Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உவமைகளைக் கொண்டு கற்பித்தல்

உவமைகளைக் கொண்டு கற்பித்தல்

அதிகாரம் 43

உவமைகளைக் கொண்டு கற்பித்தல்

இயேசு பரிசேயர்களை கடிந்துகொள்ளும் போது அவர் கப்பர்நகூமிலிருக்கிறார். பின்னர், அன்றையதினமே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகாமையிலிருந்த கலிலேயா கடலோரத்துக்கு நடந்து போகிறார். அங்கே திரளான ஜனங்கள் கூடி வருகிறார்கள். அவர் படவில் ஏறி சற்றே தள்ளிப் போகிறார். கரையிலிருந்த ஜனங்களுக்குப் பரலோக ராஜ்யத்தைக் குறித்துக் கற்பிக்கத் தொடங்குகிறார். வரிசையாக, ஒவ்வொன்றும் ஜனங்களுக்குப் பழக்கமாயிருந்த பின்னணி அமைப்பைக் கொண்ட பல உதாரணங்கள் அல்லது உவமைகளைக் கொண்டு அவ்விதமாகச் செய்கிறார்.

முதலாவதாக, இயேசு விதைக்கிற ஒருவனைப் பற்றிச் சொல்லுகிறார். சில விதை வழியருகே விழுகிறது, பறவைகள் வந்து அவைகளை பட்சித்துப் போடுகின்றன. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுகிறது, வேர்களுக்கு ஆழம் இல்லாததால் புதிய தாவரங்கள் வெயிலில் தீய்ந்து போய்விடுகின்றன. இன்னும் சில முள்ளுள்ள இடங்களில் விழுகின்றன. அவை வளரும் போது முள் அதை நெருக்கிப் போடுகிறது. கடைசியாக சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, சில நூறாகவும், சில அறுபதாகவும் சில முப்பதாகவும் பலன் தருகின்றன.

மற்றொரு உவமையில், இயேசு பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று சொல்லுகிறார். நாட்கள் சென்ற போது, அவன் இரவில் தூங்கி பகலில் விழித்துக் கொள்ள விதை வளருகிறது. அந்த மனுஷனுக்கு அது தெரியவில்லை. அது தானாகவே வளர்ந்து, தானியத்தைக் கொடுக்கிறது. கதிர் முழு வளர்ச்சியடைகையில் அந்த மனுஷன் அதை அறுக்கிறான்.

இயேசு மூன்றாவது உவமை ஒன்றைச் சொல்கிறார். இதில் ஒரு மனுஷன் நிலத்தில் நல்ல விதையை விதைக்கிறான். “மனுஷர் நித்திரைப் பண்ணுகையில்” அவனுடைய சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போய்விடுகிறான். அந்த மனுஷனுடைய வேலைக்காரர்கள் அவைகளைப் போய் பிடுங்கிப் போடலாமா என்று கேட்கிறார்கள். ஆனால் அவன் சொல்வதாவது: ‘வேண்டாம், நீங்கள் அப்படிச் செய்தால் சில கோதுமையையும்கூட வேரோடே பிடுங்கிப் போடுவீர்கள். அறுப்பு மட்டும் இரண்டையும் வளரவிடுங்கள். பின்னர் நான் அறுக்கிறவர்களிடத்தில் களைகளைப் பிரித்தெடுத்து அவைகளைச் சுட்டெரிக்கவும் கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கவும் சொல்லுவேன்.’

கடலோரத்திலே ஜனக்கூட்டத்தினிடமாக தன்னுடைய பேச்சைத் தொடருகையில், இயேசு இன்னும் இரண்டு உவமைகளைச் சொல்கிறார். “பரலோக ராஜ்யம்” ஒரு மனிதன் விதைக்கும் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்பதாக அவர் விளக்குகிறார். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும் சகல பூண்டுகளிலும் அது பெரிதாக வளருகிறது. பறவைகள் அதன் கிளைகளில் வந்து அடையத்தக்க அது பெரிய ஒரு மரமாக வளருகிறது.

சிலர் இன்று கடுகு விதையிலும் சிறிய விதைகள் உண்டு என்பதாக ஆட்சேபிக்கிறார்கள். ஆனால் இயேசு இங்கே தாவரவியலில் பாடம் நடத்திக் கொண்டில்லை. அவருடைய நாளிலிருந்த கலிலேய மக்கள் அறிமுகமாயிருந்த விதைகளில் கடுகு விதையே உண்மையில் மிகச் சிறியதாகும். ஆகவே அவர்கள் இயேசு விளக்கிக் கொண்டிருந்த அந்த வியத்தகு வளர்ச்சியின் விஷயத்தைப் போற்றுகிறார்கள்.

