Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுதல் நம்பிக்கை

உயிர்த்தெழுதல் நம்பிக்கை

அதிகாரம் 90

உயிர்த்தெழுதல் நம்பிக்கை

எருசலேமிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெத்தானியா என்ற கிராமத்தின் எல்லைக்கு இயேசு கடைசியாக வந்து சேருகிறார். லாசருவின் மரணமும் அடக்கமும் முடிந்து சில நாட்களே ஆகின்றன. அவனுடைய சகோதரிகளாகிய மரியாளும், மார்த்தாளும் இன்னும் துயரத்தில் இருக்கின்றனர், அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு அநேகர் அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.

அவர்கள் துக்கித்துக் கொண்டிருக்கையில், இயேசு வழியில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை யாரோ ஒருவர் மார்த்தாளுக்கு தெரிவிக்கிறார். ஆகையால் அவள் வீட்டைவிட்டு அவரை சந்திப்பதற்காக அவசரமாகச் செல்கிறாள், அதை அவள் தன் சகோதரிக்கு சொல்லவில்லை. கடந்த நான்கு நாட்களாக அவளும் அவளுடைய சகோதரியும் அநேக தடவைகள் சொன்னதை மார்த்தாள் இயேசுவிடம் திரும்பச் சொல்கிறாள்: “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்.”

இயேசு தன் சகோதரனுக்கு இன்னும் ஏதாகிலும் செய்யலாம் என்பதை நினைப்பூட்டி மார்த்தாள் நம்பிக்கை தெரிவிக்கிறாள். “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொல்கிறாள்.

“உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு வாக்களிக்கிறார்.

எதிர்காலத்தில் நடக்கப் போகும் பூமிக்குரிய உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருக்கிறார் என்று மார்த்தாள் புரிந்து கொள்கிறாள், இதற்காக ஆபிரகாமும் மற்ற கடவுளுடைய ஊழியர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆகையால் அவள் பதிலளிக்கிறாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.”

என்றபோதிலும், இயேசு உடனடியான துயர்த்தீர்ப்புக்கான நம்பிக்கையை அளித்து இவ்வாறு பதிலளிக்கிறார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” மரணத்தின் மீது வல்லமையை தமக்கு கடவுள் அளித்திருக்கிறார் என்று அவர் மார்த்தாளுக்கு நினைப்பூட்டி இவ்வாறு சொல்கிறார்: “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.”

அப்போது உயிரோடிருக்கும் உண்மையான நபர்கள் ஒருபோதும் மரிக்க மாட்டார்கள் என்று இயேசு மார்த்தாளுக்கு சொல்லிக் கொண்டில்லை. ஆனால், அவர் பேரில் விசுவாசம் வைப்பது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்ற குறிப்பை அவர் சொல்கிறார். கடைசி நாளில் உயிர்த்தெழுப்பப்படுவதன் விளைவாக அநேக ஜனங்கள் அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை அனுபவிப்பர். ஆனால் பூமியில் உண்மையாயிருக்கும் மற்றவர்கள் இந்த ஒழுங்கு முறையின் முடிவைத் தப்பிப் பிழைப்பர், இப்பேர்ப்பட்டவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் சொல்லர்த்தமான கருத்தில் உண்மையாயிருக்கும். அவர்கள் ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்! இந்தக் குறிப்பிடத்தக்க கூற்றை சொன்ன பின்பு, “இதை விசுவாசிக்கிறாயா?” என்று இயேசு மார்த்தாளை கேட்கிறார்.

“ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று அவள் பதிலளிக்கிறாள்.

பின்பு மார்த்தாள் தன் சகோதரியை அழைப்பதற்கு அவசரமாகச் சென்று தனியாய் அவளிடம் இவ்வாறு சொல்கிறாள்: “போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்.” உடனடியாக மரியாள் வீட்டை விட்டுப் புறப்படுகிறாள். மற்றவர்கள் அவள் செல்வதைக் காணும்போது ஞாபகார்த்த கல்லறைக்கு செல்கிறாள் என்று அவர்களே நினைத்துக் கொண்டு அவர்களும் அவளைப் பின்தொடருகின்றனர்.

மரியாள் இயேசுவிடம் வந்து அவர் பாதத்தில் விழுந்து அழுகிறாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்” என்று அவள் சொல்கிறாள். மரியாளும் அவளைப் பின்தொடர்ந்து வந்த ஜனக்கூட்டத்தாரும் அழுகிறதை காண்பது இயேசுவின் நெஞ்சை உருக்கியது. “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று அவர் கேட்கிறார்.

“ஆண்டவரே, வந்து பாரும்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

“இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்!” என்று யூதர்கள் சொல்லும்படி இயேசுவும்கூட கண்ணீர் விடுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கூடாரப் பண்டிகையின் சமயத்தில், குருடனாகப் பிறந்த ஓர் இளம் மனிதனை இயேசு சுகப்படுத்தியதை சிலர் நினைவுகூர்ந்து, இவ்வாறு கேட்கின்றனர்: “குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா?” யோவான் 5:21; 6:40; 9:1–7; 11:17–37.

▪ இயேசு எப்போது கடைசியாக பெத்தானியாவுக்கு அருகே வந்து சேருகிறார், அங்கிருக்கும் நிலைமை என்ன?

▪ உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கான என்ன ஆதாரத்தை மார்த்தாள் கொண்டிருக்கிறாள்?

▪ லாசருவின் மரணம் இயேசுவை எவ்வாறு பாதிக்கிறது?