Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஐசுவரியவானும் லாசருவும்

ஐசுவரியவானும் லாசருவும்

அதிகாரம் 88

ஐசுவரியவானும் லாசருவும்

பொருளாதார செல்வங்களை சரியாக உபயோகிப்பதைப் பற்றி இயேசு தம்முடைய சீஷர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், இவைகளுக்கு நாம் அடிமைகளாகவும், அதே சமயத்தில் கடவுளுக்கு அடிமைகளாகவும் இருக்க முடியாது என்று விளக்குகிறார். பரிசேயர்களும் இதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் இயேசுவைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் பணஆசை உள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் அவர் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.”

உலகப்பிரகாரமான பொருட்கள், அரசியல் அதிகாரம் மற்றும் மத சம்பந்தமான கட்டுப்பாடு, செல்வாக்கு ஆகியவற்றால் செல்வந்தர்களாக இருக்கும் ஆட்கள் மீது நிலைமைகள் தலைகீழாய் மாற்றப்படுவதற்கான காலம் வந்துவிட்டிருக்கிறது. அவர்கள் தாழ்த்தப்பட இருக்கின்றனர். என்றபோதிலும், தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை உணரும் ஜனங்கள் உயர்த்தப்பட வேண்டும். பரிசேயர்களிடம் தொடர்ந்து சொல்கையில் அப்பேர்ப்பட்ட ஒரு மாற்றத்தை இயேசு குறிப்பிட்டுக் காட்டுகிறார்:

“நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் [ஸ்நானன்] வரைக்கும் வழங்கி வந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப் பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்து போவது எளிதாயிருக்கும்.”

மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தை கடைப்பிடிப்பதாக உரிமைப் பாராட்டிக் கொள்வதில் வேதபாரகரும் பரிசேயர்களும் பெருமைப்படுகின்றனர். எருசலேமில் ஒரு மனிதனுக்கு இயேசு அற்புதகரமாய் பார்வை அளித்தபோது, அவர்கள் பெருமையுடன் இவ்வாறு கூறினர்: “நாங்கள் மோசேயினுடைய சீஷர். மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம்.” ஆனால் இப்போது மோசேயின் சட்டம் கடவுளால் நியமனம் செய்யப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவினிடமாக தாழ்மையான ஆட்களை வழிநடத்தும் அதனுடைய திட்டமிட்ட நோக்கத்தை நிறைவேற்றியது. ஆகையால் யோவானின் ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்து எல்லாவிதமான ஆட்களும், விசேஷமாக தாழ்மையானவர்களும் ஏழைகளும் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக ஆவதற்கு ஊக்கமாக முயற்சி செய்கின்றனர்.

மோசேயின் பிரமாணம் இப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டதால், அதை கடைப்பிடிப்பதற்கான கடமை நீக்கப்பட வேண்டும். பல்வேறு அடிப்படைகளில் விவாகரத்து செய்வதை பிரமாணம் அனுமதிக்கிறது, ஆனால் இயேசு இப்போது சொல்கிறார்: “தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறான்.” இப்பேர்ப்பட்ட அறிவிப்புகள் பரிசேயர்களை எவ்வாறு எரிச்சல்மூட்ட வேண்டும், ஏனென்றால் விசேஷமாக அவர்கள் அநேக அடிப்படைகளில் விவாகரத்தை அனுமதிக்கின்றனர்!

பரிசேயர்களிடம் தம்முடைய கருத்துக்களை தொடர்ந்து சொல்பவராய் இயேசு ஓர் உவமையை சொல்கிறார். அது திடீர் திருப்பங்களோடு இறுதியில் மாறிய நிலைகளை அல்லது சூழ்நிலைமைகளைக் கொண்ட இரண்டு மனிதர்களைப் பற்றியது. அந்த மனிதர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதையும், அவர்களுடைய சூழ்நிலைமைகள் மாறியது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியுமா?

இயேசு விவரிக்கிறார்: “ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.”

யூத மதத்தலைவர்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு இயேசு இங்கே ஐசுவரியவானை உபயோகிக்கிறார், பரிசேயர்களும் வேதபாரகரும் மட்டுமல்லாமல், சதுசேயர்களும் பிரதான ஆசாரியர்களும்கூட இதில் உட்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஆவிக்குரிய சிலாக்கியங்களிலும் வாய்ப்புகளிலும் செல்வந்தர்களாக இருக்கின்றனர், அவர்கள் அந்த ஐசுவரியவானைப் போல நடந்து கொள்கின்றனர். அவர்களுடைய இரத்தாம்பர உடை அவர்களுடைய வசதியான ஸ்தானத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது, வெள்ளைத் துணி அவர்களுடைய சுயநீதியை படமாகக் குறிப்பிடுகிறது.

