Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏழாம் நாளில் கூடுதலான போதனை

ஏழாம் நாளில் கூடுதலான போதனை

அதிகாரம் 68

ஏழாம் நாளில் கூடுதலான போதனை

கூடாரப் பண்டிகையின் கடைசி நாள், அதாவது ஏழாவது நாள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆலயத்தில் “கருவூலம்” (NW) என்றழைக்கப்படும் பகுதியில் இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார். ஜனங்கள் தங்கள் நன்கொடைகளைப் போடுவதற்கு பெட்டிகள் இருக்கும் பெண்கள் கூடம் என்றழைக்கப்படும் இடத்தில் இது இருக்கிறது.

பண்டிகையின் போது ஒவ்வொரு இரவும் ஆலயத்தின் இந்தப் பகுதியில் ஒரு விசேஷ ஒளிக் கண்காட்சி இருக்கிறது. நான்கு பெரிய விளக்குக் கம்பங்கள் இங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன, எண்ணெயால் நிரப்பப்பட்ட நான்கு பெரிய கிண்ணங்கள் இருக்கின்றன. இந்த விளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம், 16 கிண்ணங்களிலிருந்து எரியும் எண்ணெய் இரவில் அதிக தூரம் வரை சுற்றுப்புறத்தை ஒளிரச் செய்வதற்கு போதிய பலமுள்ளதாயிருக்கிறது. இயேசு இப்பொழுது என்ன சொல்லுகிறாரோ, அது, அவரைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒளிக் கண்காட்சியை ஒருவேளை ஞாபகப்படுத்தும். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு அறிவிக்கிறார். “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.”

பரிசேயர்கள் எதிர்க்கின்றனர்: “உன்னைக் குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல.”

அதற்கு இயேசு பதிலளிக்கிறார்: “என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.” கூடுதலாகச் சொல்கிறார்: “நான் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறார்.”

“உம்முடைய பிதா எங்கே?” பரிசேயர்கள் அறிய விரும்புகின்றனர்.

“என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்” என்று இயேசு பதிலளிக்கிறார். “நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்.” பரிசேயர்கள் இன்னும் இயேசுவைக் கைது செய்ய வேண்டும் என்று விரும்பினாலும், ஒருவனும் அவரைத் தொடவில்லை.

“நான் போகிறேன்” என்று இயேசு மறுபடியும் சொல்கிறார். “நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது.”

அப்பொழுது யூதர்கள் ஆச்சரியப்பட ஆரம்பிக்கின்றனர்: “நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத் தான் கொலை செய்து கொள்வானோ?”

“நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள்” என்று இயேசு விளக்குகிறார். “நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள்; நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.” பின்பு அவர் கூடுதலாகச் சொல்கிறார்: “நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்.”

இயேசு மனிதனாவதற்கு முன் இருந்த தன்னுடைய வாழ்க்கையையும், அவர் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக இருப்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அப்படியிருந்தாலும், சந்தேகமின்றி அதிக வெறுப்புடன் அவர்கள் கேட்கின்றனர்: “நீர் யார்?”

அவர்கள் மறுத்துவிட்ட போது இயேசு பதிலளிக்கிறார்: “உங்களிடம் நான் ஏன் பேசிக்கொண்டிருக்கிறேன்?” இருப்பினும் அவர் சொல்கிறார்: “என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்கிறேன்.” இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை.”

இயேசு இந்தக் காரியங்களைச் சொன்ன போது, அநேகர் அவரில் விசுவாசம் வைக்கின்றனர். அவர்களிடம் அவர் சொல்கிறார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”

“நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படி சொல்லுகிறீர்?” என்று அவரை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்து சொல்கின்றனர்.

யூதர்கள் அடிக்கடி வெளிநாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், அவர்கள் எந்தக் கொடுங்கோலனையும் எஜமானாக ஏற்றுக்கொண்டதில்லை. அடிமைகள் என அழைக்கப்படுவதை அவர்கள் மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையிலேயே அடிமைகள் என்று இயேசு குறிப்பிடுகிறார். என்ன விதத்தில்? “பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

பாவத்துக்கு அடிமைகளாயிருப்பதை ஒப்புக்கொள்ள மறுப்பது யூதர்களை ஓர் அபாயகரமான நிலையில் வைக்கிறது. “அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்” என்று இயேசு விளக்குகிறார். ஓர் அடிமைக்கு பரம்பரை சொத்து உரிமைகள் இல்லாததனால், எந்த நேரத்திலும் நீக்கப்படும் அபாயத்தில் அவன் இருக்கலாம். உண்மையிலேயே பிறந்த மகன் அல்லது வீட்டுக்குள் தத்து எடுத்துக் கொண்ட மகன் “என்றைக்கும்” நிலைத்திருக்கிறான், அதாவது அவன் உயிரோடு இருக்குமளவும்.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஆக, ஜனங்களை விடுதலையாக்கும் சத்தியம், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியம். அவருடைய பரிபூரண மானிட ஜீவ பலியின் மூலம் மட்டுமே மரணத்தை விளைவிக்கும் பாவத்திலிருந்து எவரேனும் விடுதலையாக்கப்பட முடியும். யோவான் 8:12–36.

▪ ஏழாம் நாளில் இயேசு எங்கே போதிக்கிறார்? அங்கு இரவில் என்ன நடக்கிறது, இது எவ்வாறு இயேசுவின் போதகத்துக்கு சம்பந்தப்பட்டதாயிருக்கிறது?

▪ இயேசு அவருடைய தோற்றத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார், அவரை அடையாளங் கண்டு கொள்வதைப் பற்றி இது எதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்?

▪ என்ன விதத்தில் யூதர்கள் அடிமைகளாயிருந்திருக்கின்றனர், ஆனால் என்ன சத்தியம் அவர்களை விடுதலையாக்கும்?