கடைசியாக இயேசு “பரலோக ராஜ்யத்தை” ஒரு ஸ்திரீ மூன்று படி மாவிலே அடக்கி வைக்கும் புளித்த மாவுக்கு ஒப்பிடுகிறார். காலப்போக்கில் அது பிசைந்த மா முழுவதிலும் கலந்துவிடுகிறது என்று அவர் சொல்லுகிறார்.

இந்த ஐந்து உவமைகளையும் சொன்ன பிறகு இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு தாம் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்புகிறார். விரைவில் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் அங்கு அவரிடத்துக்கு வருகிறார்கள்.

இயேசுவின் உவமைகளிலிருந்து நன்மையடைதல்

கடலோரத்திலே ஜனக்கூட்டத்தோடு இயேசு பேசியதைக் கேட்டுவிட்டு அவரிடம் வந்த அவருடைய சீஷர்கள் அவருடைய புதிய போதனா முறையைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆம், அவர் உவமைகளைப் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் முன்னொருபோதும் இத்தனை விரிவாக அவர் அதைச் செய்தது கிடையாது. ஆகவே இதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்: ‘ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்?’

அவர் இதைச் செய்வதற்கு ஒரு காரணம் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக இருந்தது: “என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வ காலத்து மறை பொருள்களை வெளிப்படுத்துவேன்.” ஆனால் இதற்கு இதைக் காட்டிலும் அதிகமிருக்கிறது. அவர் உவமைகளைப் பயன்படுத்துவது மக்களின் இருதய நிலையை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்யும் நோக்கத்தைச் சேவிக்கிறது.

உண்மையில் அநேக ஆட்கள், திறமைவாய்ந்த கதை கூறுபவராயும் அற்புதத்தை நடப்பிக்கிறவராயும் இருப்பதற்காக மாத்திரமே இயேசுவில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆண்டவராக சேவிக்கப்படவும் தன்னலமில்லாமல் பின்பற்றப்படவும் வேண்டியவராக அவரில் அக்கறையுள்ளவர்களாக இல்லை. காரியங்களின் பேரில் தங்களுடைய நோக்கிலாவது அல்லது தங்களுடைய வாழ்க்கை வழியிலாவது அவர்கள் இடையில் குறுக்கிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த அளவுக்குச் செய்தி ஊடுருவிச் செல்வதை அவர்கள் விரும்புவதில்லை.

ஆகவே இயேசு சொல்கிறார்: “அவர்கள் கண்டும் காணாதவர்களாயும் கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது. அதாவது . . . இந்த ஜனங்கள் . . . இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்” இருக்கிறார்கள்.

இயேசு தொடர்ந்து “உங்கள் கண்கள் காண்கிறதினாலும் உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள் (சந்தோஷமுள்ளவைகள், NW). அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார்.

ஆம், 12 அப்போஸ்தலர்களுக்கும் அவர்களோடு இருந்தவர்களுக்கும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் இருதயங்கள் இருந்தன. ஆகவே இயேசு சொல்வதாவது: “பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; அவர்களுக்கோ அருளப்படவில்லை.” புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கிருந்த ஆசையின் காரணமாக, இயேசு விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கத்தைத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுக்கிறார்.

‘விதை தேவனுடைய வசனம்,’ என்று இயேசு சொல்லுகிறார். நிலம் இருதயமாக இருக்கிறது. வழியருகே கடினமான மேற்பரப்பின் மீது விதைக்கப்பட்ட விதையைக் குறித்து அவர் விவரிப்பதாவது: “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்.”

மறுபட்சத்தில், கீழே கற்பாறையான நிலத்தின் மீது விதைக்கப்பட்ட விதை, வசனத்தை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளும் மக்களின் இருதயங்களைக் குறிக்கிறது. என்றபோதிலும், இப்படிப்பட்ட இருதயங்களில் வார்த்தை வேர் கொள்ள முடியாததன் காரணமாக, சோதனையான காலம் அல்லது துன்புறுத்தல் வருகையில் இவர்கள் விழுந்து போகிறார்கள்.

முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள், இது வசனத்தைக் கேட்கிறவர்களாயிருப்பவர்களை குறிக்கிறது என்பதாக இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஆனால் இவர்களோ இந்த வாழ்க்கையின் கவலைகளாலும், ஐசுவரியங்களினாலும், சிற்றின்பங்களாலும் கவர்ந்திழுக்கப்பட, அவை முற்றிலும் நெருக்கப்பட்டு போய் எதையும் பரிபூரணத்துக்கு கொண்டு வருவதில்லை.

கடைசியாக, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையோ நேர்த்தியான நல்இருதயத்தோடே வசனத்தைக் கேட்டபிறகு அதைக் காத்துக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் பலன் தருகிறவர்கள் என்பதாக இயேசு சொல்லுகிறார்.

இயேசுவின் போதகங்களின் விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவரை நாடி வந்த அந்தச் சீஷர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! தம்முடைய உவமைகள் மற்றவர்களுக்குச் சத்தியத்தைத் தெரிவிப்பதற்காகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதாக இயேசு கருதுகிறார். ‘விளக்கை மரக்காலின் கீழாகிலும் கட்டிலின் கீழாகிலும் வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?’ என்பதாக அவர் கேட்கிறார். இல்லை. “அதை விளக்குத் தண்டின் மேல் வை”க்கிறதற்கே கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக இயேசு மேலுமாகச் சொல்கிறார்: “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்.”

அதிகமான போதனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

அந்தச் சீஷர்கள் விதைக்கிறவனைப் பற்றிய உவமைக்கு விளக்கம் பெற்றுக்கொண்ட பின்பு இப்பொழுது இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். “நிலத்தின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

கடற்கரையில் கூடியிருந்த அந்த மற்றவர்களிலிருந்து சீஷர்களின் மனப்பான்மை எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது! அந்த உவமைகளின் பின்னாலிருந்த பொருளைக் கற்றுக்கொள்வதற்கான உள்ளான ஆர்வம் அந்த ஆட்களுக்கு இல்லை. அவற்றில் கொடுக்கப்பட்ட மேலான குறிப்புகளில் திருப்தியாயிருந்துவிடுகிறார்கள். அந்தக் கடற்பகுதியில் இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆட்களிலிருந்து, வீட்டுக்கு அவரிடம் வந்து காரியங்களை அறிய ஆவலாயிருந்த தம்முடைய சீஷர்களை வித்தியாசப்படுத்தி பேசுகிறவராய் இயேசு பின்வருமாறு சொல்லுகிறார்:

“எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.” சீஷர்கள் இயேசுவுக்கு உள்ளான அக்கறையையும் கவனத்தையும் செலுத்தும் விதத்தில் அளந்து கொடுப்பதால் அதிகமானப் போதனைகளைப் பெறும் விதத்தில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எனவே தம்முடைய சீஷர்களின் கேள்விக்கு விடையளிப்பவராக இயேசு பின்வருமாறு விளக்குகிறார்:

“நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.”

தம்முடைய உவமையின் ஒவ்வொரு அம்சத்தையும் அடையாளங் காண்பித்த பின்பு, இயேசு விளைவை விளக்குகிறார். இந்தக் காரியங்களின் ஒழுங்குமுறையின் முடிவில் அறுக்கிறவர்கள் அல்லது தேவதூதர்கள், களைப் போன்ற போலி கிறிஸ்தவர்களை “ராஜ்யத்தின் புத்திரரி”லிருந்து பிரிப்பார்கள் என்கிறார். “பொல்லாங்கனுடைய புத்திரர்” அழிவுக்காக குறிக்கப்படுவார்கள். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் புத்திரர், “நீதிமான்கள்” பிதாவின் ராஜ்யத்தில் பிரகாசிப்பார்கள்.

அடுத்து, காரியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய சீஷர்களுக்கு கூடுதலாக மூன்று உவமைகளைச் சொல்லி ஆசீர்வதிக்கிறார். முதலாவது அவர் சொல்லுகிறார்: “பரலோக ராஜ்யம் நிலத்திலே புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”

“மேலும்” என்று தொடருகிறார். “பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.”

இயேசு தாமே மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிற மனுஷனுக்கும் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடிக்கிற வியாபாரிக்கும் ஒப்பாயிருக்கிறார். சொல்லப்போனால், அவர் எல்லாவற்றையும் விற்றார், தாழ்மையுள்ள ஒரு மனிதனாவதற்காகப் பரலோகத்தில் தமக்கு இருந்த கனத்துக்குரிய ஸ்தானத்தை விட்டுவந்தார். அத்துடன், பூமியில் ஒரு மனிதனாக அவர் நிந்தையையும் விரோதமான துன்புறுத்தலையும் அனுபவித்து, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆவதற்குப் பாத்திரமுள்ளவராகத் தம்மை நிரூபிக்கிறார்.