இந்தப் பெருமையுள்ள ஐசுவரியவான் வகுப்பு, ஏழ்மையான பொது மக்களை முழு வெறுப்போடு நோக்குகிறது, அவர்களை அம்ஹரட்ஸ் அல்லது பூமியின் ஜனங்கள் என்று அழைக்கிறது. ஆக தரித்திரனாகிய லாசரு இப்பேர்ப்பட்ட ஜனங்களை பிரதிநிதித்துவம் செய்கிறான், இவர்களுக்கு மதத் தலைவர்கள் சரியான ஆவிக்குரிய போஷாக்கையும், சிலாக்கியங்களையும் கொடுக்க மறுக்கின்றனர். எனவே, பருக்களால் மூடப்பட்ட லாசருவைப் போன்று, பொது மக்கள் ஆவிக்குரிய விதத்தில் நோயுற்றவர்களாயும் நாய்களோடு மட்டும் கூட்டுறவு கொள்வதற்கு தகுதியானவர்களாகவும் இழிவாகக் கருதப்படுகின்றனர். என்றபோதிலும், லாசரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவிக்குரிய போஷாக்குக்காக பசியும், தாகமும் உடையவர்களாக இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் ஐசுவரியவானின் மேஜையிலிருந்து என்ன சிறிய துண்டுகளாக ஆவிக்குரிய உணவு விழுகிறதோ அவற்றைப் பெற்றுக்கொள்ள வாசலருகே இருக்கின்றனர்.

ஐசுவரியவான் மற்றும் லாசருவின் நிலைமையில் ஏற்படும் மாற்றங்களை இயேசு இப்பொழுது விவரிக்கத் தொடங்குகிறார். இந்த மாற்றங்கள், என்ன, அவைகள் எதை பிரதிநிதித்துவம் செய்கின்றன?

ஐசுவரியவானும் லாசருவும் ஒரு மாற்றத்தை அனுபவிக்கின்றனர்

ஆவிக்குரிய சிலாக்கியங்களாலும், வாய்ப்புகளாலும் வசதி அளிக்கப்பட்டிருக்கும் மதத் தலைவர்களை ஐசுவரியவான் பிரதிநிதித்துவம் செய்கிறான். ஆவிக்குரிய போஷாக்குக்காக பசியாயிருக்கும் பொது மக்களை லாசரு படமாகக் குறிப்பிடுகிறான். இயேசு தம் கதையை தொடர்ந்து சொல்கிறார், அந்த மனிதர்களுடைய சூழ்நிலைமைகளில் ஒரு திடீர் மாற்றத்தை விவரிக்கிறார்.

இயேசு சொல்கிறார்: “பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டு போய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிற போது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.”

ஐசுவரியவானும், லாசருவும் சொல்லர்த்தமான ஆட்கள் அல்ல, ஆனால் ஜன வகுப்பாரை அடையாளப்படுத்துகின்றனர். பொருத்தமாகவே, அவர்களுடைய மரணங்களும்கூட அடையாள அர்த்தத்தை உடையதாயிருக்கிறது. அவர்களுடைய மரணங்கள் எதற்கு அடையாளமாயிருக்கின்றன, அல்லது எதை பிரதிநிதித்துவம் செய்கின்றன?

‘நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் ஸ்நானன் வரைக்கும் வழங்கி வந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது’ என்று சொல்வதன் மூலம் சூழ்நிலைமைகளில் ஒரு மாற்றத்தை இயேசு அப்போது தான் குறிப்பிட்டுக் காட்டி முடித்திருக்கிறார். எனவே, யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பிரசங்கித்தலோடு தான் ஐசுவரியவானும் லாசருவும் தங்களுடைய முந்தைய சூழ்நிலைமைகளுக்கு அல்லது நிலைமைக்கு மரிக்கின்றனர்.

தாழ்மையான, மனந்திரும்பிய லாசரு வகுப்பார், தங்களுடைய முந்திய ஆவிக்குரிய விதத்தில் இழப்புள்ள நிலைக்கு மரித்து, தெய்வீக ஆதரவு பெற்ற நிலைக்கு வருகின்றனர். ஆவிக்குரிய மேஜையிலிருந்து விழுந்த சிறு துணிக்கைகளுக்காக மதத் தலைவர்களை முன்பு நோக்கியிருந்தனர், ஆனால் இப்போது இயேசுவால் தெரிவிக்கப்படும் ஆவிக்குரிய சத்தியங்கள் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறது. இவ்வாறு அவர்கள் பெரிய ஆபிரகாமாகிய யெகோவா தேவனின் மடிக்கு அல்லது தயவுபெற்ற நிலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மறுபட்சத்தில், ஐசுவரியவான் வகுப்பை உண்டுபண்ணுகிறவர்கள் தெய்வீக ஆதரவற்ற நிலைக்கு வருகின்றனர், ஏனென்றால் இயேசுவால் கற்பிக்கப்பட்ட ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ள அவர்கள் தொடர்ந்து விடாப்பிடியாய் மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஆதரவு இருப்பது போன்று தோன்றிய தங்களுடைய பழைய நிலைக்கு மரிக்கின்றனர். உண்மையில், அவர்கள் அடையாளப்பூர்வமான வாதனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஐசுவரியவான் பேசுகையில் இப்போது செவிகொடுத்துக் கேளுங்கள்:

“தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே.” இயேசுவின் சீஷர்களால் அறிவிக்கப்பட்ட கடவுளின் எரிகிற நியாயத்தீர்ப்பு செய்திகள் ஐசுவரியவான் வகுப்பில் உள்ள தனிப்பட்ட நபர்களை வதைக்கிறது. அவர்களுடைய வேதனைகளிலிருந்து ஓரளவு விடுபடுவதற்கு ஏற்பாடு செய்ய சீஷர்கள் இப்பேர்ப்பட்ட செய்திகளை அறிவிப்பதை விட்டு விடுமாறு அவர்கள் விரும்புகின்றனர்.

“அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக் கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது.”

லாசரு வகுப்பாருக்கும் ஐசுவரியவான் வகுப்பாருக்கும் இடையே இப்பேர்ப்பட்ட திடீர் மாற்றம் ஏற்பட்டது எவ்வளவு நியாயமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது! நிலைமைகளில் மாற்றம் சில மாதங்களுக்குப் பிறகு பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு பதிலாக புதிய உடன்படிக்கை வைக்கப்பட்டபோது நிறைவேற்றப்படுகிறது. பரிசேயர்களும் மற்ற மதத் தலைவர்களும் அல்ல, சீஷர்கள் தான் கடவுளால் ஆதரிக்கப்படுகின்றனர் என்பது அதற்குப் பின்பு சந்தேகத்துக்கிடமின்றி தெளிவாக ஆகிறது. இயேசுவின் சீஷர்களிலிருந்து அடையாளப்பூர்வமான ஐசுவரியவானை பிரிக்கும் “பெரும் பிளப்பு” கடவுளுடைய மாற்றமுடியாத, நீதியான நியாயத்தீர்ப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது.

அடுத்து ஐசுவரியவான் “தகப்பனாகிய ஆபிரகாமை” இவ்வாறு கேட்டுக் கொள்கிறான்: “எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, . . . நீர் அவனை [லாசருவை] என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்.” மற்றொரு தகப்பனோடு தனக்கு நெருங்கிய உறவு இருப்பதாக ஐசுவரியவான் அறிக்கையிடுகிறான், அந்த தகப்பன் உண்மையில் பிசாசாகிய சாத்தானாக இருக்கிறான். தன்னுடைய “ஐந்து சகோதரர்கள்,” மத சம்பந்தமான நண்பர்களை “வேதனையுள்ள இந்த இடத்தில்” போடாதபடிக்கு கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகளின் வலிமையை குறைக்குமாறு ஐசுவரியவான் லாசருவை கேட்டுக் கொள்கிறான்.

“ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்.” ஆம், இந்த “ஐந்து சகோதரர்களும்” வாதனையை தப்பித்துச் செல்ல வேண்டுமென்றால், இயேசுவை மேசியா என்று அடையாளங் காட்டும் மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கு செவிகொடுத்து, அவருடைய சீஷர்களாக ஆவது தான் அவர்கள் செய்ய வேண்டிய காரியம். ஆனால் ஐசுவரியவான் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கிறான்: “அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள்.”

என்றபோதிலும், அவன் இவ்வாறு சொல்லப்படுகிறான்: “அவர்கள் மோசேக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்ப மாட்டார்கள்.” ஜனங்களை நம்ப வைப்பதற்கு கடவுள் விசேஷமான அடையாளங்கள் அல்லது அற்புதங்களை கொடுக்க மாட்டார். அவருடைய ஆதரவை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் வேதாகமத்தை வாசித்து அதன்படி நடக்க வேண்டும். லூக்கா 16:14–31; யோவான் 9:28, 29; மத்தேயு 19:3–9; கலாத்தியர் 3:24; கொலோசெயர் 2:14; யோவான் 8:44.

▪ ஐசுவரியவான் மற்றும் லாசருவின் மரணங்கள் ஏன் அடையாளப்பூர்வமானதாய் இருக்க வேண்டும், அவர்களுடைய மரணங்கள் எதை படமாகக் குறிப்பிடுகிறது?

▪ யோவானின் ஊழியத்தின் ஆரம்பத்தோடு, இயேசு குறிப்பிடும் என்ன மாற்றம் ஏற்படுகிறது?

▪ இயேசுவின் மரணத்திற்குப் பின் என்ன நீக்கப்பட வேண்டும், இது விவாகரத்து விஷயத்தை எவ்வாறு பாதிக்கும்?

▪ இயேசுவின் உவமையில் ஐசுவரியவான் மற்றும் லாசரு யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்?

▪ ஐசுவரியவான் அனுபவிக்கும் வாதனைகள் யாவை, எதன் மூலம் அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று அவன் கேட்டுக் கொள்கிறான்?

▪ “பெரும்பிளப்பு” எதை பிரதிநிதித்துவம் செய்கிறது?

▪ ஐசுவரியவானின் உண்மையான தகப்பன் யார், அவனுடைய ஐந்து சகோதரர்கள் யார்?