களிடம் வெளிப்படையாய்ச் சொல்கிறார்: “லாசரு மரித்துப் போனான் . . . நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள்.”

இயேசு யூதேயாவில் கொல்லப்படலாம் என்பதை உணர்ந்தும், அவருக்கு ஆதரவு கொடுக்க விரும்பும் தோமா தன் சக சீஷர்களை உற்சாகப்படுத்துகிறான்: “அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்.” தங்கள் உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்தி, சீஷர்கள் இரக்கம் காட்ட யூதேயாவுக்குள் பயணம் செய்யும் இயேசுவுடன் செல்லுகின்றனர். லூக்கா 13:22; 17:1–10; யோவான் 10:22, 31, 40–42; 11:1–16.

▪ சமீபத்தில் இயேசு எங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தார்?

▪ என்ன போதனைகளை இயேசு மறுபடியும் சொல்கிறார், என்ன குறிப்பை விளக்குவதற்கு, வாழ்க்கையில் உண்மையாக இருக்கும் என்ன சூழ்நிலைமையை அவர் விவரிக்கிறார்?

▪ இயேசு என்ன செய்தியை பெற்றுக்கொள்கிறார், ‘பகல் வெளிச்சம்,’ “இரவு” ஆகியவற்றால் அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?

▪ “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” என்று தோமா சொல்லும் போது, அவன் எதை அர்த்தப்படுத்துகிறான்?