இந்தச் சவால் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு முன்பும் வைக்கப்படுகிறது, அதாவது கிறிஸ்துவோடு கூட ஓர் உடன் அரசராக அல்லது பூமியில் ராஜ்ய பிரஜையாக இருக்கும் மகத்தான பரிசைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் விற்கவேண்டிய சவால் முன்வைக்கப்படுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதை நாம் வாழ்க்கையில் வேறு எந்த ஒரு காரியத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளதாக, விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷமாக அல்லது விலையுயர்ந்த ஒரு முத்தாகக் கருதுவோமா?

கடைசியாக இயேசு “பரலோக ராஜ்யத்தை” எல்லா வகையான மீன்களையும் சேகரித்திடும் ஒரு மீன்வலைக்கு ஒப்பிடுகிறார். மீன்கள் பிரிக்கப்படும் போது, ஆகாதவை தூக்கியெறியப்படுகிறது. ஆனால் நல்ல மீன்களோ வைக்கப்படுகிறது. காரியங்களின் ஒழுங்குமுறையின் முடிவில் அப்படியே இருக்கும் என்று இயேசு சொல்லுகிறார்; தேவதூதர்கள் பொல்லாதவர்களை நீதிமான்களிலிருந்து பிரித்து பொல்லாதவர்களை அழிவுக்காக வைக்கிறார்கள்.

இந்த மீன்பிடிக்கும் வேலையை இயேசுதாமே ஆரம்பித்து வைக்கிறார். தம்முடைய முதல் சீஷர்களை “மனுஷரைப் பிடிக்கிற”தற்கு என்று அழைக்கிறார். தேவதூதரின் மேற்பார்வையில் அந்த மீன்பிடிக்கும் வேலை இந்த நூற்றாண்டுகள் வரை தொடர்ந்திருக்கிறது. கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டும் பூமியிலுள்ள அமைப்புகளுக்குப் படமாயிருக்கும் அந்த “வலை” கடைசியில் இழுத்து கரைசேர்க்கப்படும் சமயம் வருகிறது.

ஆகாத மீன்கள் அழிக்கப்படுகிறது என்றாலும், கூடையில் சேர்த்து வைக்கப்படுகிற ‘நல்ல மீன்களாக’ நாம் எண்ணப்படக்கூடும் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கலாம். இயேசுவின் சீஷர்களைப் போல் அதிகமான அறிவுக்கும் புரிந்துகொள்ளுதலுக்குமான அந்த உள்ளான ஆர்வத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் அதிகமான போதனைகளால் ஆசீர்வதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கடவுளுடைய ஆசீர்வாதமாகிய நித்திய ஜீவனையும் பெறுவோம். மத்தேயு 13:1–52; மாற்கு 4:1–34; லூக்கா 8:4–18; சங்கீதம் 78:2; ஏசாயா 6:9, 10.

▪ இயேசு எப்பொழுது, எங்கே ஜனங்களிடம் உவமைகளாலே பேசுகிறார்?

▪ இயேசு என்ன ஐந்து உவமைகளை ஜனங்களுக்குச் சொல்லுகிறார்?

▪ கடுகு விதையே சகல விதைகளிலும் சிறியது என்று இயேசு ஏன் சொல்கிறார்?

▪ இயேசு ஏன் உவமைகளில் பேசுகிறார்?

▪ இயேசுவின் சீஷர்கள் எவ்விதமாக ஜனக்கூட்டத்திலிருந்து தங்களை வித்தியாசமானவர்களாகக் காண்பிக்கின்றனர்?

▪ விதைக்கிறவனைப் பற்றிய உவமைக்கு இயேசு என்ன விளக்கத்தைக் கொடுக்கிறார்?

▪ கடற்கரையிலிருந்த அந்தக் கூட்டத்திலிருந்து இயேசுவின் சீஷர்கள் எந்த விதத்தில் வித்தியாசமாயிருக்கிறார்கள்?

▪ பின்வரும் காரியங்கள் யாரை அல்லது எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது: விதைக்கிறவன், நிலம், நல்ல விதை, சத்துரு, அறுப்பு மற்றும் அறுக்கிறவர்கள்?

▪ இயேசு கூடுதலாக என்ன மூன்று உவமைகளைச் சொல்கிறார்? அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?