Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிபவனி

எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிபவனி

அதிகாரம் 102

எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிபவனி

அடுத்த நாள் காலை, ஞாயிறு, நிசான் 9, இயேசு தம் சீஷர்களோடு பெத்தானியாவை விட்டு புறப்பட்டு ஒலிவ மலையின் மேல் ஏறி எருசலேமை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் ஒலிவ மலையின் மேல் அமைந்திருக்கும் பெத்பகேயுக்கு அருகே அவர்கள் வருகின்றனர். இயேசு தம் சீஷர்களில் இரண்டு பேருக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்:

“உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: ‘இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று’ சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.”

இந்தக் கட்டளைகள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை சீஷர்கள் முதலில் தெளிவாக அறிந்து கொள்ள தவறினாலும், பின்னர் அவர்கள் அதை அறிந்து கொள்கின்றனர். கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட ராஜா எருசலேமுக்குள் கழுதையின் மேலும் “கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும்” ஏறி வருவார் என்று சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். இதே போன்று சாலொமோன் ராஜாவும் அபிஷேகம்பண்ணப்படுவதற்கு கழுதைக்குட்டியின் மேல் சென்றிருக்கிறார்.

சீஷர்கள் பெத்பகேயுக்குள் பிரவேசித்து கழுதையையும், அதன் குட்டியையும் எடுத்த போது, அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் சிலர் இவ்வாறு கேட்கின்றனர்: ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ ஆனால் அம்மிருகங்கள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொன்னபோது, அந்த மனிதர்கள் இயேசுவிடம் அவைகளை சீஷர்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். சீஷர்கள் தங்கள் வஸ்திரங்களை கழுதையின் மேலும் அதன் குட்டியின் மேலும் விரிக்கின்றனர், ஆனால் இயேசு குட்டியின் மேல் ஏறிக்கொள்கிறார்.

இயேசு எருசலேமை நோக்கி சவாரி செய்கையில், ஜனக்கூட்டம் அதிகரிக்கிறது. அநேக ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை சாலையிலே விரிக்கின்றனர், மற்றவர்கள் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி பரப்புகின்றனர். “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமிடுகின்றனர்.

கூட்டத்திலிருந்த சில பரிசேயர்கள் இந்த அறிவிப்புகளினால் நிலைகுலைந்து, இயேசுவிடம் குறைகூறுகின்றனர்: “போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும்.” ஆனால் இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இயேசு எருசலேமுக்கு சமீபமாய் வருகையில், நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர்விட்டழுது, இவ்வாறு சொல்கிறார்: “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.” வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதன் காரணமாக இயேசு முன்னறிவிக்கிறபடி எருசலேம் அதற்கான தண்டனையை பெறவேண்டும்:

“உன் சத்துருக்கள் [தளபதி தீத்துவின் கீழ் ரோமர்கள்] உன்னைச் சூழ மதில் போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப் போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்.” இயேசுவால் முன்னறிவிக்கப்பட்ட எருசலேமின் இந்த அழிவு உண்மையில் 37 வருடங்களுக்குப் பின்பு, பொ.ச. 70-ம் ஆண்டில் நடக்கிறது.

சில வாரங்களுக்கு முன்புதான் ஜனக்கூட்டத்தில் இருந்த அநேகர் இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பியதைக் கண்டிருக்கின்றனர். இப்போது இவர்கள் அந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆகையால் இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கும் போது, முழு நகரமும் சந்தடியாயிருக்கிறது. “இவர் யார்?” என்று ஜனங்கள் அறிய விரும்புகின்றனர். ஜனக்கூட்டத்தார் தொடர்ந்து இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கின்றனர்: “இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு.” என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை பார்த்த பரிசேயர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே” என்று புலம்புகின்றனர்.

இயேசு போதிப்பதற்கு ஆலயத்துக்கு செல்கிறார், எருசலேமுக்கு செல்லும் போதெல்லாம் இதைச் செய்வது அவருடைய பழக்கமாயிருக்கிறது. அங்கு குருடரும் முடவரும் அவரிடம் வருகின்றனர், அவர் அவர்களை குணமாக்குகிறார்! பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் இயேசு செய்து கொண்டிருக்கும் மகத்தான காரியங்களை காணும்போதும், ஆலயத்தில் இருக்கும் பிள்ளைகள் ‘தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்’ என்று சத்தமிடும் போதும், அவர்கள் கோபமடைகின்றனர். “இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ.” என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

“ஆம்” என்று இயேசு பதிலளிக்கிறார். “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா.”

இயேசு தொடர்ந்து போதிக்கிறார், ஆலயத்தில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் சுற்றி பார்க்கிறார். விரைவில் நேரமாகி விடுகிறது. ஆகையால் அவர் 12 பேரோடு அங்கிருந்து புறப்பட்டு, மூன்று கிலோமீட்டர் அல்லது அதற்கு கொஞ்சம் கூடுதலாக பிரயாணம் செய்து பெத்தானியாவுக்கு திரும்பிச் செல்கிறார். அங்கே அவர் ஞாயிறு இரவை கழிக்கிறார், அவருடைய நண்பனாகிய லாசருவின் வீட்டில் ஒருவேளை தங்கியிருந்திருக்கலாம். மத்தேயு 21:1–11, 14–17; மாற்கு 11:1–11; லூக்கா 19:29–44; யோவான் 12:12–19; சகரியா 9:9.

▪ எப்போது, எந்த முறையில் இயேசு ராஜாவாக எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார்?

▪ ஜனக்கூட்டத்தார் இயேசுவை போற்றுவது எவ்வளவு முக்கியமானது?

▪ எருசலேமை காணும்போது இயேசு எவ்வாறு உணருகிறார், என்ன தீர்க்கதரிசனத்தை அவர் சொல்கிறார்?

▪ இயேசு ஆலயத்துக்குச் செல்லும்போது என்ன நடக்கிறது?