Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதல்

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதல்

அதிகாரம் 33

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதல்

பரிசேயர்களும் ஏரோதியர்களும் தம்மைக் கொலை செய்யத் திட்டமிடுவதை இயேசு அறிந்தபின்பு, அவரும் அவருடைய சீஷர்களும் கலிலேயா கடலோரப் பக்கமாக விலகிப் போகிறார்கள். இங்கே பலஸ்தீனா முழுவதிலிருந்தும் அதன் எல்லைகளுக்கு அப்பாலுள்ள இடங்களிலிருந்தும்கூட திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவருகிறார்கள். அநேகரை அவர் சொஸ்தமாக்குகிறார். அதன் விளைவாகக் கொடிய நோய்களையுடைய அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கி வருகிறார்கள்.

ஜனங்கள் அத்தனை திரளாக இருப்பதன் காரணமாக, தமக்காக ஒரு படகை எப்பொழுதும் ஆயத்தமாக வைக்கும்படியாகத் தம்முடைய சீஷர்களிடம் அவர் சொல்கிறார். கடலோரத்திலிருந்து சற்றே தள்ளிப் போய்விடுவதன் மூலம், ஜனங்கள் தம்மை நெருக்காதபடி அவர் தம்மை வைத்துக்கொள்ளக்கூடும். படகிலிருந்தபடியே அவர் அவர்களுக்குக் கற்பிக்கலாம் அல்லது கடலோரமாகப் பிரயாணம் செய்து மற்றொரு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யலாம்.

இயேசு செய்த காரியம், “ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டதை” நிறைவேற்றுவதாக இருப்பதை சீஷனாகிய மத்தேயு கவனிக்கிறான். பின்னர் இயேசு நிறைவேற்றும் தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோள் எடுத்துரைக்கிறான்:

“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப் பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார், அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின் மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்.”

நிச்சயமாக இயேசுவே, கடவுள் அங்கீகரிக்கும் பிரியமான தாசனாயிருக்கிறார். பொய்யான மத பாரம்பரியங்களால் மங்கலாக்கப்பட்டு வரும் உண்மையான நியாயத்தை இயேசு தெளிவுபடுத்துகிறார். கடவுளுடைய சட்டத்தை அவர்கள் அநியாயமாகப் பொருத்தியதன் காரணமாகப் பரிசேயர்கள் ஓய்வுநாளில் ஒரு நோயாளிக்கு உதவுவதற்குங்கூட முன்வர மாட்டார்கள்! ஆகவே கடவுளுடைய நியாயத்தைத் தெளிவுபடுத்திய இயேசு, ஜனங்களை அநியாயமான பாரம்பரிய சுமைகளிலிருந்து விடுவிக்கிறார். இதற்காகவே மதத்தலைவர்கள் அவரைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்.

‘அவர் வாக்குவாதம் செய்யமாட்டார். வீதிகளில் அவருடைய சத்தம் கேட்கப்படும்படியாகக் கூக்குரலிடவும் மாட்டார்’ என்பதன் பொருள் என்ன? ஆம் ஜனங்களை சொஸ்தமாக்குகையில் இயேசு தம்மை ‘பிரசித்தம் பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிடுகிறார்.’ தெருக்களில் அவரைப் பற்றிய ஆரவாரமான விளம்பரங்களையோ அல்லது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு கிளர்ச்சியூட்டும் அறிக்கைகள் கடத்தப்பட்டு அது திரித்து கூறப்படுவதையோ அவர் விரும்பவில்லை.

மேலுமாக இயேசு, அடையாள அர்த்தத்தில் முறிக்கப்பட்டு கீழே தள்ளி மிதிக்கப்பட்ட நெரிந்த நாணலைப் போன்ற ஆட்களுக்குத் தம்முடைய ஆறுதலான செய்தியை எடுத்துச் செல்கிறார். அவர்கள் மங்கியெரிகிற திரியைப் போல இருக்கிறார்கள். இவர்களுடைய கடைசி உயிர்த்துடிப்பு ஏறக்குறைய அடங்கியேவிட்டது. இயேசு நெரிந்த நாணலை முறித்துவிடவோ அல்லது மங்கியெரிகிற திரியை அணைத்துவிடவோ இல்லை. ஆனால் மென்மையாகவும் அன்புடனும் அவர் திறமையாகத் தாழ்மையானவர்களைத் தூக்கிவிடுகிறார். உண்மையிலேயே புறஜாதிகள் இயேசுவின் மீது நம்பிக்கையாயிருக்கலாம்! மத்தேயு 12:15–21; மாற்கு 3:7–12; ஏசாயா 42:1–4.

▪ இயேசு எவ்விதமாக வாக்குவாதம் செய்யாமலும் வீதிகளில் கூக்குரலிடாமலும் நியாயத்தைத் தெளிவுபடுத்துகிறார்?

▪ நெரிந்த நாணலைப் போலவும் மங்கியெரிகிற திரியைப் போலவும் இருப்பது யார்? இயேசு எவ்விதமாக அவர்களை நடத்துகிறார்?