Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எருசலேமுக்கு பயணங்கள்

எருசலேமுக்கு பயணங்கள்

அதிகாரம் 10

எருசலேமுக்கு பயணங்கள்

வசந்த காலம் வந்துவிட்டது. யோசேப்பின் குடும்பத்தார் தங்கள் நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து பஸ்கா கொண்டாடுவதற்காக எருசலேமுக்கு தங்கள் வருடாந்தர வசந்த கால பயணம் செய்வதற்கான சமயம் வந்துவிட்டது. 100 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளும் அவர்கள் எப்பொழுதும் போல் கிளர்ச்சியடைந்தவர்களாக இருக்கிறார்கள். இயேசு இப்பொழுது 12 வயதுள்ளவராக இருக்கிறார், அவர் விசேஷ ஆர்வத்தோடு பண்டிகையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்.

இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பஸ்கா வெறுமென ஒரு நாள் விவகாரமாக இல்லை. அதை பின்தொடரும் ஏழு நாள் உப்பில்லா அப்பப் பண்டிகைக்கும் அவர்கள் தங்குகின்றனர். இதுவும் பஸ்கா பண்டிகையின் ஒரு பாகமாக கருதுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுடைய வீடாகிய நாசரேத்திலிருந்து துவங்கும் பயணம் எருசலேமில் தங்குவது உட்பட, இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் இந்த வருடம் இயேசுவை உட்படுத்தின ஒரு காரியத்தால் நாட்கள் அதிகமாகிறது.

எருசலேமிலிருந்து திரும்பும்போதுதான் இந்தப் பிரச்னை தெரிய வருகிறது. யோசேப்பும் மரியாளும் இயேசு தங்களுடைய உறவினர்களும் நண்பர்களுமாகிய தொகுதியுடன் பயணம் செய்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இரவு தங்க பயணத்தை நிறுத்திய போதும் அவரைக் காணவில்லை. எனவே தங்களோடுகூட பயணம் செய்யும் தோழர்கள் மத்தியில் இருக்கிறாரா என்று தேடுகிறார்கள். அவரை எந்த இடத்திலும் காணோம். எனவே யோசேப்பும் மரியாளும் திரும்பவும் எருசலேமுக்கு சென்று அவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஒரு நாள் முழுவதும் தேடியும் பயனில்லை. இரண்டாவது நாளும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, மூன்றாவது நாள், ஆலயத்திற்கு சென்று பார்க்கிறார்கள். அங்கே ஒரு கூடத்தில் இயேசு யூத போதகர்கள் மத்தியிலே உட்கார்ந்து கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களை கேள்வி கேட்டுக்கொண்டுமிருப்பதைப் பார்க்கிறார்கள்.

“மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” என்று மரியாள் கேட்கிறாள். ‘இதோ, உன் தந்தையும் நானும் அதிக கவலையோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம்.’

அவரை எங்கே தேடுவது என்பதை அவர்கள் அறியாதிருந்தது அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் வீட்டில் இருக்க வேண்டுமென்பதை அறியீர்களா?’ என்று அவர் கேட்கிறார்.

தம்முடைய பெற்றோர் ஏன் இதை அறியாமலிருந்தார்கள் என்பது இயேசுவுக்கு புரியவில்லை. அத்துடன், அவர் தன் பெற்றோருடன் வீட்டிற்கு திரும்பிச் சென்று அவர்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தார். அவர் ஞானத்திலும் சரீர வளர்ச்சியிலும் முன்னேறுகிறார். கடவுளுடைய தயவிலும் மனிதருடைய தயவிலும் பெருகுகிறார். ஆம், இயேசு தம்முடைய சிறு வயது முதற்கொண்டு, ஆவிக்குரிய அக்கறைகளை தேடுவதில் மட்டுமன்றி, தம்முடைய பெற்றோருக்கு மரியாதை காட்டுவதிலும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். லூக்கா 2:40–52; 22:7.

▪ இயேசு தமது குடும்பத்துடன் ஒழுங்காக என்ன வசந்தகால பயணத்தை மேற்கொள்கிறார், அது எவ்வளவு காலம் எடுக்கிறது?

▪ இயேசு 12 வயதினராக இருந்தபோது செய்த பயணத்தின் சமயத்தில் என்ன நடக்கிறது?

▪ இன்றைய இளைஞருக்கு இயேசு என்ன முன்மாதிரியை வைக்கிறார்?